> குருத்து: September 2010

September 20, 2010

லஞ்சம் விளையாடும் தபால்துறை!

நேற்று சொந்த ஊருக்கு போயிருந்தேன். அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது... ஊரிலிருந்து நான் அனுப்புகிற பணம் முழுவதும் வருகிறதா! அல்லது தபால்காரர் பணம் கேட்கிறாரா! என்றேன்.

அனுப்புவதற்கு ரூ. 100க்கு ரூ.5 செலவாகிறது. பணம் கொடுக்கும் பொழுதும்.. கமிசன் கேட்டால் செலவு கூடுகிறது அல்லவா! தபால்காரரும் கமிசன் கேட்டால்... வங்கி கணக்கு திறந்து...ஏடிஎம் கார்டை கையில் தந்துவிடலாம் எண்ணத்தில் கேட்டேன். முழுதாக தந்துவிடுகிறார் என்றார்.


பக்கத்து வீட்டு அம்மாவும் அங்கு இருந்தார். அவருக்கு ஆதரவற்றோருக்கான அரசு உதவி பணம் வருகிறது! ஆனால், ரூ. 400க்கு ரூ. 380 தான் தபால்காரர் தருகிறார் என்றார். எவ்வளவு நாட்களாக இப்படி வாங்குகிறீர்கள் என்றேன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இப்படித்தான் என்றார்.


" அவர் உங்களிடம் ரூ. 400 கொடுத்து... ரூ. 20/ கேட்பாரா?" என்றேன்.


"இல்லையில்லை! தரும் பொழுதே ரூ. 380/- தான் சில்லறையாக தருவார்!" என்றார்.


"கமுதியில் இருக்கும் அத்தையும் தபால்காரர் ரூ. 25/- எடுத்துக்கொள்வதாக கடந்தமுறை சந்திக்கும் பொழுது சொன்னார்" என்றார் அம்மா.


ஒரு ஆளுக்கு குறைந்தபட்சம் ரூ. 20/ என்றால்..நாடு முழுவதும் என்றால்... எவ்வளவு லஞ்சப்பணம். பல ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிற மோசடி இது. நிச்சயம் பல கோடிகள் தாண்டும். உடனடியாக தெரிந்த பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் தொலைபேசினேன். அவரிடம் இதை விளக்கி... இதற்கு எதாவது செய்ய வேண்டுமே தோழர்! என்றேன். முதலில் சம்பந்தப்பட்ட துறை தலைவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவோம். பிறகு, சீனியர் வழக்கறிஞரிடம் கலந்து பேசி நீதிமன்றத்திலும் அணுகலாம் என்றார்.


இது குறித்து... வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதி..அதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம் என யோசித்துக்கொண்டே ரயிலில் வந்து வீடு வந்து சேர்ந்தால்... வழக்கறிஞர் அவர்களே தொலைபேசியில் அழைத்து...சன் செய்திகளைப் பார்க்க சொன்னார். சுருக்கமாக செய்தி சொன்னார்கள்.


பிறகு இந்து நாளிதழில் பார்த்த பொழுது...சிபிஐ சென்னையில் உள்ள தபால்துறை அலுவலங்களில் சோதனை நடத்தியதில்... நிறைய லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது. சில தபால்காரர்களை கைது செய்திருக்கிறது.


தபால்காரர்களுக்கு ரூ. 400க்கு ரூ. 20/- லஞ்சம் வாங்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால்... நிச்சயம் இதில் மேலதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. சிபிஐ - நேர்மையாக ஆய்வு செய்தால்... பல பெரிய தலைகளையும் உள்ளே தள்ள முடியும். இல்லையெனில், சில கடைநிலை தபால்காரர்களை பலி கொடுப்பதோடு இந்த மிகப்பெரிய ஊழல் முடிவுக்கு வந்துவிடும். பார்க்கலாம் என்ன செய்ய போகிறது என!

விரிவான செய்திகளுக்கு!

CBI unearths major pension scam - தி இந்து
முதுமையில் கொடுமை - தினமணி