> குருத்து: August 2021

August 28, 2021

My girl friend is an alien (2019) வெப் சீரிஸ் – ஒரு காதல் கதை



வேறு ஒரு கிரகத்திலிருந்து ஒரு இளம்பெண் பூமிக்கு வருகிறாள். வந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் விபத்தில் மாட்டிக்கொண்ட நாயகனை காப்பாற்றுகிறாள். இந்த களேபரத்தில் அவள் தன் கழுத்து செயினில் இருந்த ஒரு கல் அவன் இதயத்தில் போய் மாட்டிக்கொள்கிறது.


சிப் பொருத்தப்பட்ட அந்த கல்லின் உதவி இல்லாமல் தன் கிரகத்தை தொடர்பு கொள்ளமுடியாது. ஆகையால் போகவும் முடியாது. வேறு வழியும் இல்லாததால், அவனைத் தேடிப் போகிறாள். அவனோ ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கிறான். தன்னை ஏலியன் என சொல்லாமல், அவனிடம் பழகுகிறாள். அவன் இவளின் அப்பாவித்தனம் பிடித்துப்போய் காதலிக்க ஆரம்பிக்கிறான். இவளோ தான் ஏலியன் என்பதால், அவன் காதலை ஏற்க மறுக்கிறாள். ஆனால், கல்லுக்காக திரும்ப, திரும்ப அவனிடமே போகவேண்டிய நிலை.

இதற்கிடையில், நாயகனுக்கு வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. தன் சின்னஞ்சிறு வயதில், ஒரு மழை நாளில் அம்மாவை ஒரு விபத்தில் பறிகொடுக்கிறான். அதன் பாதிப்பால், ஒரு மழை நாளுக்கு பிறகு அவனுக்கு பல விசயங்கள் மறந்துபோகின்றன. அதில் அவன் காதலிக்கின்ற பெண்ணும் அடக்கம். நினைவுகள் போன பிறகு எப்படி மறுபடி காதலிப்பது? ஆகையால், அவர்களுக்கு அவர்கள் ஏற்கத்தக்க ஒரு இழப்பீட்டைக் கொடுத்து ஒதுங்கிவிடுகிறான். இந்த மறதி பிரச்சனையை யாரிடம் சொல்லாமல் கவனமாக மறைத்துவருகிறான். அதற்காக தன் வாழ்நாளில் நடக்கின்ற அத்தனை செயல்களையும் பதிவு செய்து, சமாளித்து வருகிறான்.

இதுவரை சொன்னதெல்லாம், துவக்க காட்சிகள் தான். அதற்கு பிறகு, அந்த கல் அவனின் இதயத்தில் இருப்பதால், அதை எடுத்தால், அவன் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள். இங்கேயே நீண்ட நாட்களுக்கு அவளால் வாழ முடியாது. பிறகு என்ன ஆனது என்பதை காதலுடன் சொல்லியிருக்கிறார்கள்.
*****

”ஊர்ல இத்தனை பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸியை காதலிச்சேன்” என புலம்புகிற கதை தான இந்தப் படமும்! அவள் ஒரு ஏலியன். அவள் பூமியிலேயே தங்கிவிட முடியாது என்ற எண்ணத்தில், அவன் மேல் காதல் இருந்தால் கூட ஏற்க மறுப்பாள். அவனோ இவளுக்கு தன்னைப் பிடிக்கிறது. இருந்தும் ஏன் இவள் மறைக்கிறாள்? என்ற இருவரின் காதல் பரிதவிப்பு தான் மொத்த கதையும். அது நன்றாகவும் வேலை செய்திருக்கிறது.

நம் தமிழ்ப் படங்களில் செமியாக வரும் நாயகிகளைப் போலவே, இதில் உள்ள
நாயகியின் பாத்திரமும்! அப்படிப்பட்ட நாயகிகளைப் பார்த்தால், நமக்கு எரிச்சல் வரும். ஆனால், இதில் அவள் ஒரு ஏலியன் என்பதாலும், அந்த பெண்ணின் வெள்ளந்தித்தனத்தாலும் நமக்கு பிடித்துவிடுகிறது.

இந்த மாதிரி தொடர்களில் எல்லாம் கவனிக்கிறேன். ஒரு விசயம் தெரிய வருகிறது. ஆனால், அதைப் பற்றி கேட்டால், தொடர் முடிந்துவிடும் என்பதால், அதை கண்டுகொள்ளாமலே நகர்கிறார்கள். ஒரு அத்தியாயம் 45 நிமிடங்கள். 10 அத்தியாயங்களில் எடுத்து முடித்திருக்க வேண்டிய ஒரு கதையை, 28 அத்தியாயங்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். குறைவான கதாப்பாத்திரங்கள் தான். நாயகிக்கு சூப்பர் பவராக சில திறன்கள் இருந்தாலும், ஆங்காங்கே ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறார்கள். இதன் வெற்றியில் இரண்டாவது சீசன் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 2022ல் வரும் என எதிர்பார்க்கலாம்.

இது ஒரு சீன தொடர். படத்தில் எல்லா வயதினை சார்ந்தவர்களும் தொப்பை இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்.

காதல் கதை பிடிக்கும் என்றால், நிறைய நேரம் இருந்தால் பாருங்கள். தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

Focus (2015)



நாயகன் ஒரு திருடன். சில்லறை திருடன் இல்லை. குழுவாக இயங்குகிற ஆள். ஒரு சில காட்சிகளிலேயே நாயகியைப் பார்க்கிறான். அவளும் துவக்க கால திருடி என அறிந்துகொள்கிறான். பின்பு இந்த திருடன்கள் ஜோதியில் அவளும் ஐக்கியமாகிறாள்.


அந்த குழு நாயகனிடம் ஒரு பெருந்தொகையை கொடுத்து இன்னொரு இடத்தில் பொறுப்பாக ஒப்படைக்க அனுப்புகிறார்கள். அவன் குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்திற்கு வந்து, எதைச்சையாய் அங்கு இருக்கும் பணக்காரருடன் பந்தயம் போடுகிறான். தான் வைத்திருக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கிறான். உடன் இருக்கும் நாயகி தடுக்கிறாள். ஒரு கட்டத்தில், தன் தோல்வியின் ஈகோவால் தான் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் பந்தயம் கட்டுகிறான். நாயகியோ கோபித்துக்கொள்கிறாள்.

பின்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார்கள்.
***

திருடர்கள் எப்பொழுதும் ’விசேச திறன்’ கொண்டவர்கள். அப்படி இல்லையென்றால், ஒரு சில திருட்டிலேயே அடி, உதை வாங்கி மாட்டிக்கொள்வார்கள். ’திறன்மிக்க’ திருடன்கள் எல்லாம் ஒரு குழுவாக இயங்கினால், என்ன நடக்கும்? “சுவாரசியமாக” இருக்கும் அல்லவா! அது தான் படம்.

வில் ஸ்மித் தான் நாயகன். The suicide squad ல் வரும் Margot Robbie தான் நாயகி. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கமர்சியலான சுவாரசியமான படம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

August 21, 2021

Fingertip (2019) தமிழ் வெப் சீரிஸ்


Fingertip (2019) தமிழ் வெப் சீரிஸ் – 5 அத்தியாயங்கள்

ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள்.

முதல் கதை. கணவர் மனநல மருத்துவர். துணைவியார் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருவரும் தங்களது ’கனவு’ வீட்டை பெருங்கடனில் வாங்குகிறார்கள். துணைவியாருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும்புகழ் பெறவேண்டும் (Celebrity) என தீவிரமாக இயங்குகிறார். அதிகமான நேரத்தையும், பணத்தையும் அதிகமாக செலவு செய்கிறார். விளைவு?

இரண்டாவது கதை. ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார். இப்படித்தான் வாழவேண்டும் என்ற மதிப்பீடுகளில் தீவிரமாக வாழ்கிற ’பழைய’ ஆள். இதனால், ஒருமுறை சண்டை வந்து, மகனே தன் குடும்பத்துடன் கொஞ்சம் தள்ளியே வாழ்கிறார். ஒருநாள் சாலையில் வந்துகொண்டிருந்த பொழுது, வேகமாக வண்டியில் வந்து, ஒரு பெரியவரை இடித்துத் தள்ளி, இழிவாகவும் திட்டிய ஒரு இளைஞனை இவர் ’தட்டிக்கேட்க’ அவன் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி தவறான செய்தியை பரப்ப, அது வைரலாகிறது. விளைவு?
மூன்றாவது கதை. ஒரு பெண்ணுக்கு வலைத்தளங்களில் நண்பனாகி, காதலனாகவும் ஆகிறான் ஒருவன். அவன் அந்த பெண்ணின் தோழியையும் ‘அடைய’ நினைக்கிறான். அந்த பெண்ணுக்கும் அவன் மீது ஈர்ப்பு இருக்கிறது. இதனால், அந்த பெண் அவள் தோழியைப் பற்றி ஒரு பொய்ச் செய்தியை பகிர்கிறாள். விளைவு?
நாலாவது கதை. டேட்டிங் ஆப் ஒன்றில் ஒரு பெண் தொடர்பு கொள்கிறாள். இவனுக்கு திருமணமாகி, ஒரு பையன் உண்டு. அதை மறைத்து, தான் வசதியானவன் என காட்டிக்கொள்கிறான். அடுத்தடுத்த சந்திப்புகளில் மெல்ல மெல்ல நெருங்குகிறான். விளைவு?
ஐந்தாவது கதை. உச்சத்தில் இருக்கிறான் நடிகன் ஒருவன். சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய கருத்துக்களை தொடர்ந்து எழுதிவருகிறான். திடீரென ஒரு நாள் அவனுடைய செல்போனை ஹேக் செய்கிறார்கள். அவன் செல்லில் வைத்திருந்த ‘ரகசிய’ காணொளிகளை மெல்ல மெல்ல வெளியிடுகிறார்கள். பிறகு அவன் என்னவாகிறான்?
*****
ஐபோனை அதன் முதலாளி முதன்முதலில் அறிமுகப்படுத்தும் பொழுது, இது ஒரு ”மேஜிக் பொருள்” என்றார். முன்பு கொக்கெயினை அப்படித்தான் சொன்னார்களாம். அப்படி ஒரு மேஜிக் பொருளை அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பின் தங்கியுள்ள சமூகத்தில் வந்து இறங்கினால் என்ன ஆகும்? தினம் தினம் வரும் செய்திகளே அதற்கு உதாரணங்களாகின்றன.
முந்தாநாள், நேப்பியார் பாலத்தில் இரவில் செல்பி எடுக்கும் பொழுது, அந்த இளைஞர் கூவத்தில் விழ, கழுத்தளவு நீரில் இருந்துகொண்டு காலை வரை “காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்” என கத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பிறகு தீயணைப்புத் துறை காப்பாற்றியிருக்கிறது. இப்படி தினந்தோறும் செல்போனை வைத்து, பல பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி பல கதைகளில் ஐந்து கதைகளை எடுத்து பேசியிருப்பது சிறப்பு.
என்ன விசயம் இன்று வைரலாகவேண்டும் என்பது வரை தொடர்ந்து பல கட்சிகளும் கவனமாக வேலை செய்கிறார்கள். அதில் பொய்ச்செய்திகளை தொடர்ந்து பரப்பி கலவரங்களை உண்டாக்கி, தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் அவதூறுகளால் எதிர்கொள்ளும் ஒரு கட்சி தான் மத்தியிலும் சில மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காலமிது.
இயக்குநர் விஷ்ணுவர்த்தன் தயாரித்திருக்கிறார். இந்த சீரிசில் அக்சராஹாசன், சுனைனா, காயத்ரி, அஸ்வின் என பலரும் நடித்திருக்கிறார்கள். இதில் அக்சாராவை தான் விளம்பரத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். ”என்னப்போய் சீரிஸில் நடிக்க வைச்சிட்டிங்களே” என்கிற ரீதியில் நடித்திருக்கிறார். மற்றவர்கள் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.
உச்ச நடிகர் செய்தது எல்லாம் அயோக்கியத்தனம். அவன் மீது பரிதாபம் வருவது போல காட்சிகள் வைத்திருப்பதும் சரியில்லை. அதே போல தான் செய்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் தன் செல்போனில் வைத்திருப்பான் என்பதும் நம்பும்படி இல்லை.
பார்க்கவேண்டிய சீரிஸ். Zee5 சானலில் இருக்கிறது. பாருங்கள்.

Biutiful (2010) Psychological drama படம்



 ”Amores Perros”, “Revenant” ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.


கதை ஸ்பெயினில் நடக்கிறது. பெரிய நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கும் கைப்பை, பெல்ட் போன்ற ’போலி’ பொருட்களை, கருப்பினத்தைச் சார்ந்த அகதிகளான இளைஞர்கள் நகரத்து பிரதான வீதிகளில் விற்கிறார்கள். வருமானம் போதாமல் போதை பொருட்களும் விற்கிறார்கள். போலீசு லஞ்சம் வாங்கிக்கொண்டாலும் ‘தொந்தரவு’ செய்கிறது. அந்த நிறுவனத்திற்கும், அந்த இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடைத்தரகனாக இருக்கிறான் நாயகன். இறந்தவர்களின் “ஆவி”யோடு பேசி, அவர்களுடைய தேவையை அவர்களுடைய சொந்தங்களிடம் தெரிவிக்கிறான்.


தன் துணைவியாருடான பிணக்கில், பன்னிரெண்டு வயது பெண்ணுடன், ஏழு வயது பையனுடன் அந்த சின்னஞ்சிறு அபார்ட்மெண்ட் வீட்டில் வாழ்கிறான். துணைவியாருக்கு ’பைபோலர்’ பிரச்சனையும் இருக்கிறது. வாரம் ஒருமுறை பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு செல்கிறாள்.


இதற்கிடையில் அவனுக்கு புற்று நோய் பாதித்து, மருத்துவம் பார்க்காமல், கண்டுகொள்ளாமல் விட்டு, ஆபத்தான நிலைக்கு வந்துவிடுகிறான். அதிகப்பட்சம் இன்னும் இரண்டு மாதம் உயிர்வாழமுடியும் என மருத்துவர் சொல்லிவிடுகிறார்.

வயிற்றில் இருக்கும் பொழுதே, அவனின் அப்பா பிரிந்து சென்றுவிடுகிறார். அம்மாவும் சின்னஞ்சிறு வயதில் இறந்துவிடுகிறார். தன் நிலை தன் பிள்ளைகளுக்கும் வருவதை அவனால் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறான். பிறகு என்ன ஆனது என்பதை இயல்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
****

”Amores Perros”, “Revenant” ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். தன் அப்பாவிற்கு இந்தப் படத்தை சமர்ப்பித்திருக்கிறார்.

படத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீன அகதிகளை கொண்டு கட்டிட வேலையை வாங்குவார்கள். அவர்களை அந்த கடுங்குளிரில் ஒரு குடவுனில் தங்க வைத்திருப்பார்கள். நாயகன் தன் தேவைக்காக காசை மிச்சப்படுத்துகிறேன் என மலிவான ஹீட்டர்களை வாங்கித் தந்து, அது சிக்கலாகி, 25 பேர் செத்துப்போவார்கள். உலகமயமாக்க சூழலில் இந்த சூழல் தான் நச்சு சூழலாக இருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் தமிழக தொழிலாளர்களில் பலருக்கே தொழிலாளர்கள் உரிமை என்ன இருக்கிறது என தெரியாது. இப்பொழுது இந்தியாவின் வடக்கு, வட கிழக்கு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து வேலை செய்கிறார்கள். குறைவான கூலியும், உரிமைகள் ஏதுமற்றும் தான் இங்கு வேலை செய்துவருகிறார்கள். தன்னால் இத்தனை உயிர் செத்துப்போனதே என குற்ற உணர்வில் நடுங்கிப்போவான். ஆனால், நம்முன் நடக்கும் அத்தனை அநீதிகளையும் எதையும் நம்மை அசைக்காமல், வேடிக்கைப் பார்த்தப்படியே மெளனமாய் நம்மில் பலர் கடந்து செல்கிறோம். இந்தச் சூழல் தான் இன்னும் கொடியது.

’No country for old men’ படத்தில் பதைபதைக்க வைத்த கொலைகாரன், இந்தப் படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாய் வருகிறார் Javier Bardem. வியந்துப் பார்க்க வைக்கிறார். அவருடைய மற்ற படங்களை பார்க்க தூண்டியுள்ளார்.

படம் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. ‘American Beauty’ என ஒரு படம். ஆனால், அமெரிக்க குடும்பங்கள் எத்தனை சிக்கல்களுடன் வாழ்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியப்படம். படத்தில் தன் மகனுக்கு ’Beautiful’ என சொல்லித்தரும் பொழுது “Biutiful” என எழுதிக் காண்பிப்பான். உலகம் எப்பொழுதும் இரண்டாகத் தானே இயங்குகிறது. அப்பொழுது ‘அழகும்’ அப்படித்தான்!

நல்லப்படம் பாருங்கள். இப்போதைக்கு எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. ஒன்றிரண்டு அடல்ட் காட்சிகள் இருப்பதால், குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை.

நெற்றிக்கண் (2021)



நாயகி சிபிஐ அதிகாரி. ஒரு சில காட்சிகளிலேயே ஒரு மோசமான விபத்தில் தன் கண்பார்வையை இழக்கிறார். ஒருமுறை டாக்சிக்காக புக் செய்து காத்திருக்கும் பொழுது, ஒரு கார் வந்து ஏற்றிக்கொள்கிறது. போகிற வழியில் யாரோ காரில் மோசமாக அடிபடுகிறார்கள். அவன் அடிப்பட்ட பெண்ணை டிக்கியில் போட்டு கிளம்பும் பொழுது, இவளுக்கு சந்தேகம் வருகிறது. நாயகி தகராறு செய்ய அவன் அங்கிருந்து நழுவுகிறான்.


அவன் யாரென்றால், தொடர்ச்சியாக பெண்களை கடத்தி, அடைத்து வைத்து செக்ஸ் டார்ச்சர் செய்கிற ஆள். அவன் இப்பொழுது நாயகியை விடாமல் துரத்துகிறான். அவனிடமிருந்து நாயகி தப்பித்தாளா என்பதை பர பர காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
*****

The Blind என ஒரு தென்கொரியப் படம். 2011 வெளிவந்து வெற்றிப்பெற்ற படத்தை, தமிழில் முறையாக அனுமதி எடுத்திருக்கிறார்கள். ஆச்சர்யம். வரவேற்கப்படவேண்டிய விசயம்.

மூலப்படத்தில் பயிற்சியில் இருக்கும் போலீசு என நாயகியை காண்பித்திருக்கிறார்கள். அதனால், நாயகி அந்த காம கொடூரனிடம் இருந்து தப்பிக்கவேண்டுமே என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கு வந்திருக்கும். ஆனால், இதில் நாயகியை ஒரு பில்டப்புக்காக (லேடி சூப்பர் ஸ்டார் என எழுத்தில் போடுகிறார்கள்.) சிபிஐ அதிகாரி என சொன்னது அந்த பதட்டம் வராமல் தடுக்கிறது. அவர் தான் முன்னாள் சிபிஐ அதிகாரியாச்சே! தப்பித்துவிடுவார். அவனையும் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை வருகிறது.

அதே போல படம் இரண்டு மணி நேரத்திற்குள் மூலப்படம் கூர்மையாக முடிந்துவிடுகிறது. தமிழில் 2.30 மணி நேரமாக காட்சியை இழுத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் படம் எடுத்தால் போதுமப்பா! ஏன் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள்?

நயனே தயாரித்திருக்கிறார். படத்தில் மற்றவர்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். அஜ்மலுக்கு அந்த பாத்திரம் அத்தனை பொருத்தமில்லை.

மற்றபடி, உங்களுக்கு நயனை பிடிக்கும் என்றால் பாருங்கள். டிஸ்னி, ஹாட் ஸ்டாரில் இருக்கிறது.

August 13, 2021

A Bittersweet Life (2005) தென்கொரியா

 



'I saw the Devil' இயக்கிய Kim Jee-woon இயக்குநரின் இன்னொரு படம்.

“ஒரு ஸென் குருவிடம் சீடன் கேட்கிறான் – ‘இலைகள் தானாக அசைகின்றனவா, அல்லது அது காற்றினால் நடக்கிறதா?’

குரு சொல்கிறார் – ’அசைவது இலையோ காற்றோ இல்லை. உனது இதயமும் மனதும்தான்’.”

- படத்தின் துவக்க வரிகளிலிருந்து….
****

நாயகன் ஒரு பெரிய தொழில் அதிபரிடம் மிகவும் விசுவாசமான அடியாளாக ஏழு வருடங்களாக வேலை செய்துவருகிறான். மூன்று நாட்கள் வெளிநாடு செல்லும் முதலாளி, அவனின் விசுவாசத்தை நம்பி, ஒரு ’பொறுப்பான’ வேலையை ஒப்படைக்கிறான். தனக்கு ஒரு இளவயது காதலி இருப்பதாகவும், அவள் இப்பொழுது ஒரு இளைஞனை காதலிப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக சொல்கிறான். ”ஊருக்கு போய்விட்டு வருவதற்குள், அவளை பின்தொடர்ந்து காதலன் இருப்பதை கண்டுபிடி! அப்படி இருப்பதாக தெரிந்தால், இருவரையும் நீயே கொலை செய்துவிடு” என்கிறான்.

அவளை பின்தொடர்கிறான். அவளின் சின்ன சின்ன செய்கைகள் இவனுக்குள் எதோ செய்கிறது. அவள் ‘செல்லோ’ கருவி வாசிக்கும் பொழுது அந்த இசை அவனை என்னவோ செய்கிறது.

பின்தொடர்ந்து வேவு பார்த்ததில் காதலன் இருப்பதை கண்டுபிடிக்கிறான். அவனை அடித்து துவைக்கிறான். முதலாளியிடம் சொல்லி அவர்களை கொன்றுவிடலாம் என போனை எடுக்கும் பொழுது, மனதில் மெல்லிய தயக்கம் வருகிறது. கடைசி நேரத்தில் ”இனி இருவரும் சந்திக்கவே கூடாது” என எச்சரித்துவிட்டு நகருகிறான்.

ஊரிலிருந்து முதலாளி வருகிறான். அவனுக்கு நடந்த விசயங்கள் தெரியவருகின்றன. தன் உத்தரவை மீறி, நம்பகத்தன்மையை உடைத்துவிட்டான். தன்னை அவமதித்துவிட்டான் என கோபம் கொள்கிறான். அவனை உயிரோடு புதைக்க சொல்கிறான்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாகவும், பர பர சண்டைக்காட்சிகளுடன் சொல்லுகிறார்கள்.
***

சண்டைப் படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாகவும் எடுப்பதில் கொரியாக்காரர்கள் கில்லாடிகள் என்பதை இந்த படம் மூலமாகவும் நிரூபித்திருக்கிறார்கள். நாயகனுக்குள் நடந்த மாஜிக் என்ன? என்பதை அவன் வாய்விட்டு சொல்லவே மாட்டான். அவளிடம் வெளிப்படுத்தவும் மாட்டான். சின்ன சின்ன காட்சிகள் மூலம் இயக்குநர் நம்மை உணர வைத்திருப்பார். அழகு.

நாம் சந்திக்கிற மனிதர்கள் நம்மை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என ”வாழ்” படத்தில் சொல்லியிருப்பார்கள். உண்மை தான்.

மற்றபடி, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாம் கதைக்கு அழகு சேர்க்கின்றன. பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
****

”ஓர் நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான். ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.

’கெட்ட கனவு எதாவது கண்டாயா?’

‘இல்லை’

’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா?’

’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’

‘பிறகு ஏன் அழுகிறாய்?’

சிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் – ‘ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’.

- இந்த வரிகளோடு படம் நிறைவுடைகிறது.

படத்தின் வாசகங்களுக்கு என்ன அர்த்தம் என தேடிப்பார்த்தேன். it has some happy aspects and some sad ones.

#நன்றி : இரண்டு ஸென் வாசகங்களையும் மொழிபெயர்த்து தந்த கருந்தேள் ராஜேஷ்க்கு நன்றி.

August 6, 2021

”நாங்கள் எடுத்த இந்திப் படத்தை மும்பையில் வெளியிட சிவசேனா தடுத்தது!”

 



விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு சரிசெய்தோம்!”

- ஏவி.எம்.குமரன்

”ஒரு படத்தை தமிழில் எடுத்து, வெற்றி பெற்றுவிட்டால்… அப்பா அந்த படத்திற்கு வரக்கூடிய பத்திரிக்கை விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரு ஆல்பமாக்கிவிடுவார். அதில் சொல்லப்பட்ட குறைகளை களைந்து தெலுங்கில் எடுப்போம். அங்கும் வெற்றி பெற்றுவிட்டால், அங்கு வரக்கூடிய விமர்சனங்களை தொகுத்து அதை இந்தியில் சரிசெய்வோம்.”

”களத்தூர் கண்ணாம்மாவில் ”ஆடாத மனமும் ஆடுதே” பாடல் உருவாக்கத்தில் இருந்தேன். அப்பொழுது புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம். சில டூயூன்களை போட்டுக் காண்பித்தார். திருப்தியாக இல்லை. என்னையும் அழைத்துக்கொண்டு அண்ணா சாலையில் உள்ள இப்ராஹிம் கடைக்கு போனார். ஏன் இப்படி அழைத்து வந்திருக்கிறார் என எனக்கு ஆச்சர்யம். இந்தியில் புகழ்பெற்ற சில இசையமைப்பாளர்களின் காதல் பாடல்களை கேட்டார். சிலவற்றை வாங்கியும் கொண்டார். மீண்டும் ஸ்டுடியோவிற்கு வந்து அதில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்தார். ”ஏன் இந்தி? நாமே உருவாக்கலாமே? என்றேன். இந்தி பாடலே என தெரியாத அளவிற்கு நான் உருவாக்கி தருகிறேன் என அந்த பாடலைத் தழுவி உருவாக்கித் தந்த பாடலே ”ஆடாத மனமும் ஆடுதே” பாடல்!”

ஜெய்சங்கர் மகள்களாக குட்டி பத்மினி இரட்டை வேடத்தில் நடித்த “குழந்தையும் தெய்வமும்” படம் தமிழில் எடுத்து பெரிய வெற்றி பெற்று, தெலுங்கில் நாங்களே எடுத்து வெற்றி பெற்று, இந்தியிலும் நாங்கள் எடுத்தோம். அந்த சமயத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. மும்பையில் சிவசேனா தலைவன் பால்தாக்கரே படத்தை வெளியிட விடாமல் தடுத்தான். தமிழ்நாட்டில் இந்தி படம் ஓடினால் தான், இங்கு அனுமதிப்பேன் என்றான். அண்ணாத்துரை அவர்களைப் அணுகினோம். இரண்டு நாளில் ஆலோசனை சொல்வதாக சொன்னார். அப்பொழுது போலீஸ் ஐ.ஜியாக இருந்தவர் பரமகுரு. அவர் மூலமாக ஆலோசனை வந்தது. ஆவடி பகுதியில் பீரங்கி தொழிற்சாலை இருந்ததால், இந்தி பேசுபவர்கள் அதிகம். அங்கு ரத்னா திரையங்கு இருந்தது. அங்கு நாங்கள் எடுத்த பழைய இந்திப் படத்தைப் போட்டோம். நாங்களே திரை துணை நடிகர்களை வரவழைத்தோம். ரசித்துப் பார்ப்பதாக செட்டப் செய்தோம். அதை புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிக்கையில் செய்தியாக சின்னதாய் வரவழைத்தோம். அவற்றைக்கொண்டு போய், பால்தாக்கரேயிடம் கொடுத்தோம். “சிவசேனாவின் ஆசியுடன்” என படத்தை வெளியிட சொன்னான். பிறகு வெளியிட்டோம். 100 நாட்கள் ஓடியது.

“களத்தூர் கண்ணாம்மாவில் ஒரு குட்டிப்பையன் தேவைப்பட்டான். கமலை அழைத்துவந்தார்கள். நான்கு வயது. கட்டப்பொம்மன் படத்தில் வரும் “வயலுக்கு வந்தாயா” வசனத்தை பேசிக்காண்பித்தான். அறிமுகப்படுத்தினோம். அதில் வரும் ”அம்மாவும் நீயே!” பாடல், 4.5 நிமிட பாடல் கமலுக்கு இருந்தது. இயக்குநர் ஒன்றரை நிமிடமாக குறைத்தார். கேட்டால், அந்தப் படத்தை காதல் படமாக கொண்டு செல்ல இயக்குநர் பிரகாஷ் ராவ் விரும்பினார். அப்பாவிற்கு குடும்ப படமாக கொண்டு செல்ல விரும்பினார். விளைவு பாதியிலிருந்து இயக்குநர் பீம்சிங் பொறுப்பேற்றார். படத்தில் 4.5 நிமிட பாடல் மீண்டும் எடுக்கப்பட்டது.

”எங்கள் படங்களுக்கு வேலை செய்த 25க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் வேலை செய்துள்ளேன். அதில் முக்கியமானவர் எம்.எஸ். விஸ்வநாதன். குழந்தை மனம் படைத்தவர்”

”அன்பே வா துவக்கத்தில் சின்னப்படமாக இருந்தது. அதில் ஜெய்சங்கரை வைத்து எடுக்க திட்டமிட்டோம். எம்.ஜி.ஆரை கேட்கலாம் என முடிவெடுத்த பொழுது, அது பெரிய படமாக மாறியது. எம்.எஸ்.வி எதுவென்றாலும் எம்.ஜி.ஆரிடம் கேட்டு செய்யுங்கள். இல்லையெனில் சிக்கலாகிவிடும் என பயமுறுத்தினார். ஆகையால், பாடல்களை ஓகே செய்து, பதிவு செய்வதற்கு முன்பு, எம்.ஜி.ஆரிடம் கேட்டோம். ”உங்கள் படங்களில் பாடல்கள் எல்லாம் அருமையாக தானே இருக்கின்றன. அப்பா கேட்டுவிட்டாரா? அப்படியென்றால் பதிவு செய்யுங்கள்” என்றார். முழு படத்திற்கும் அருமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.”

- ஏவி.எம். குமரனின் டூரிங் டாக்கீஸ் பேட்டியிலிருந்து சில துளிகள்!

Mother (2009) தென்கொரியா


புகழ்பெற்ற Memories of Murder, Parasite படங்களின் இயக்குநர் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

மூளை வளர்ச்சி குறைவாக உள்ள (Mentally Challenged) உள்ள தன் மகனுடன் வாழ்ந்துவருகிறார். மூலிகைகள் விற்கும் கடையை நடத்திக்கொண்டு, அக்குபஞ்சர் சிகிச்சையும் செய்துவருகிறார். மகன் இளவயது மகனாக இருந்தாலும், மற்ற பசங்க போல இருக்க முயற்சி செய்கிறார். ஆனால் சொதப்புகிறது.


இந்த சூழ்நிலையில் உயர்கல்வி படித்துவரும் ஒரு மாணவி மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறாள். சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் அவன் தான் கொலை செய்தான் என போலீஸ் அவனை கைது செய்கிறது. தன் மகன் இதை செய்திருக்கமாட்டான் என நம்பும் தாய், அவனை விடுவிப்பதற்கு பல்வேறு வகைகளில் போராடுகிறாள். தன் மகனின் நண்பனின் உதவியுடன் துப்பறியவும் செய்கிறாள்.

அவன் விடுதலை செய்யப்பட்டானா? அல்லது தண்டிக்கப்பட்டானா? என்பதை முழு நீளக்கதையில் சொல்கிறார்கள்.
*****

அந்த பையனின் ஐ.க்யூ பற்றி சொல்லவேண்டுமென்றால்…. 16 வயதினிலே சப்பாணியை விட ஐ.க்யூ ரெம்ப குறைவானவான். “சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சிரு!”ன்னு சொல்லிக்கொடுக்கப்பட்டு, சப்பாணி அதை செய்வான். அதைப் போலவே உன்னை யாராவது கேலி செய்தால், நீயும் திட்டிவிடு. ரெண்டு உதை கொடு!”ன்னு சொல்லி வளர்க்கிறார்கள். அதைப் போலவே சில இடங்களில் செய்யவும் செய்கிறான்.

அவனுக்கு நடந்தது எல்லாம் மறந்துவிடும். ஆனால், தொடர்ந்து யோசித்தால், அவனுக்கு நினைவு வந்துவிடும். அவள் தன் மகனிடம் அன்று இரவு என்ன நடந்தது? என யோசித்து சொல்! என மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது, ஒருமுறை “ஐந்து வயசுல என்னை விசம் வைச்சு கொல்லப் பார்த்ததில்ல! இனி என்னைப் பார்க்க வராதே!” என்பான் கோபமாய். “இல்லடா! உனக்கு கொடுத்துட்டு, பிறகு நானும் குடிக்கிற யோசனைடா!” என அழுதுகொண்டே சொல்வார். அதெல்லாம் அந்த குடும்பத்தின் நிலையை சொல்கிற காட்சிகள்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் அந்த தாய் ஓரிடத்தில் சொல்வாள். உடலில் முக்கிய புள்ளி ஒன்று உண்டு. அதில் ஊசிப் (needle) போட்டால், மனதில் தங்கி வதை செய்கிற பல நினைவுகளும் போய்விடும் என்பாள். அதை ஓரிடத்தில் அவள் பயன்படுத்தும்பொழுது மனசு கலக்கமாகிவிடும்.

மற்றபடி, நேர்மறையான “குற்ற உணர்ச்சி” சரியானது தானே! அது இல்லையென்றால் என்ன ஆவது?

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

August 4, 2021

உரிய வாரன்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் போலீசார் இலவசமாக பயணிக்க கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை


"போலீஸ்காரர்கள் எல்லா அரசு ஊழியர்களைப் போலத்தான்! மற்ற அரசு ஊழியர்கள் எல்லாம் டிக்கெட் எடுக்கும் பொழுது, போலீஸ் மட்டும் டிக்கெட் எடுக்க மறுப்பது ஏன்? ”தாங்கள் தனி இனம்” என்கிற திமிர் தான்! டிக்கெட் எடுக்கச் சொல்லி ஏகப்பட்ட இடங்களில் தகராறு! ஒரு பேருந்தின் ஓட்டுநரை கொன்ற பிறகு, மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்து நடத்திய பிறகு இப்பொழுது டிக்கெட் எடுத்து பயணிக்கவேண்டும் என உத்தரவு போடுகிறார்கள். போலீஸ்க்கு கடுமையான கண்டனங்களை அனைவரும் தெரிவிக்கவேண்டும்.”

- வினைசெய்

சென்னை: உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது, என்று காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒரு வழக்கில் போலீசார் பேருந்தில் கட்டணம் எடுக்காமல் சென்றபோது, பேருந்து நடத்துனர் மற்றும் காவலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உரிய வாரண்ட் இல்லால் பயணம் செய்ய கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்று தெரிவித்திருந்தது. எனவே, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் கருத்தை உறுதி செய்ய வேண்டும். உரிய வாரண்ட் இல்லாமல் போலீசார் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கூடாது.

- தினகரன் நாளிதழ், 24/07/2021

The Perfection (2018) அமெரிக்க உளவியல் திகில் படம்


 "Perfection is not attainable, but if we chase perfection we can catch excellence"

- Vince Lombardi, Foot Ball Coach

வயலின் குடும்பத்தைச் சேர்ந்த Cello என்ற கருவியை வாசிப்பவர்களை Cellist என அழைக்கிறார்கள். இந்த கருவியை உட்கார்ந்து தான் வாசிக்கமுடியும். அதில் திறமை வாய்ந்த இருவரைப் பற்றிய கதை தான் இது!

செல்லோ கருவியை திறன்பட வாசிக்கும் பெண் பிள்ளைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், உதவித்தொகையையும் கொடுத்து, தன் செல்வாக்கால் பெரும்புகழ் அடைய செய்கிறது ஒரு பாரம்பரிய பள்ளி.

நாயகி அந்த பள்ளியில் படிக்கும் பொழுது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக பாதியில் வெளியேறுகிறாள். இவளுக்கு பிறகு பள்ளியில் சேர்ந்த கருப்பின பெண் ஒருத்தி பெரும்புகழடைகிறாள்.

அந்த பள்ளி புதியவர்களை தேர்ந்தெடுக்க ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. இருவரும் நடுவராக சந்திக்கிறார்கள். இருவரும் பேசி, பழகி நெருக்கமாகிறார்கள்.

தனக்கு இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு நாயகியை அழைக்கிறாள். இருவரும் கிளம்புகிறார்கள். அந்த மோசமான பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கருப்பின பெண்ணுக்கு உடல்நலம் முடியாமல் போகிறது. அதற்காக சாப்பிடும் மருந்தோ அவளை அநேகமாக பைத்தியமாக்கிவிடுகிறது. எழும் விபரீத கற்பனைகளால், அதிகபட்சமாக போய் தன் கையை வெட்டிக்கொள்கிறாள்.

ஏன் இப்படி நடந்துகொண்டாள்? நாயகி ஏன் அப்படிப்பட்ட மருந்துகளை இவளுக்கு கொடுத்தாள்? என்பதின் பின்னணியை மீதி முக்கால்வாசி கதையில் சொல்லிமுடிக்கிறார்கள்.
****

ஒன்றரை மணி நேர கதை தான். தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது போல எனக்கு தோன்றியது. இந்தப் படத்தின் கதையைப் பற்றி, அது பேசிய விசயம் குறித்து இன்னும் பேசினால் ஸ்பாயிலராகிவிடும் என்பதால் சுருக்கமாய் முடித்துக்கொள்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரங்களான இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் இரண்டு திருப்பங்கள் முக்கியமானவை. ஒன்று அதிர்ச்சியானது. இன்னொன்று தண்டனைக்கானது.

படம் நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

Payback (1999)


மெல்கிப்சனை "Brave Heart" படத்தில் சிறந்த நடிகராகவும், "Apocalypto" படத்தில் ஒரு இயக்குநராகவும் தெரியும். வேறு படங்கள் பார்த்ததில்லை. அதனாலேயே இந்தப் படம் பார்த்தேன்.

***

நாயகனும் இன்னொருவனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். அதில் பங்கு பிரிக்கும் பொழுது, பார்ட்டனர் நாயகனின் காதலியை கைக்குள் போட்டுக்கொண்டு நாயகனைச் சுட்டுவிடுகிறார். செத்துப்போய்விட்டான் என நம்பி நகர்ந்துவிடுகிறான்.

நாயகனோ ஒரு மருத்துவரைப் பார்த்து, உயிர்பிழைத்துவிடுகிறான். தன் பங்குப் பணத்தை வாங்க துரோகம் செய்த பார்ட்டனரை தேடிப்போகிறான். அவனோ அந்தப் பணத்தை நகரத்தை ஆளும் ஒரு மாபியா கும்பலிடம் வைப்புத்தொகையாக கொடுத்துவிட்டு அவர்களிடம் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு புதிய வாழ்க்கையை துவங்கலாம் என்பது நாயகனின் திட்டம். அந்த மாபியா கும்பலிடம் பணத்தை கேட்டால், "ஓடிப்போயிரு! கொன்றுவிடுவோம்" என மிரட்டுகிறார்கள். பணத்தை வாங்கியே தீருவது என முடிவெடுக்கிறான். பிறகு என்ன ஆனது என்பது பர பர மிச்சக்கதை!
****

"The Hunter" என்ற நாவலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். எளிய கதை. பெரிய ட்விஸ்ட் எல்லாம் இல்லை. எடுத்தவிதத்தில் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்கள். படம் நன்றாகவும் ஓடியிருக்கிறது. மெல்கிப்சனுக்காக தான் பார்த்தேன். கொஞ்சமாய் பிடித்தது. நீங்களும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

Under the Dome (2013 -2015)




3 சீசன்ஸ் ஒவ்வொரு சீசனும் 13 அத்தியாயங்கள்

ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள்.

அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தின் பெரும்பகுதியை உயரமான ஒரு அடர்த்தியான பொருளால் ஆன ஒரு டூம் திடீரென மூடிவிடுகிறது. அந்த டூம் கண்ணாடி போல இருப்பதால், உள்ளிருப்பவர்களை வெளியே இருப்பவர்களாலும், வெளியே இருப்பவர்களை உள்ளே இருப்பவர்களாலும் பார்க்க முடிகிறது. ஆனால், உள்ளிருப்பவர்கள் வெளியேவோ, வெளியே இருப்பவர்கள் உள்ளேயோ நுழைய முடியாது. அந்த ஊர்க்காரர்கள், வெளிமாகாணங்களிலிருந்து வந்தவர்கள் என 2000 பேருக்கு மேலாக மாட்டிக்கொள்கிறார்கள்.

உள்ளே உள்ள மக்கள் செத்துப்போனால் கூட பரவாயில்லை என அந்த டூமை அழிக்க அரசு அணுகுண்டை வீசிப்பார்க்கிறது. எதுவுமே ஆகாமல் அது உறுதியாக நிற்கிறது. அரசு குழம்பிபோகிறது. மூடப்பட்டதால் மக்கள் குழம்பி போகிறார்கள். பதட்டமாகிறார்கள். வெளி உலக தொடர்பு இல்லாததால், தண்ணீர், உணவு, காலநிலை மாற்றம் என ஒவ்வொன்றாக பிரச்சனையாக எழுகிறது. எல்லோரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் என எதிர்கொள்கிறார்கள். அதில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

காட்டில் ஒரு இடத்தில் ஒரு முட்டை கிடைக்கிறது. அந்த முட்டை தான் அந்த டூமின் இதயம் போன்றது என புரிந்துகொள்கிறார்கள். அந்த முட்டையை ஆய்வு செய்கிறார்கள். அந்த சூழலை தமக்கு சாதகமாக சிலர் மாற்றிக்கொள்ளப் பார்க்கிறார்கள். அந்த டூமில் நிறைய சோதனைகள் வருகின்றன. அந்த டூம் உடைந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறினார்களா? அல்லது உள்ளேயே செத்துப் போனார்களா? என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அமெரிக்க சீரிஸில் நான் பார்த்த மூன்றாவது சீரிஸ் இது. தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்திருக்கின்றன. ”ஸ்டீபன் கிங்” எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய கற்பனை, கொஞ்சம் அறிவியல் என எழுதி இருக்கிறார். நம்மூர் எழுத்தாளர் சுஜாதா போல!

முதல் சீசன் மிக சுறுசுறுப்பாக செல்கிறது. இரண்டாவது சீசன் சுறுசுறுப்பாக செல்கிறது. மூன்றாவது சீசன் எங்கெங்கோ இழுத்து சென்று முடிவு தெரியவேண்டுமே என்பதற்காக பார்க்க வேண்டியிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என நாலாவது சீசனுக்கான ஒரு வாய்ப்பை தந்து முடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அதற்கான அறிவிப்பு வரவில்லை. மூன்றாவது சீசனே சுமாராக இருப்பதால் நாலாவது சீசனுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என கருதுகிறேன்.

முன்னாள் இராணுவ வீரன், ஒரு பெண் பத்திரிக்கையாளர், ஒரு இளம் ஜோடிகள், ஒரு அரசியல்வாதி, உள்ளூர் போலீஸ் என கலவையான மனிதர்கள். காதல், அதிகாரம், நட்பு, துரோகம் என கலவையான உணர்வுகளோடு செல்கிறது. எல்லா பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நல்ல தமிழில் டப் செய்திருக்கிறார்கள். MX Playerல் இருக்கிறது. பாருங்கள்.