> குருத்து: October 2021

October 31, 2021

உடலும் பயிற்சியும்


கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்தது உடற்பயிற்சி கூடத்தில் என தினத்தந்தியில் செய்தி படித்தேன். உடற்பயிற்சி குறித்து பேஸ்புக்கில் ஆங்காங்கே சிலர் எழுதுவதை பார்க்க முடிகிறது. சமூகத்திற்கு நம்ம கருத்தையும் சொல்லவில்லை என்றால் உண்மை தெரிந்தும் அதை சொல்ல மறுத்தால், விக்கிரமாதித்தன் தலை சுக்குநூறாகிவிடும் என வேதாளம் சொன்னது போல் நடந்துவிடும்.


எட்டு வயதில் தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்க ஆரம்பித்தது போல, இளவயதிலேயே உடற்பயிற்சியும் துவங்கிவிட்டேன். அதற்கு என் சொந்தத்திலோயோ, நண்பர்கள் மத்தியிலோ முன்மாதிரிகள் யாருமில்லை. மருந்துகடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்து பல நோயாளிகளுக்கு மருந்து எடுத்து கொடுத்த காரணம் இருக்கலாம் என இப்பொழுது தோன்றுகிறது. அப்பொழுது நிறைய மருத்துவ கட்டுரைகளும் படித்துக்கொண்டிருப்பேன்.

அப்பொழுதும் எதையும் வலுவாக செய்வது என்பதாக துவங்கவில்லை. மெது ஓட்டம் ஓடலாம். ஜிம் போகலாம். சைக்கிள் ஓட்டலாம். அரைமணி செய்யவேண்டும். அந்த எண்ணம் மட்டுமே இருந்தது. ஜிம் போனேன். ஆளாளுக்கு வெயிட்டாக செய்வதை வேடிக்கை பார்த்துவிட்டு, நான் அரை மணி நேரம் அலட்டிக்கொள்ளாமல் செய்துவந்தேன். கிண்டல் செய்வார்கள். கண்டுகொள்ளமாட்டேன். கொஞ்ச காலத்தில் ஜிம்மை விட நல்லது யோகா என்றார்கள். சில நாட்கள் போனேன். அந்த வயதில் யோகா ரெம்பவும் ஈர்க்கவில்லை.

திருப்பூரில் ஓராண்டு இருந்த பொழுது, ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். பயிற்சி விடிகாலையில் 5 மணிக்கே துவங்கிவிடும், அங்கிருந்து கிளம்பும் பொழுது நீங்கள் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு ஆளை சாய்த்துவிடலாம் கவனம் என எச்சரித்தும், வாழ்த்தியும் அனுப்பினார். இன்னும் ஒருவாரம் மஞ்சள் பெல்ட் வாங்கியிருந்திருக்கலாம். வாங்க முடியவில்லை. இதை நம்ம இனியன் தம்பியிடம் ஒருமுறை சொல்லியிருந்தேன். சிறுவயதில் ”கராத்தாவில் மாமா பெரிய ஆள்” என அவனே நினைத்துக்கொண்டிருக்கிறான். பிறகு, விவரம் தெரிந்த பிறகு, மஞ்சள் பெல்ட் தான் துவக்கம் என தெரிந்த பிறகு, அவன் மனதில் உயரத்தில் வைத்திருந்த இடத்தை அவனே கீழேயே இறக்கியும் வைத்துவிட்டான். அவனே ஒரு நாள் சொன்ன பொழுது வாய்விட்டு சிரித்துவிட்டேன். பின்னாளில் ஒரு பிளாக் பெல்ட் வாங்கியவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, வாழ்க்கையில் ”மான் கராத்தே” தான் ஆகச்சிறந்தது என்பதையும் மனதில் இருத்திக்கொண்டேன்.

இடையில் எப்பொழுது வேண்டுமென்றாலும், தொடர்ச்சியாக பயிற்சி செய்வதில் ஒரு தொய்வு வரும். மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மைதானத்திற்கு காலை ஆறு மணிக்கு போய்விடுவேன். ஒரு பெரிய மனித கூட்டமே பரபரப்பாக இயங்கும். சிலர் மெது ஓட்டம் ஓடுவார்கள். சிலர் ஜிம்னாஸ்டிக் செய்வார்கள். சிலர் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் யோகா செய்வார்கள். சிலர் கராத்தே கற்றுக்கொண்டு இருப்பார்கள். நாம மட்டும் தான் ஏதும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உணர்வு வரும். சரியாகிவிடுவேன்.

பின்னாளில் வீட்டிலேயே சில உடற்பயிற்சி கருவிகள் வாங்கி வைத்துவிட்டேன். தினமும் காலையில் அந்த கருவிகளைக்கொண்டு எளிமையான முறையில் இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்துவிடுவேன். ஒருமுறை அப்பா ஏதோ உற்சாகத்தில் அந்த கருவிகளை வைத்து ஒருநாள் பயிற்சி செய்து ஒருவாரம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது தனிக்கதை.

சென்னை வந்த பிறகு ஒவ்வாமை (Allergy) பிரச்சனை அதிகமாகி தொந்தரவு செய்தது. அது அம்மாவிடமிருந்தும், அப்பாவிடமிருந்தும் ’கொடையாக’ வந்தவை. அம்மாவும், அப்பாவும் என்னுள்ளே இருக்கிறார்கள் என்பதை 'ஒவ்வாமை' மூலம் உணர்ந்திருக்கிறேன். அப்பா குறிப்பாக பனிக்காலத்தில் மூச்சிரைப்பு வந்து சிரமப்படுவார். பார்த்திருக்கிறோம். அம்மாவிற்கு ஒவ்வாமை இருந்ததை எங்களிடம் காட்டிக்கொண்டதேயில்லை. ஆனால், உணவுமுறையில் தனக்கு ஒத்துக்கொள்ளாததை கவனமாக தவிர்த்தே வந்திருக்கிறார் என இப்பொழுது யோசித்தால் புரிகிறது.

பிறகு பகுதியில் விசாரித்து யோகா மையம் ஒன்றில் சேர்ந்தேன். கட்டணம் மாதம் ரூ. 300. வணிகம் முதன்மையாக இல்லாமல், யோகாவை பரப்பவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதே போல யோகாவுடன் கடவுள் நம்பிக்கையை உள்ளே நுழைக்கமாட்டார்கள். காலை 5 மணிக்கு எழுந்து, 5.30க்கு துவங்கி 6.30 வரை வகுப்பு. யோகா செய்தால், நாள் முழுவதும் அத்தனை உற்சாகமாக இருக்கும். ஒவ்வாமை (Allergy) தந்த தொந்தரவிலிருந்து யோகா நிறைய காத்தது.

விளையாட்டாகவே சொல்வேன். பகுதியில் பலரும் என்னுடன் பழகியது யோகா மையத்தில் தான். பத்து நாட்கள் வந்தவர்கள். ஒரு மாதம் வந்தவர்கள் என பெரும்பாலோரை அங்கு தான் பழகினேன். யார் தொடர்ந்து வந்தார்கள் என்றால், உடற்பயிற்சியின் பலனை அறிந்தவர்கள், சர்க்கரை, தைராய்டு என ஏதாவது நோயில் சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வந்தார்கள். பத்து வருடம் ஓடியது. கொரானா வந்ததினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வகுப்பு இயங்கவில்லை. இயங்கும் பொழுது எனக்கு தெரிவியுங்கள் என யோகா வாத்தியாரிடம் தெரிவித்திருக்கிறேன். கொரானா காலம் துவங்கியதிலிருந்து வீட்டில் அரை மணி நேரம் யோகா செய்துகொண்டு தான் இருக்கிறேன்.

ஆக உடற்பயிற்சி வாழ்வில் என்ன தந்தது? என் தோழி ஒருவர் ”என் மூளை இயங்கும் வேகத்திற்கு, உடல் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இது பெரிய ரண வேதனை” என்பார். நான் யோசித்ததை நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு பயிற்சி பயன்பட்டது. வேறேன்ன வேண்டும்?

நவீன வாழ்க்கை என்பது பெரும்பாலோரை உடல் உழைப்பு இல்லாமல் செய்துவிட்டது. உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இணைந்து நடுத்தர வயதில் சர்க்கரை தாக்கிவிடுகிறது. செரிமான பிரச்சனை வந்துவிடுகிறது. வேறு வேறு கோளாறுகளும் இணைந்துகொள்கின்றன. அதுவரை எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பவர்கள், ஏதாவது நோய் தாக்கிய பிறகு உணவு, உடற்பயிற்சி என எல்லாவற்றையும் கவனமாக செய்ய துவங்குகிறார்கள். பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

கடந்த வாரம் சிலரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, உடற்பயிற்சி பற்றிய பேச்சு இடையில் வந்தது. ஒருவர் ”பயிற்சி செய்து அதனால் பலன்களையும் அனுபவித்து இருக்கிறேன். ஆனால், நேரமே இல்லை” என அலுத்துக்கொண்டார். ”சாப்பிடுவது, தூங்குவது போல பயிற்சியும் தவிர்க்க முடியாதவை என எண்ணம் இருந்தால் தான் சாத்தியம். இல்லையென்றால் செய்வது சாத்தியமேயில்லை.” என்றேன். ஏற்றுக்கொண்டார்.

October 29, 2021

Speech Notes - தமிழில் தட்டச்சு செய்ய ஒரு புதிய செயலி

 


வாட்ஸ்ஆப்பிலும் முகநூலிலும் பெரும்பாலும் தனக்கு வரக்கூடிய செய்திகளைத்தான் மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.


சொந்தமாக யோசித்து எழுதுவதில் வேறு வேறு பிரச்சனைகள் இருந்தாலும் புதிதாக எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு தடையாக இருப்பது தமிழ் தட்டச்சு தான்.

 

ஏற்கனவே கூகுளில் தமிழ் பேச தட்டச்சு செய்கிற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். அதில் நிறைய குறைபாடுகள் இருந்தன. ஆகையால் அதை நான் பயன்படுத்தவில்லை நேற்று நண்பர் Speech_Notes என்றொரு ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

 

சரியாக தமிழை உச்சரித்து விட்டோம் என்றால் தப்பில்லாமல் தட்டச்சு செய்கிறது. இந்த பதிவிற்கு கூட இந்த செயலியைத் தான் பயன்படுத்தினேன். ஆச்சர்யம் என்னவென்றால், நான் தமிழுக்காக பயன்படுத்துகிற Latha font தான் இந்த செயலியும் பயன்படுத்துகிறது.

 

யாம் பெற்ற இந்த பலன் இந்த வையகமும் பலன் பெறட்டும்!

 

பின்குறிப்பு : இந்த செயலி பல மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது!

 

October 27, 2021

The Invitation (2015) American Horror Movie


நாயகன் தங்களுடைய குட்டிப்பையனின் மரணத்திற்கு பிறகு மனைவியை பிரிகிறார். இப்பொழுது வீட்டில் நண்பர்களுக்காக நடத்தும் ஒரு சிறப்பு விருந்தில் கலந்துகொள்ள முன்னாள் மனைவி நாயகனை அழைக்கிறார். அந்த அழைப்பை ஏற்று நாயகன் தன் காதலியை அழைத்துக்கொண்டு அந்த விருந்துக்கு செல்கிறார்.


மெல்ல மெல்ல பத்து பேருக்கு மேலாக நணபர்கள் ஒன்று கூடுகிறார்கள். குடிக்கிறார்கள். பழைய கதைகளை பேசுகிறார்கள். முன்னாள் மனைவி தான் பழைய மனக்காயங்களிலிருந்து வெளிவந்த விதத்தையும், தன்னுடைய புதிய கணவரைப் பற்றியும் சொல்கிறார். அந்த வீட்டில் இந்த நண்பர்கள் போக இன்னும் இருவர் புதிதாக உள்ளனர். வீட்டின் கதவுகளை பூட்டி வைத்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு குழு பக்கத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், ஆகையால், ஒரு பாதுகாப்புக்காக சாத்தி வைத்திருக்கிறோம் என பதில் சொல்கிறார்கள். நாயகனுக்கு எதுவோ அங்கு தப்பாக நடப்பதாக உணர்கிறார். ஆனால், என்னவென்று சரியாக சொல்ல முடியவில்லை. மற்றவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

மனிதர்களுடைய காயங்களிலிருந்து ஆறுதல்படுத்த ஒரு குழு இயங்குவதாகவும், அந்த குழுவிற்கு பெயர் Invitation எனவும் சொல்கிறார்கள். நோயால் வதைப்பட்டு செத்துக்கொண்டிருக்கும் ஒருவரை இந்த குழுவைச் சார்ந்தவர்கள் எப்படி சாந்தப்படுத்துக்கிறார்கள் என ஒரு சிறிய காணொளியை காண்பிக்கிறார்கள். நாயகன் இன்னும் அவர்களை சந்தேகப்படுகிறான்.

இப்படியே போகும் அந்த விருந்தில் இடைவேளைக்கு பிறகு என்ன நடந்தது என்பதை ரணகளமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அந்த வீட்டில் கதை துவங்கி அந்த வீட்டிலேயே படம் முடிந்தும்விடுகிறது. கதை சொன்ன விதத்தில், எடுத்த விதத்தில் இறுதிவரை பார்வையாளர்களை தக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் முதல் பிரச்சனை என்னவென்றால், நாமெல்லாம் விவாகரத்து செய்த மனைவி இப்படி ஒரு விருந்துக்கு அழைத்தால் போவோமா? வாய்ப்பே இல்லை. (எவ்வளவு கேவலமாக சண்டை போட்டாலும் பிரியமாட்டோம். அப்படி பிரிந்தால், ஜென்ம விரோதிகளாக தான் பிரிவோம்.) ஆனால், அமெரிக்காவில் போவார்கள் போல! மனதைரியம் அதிகம் தான்.

ஒரு மனுசனுக்கு எப்பேர்பட்ட துயரம் வந்தாலும் காலமும், புதிய மனிதர்களும் காயத்தை ஆத்திவிடுவார்கள். அதற்காக படத்தில் அந்த குழு சொல்லும் தீர்வு இருக்கிறதே! பயங்கரம்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே இப்படிப்பட்ட சில அபத்தமான, ஆபத்தான குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி செய்திகளாக வரும் பொழுது அதிர்ச்சியடைகிறோம்.

ஒரு அமெரிக்க சாமியார் சொர்க்கத்துக்கு போவோம் என சொன்னதை நம்பி 900க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இதில் 304 பேர் குழந்தைகள். 1978ல் நடந்த சம்பவம் இது.

அதே அமெரிக்காவில் ’சொர்க்கத்தின் நுழைவுவாயில்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 39 பேர் கூட்டாக தற்கொலை செய்துகொண்டார்கள். இது நடந்தது 1998ல்!
இந்தியாவிலும் தலைநகர் தில்லியில் 2018ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் கூட்டாக தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்கள் வீட்டில் கிடைத்த குறிப்புகளில் “இங்கு யாருமே மரணிப்பதில்லை. ’மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்விற்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுவர்கள் மிகச் சிறந்த இடத்தை அடைகிறார்கள்.” என எழுதி வைத்திருந்தார்கள்.

மதம் - தன்னை நம்பும் மக்களை செத்ததற்கு பிறகு ’சொர்க்கம்’ இருப்பதாய் நம்ப வைக்கிறது. இதன் மறுபக்கமாய் மண்ணிலேயே சொர்க்க வாழ்வு வாழ்கிறவர்களை காப்பாற்றுகிறது.

மற்றபடி படத்தில் நடித்த அத்தனை பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். படம் இப்பொழுது எங்கும் இல்லை என இணையம் சொல்கிறது. நான் நண்பரிடமிருந்து வாங்கிப்பார்த்தேன். நீங்களும் மாற்று வழிகளில் முயலுங்கள்.

இந்தப் படம் குறித்த விசயங்களைத் தேடும் பொழுது, கண்ணில்பட்டது. நல்ல கட்டுரை. நேரம் இருந்தால், வாசியுங்கள்.

October 24, 2021

அச்சம் - கலீல் ஜிப்ரான்


கடலுக்குள்
நுழைவதற்கு முன்பு
ஒரு நதி பயத்தில் நடுங்குகிறது
என்று கூறப்படுகிறது.
 
தான் பயணித்த பாதையை
அது திரும்பிப் பார்க்கிறது
மலையின் சிகரங்களிலிருந்து
காடுகளை கிராமங்களைக்
கடந்து வந்த நீண்ட நெடிய பாதை
 
 
எதிரில் அது பார்க்கிறது
மிகப்பெரிய சமுத்திரத்தை
அதற்குள் நுழைவதென்றால்
என்றென்றைக்கும்
காணாமல் போவதென்று அர்த்தம்
ஆனால் வேறு வழியில்லை
அந்த நதி திரும்பிச்செல்ல முடியாது
எவரும் திரும்பிச்செல்ல முடியாது
திரும்பிச்செல்வது வாழ்வில் சாத்தியமில்லை
சமுத்திரத்தில் நுழைவதெனும்
முடிவைத் துணிந்து எடுத்துத்தான் ஆகவேண்டும்
ஏனெனில் அப்போதுதான் அச்சம் அகலும்
ஏனெனில் அங்குதான் நதிக்குப் புரியும்-
சமுத்திரத்தில் நுழைவதென்பது
மறைந்துபோவதல்ல,
அது சமுத்திரமாய் ஆவது
 
தமிழில் : ரவிக்குமார்
 

The Call (2020) தென்கொரிய திரில்லர் படம்

 



இறந்த காலத்திலிருந்து ஒரு அழைப்பு


நாயகி புற்றுநோயால் அவதிப்படுகிற தன் தாயை பார்க்க கிராமத்திற்கு வருகிறாள். வரும்வழியில் அவள் செல்போனை தொலைத்துவிடுகிறாள். கிராமத்தில் தான் முன்பு வாழ்ந்த அந்த பழைய வீட்டிற்கு செல்கிறாள், தீப்பிடித்து எரிந்து மீதமிருக்கும் அந்த பாழடைந்த வீட்டில் பழைய கார்டுலெஸ் தொலைபேசி ஒன்று இருக்கிறது. அதில் இருந்து அழைப்பு வருகிறது. ”தனது சித்தி கொடூரமாக தன்னை சித்திரவதை செய்வதாகவும் காப்பாற்றும்படியும்” ஒரு இளம்பெண் கெஞ்சுகிறாள். அந்த அழைப்பு அவ்வப்பொழுது வருகிறது.

தொடர்ந்து கார்டுலெஸ் போனில் பேசும் பொழுது ஒன்றை இருவரும் புரிந்துகொள்கிறார்கள். நாயகி இப்பொழுது இருப்பது 2019ல்! அதே பகுதியில் இருந்து அழைப்பு வருவது 1999ல். நாயகி அவளிடம் பேசி, தீவிபத்தில் இறந்து போன அப்பாவை எச்சரிக்க சொல்கிறாள். எச்சரித்து விபத்தை தடுத்ததும், நிகழ்காலத்தில் நாயகியின் வாழ்க்கை தலைகீழாகிவிடுகிறது. அந்த வசதியான வீட்டில், அப்பா, அம்மாவுடன் சந்தோசமாக வாழ்கிறாள்.

பதிலுக்கு சித்தியால் அந்த இளம்பெண் கொலை செய்யப்பட இருக்கிற தகவலை சொல்லி, நாயகி அவளை தப்பிக்க வைக்கிறாள். ஆனால், நிலைமை வேறு விசயத்தில் சிக்கலாகிறது. அந்த இளம்பெண் ஏற்கனவே கொஞ்சம் மனப்பிசகு உள்ளவள். தன்னை ஆட்டிப்படைத்த சித்தியை கொன்றதும், ஒரு சுதந்திரம் கிடைத்ததும், கொடூர சைக்கோவாகிவிடுகிறாள். விளைவு நாயகியிடமிருந்து எதிர்கால தகவலைப் பெற்று தான் செய்த கொலைகளிலிருந்து தப்பிக்க பார்க்கிறாள். சொல்லவில்லை என்றால் ”உன் வாழ்க்கையை மாற்றிவிடுவேன்” என மிரட்டுகிறாள்.

பிறகு என்ன ஆனது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

2011ல் பிரிட்டிஷ் படமாக வந்த The Caller படத்தை கொரிய மொழியில் எடுத்திருக்கிறார்கள். துவக்கத்தில் நன்றாக போகும் கதை பிறகு திரில்லராக மாறிவிடுகிறது. இரு பெண்களுமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்த வகைப்படங்கள் உலக அளவில் வந்துகொண்டிருக்கின்றன. தமிழில் விஷ்ணு விஷால் நடித்த ”நேற்று இன்று நாளை” இந்த வகைப் படங்களில் ஒன்று தான். ஒரு திரைக்கதை சுவாரசியத்திற்காக இப்படிப்பட்ட கதைகளை எடுத்துக்கொண்டு கையாள்கிறார்கள். இந்தப் படம் பார்க்ககூடிய திரில்லராக தான் வந்திருக்கிறது.

திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு கோவிட் பிரச்சனையால், நெட் பிளிக்சில் வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுதும் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

October 23, 2021

ஏன் வாசிக்கவேண்டும்? ஆர். அபிலாஷ் – புத்தகம் - ஒரு பார்வை.


”கால்கள்” நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவர். ஆங்கில பேராசிரியராக பணிபுரியும் எழுத்தாளர் அபிலாஷ் கடந்த பத்தாண்டுகளில் வெவ்வெறு சூழலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

கடந்த சில ஆண்டுகளாக காட்சி படிமங்களின் ஆதிக்கம் வந்த பிறகு, பொதுவாக படிப்பதை விட பார்ப்பது என்பதாக நிலைமை மாறிவிட்டது, பெரும்பாலான இளைய தலைமுறைக்கு படிப்பது என்பது பாடத்திட்டம் தவிர்த்து வேறு எதையும் படிப்பது என்பது மிக மிக குறைந்துவிட்டது.

நானெல்லாம் படிப்பு தவிர பொதுவாக படிப்பது என்பது நான்காவது வகுப்பிலேயே துவங்கிவிட்டேன். தேநீர் வாங்க கடைக்கு போகும் பொழுது, அங்கு தினத்தந்தியில் சிந்துபாத் கதை படிக்க துவங்கி, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி திரும்பும் வழியில் ஒரு கடையில் வாடகைக்கு புத்தகம் தருவார்கள். ஒரு புத்தகத்திற்கு 25 பைசா. அங்கு தான் அம்புலிமாமா, பாலமித்ரா, இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் என படிக்க துவங்கினேன். பிறகு ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாக இராஜேஷ்குமார் நாவல் படிக்க துவங்கி, பட்டுக்கோட்டை, சுபா, சுஜாதா, பாலகுமாரன் என படிக்க துவங்கி…. நண்பர்களின் தொடர்பால் கணேசலிங்கன், மாக்சிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் என துவங்கிவிட்டேன்.

என்னைப் போலவே அல்லாமல், அவர்களது சூழலுக்கேற்ப ஏற்ற இறக்கங்களோடு பொதுவாக வாசிப்பதை பலரும் துவங்கியிருப்பார்கள். இப்பொழுது அப்படி ஒரு பழக்கம் குழந்தைகளிடம் மிக மிக கவனம் கொடுத்தால் மட்டுமே கொண்டுவரமுடியும். முடியாமலும் போகலாம். என் பொண்ணுக்கு படிப்பதை மிகுந்த கவனம் கொடுத்தோம் என சொல்லமுடியாது. ஆனால் எங்களால் இயன்ற அளவு முயன்றோம். பழக்கப்படுத்த முடியவில்லை. ஆனால், உலகப் படங்களை குறிப்பிட்ட வயதில் இருந்தே எங்களுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

ஆக, சமகாலத்தில் ஏன் வாசிக்கவேண்டும்? என்பது பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் இந்தப் புத்தகம் அதற்கு துணை செய்கிறது.

வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியம்? வாசித்தால் என்ன கிடைக்கும்? வாசிப்பு குறைந்துள்ளதா? ஆங்கிலத்தில் வாசிப்பது, தத்துவ வாசிப்பை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது? உளவியல் நூல்களை எங்கிருந்து எப்படி வாசிப்பது? என மொத்தம் 22 தலைப்புகளில் விரிவாக விவாதித்துள்ளார்.

எனக்கு பலருடைய பரிந்துரை பட்டியல் எப்பொழுதும் பொருந்தியதில்லை. அதில் ஆசிரியரும் உடன்படுகிறார். அதை சொல்லும் பொழுது, “புத்தக தேர்வு என்பது நண்பனை, காதலியை தேர்வு செய்வதைப் போன்றது” என்கிறார். உண்மை தான்.

எனது இணையரும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். இரண்டு பேரும் சேர்ந்து புத்தகம் வாங்கினாலும், எனக்கான ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! அவருடைய ஆர்வமுள்ள புத்தகங்கள் வேறு! எனக்கான புத்தகங்களை குறித்துவைத்துக்கொண்டு வாங்கிவிடுவேன். அவருக்கென சிறப்பு தேர்வுகள் பல சமயங்களில் இருந்ததில்லை. வீட்டில் புத்தகங்களுக்காக ஒரு பீரோ இருக்கிறது. ஒருநாள் திடீரென வந்து “பெரும்பாலான புத்தகங்கள் உங்களுக்கானதாக இருக்கின்றன. என் டேஸ்டுக்கு எதுவும் இல்லை” என அலுத்துக்கொண்டார்.

பாத்ரூமில் புத்தகம் வாசிக்கும் உங்களுக்கு பழக்கம் உண்டா? எனக்கு இருக்கிறது. “பாத்ரூம் வாசிப்புக்கு உகந்து வராத புத்தகங்கள் இலக்கியத் தகுதியற்றவை” என்கிறாராம் அமெரிக்க நாவலாசிரியர் ஹென்ரி மில்லர்.

படிக்காமல் டிஜிட்டல் உலகில் நம் நேரத்தை தொலைக்கிறோமோ? இல்லை என்கிறார் ஆசிரியர். அந்த நேரம் என்பது நண்பர்களுடன் சுற்றுவதற்கு, கதையளப்பதற்கு, தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு, சொந்தங்களின் வீட்டு சடங்குகளுக்கு போன நேரம் என்கிறார். அந்த நேரத்தை எல்லாம் அபகரித்துவிட்டதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்? பேஸ்புக்கால் வாசிக்க அல்ல, “வாழத்”தான் நேரமில்லாமல் போகிறது!” என்கிறார்.

இப்படி பல விசயங்களை போகிற போக்கில் சொல்லி சொல்கிறார். மற்றபடி, ஏன் வாசிக்கவேண்டும்? என்கிற கேள்விக்கு ஆசிரியர் வேறு வேறு பதில் சொன்னாலும் பொதுவாழ்வில் ஈடுபடுபவருக்கு கீழே உள்ள பதில் பொருத்தமாக இருக்கிறது.

”கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”. பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும்”

- தோழர் மருதையன்.

(ஒரு நீண்ட கட்டுரையிலிருந்து அங்காங்கே வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். உங்களுக்கு அந்த நீண்ட கட்டுரையின் சுட்டியை பின்னூட்டத்தில் தருகிறேன்.)

மற்றபடி, அபிலாஷ் அவர்களுடைய எழுத்து விரைந்து வாசிக்கும் அளவிற்கு இருக்கிறது. தொடர்ச்சியாக முகநூலில் புழங்குவதால், வெகுஜனத்திற்கு புரியும்படி எழுதுகிறார். ஆகையால், நான்கு நாட்களில் 75%க்கும் மேலாக முடித்துவிட்டேன். கொஞ்சம் இடைவெளி விட்டு, மீதி 25% முடித்துவிட்டேன்.

வாசிக்க வேண்டிய புத்தகம். படியுங்கள்.

#ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
#விலை ரூ. 200