> குருத்து: ESIC
Showing posts with label ESIC. Show all posts
Showing posts with label ESIC. Show all posts

July 29, 2025

GSTPS சொசைட்டியின் கெளரவப் பரிசு

 


கடந்த ஆண்டு (2024 – 25) நான் உறுப்பினராக இருக்கும் GSTPS சொசைட்டியில், பி.எப்., இ.எஸ்.ஐ திட்டங்கள் குறித்து ஒரு கூட்டத்தில் விரிவாக பேசினேன்.

 

சொசைட்டியின் ஆறாம் ஆண்டு  நிறைவு விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு பேசிய பேச்சாளர்களுக்கு கெளரவப் பரிசு வழங்கப்பட்டது.  நான் வெளியூரில் இருந்ததினால், என் சார்பாக சீனியர் Dr. வில்லியப்பன் சார் எனக்காக பெற்றுக்கொண்டார்.

 


GSTPS சொசைட்டி தனது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி, கற்றுத்தரும் ஆசிரியராக உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது.  சொசைட்டியில் முதல் கூட்டம் பேசிய பிறகு, கிடைத்த உற்சாகத்தில் அதற்கு பிறகு நான்கு உரைகள் வெவ்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் பேசிவிட்டேன் என்பது முக்கியமானது.

 

GSTPS சொசைட்டிக்கு நன்றி.

 

-    இரா. முனியசாமி

July 15, 2025

PF, ESI குறித்து கேள்விகளும், பதில்களும்!


நேற்று மதுரவாயில் பகுதியில் இயங்கிவரும் நிறுவனம். அவர்களுக்கு பி.எப். இ.எஸ்.ஐ கன்சல்டன்ட் ஒருவர் தேவை என்ற அழைப்பிற்கு இணங்க.. போயிருந்தேன். முதலில் நிறுவனத்தின் நிர்வாகியோடு அரைமணி நேரம் உரையாடல். சந்தேகங்கள் தெளிவடைந்ததும், நீங்களே இனிமேல் எங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகராக தொடருங்கள் என தெரிவித்தார். மகிழ்ச்சி.


”பணியாளர்களில் சிலர் இதன் பலனை அறியாமல் வேண்டாம் அவர்களுக்கு நீங்கள் விளக்க முடியுமா?” எனக் கேட்டார். விளக்கலாமே என்றவுடன், அந்த அலுவலகத்தில் கூட்டத்திற்கான அரங்கில் உடனே 10 பேருக்கும் மேலாக வந்தார்கள்.

முதலில் 20 நிமிடங்கள், பி.எப், இ.எஸ்.ஐ குறித்து அதன் நல்ல பலன்கள் குறித்து விளக்கினேன். பிறகு அவர்கள் 20 நிமிடங்கள் கேள்விகள் கேட்கலாம் என்றேன்.

சில கேள்விகள் எல்லாம் ஹைலைட்டாக இருந்தது ஆச்சர்யம்.

அந்த பணியாளர்களிலேயே அந்த பெண் தான் இளமையானவர். ”இங்கு நான் வேலை செய்கிறேன். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தால், அங்கு போய் இந்த திட்டத்தில் தொடர முடியுமா?”

”நான் ஏதோ பிரச்சனையில் வேலை செய்யும் பொழுது இறந்துவிடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கு இந்த நலன்கள் எப்படித் தெரியும்?”

நேரம் போனதே தெரியாமல், 40 நிமிடங்கள் கேள்விகள் கேட்க கேட்க விளக்கிக்கொண்டிருந்தேன்.

பிறகு நிர்வாகத்தினர் கொஞ்சம் பதட்டமாகி, பிறகு இன்னொருமுறை தொடரலாம் சார் என தெரிவித்தனர். விடைபெற்று வந்தேன்.

உங்களுக்கும் ஏதேனும், இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். நன்றி.

February 9, 2025

இ.எஸ்.ஐ. பி.எப் குறித்த அறிமுக ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


இன்று (06/02/2025) நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் இ.எஸ்.ஐ, பி.எப் குறித்து ஒரு அறிமுக வகுப்பாக எடுத்தேன். கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

இனி அடுத்தடுத்த வகுப்புகளில் விரிவாக விளக்குகிறேன் என தெரிவித்தேன்.
50 பேர் வரை கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.
நன்றி.

September 12, 2024

தொடர் சேவையில் ஒரு புதிய சேவை


ஒரு ஜி.எஸ்.டி ஆலோசகராக, இ.எஸ்.ஐ. ஆலோசகராக, பி.எப் ஆலோசகராக சென்னையில் இயங்கி வருவதை நண்பர்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறுவனங்களுக்கு மாதாந்திர ரிட்டன்களை தாக்கல் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறேன். நிறுவனங்களுக்காக கணக்குகளை ஒழுங்கு செய்து, தெரிந்த தணிக்கையாளர்கள் மூலமாக வருமான வரி தாக்கல் செய்தும் தருகிறேன்.


பி.காம். எம்.காம் படித்து, தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கவுண்ட்ஸ் துறையிலேயே இருப்பதும் ஒரு பெரிய பாசிட்டிவ் தான். தொழிலை பொறுத்தவரையில் மிகவும் பிடித்தே செய்கிறேன். உரிய காலத்தில் வேலைகளை செய்வதையும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறேன்.

ஜி.எஸ்.டி, இ.எஸ்.ஐ. பி.எப், வருமான வரி தொடர்பாகவும் தொடர்ந்து கட்டுரைகளை, குறிப்பாக நான் எழுதிய கட்டுரைகளையும் அவ்வபொழுது பகிர்ந்து வந்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியில்… இப்பொழுது புதிதாக எல்.ஐ. சி முகவராகவும் பதிவு பெற்று அடையாள எண் பெற்றிருக்கிறேன் என்பதை பகிர்வதற்காக இந்த பதிவு.

கடந்த மாதத்தில் ஒரு வாரம் ஒரு முகவராக தேர்ச்சி பெறுவதற்கு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது தான், எல்.ஐ.சி முகவர் என்பது கூடுதல் வருமானம் பார்ப்பது மட்டுமில்லை! அது ஒரு பொறுப்பான வேலை என்பதை உணர முடிந்தது.

பாலிசி எடுப்பதோடு, ஒரு முகவராக அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள்வதோடு வேலை முடிவதில்லை. பாலிசி எடுத்ததின் பலனை உரியவர்களுக்கு பெற்றுத் தருவது வரை, பொறுமையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும் என்பதும் அவசியம் என்பதை உணர முடிந்தது.

பயிற்சியிலும் கூட கமிசனை மனதில் கொண்டு வேலை செய்யாதீர்கள். சந்திக்கும் நண்பர்கள், மக்கள் அவர்களுடைய தேவைகளில் இருந்து என்னவிதமான பாலிசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உதவி செய்யுங்கள். ஒரு சேவையாக செய்யுங்கள் என வழிகாட்டுவது பிடித்திருந்தது.

ஆகையால், எல் ஐ சி பாலிசி தொடர்பாக என்ன சந்தேகம் என்றாலும் அழையுங்கள். பழைய பாலிசிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அழையுங்கள். பாலிசியின் காலம் முடிந்துவிட்டால், அதனை எப்படி பெறுவது என்பதை அறிந்துகொள்வதற்காகவும் அழையுங்கள். கூடுதலாக உங்களுக்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பொருத்தமான பாலிசி எடுக்கவும் அழையுங்கள்.

நன்றி.
தோழமையுடன்
இரா. முனியசாமி
9551291721

August 9, 2024

Benefits to Employees under ESIC Scheme - ஜூம் கூட்ட அனுபவம்


”இ.எஸ்.ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கான நலன்கள் குறித்து!” கடந்த (13/07/2024) சனிக்கிழமையன்று ஜூம் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. நமது GSTPS உறுப்பினர்களும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த முறை கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் என பதிவு அவசியம் என தெரிவித்தும், திரளாக கலந்துகொண்டது இ.எஸ்.ஐ குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.


கூட்டத்தை செயலர் பாலாஜி அனைவரையும் வரவேற்று துவங்கி வைத்தார். தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பேச்சாளரை அறிமுகப்படுத்தும் பொழுது, “சொசைட்டியில் உற்சாகமாக செயல்படும் உறுப்பினர் முனியசாமி. நம் சொசைட்டியின் சமூக வலைத்தளப் பக்கங்களை அவர் தான் பராமரித்து வருகிறார். அவர் தொடர்ந்து பேசவேண்டும்” என வாழ்த்து தெரிவித்தார்.

”கடந்த ஆண்டு, தலைவர் பி.எப். இ.எஸ்.ஐ குறித்து பேச சொன்ன பொழுது, ஒரு பறவைப் பார்வையில் இரண்டு தலைப்புகளிலும் பேசினேன். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக இ.எஸ்.ஐ குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாம்.

பிரிட்டிஷ் காலத்திலேயே தொழிலாளர்களுக்கான இப்படி ஒரு மருத்துவ வசதி தரவேண்டும் என விவாதித்தார்கள்.

1948ல் சட்டமாக்கப்பட்டு, 1952ல் உ.பி. கான்பூரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு துவங்கி வைத்தார்.

இப்பொழுது மனிதனுடைய சராசரி வாழ்வு 70 என உலக சுகாதார மையம் சொல்கிறது. ஆனால், 1950களில் 35 என்று தான் இருந்தது. காரணம் மலேரியாவால் ஆண்டுக்கு பத்து லட்சம், காச நோயால் ஆண்டுக்கு 2.25 லட்சம், பிரசவத்தில் பெண்கள் ஒரு லட்சத்துக்கு 2000 பேர் வரை இறந்தார்கள். 70 ஆண்டு மருத்துவ துறையின் வளர்ச்சியில் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தியதில்… இ.எஸ்.ஐ.யும் நல்ல பங்களித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் மருத்துவமனைகள், டிஸ்பன்சரிஸ் என இ.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது.

ரூ. 21000 வரை சம்பளம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்தில் பலன்பெறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25000 வரை செலுத்தலாம்.

தொழிலாளர்களுக்கு உடல் நல குறைபாடு, அறுவை சிகிச்சைகள், இ.எஸ்.ஐயில் செய்ய இயலாத மருத்துவத்தை தனியார் மருத்துவமனைகளும் பங்களிக்க அவர்களோடு ஒப்பந்தம். வேலைக்கு செல்ல இயலாத காலத்தில் பணபலன்கள், பகுதி ஊனம், முழுமையான ஊனம் ஏற்பாட்டால் ஓய்வூதிய உதவி, தொழிலாளி இறந்து போனால், குடும்பத்தினருக்கு உதவி, இறப்புச் சடங்குகளை செய்ய ரூ. 15000 என அதனுடைய செயல்பாடுகள் ஆரோக்கியமானவை.

ஒவ்வொரு நிறுவனத்தில் சேரும் பொழுதும், தொழிலாளர்கள் ஒரே எண்ணை கொண்டு, தொடர்ந்து பணம் செலுத்துவது தான் சரியானது. இல்லையென்றால், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவம் என பல நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் கிடைப்பதற்கு காலம் தாமதமாகும். ஒரு தொழிலாளிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்பதற்கு, இ.எஸ்.ஐ ஒரு தளமே உருவாக்கி தந்துள்ளது.

சிறப்பு ஒரு பக்கம் என்றால், அதன் போதாமைகளும் உண்டு. மருத்துவமனைகள் இன்னும் நிறைய திறக்கப்படவேண்டும். திருப்பூரில் 1.75 லட்சம் தொழிலாளர்கள் வருடந்தோறும் 85 கோடி செலுத்துகிறார்கள். கடந்த பல வருடங்களாக, 45 கிமீ தூரத்தில் கோவைக்கு சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். தொடர்ச்சியான கோரிக்கைக்கு பிறகு, சமீபத்தில் தான் மருத்துவமனையை திறந்துள்ளார்கள். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திண்டுக்கல், வாணியம்பாடி, நாகர்கோவில் என பல ஆண்டுகளாக இடம் தேடுகிறார்கள். அடிக்கல் நடுகிறார்கள். ஆனால் தாமதிக்கிறார்கள். திறக்கப்பட பல ஆண்டுகள் மக்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாட்டின் உற்பத்தியும் கூடும். ஆகையால் கூடுதல் நிதி ஒதுக்கி இதையெல்லாம் சாத்தியப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் இ.எஸ்.ஐ சார்பில் 10 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. (இதில் சென்னையில் , கோவை என இரண்டு இருக்கின்றன.) 437 MBBS இருக்கைகளும், 28 பல் மருத்துவ இருக்கைகளும் இருக்கின்றன. இதில் இ.எஸ்.ஐ. பணிபுரிகிற தொழிலாளர்களுக்கென்று இட ஒதுக்கீடும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பல தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயை பயன்படுத்துவதில்லை. அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், தொடர்ந்து செல்கிறார்கள். ஆகையால் பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து பேச உற்சாகம் அளிக்கும் தலைவர் அவர்களுக்கும், இ.எஸ்.ஐ சட்டம், நடைமுறை குறித்து கற்றுக்கொடுத்து, சந்தேகம் கேட்கும் பொழுதெல்லாம் தீர்த்து வைக்கும் சீனியர் வில்லியப்பன் அவர்களுக்கும், கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும் நன்றி சொல்லி, உரையை முடித்தார்.

பங்கேற்பாளர்கள் சிலர் கேள்வி கேட்டார்கள். கோவையில் இருந்து பெருமாள் அவர்களும், சீனியர் வில்லியப்பன் அவர்களும் தெளிவான பதிலை தந்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

”இ.எஸ்.ஐ ஜி.எஸ்.டியை போல மிகவும் சிக்கல் இல்லாத துறை. ஆகையால், வரி ஆலோசகர்கள் இதையும் கையாளலாம். வருமானம் வரும்” என நல்ல ஆலோசனையாக பெருமாள் அவர்கள் தெரிவித்தார். உண்மை. இதில் எந்த சந்தேகம் இருந்தாலும், சீனியர் வில்லியப்பன் அவர்களையும், என்னையும் தொடர்பு கொள்ளுங்கள். உதவ தயாராக இருக்கிறோம்.

பங்கு கொண்ட அனைவருக்கும் பொருளாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்து, கூட்டத்தை முடித்துவைத்தார்.

நன்றி.

- GSTPS

August 8, 2023

இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த ஒரு இணைய (Zoom) வழிக்கூட்டம் சம்பந்தமாக!

நண்பர்களுக்கு,




கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்பு விற்பனை வரி, இப்பொழுது ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ செய்கிற ஒரு வரி ஆலோசகராக (Tax Consultant)யாக இருக்கிறேன் என நீங்கள் அறிவீர்கள்.


குறிப்பாக, கடந்த பதினைந்து ஆண்டுகளில், புதிய நிறுவனங்கள் 40க்கும் மேலாக புதிதாக பி.எப், இ.எஸ்.ஐ களில் பதிவு செய்து தந்திருக்கிறேன். பல நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ, பி.எப் மாதாந்திர ரிட்டன்கள் தாக்கல் செய்து கொடுத்துவருகிறேன். நிறுவனங்கள் பி.எப். , இ.எஸ்.ஐ தணிக்கைகள் நடைபெறும் பொழுது, இறுதி வரை உடன் நின்றிருக்கிறேன்.

உங்களில் சிலர் தனிப்பட்ட முறையில், இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுள்ளீர்கள். பி.எப் பணத்தை பெறுவதற்கும் ஆலோசனைகளை தந்திருக்கிறேன். சிலருக்கு விண்ணப்பித்து பணத்தைப் பெற்றும் தந்திருக்கிறேன்.

சென்னையில் GSTPS என்ற சொசைட்டி ஒன்று இயங்கிவருகிறது. அதில் ஜி.எஸ்.டி, வருமான வரி குறித்த கூட்டங்களை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். அதில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை 12/08/2023 அன்று காலை 10.30 மணியளவில் இ.எஸ்.ஐ, பி.எப்பில் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்து ஒரு மணி நேரம் பேச இருக்கிறேன்.

ஒரு மணி நேரம் மட்டுமே என்பதால், மிக விரிவாக பேச இயலாது. சில அடிப்படை புரிதல்களை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு உருவாக்க முடியும் என நம்புகிறேன்.

ஆகையால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இப்பொழுது கூட கேள்விகளை அனுப்பி வையுங்கள். என் உரையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முயல்கிறேன். இல்லையெனில், அதற்கு பிறகு அரை மணி நேரம் கேள்வி பதிலுக்காக ஒதுக்கியிருக்கிறோம். அதிலும் கேள்வி கேட்கலாம்.

உரைக்கு முன்பும், பின்பும், இனி இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த அடிப்படை புரிதல்களை உருவாக்குவதற்கு, கேள்வி பதில் வடிவத்தில் பேஸ்புக்கிலும், எனது தளமான குருத்திலும் http://socratesjr2007.blogspot.com தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

நன்றி.