> குருத்து: April 2011

April 29, 2011

வாக்கை விற்கமாட்டோம்!


கடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமாகப் பேசப்பட்ட விஷயங்களில் முதலிடம் பிடித்தது பணப் பட்டுவாடா.....

நம்பித்தான் ஆக வேண்டும். ஆம்... இதுவே உண்மையும்கூட. உணவுக்காக ஊசிகளை விற்றும், உடலை மறைக்க வேண்டி, ஆடைகளுக்காகப் பாசிகளை விற்றும் தங்கள் வாழ்க்கையைக் கழித்துவரும் நரிக்குறவ மக்கள்தான் தேர்தலில் தங்கள் வாக்கு, விற்பனைக்கு அல்ல என்று அரசியல் கட்சியினரிடம் தைரியமாகக் கூறிப் பணம் வாங்க மறுத்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்டது சக்கிமங்கலம். இந்தப் பகுதியில் சுமார் 500 நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்த மக்கள் அடிப்படை வசதிகூட இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

இங்கு வசிப்போரில் சுமார் 800 பேருக்கு மதுரை கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தது. இதைத் தெரிந்து கொண்ட ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இவர்களை அணுகி எவ்வளவு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
எங்களுக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் பிழைப்புக்காக ஊசி, பாசி விற்போமே தவிர, எங்கள் உரிமையை ஒருபோதும் விற்கமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டனர்.

வாக்குக்குப் பணம் வாங்க மறுத்த அந்த நரிக்குறவ மக்களிடம் பேசியபோது, இப்போது இருநூறுக்கும், ஐநூறுக்கும் ஆசைப்பட்டால், அப்புறம் ஐந்தாண்டுகளுக்கு அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. வாக்குகளை விற்பதும் வாழ்க்கையை விற்பதும் ஒன்றுதான். ஊசி, பாசி விற்றால்கூட அதை நியாயமான விலைக்குத்தான் விற்போம். கூடுதல் விலை கொடுத்தாலோ, ஓசியில் பணம் கொடுக்க முன்வந்தாலோ வேண்டாம் என மறுத்துவிடுவோம் என்கின்றனர்.

""ஊசிமணி பாசி எல்லாம் விப்போமுங்க.. ஆனால், காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்'' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

நன்றி : வ. ஜெயபாண்டி, தினமணி

April 28, 2011

சென்னை மாணவர் தற்கொலைக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்


வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மாணவர் இளையராஜாவின் தற்கொலைக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.

சென்னை வியாசர்பாடிய்ல் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி மாணவர் இளையராஜா 11ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் வருகைப் பதிவு போதுமானதாக இல்லாத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கதாதே அவரின் தற்கொலைக்கு காரணம், எனக்கூறி சக கல்லூரி மாணவர்கள் தேர்வு நாளான ஏப்ரல் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இது தொடர்பாக இளையராஜாவின் தந்தை உள்பட 19 மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தினர் பருவத் தேர்வைக் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.

இதனிடையே, மாணவர் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள உண்மை நிலையை கண்டறியும், கல்லூரியில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேரு கல்வியாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் விசாரித்து வந்தனர். இக்குழுவில் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் உறுப்பினர் அ.மார்க்ஸ், அம்பேத்கர் முன்னாள் முதல்வர் மு.திருமாவளவன், மனித உரிமை ஆர்வலர் நடராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் அறிக்கை ஏப். 27 அன்று வெளியிடப்பட்டது.

இது குறித்து குழு உறுப்பினர்களில் ஒருவரான அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாசார்பாடி அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் உண்மை அறியும் குழுவின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அக்கல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்தது. கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லை. குறிப்பாக தற்கொஅலை செய்துக் கொண்ட மாணவர் பயின்ற பி.பி.ஏ. துறையில் கெளரவ விரிவுரையாளர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.

இந்த துறைக்கென, துறைத் தலைவரும் நியமிக்கப்படவில்லை. மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்கள் குறைகளை, மாணவர் பிரதிந்தி மூலம் சரி செய்திருக்க முடியும். இதுவும் மாணவர் தற்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர் குறைத் தீர்க்கும் செல் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக் கழக மானியக் குழுவின் விதி. இதுவும் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பொதுவாக கல்லூரியில் சில மாணவர்களின் வருகைப் பதிவு குறையும் பட்சத்தில் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், தற்கொலை செய்துக்கொண்ட மாணவர் இளையராஜவின் பெற்றோருக்கு எந்தவிதத் தகவலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இது அவரது பெற்றோரிடம் மாணவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவரின் தற்கொலைக்கு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம்.

இந்நிலையில் கல்லூரி தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மேலும் கல்லூரியில் சுமூகமான சூழல் திரும்ப உடனடியாக இளையராஜாவின் தந்தை, சில மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.

நன்றி : தினமணி (28/04/2011)

April 27, 2011

49 ஓ வாக்களித்தவர்களை கண்காணிக்க தடை!


தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், 49 ஓ வாக்களிக்கலாம் என்ற முறையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் பல வாக்கு சாவடிகளில் அப்படி ஒரு படிவமே கேட்டும் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கில் மட்டும் பதிவாகியது.

இந்த முறையும் பல வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் கேட்டு இல்லை என சொல்லி, காத்திருக்க சொல்லி இழுத்தடித்து, வெறுப்பேற்றி உள்ளனர். இதையும் மீறி பல மாவட்டங்களில், அடம்பிடித்து 25,491 வாக்காளர்கள் 49 ஓ வாக்களித்து உள்ளனர்.

உளவுத் துறை போலீசார் இப்படி வாக்களித்தவர்களின் பட்டியலை, தேர்தல் அதிகாரிகளிடம் மாவட்டம் வாரியாக வாங்கி, நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதா என விசாரிக்க கிளம்பி உள்ளதாம்.

உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ். சத்தியசந்திரன் தேர்தல் ஆணையம் 49 ஓ வாக்களித்தவர்களின் பட்டியலை உளவுப்பிரிவினருக்கு தரக்கூடாது. விசாரிக்கவும் கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு வாங்கியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையமும், உளவுத்துறையும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்க சொல்லி, பிரச்சாரத்தை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர். (கீழே உள்ள சுட்டிகளை பாருங்கள்.) பொதுமக்களும் நன்றாகவே ஆதரவளித்தனர்.

49 ஓ என்பது இந்த அரசமைப்பு ஏற்றுக்கொண்டு, வேட்பாளர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இல்லை என்பதை தெரியப்படுத்துவது தான். ஏதோதோ கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இரகசியமாய் வாக்களிக்க, 49 ஓ வாக்களிப்பதை மட்டும் இரகசியம் இல்லாமல் செய்ததே, தேர்தல் ஆணையம் இந்த முறையை உற்சாகப்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

இப்பொழுது அவர்களும் மிரட்டப்படுவார்கள் என்றால், பெயரளவு ஜனநாயகம் கூட இங்கு இல்லாமல் இருக்கிறது என்கிற நக்சல்பாரிகளின் கருத்தை உண்மை என நிரூபிக்கிறது.
***

தொடர்புடைய சுட்டிகள் :

தேர்தல் புறக்கணிப்பு - ம.க.இ.க சிறு வெளியீடு

High Court restrains Q Branch police on questioning '49-O voters'

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே! - வினவு

April 26, 2011

மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது!


மகரஜோதியை பார்ப்பதற்காக 15 லட்சம் பேர் கடந்த ஜனவரியில் கூட்டம் கூட, ஒரு சிறு விபத்தினால், களேபரமாகி நெரிசலில் மிதிபட்டு 102 பேர் செத்துப்போனார்கள். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.

கேரள பகுத்தறிவாளர்கள் சங்கம் மகரஜோதி மனிதர்களால் குறிப்பாக அரசும், ஐயப்பன் கோவில் தேவசம் போர்டும் சேர்ந்து தான் கொளுத்துகிறார்கள். அதையே புனித ஜோதி என கதைவிடுவதால் தான், இவ்வளவு கூட்டம் கூடுகிறது. ஆகையால் அரசும், தேவசம் போர்டும் விளக்கமளிக்க வேண்டும் என மூன்று மனுக்களை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

எவ்வளவு பேர் செத்தால் எனக்கென்ன? என்பது போல அலட்சியமாக, மகரஜோதி மத நம்பிக்கை. ஆகையால், அரசு விசாரிக்க விரும்பவில்லை என ஆளும் மார்க்சிஸ்ட் அரசு பதில் சொல்லிவிட்டது.

நேற்று ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு, மகர ஜோதி பொன்னம்பல மேடு அருகே பழங்குடி மக்கள் தான் ஏற்றிவருகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய பிறகும், அவர்களுடைய வாரிசுகள் குறிப்பிட்ட நாளில் அங்கு சென்று மகரஜோதி ஏற்றி வருகிறார்கள் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

இன்றைய தினமலர் இந்த மேலே உள்ள செய்தியை அப்பட்டமாக மறைத்துவிட்டு, மகரஜோதி வானில் தோன்றும் நட்சத்திரம். அது இயற்கையாக தோன்றுகிறது என பிரமாண பத்திரத்தில் சொல்லியது போல கதை விட்டிருக்கிறது.

மகரஜோதி டுபாக்கர் என தெரிந்த பிறகும், மக்கள செல்லாமலா இருக்கப்போகிறார்கள்? மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள இந்த கட்டுரை இதன் பின்னணியை ஒரு சமூக ஆய்வு கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. வாசியுங்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :


மகரஜோதி பொய்! - தோழர் மருதையன்

மகரஜோதி சர்ச்சை - கேரள அரசு பதில்

April 25, 2011

சாயிபாபா பற்றிய பிரபலமான பாடல் ஒன்று!


சாயிபாபா இறந்துவிட்டார். அவரின் பக்தர்கள் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள். அதை விட பத்திரிகைகளும், சானல்களும் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள்.

சாயிபாபாவை போற்றுகிற பஜனைப் பாடல்கள் பிரபலமானவை. அதைப்போலவே சாயிபாவை அம்பலப்படுத்துகிற இந்த பாடலும் மிகப்பிரபலமானது.

புரட்சிகர அமைப்பான மக்கள் கலை மன்றம் அமைப்பால் எழுதப்பட்ட பாடல். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் வேளையில், மேடையில் மக்கள் கலைஞன் கத்தார் இந்த பாடலை பாடும் பொழுது, மக்களும் சேர்ந்து பாடுவார்கள்.

காலையில் தொலைபேசி செய்து ஒரு தோழரிடம் கேட்டேன். அவர் சில வரிகளை நினைவுப்படுத்த, என் நினைவுகளில் இருந்து சில வரிகளை சேர்க்க பாடல் தயார். இந்த பாடல் இன்னும் இது போல பல சரணங்களை கொண்டது.

சாயிபாபா பக்தர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்..

****


சாயிபாபா! சத்ய சாயிபாபா!
உன் சங்கதியெல்லாம்
தெரிஞ்சு போச்சு சாயிபாபா!
(சாயிபாபா)


யுத்தம் ஒண்ணு வரப்போகுதாம் சாயிபாபா!
பயமாத்தான் இருக்குதே சாயிபாபா!
வண்டி வண்டியா திருநீறு தர்றோம் சாயிபாபா! - எல்லையில
ஊதிக்குன்னு உட்கார்ந்திரு சாயிபாபா!
(சாயிபாபா)

மந்திரமெல்லாம் போட்டு சாயிபாபா!
லிங்கமெல்லாம் கக்குகிறேயே சாயிபாபா!
எங்களுக்கு அதெல்லாம் வேணாம் சாயிபாபா!
பெரிய பூசணிக்காய் கக்கி கொடு சாயிபாபா!
(சாயிபாபா)

ஒரு நாள் காரில் போனே சாயிபாபா!
பெட்ரோல் தீர்ந்து போச்சு சாயிபாபா!
மந்திரத்தில பெட்ரோல் வரவச்சயே சாயிபாபா!
பெட்ரோல் விலை கூடிப்போச்சு சாயிபாபா! - உன்னை
பெட்ரோல் பங்குல உட்கார வைக்கப்போறோம் சாயிபாபா!
(சாயிபாபா)

வயசான பாட்டி வந்தா சாயிபாபா
முகத்தை திருப்பிக்கிற சாயிபாபா!
குமரிப்பெண்ணு வந்தா சாயிபாபா
ஓரக்கண்ணால் பார்க்கிறியே சாயிபாபா!
(சாயிபாபா)

மக்களெல்லாம் விவரமாயிட்டோம் சாயிபாபா!
உன் லீலையெல்லாம் தெரிஞ்சு போச்சு சாயிபாபா!
உனக்கு வெளக்குமாறு பூஜை போட
நாங்க ஒன்னா வரப்போறோம் சாயிபாபா!
(சாயிபாபா)

****

தொடர்புடைய சுட்டிகள் :

அனுதாபங்கள் சாயிபாபா பக்தர்களுக்கு! - மருத்துவர் ருத்ரன்

யார் கடவுள் சாயிபாபாவா? பேஸ்மேக்கரா? - பதிவர் சந்தனமுல்லை - வினவு.

சாய்பாபா : சண்டையில் கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு? - பாரதி தம்பி - வினவு

April 23, 2011

லெனின் பிறந்த நாளில்...



நேற்று மாலையில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும், லெனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பல பகுதிகளிலும் அறைக்கூட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இனிப்புகளும் வழங்கினார்கள்.

அந்நிகழ்வில் சில தோழர்கள் லெனின் பற்றிய நினைவுகளையும், சோவியத் ரசியா தொடர்பான செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு பெண் தோழர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்கிறேன்.

****

சோவியத் ரசியாவில் லெனினை ஒருமுறை சந்தித்த ஓவியர், தோழர் லெனின் 'எழுதுவதாக, கூட்டத்தில் உரையாற்றுவதாக' என பல ஓவியங்களை வரைந்து மக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்கிறார்.

பலரும் பார்த்து செல்கிறார்கள். ஒரு விவசாயி, ஒரு ஓவியத்தை குறு குறுவென்று பார்க்கிறார். லெனின் சில விவசாயிகளுடன் உரையாடுவதாக உள்ள படம் அது. ஓவியர் அவரிடம் " என்ன அப்படி பார்க்கிறீர்கள்?" என்றதற்கு, அந்த விவசாயி "இந்த படத்தில் லெனின் பனிக்காக கோட்டு போட்டிருக்கிறார். ஆனால், விவசாயிகள் கோட்டு ஏதும் அணியாமல் இருக்கிறார்கள். எங்கள் லெனின் இப்படிபட்டவரல்ல! விவசாயிகள் கோட்டு அணியவில்லையென்றால், அவரும் அணியமாட்டார்" என்றாராம்.

மக்கள் தலைவர் என்ற சொல்லுக்கு மகத்தான உதாரணம் தோழர் லெனின்.

****

நாங்கள் சிறு நகரம் ஒன்றில் இயக்க பிரச்சாரம் முடித்து, ஒரு கடைக்கு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

ஒருவர் பக்கத்தில் இருக்கும் கடைக்கு, பேருந்து நிலையத்திலிருந்து, கடைக்கும் வருவதும், பின் சட்டை பையை தொட்டுப் பார்ப்பதும், யோசனையாய், மீண்டும் பேருந்து நிலையத்திற்கே செல்வதுமாய் இருந்தார். தோற்றத்தில் விவசாயியாக இருந்தார். ஐந்தாவது முறை வந்தவர், கடைக்குள் நுழைந்து, ஒரு ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார். ஒருவித கூச்சத்தோடு, சாப்பிட ஆரம்பித்தார்.

தன் உழைப்பால் ஊருக்கெல்லாம் விளைபொருள்களை உருவாக்கி தரும் விவசாயிக்கு, ஒரு ஐஸ்கீரிம் வாங்கி சாப்பிடுவது அபூர்வமான ஒன்றாக இருக்கிறது.

சோவியத் ரசியாவில், ஒரு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான சிறு சிறு விமானங்கள் வரிசையாய் நிற்கின்றன. அதைப் பார்த்த, ஒரு வெளிநாட்டு பயணி 'இந்த விமானங்கள் யாருக்கானவை?" என கேட்டதற்கு, இவைகள் எல்லாம் விவசாயிகளுக்கானவை. அவர்களுடைய கிராமத்திலிருந்து, இங்கு வருவதற்கு பயன்படுத்துகிறவை என்றார்களாம்.

*****

April 20, 2011

ஏதாச்சும் செய்யனும் பாஸ்!

புதுசா இது யார்றா கிளம்பி இருப்பது? என என்னைப் பார்க்கிறது புரியுது. நமக்கு எல்லாம் அவ்வளவு தெளிவு பத்தாது பாஸ்.

இருப்பதை வைத்துக்கொண்டு, கூழோ, கஞ்சியோ, கையேந்தி பவன்ல குடிச்சுட்டு காலத்தை ஓட்டுகிற ஆள் பாஸ். யாரிடமாவது கடன் வாங்கனும்னு நினைச்சாலே, காய்ச்சல் வந்திரும் பாஸ். அப்படியே வாங்கிட்டா குடுக்குற வரைக்கும் தூக்கத்திலே கெட்ட கெட்ட கனவா வரும் பாஸ்.

நம்மிடம் யாரும் பண உதவி மட்டும் கேட்க மாட்டாங்க பாஸ். நம்மளை விட ஏழை யாராவது கேட்டு, கையில் இருப்பதை தந்துவிட்டாலோ, தானமா கொடுத்திட்டா நினைச்சு, மறந்திருவேன் பாஸ்.

கிரடிட் கார்டு என்கிட்ட கிடையாது பாஸ். வீட்டுல வந்து பார்த்துட்டு, பிரிஜ் இல்ல, கிரைண்டர் இல்ல! இவன் ஒர்த் இல்லன்னு சொல்லி, கிரடிட் கார்டு தரமறுத்துட்டாய்ங்க பாஸ். டெபிட் கார்டுல 5 தேதிக்கு மேலேயே ஜீரோ பேலன்ஸ் வந்துரும் பாஸ். நான் யாருகிட்ட டெபிட் கார்டு கொடுக்கிறது பணம் எடுத்துங்கங்க என சொல்றது பாஸ்?

அப்புறம் பாஸ். இந்த பொய். கடன் வாங்குகிறதில உள்ள பயம் என்ன பயம் தெரியுமா பாஸ். பொய். சரளமா சொல்லனும். சென்னையில இருந்துகிட்டே மும்பாய் போயிருக்கிறதா சொல்லனும். செக்கே வராவிட்டாலும், செக் பவுன்ஸ் ஆயிருச்சுன்னு கொஞ்சும் கூட வாய் கூசாம‌ சரடு விடனும் பாஸ். நாம தப்பி தவறி ஒரு பொய் சொல்லிட்டா, அந்த பொய் மடியிலேயே கனமா இருக்கும் பாஸ். எப்ப அவிழ்ந்து விடும்னு பயத்திலே திக்கு திக்குன்னு இருக்கும் பாஸ். நம்மலால முடியாது பாஸ்.

பிறகு, கடன் வாங்குறதுக்கு தோல் கலரு முக்கியமான தகுதி பாஸ். சிவப்பா இருக்கிறவன் நேர்மையானவன். கருப்பா இருக்கிறவன்னு பிராடுன்னு எல்லோரும் நம்புறாங்க பாஸ். நம்ம கருப்பு பாஸ். யார் பாஸ் நம்மளை நம்பி, கடனை தருவாங்க?

இன்னொரு விஷயம் பாஸ். ஒரு மனுசனுக்கு முடியலைன்னு, டக்குன்னு துண்ட விரிச்சு "போடுங்க மக்களே!" என கலெக்ட் பண்ற டைமிங் மேனேஜ்மென்ட் நமக்கு சுட்டு போட்டாலும் வரவே வராது பாஸ். அதற்கு பிறகு, போட்ட மக்களே பணத்தை கேட்கும் பொழுது, துண்டுல கலெக்ட் பண்ணுனதை, ரொட்டேஷன்ல விட்டு, பல மாதங்கள் கழித்து, கர்ச்சீப்-ல கட்டித்தர்ற சாமர்த்தியம் இந்த ஜென்மத்திலே வரவே வராது பாஸ்.

எல்லாத்தையும் செஞ்சுட்டு, வருந்தி மன்னிப்பு கேட்டுகிறேன். மிக அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என சொல்லி, மக்கள் மறக்கிற வரைக்கும், எஸ்கேப் ஆவறதுக்கு ஒரு தில் வேணும் பாஸ். அந்த தில் நமக்கெல்லாம் வர்றதுக்கு முன்னாடி வயசாகி மண்டைய போட்டுறுவோம் பாஸ்.

இன்னும் முக்கியமான ஒண்ணு பாஸ். நண்பர்கள் பாஸ். எவ்வளவு தான் தப்பு, தண்டா, பொறுக்கித்தனம், பிராடுத்தனம் பண்ணினாலும், நம்மளை சுத்தி தூண் மாதிரி நின்னு காப்பத்தறது அவங்க தான் பாஸ். எனக்கும் தான், டைமிங் மேனேஜ்மென்ட், கேஸ் மேனஜ்மென்ட், பீலிங்ஸ் மேனேஜ்மென்ட் பலவீனமா இருக்கு பாஸ். இதெல்லாம் தெரிஞ்ச நமக்கு வாய்ச்ச நண்பர்கள் நம்மளை விட நல்லவங்க பாஸ். மத்தவங்க வந்து கும்ம‌ தேடுறதுக்கு முன்னாடியே, நம்மளை தூக்கிலே மாட்டி தொங்க விட்டுறுவாங்க‌ பாஸ்.

நம்ம 'டம்மி பீஸ்' பாஸ். இதெல்லாம் வாய்ச்சவங்க 'ஜென்டில்மென்' பாஸ்.

*****

இந்த பதிவுக்கு தொடர்பில்லாத சுட்டிகள் :





April 18, 2011

அடே கடவுளே! மார்க்சியவாதிகள் சொன்னது உண்மைதான்!-அசாங்கே!

அமெரிக்க அரசு முதல் இந்திய அரசு வரை பல்வேறு நாட்டு அரசுகளின் ரகசிய சதித்திட்டங்களை ஆவண ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவது "விக்கிலீக்ஸ்" என்ற இணையத்தளம். இதன் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாங்கே.

இவரது விரிவான பேட்டி ஒன்றை இந்து நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அவரது பதிலும் வருமாறு:

கேள்வி : அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி, உலகத்துக்கே ஜனாதிபதி என்பதைப் போல நடந்து கொள்கிறார் என்றும், இந்திய அரசின் கொள்கைகளை நிர்ணயிப்பதில் அமெரிக்க அரசு பெரும் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் நீங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறதா?

பதில் : இல்லை. மற்ற நாடுகளிடம் அமெரிக்கா எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கான ஆவணங்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவற்றைப் பார்க்கும் போது, இந்தியாவிடம் அமெரிக்க நடந்து கொள்வது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

இந்த ஆவணங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்ததும் அவற்றை நான் படிக்கத் தொடங்கினேன். அப்போது தான், "அடக் கடவுளே! தென் அமெரிக்க நாடுகளின் மார்க்சியவாதிகள் 1960‍‍ஆம் ஆண்டுகளில் சொன்னதெல்லாம் உண்மைதான்!" என்று நான் நினைத்தேன்.

அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மீது ஏராளமான புகார்களை அந்த மார்க்சியவாதிகள் கூறிவந்தார்கள். அவை வெற்று வசனம் அல்ல. அது மட்டுமல்ல. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் என்பது அமெரிக்க முதலாளிகளின் கருவிதான் என்றே தோன்றுகின்றது. இந்த அமைச்சகத்தின் பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்று அனைத்து நாடுகளின் அரசியல், தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்திலும் தலையிடுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

இவ்வாறு அசாங்கே கூறியுள்ளார்.

"தோழமை" இதழிலிருந்து..

April 8, 2011

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு பாகம் 4!


பாகம் 1 பாகம் 2 பாகம் 3

‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில யிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?

பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் – ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து ‘வாக்காளப் பெருமக்கள்’ ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. னால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.

நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணையார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.

நாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?

கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?

பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் க்கிரமிக்கப்படும் யிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?

தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்துகிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?

பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?

‘என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்” என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ‘பெரிய’ சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.

விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.

சினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?

விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். ‘சின்ன ஜமீன்’ கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?

குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத்திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?

திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை….. தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த ‘சலுகை’களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?

கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?

பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?

உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள். உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், ‘வாக்காளப் பெருமக்களாகவே’ நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.

வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல!

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. னால், சென்னைத் துறைமுகத்தை ஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.

ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை ‘ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு’ ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.

‘நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்” என்கிறார் தயாநிதி மாறன். ‘•போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்” என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. ‘தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் கருணாநிதி.

சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.

உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் கியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.

இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறுமாற்று தெரியாததால், ‘ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று சிந்திக்கிறார்கள். ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் ‘விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தாலென்ன?” என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.

லஞ்சத்தை வெறுத்த மக்களை ‘லஞ்சம் தவிர்க்க முடியாதது’ என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமானவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், ‘ஜனநாயகம்’ என்பதும், ‘வாக்குரிமை’ என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.

நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக க்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த திக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக யுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.

நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?

இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல் வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ்பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.

அந்த ராவ்பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.

மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதியஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.

இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.

நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.

‘ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் ‘தேசிய மக்கள் படை’, பெருவின் ‘ஒளிரும் பாதை’, என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!

வெளியீடு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

****

நன்றி : நல்லூர் முழக்கம்

April 6, 2011

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு - பாகம் 3



பாகம் - 1

பாகம் - 2

யாரால் கொள்ளையடிக்கப்பட விரும்புகிறீர்கள்?


ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?

‘தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்டதிட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.

இது ஓட்டுப்போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?

வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?

‘எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், ‘கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளையடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா” என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் ‘செயல் வீரர்’ கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?

இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் – இது றுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?

‘சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்” என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.

தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.

ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம்.. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான ‘ஜனநாயக பூர்வமான’ மோதல்.

மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.

அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை ‘ஜனநாயகபூர்வமான’ முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் ‘ரகசியமாக’த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.

யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர்களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?
உங்கள் ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்

புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும்வர்க்கங்கள்.

‘நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல சட்டம் போடுவார்கள். வல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டை வல்லரசாக்குவார்கள். வெல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் மக்களாகிய நீங்கள்தான். உங்கள் பிரதிநிதிகள்தான் சட்டமியற்றுகிறார்கள். எனவே அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது உங்கள் கடமை” என்று நம்மை ஏற்கச் செய்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்! இந்த நியாய உரிமையை வைத்துக் கொண்டுதான் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் எல்லா வகையான மக்கள் விரோதத் திட்டங்களையும் அமலாக்குகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். ‘தமிழ்நாடு முதல் மாநிலமாகிறது, இந்தியா வல்லரசாகிறது” என்ற பிரமைகளைப் பரப்பிவிட்டு மக்களை மயக்கத்திலாழ்த்துகிறார்கள்.

சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் யோக்கிய தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? ‘ஜெயலலிதா எங்களைப் பேசவே விடுவதில்லை” என்று கூறி எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிநடப்பு செய்தன. மீறிப் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவார் காளிமுத்து. இவர்களுடைய பேச்செல்லாம் அவைக் குறிப்பில் ஏறினால் என்ன, இறங்கினால் என்ன?

இந்த அவையிலேயே இல்லாத உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் தான் அவையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. 2001 இல் நாற்காலியில் அமர்ந்த மறுகணமே பேருந்துக் கட்டண உயர்வு, ரேசன் விலை உயர்வு, பம்பு செட்டுக்கு மீட்டர் என்று ஒரே நாளில் அறிவித்தாரே ஜெயலலிதா, அவை உலக வங்கியின் உத்தரவுகளன்றி வேறென்ன? அரசு ஊழியர் சலுகைகளை வெட்டும் சதித்திட்டம் முதல், மகளிர் சுய உதவிக்குழு போன்ற ‘நலத்திட்டங்கள்’ வரை அனைத்தும் உலக வங்கியின் ஆணைகள். தண்ணீர் தனியார்மயம், கடற்கரை தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்பன போன்ற அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள்.

இத்தகைய மசோதாக்களெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் 10, 15 என்று கொத்துக்கொத்தாக விவாதமின்றி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ‘ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு 8000 ரூபாய் தண்ணீர் வரி’ என்ற மசோதா உட்பட 16 மசோதாக்களை ஒரே மணிநேரத்தில் நிறைவேற்றியது மகாராட்டிரச் சட்டமன்றம்.
நாடாளுமன்றத்தில் நடப்பதென்ன?

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை களையெல்லாம் அமல்படுத்திவிட்டு, அப்புறம் போனால் போகிறதென்றுதான் பாராளுமன்றத்துக்குச் சேதி சொல்கிறார் ப.சிதம்பரம். உலக வங்கியின் வழிகாட்டுதலின் கீழ்தான் மத்திய மாநிலபட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

பிறகு, டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, நாராயணமூர்த்தி, மல்லையா போன்ற தரகு முதலாளிகள் நிதியமைச்சருக்கு ‘லோசனை’ வழங்குகிறார்கள். அதன்பின் இந்த மாபெரும் ‘ரகசிய வணத்திற்கு’ அரக்கு சீல் வைத்து, யுதக் காவல் போட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கிறார் நிதியமைச்சர்.சமீபத்தில் அமெரிக்காவுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம், விவசாய ஒப்பந்தம் கியவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிமிடம் வரை முழுமையாகத் தெரியாது. நம்முடைய நாட்டையே வல்லரசுகளுக்கு அடிமையாக்கும் ‘காட்’ ஒப்பந்தமோ அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர் அரைகுறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவிதியையும் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற கொள்கைகள் – திட்டங்கள் பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை எனும்போது, மக்களாகிய நம்முடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

‘என்னைத் தேர்ந்தெடுத்தால் ரேசன் விலையை ஏற்றுவேன், பம்புசெட்டுக்கு மீட்டர் போடுவேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன், தொழிலாளர்களுக்கு போனஸை வெட்டுவேன்” என்று மக்களுக்கு ‘வாக்குறுதி’ அளித்திருந்தால், 2001 இல் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா?

‘எங்களைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 1000 விவசாயிகளையாவது மருந்து வைத்துக் கொல்லுவோம், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்குத் தள்ளுவோம், சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவோம் – இதுதான் எங்களுடைய குறைந்த பட்ச செயல் திட்டம்” – என்று கூறி காங்கிரஸ் வென்றிருக்க முடியுமா?

இன்ன கொள்கையைத்தான் அமல்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஓட்டுப் பொறுக்கிகள் மக்களிடம் ஓட்டு வாங்குவது கடினம். எனவேதான் கள்ளத் தனமான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுள்வதற்கான நியாய உரிமையைப் பெறுகிறார்கள்.

நம்மைச் சுரண்டிச் சூறையாடி ஒடுக்குவதற்கான நியாய உரிமையை ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது எடுபிடிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாமே வழங்குவது அறிவுடைமையா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.


****

நன்றி : நல்லூர் முழக்கம்

தேர்தல் புறக்கணிப்பு - இன்று பொதுக்கூட்டம்!

"கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான
தேர்தலை புறக்கணிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம்!

தேர்தல் பாதை திருடர் பாதை!
நக்சல்பாரிப் பாதையே நமது பாதை!!"

*****

பொதுக்கூட்டம்

நேரம் : மாலை 6 மணி

நாள் : 06/04/2011 (புதன்கிழமை)
இடம் : செங்குன்றம்,
பேருந்து நிலையம் அருகில்

தலைமை:
தோழர் சுதேஷ்குமார்,
திருவள்ளூர் மாவட்ட செயலர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

சிறப்புரை :

தோழர் காளியப்பன்,
இணைச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி


மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி

தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506

April 5, 2011

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு - பாகம் 2




முதல் பாகம் படிக்க...

ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை!

ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்… என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் ‘சாலை மறியலுக்கு’ போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.

‘எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும், பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், சாலை வேண்டும், பேருந்து விடவேண்டும், வெள்ள நிவாரணம் வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும்” – என்று மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் கொஞ்சமா?

சாலை மறியல் என்றவுடனே போலீசு வரும், பிறகு அதிரடிப்படை வரும், அதன்பின் யுதப்படை வரும். இவை எதற்கும் பயப்படாமல் மக்கள் துணிந்து நின்றால் கடைசியாக தாசில்தார் வருவார். கலைந்து போகச்சொல்வார். கொளுத்தும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு தெருவில் உட்கார்ந்திருக்கும் மக்களைச் சந்திக்க மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், குட்டம் எவனும் எப்போதும் வந்ததில்லை. அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டதுமில்லை. ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் எனப்படுவோரின் யோக்கியதையும் இதுதான்.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் 2001- இலேயே பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப் பட்டது. மாணவர் பஸ் பாஸ் ரத்து, அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்குக் கட்டணம், நோயாளியைப் பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்குக் கட்டணம், ரேசன் அரிசி விலை ஏற்றம், அரிசி வாங்க கூப்பன் … எல்லாம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.

அரசுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பட்டன. கல்லூரிகளை லாபமீட்டும் கம்பெனிகளாக்கி ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிப்பதற்கெதிராக மாணவர்கள் போராடினார்கள்.

நீதிமன்றக் கட்டணம் 100 மடங்கு உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். மாவட்ட ட்சியரிடம் மனுக்கொடுக்க 25 ரூபாய் கட்டணம், நகர்ப்புற நடுத்தர மக்களைக் கொள்ளையடிக்க கட்டிட வரன்முறைச் சட்டம்… என ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் எல்லா மக்கட்பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெயா ட்சி.

காவிரியில் தண்ணீரில்லாததால் விவசாயிகள் எலிக்கறி தின்றார்கள். நெற்களஞ்சியமாம் தஞ்சையில் பட்டினிச்சாவு தொடங்கியது. 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார் கள். ஜெ அரசோ விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடனையும் கடன் தள்ளுபடியையும் நிறுத்தியது. அரசாங்க நெல் கொள்முதலையும் குறைத்தது.

கிணறு தோண்டித் தோண்டி தண்ணீரைக் காணாமல் திவாலான ஒரு விவசாயியின் குடும்பம் கரண்டு கம்பியை உடலில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது. ஜெயலலிதா பம்பு செட்டுக்கு மீட்டர் போடப்போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தனியார் தண்ணீர் வியாபாரம் ஊக்குவிக்கப்பட்டது. தாமிரவருணி கோகோ கோலாவிற்கு விலை பேசப்பட்டது.

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்கள் குறைக்கப்பட்டதால் நசிந்து போன நெசவாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெ அரசு. இலவச வேட்டி சேலை கொள்முதலை நிறுத்தியதால் தேங்கிய துணிகளை விற்க முடியாமல் பல லட்சம் நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். கஞ்சித் தொட்டியின் முன்னால் கையேந்தி நின்ற அந்த நெசவாளர்கள் மீதும் தடியடி நடத்தியது ஜெ அரசு.

18,000 கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் 5 ஆசிரியர்களை 2 ஆகக் குறைத்தது ஜெ அரசு. 1500 பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர். நூற்றுக்கணக்கான பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இனி காண்டிராக்டு முறையில்தான் நியமிக்கப் படுவார்களென்று பகிரங்கமாக அறிவித்தது அரசு.

இழந்த உரிமைகளை மீட்பதற்காகப் போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் 27,000 பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள். அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டமோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. 2 லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் ஒரே நொடியில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 64 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

மதமாற்றத் தடைச்சட்டம், கிடா வெட்டுத் தடைச்சட்டம் என பார்ப்பன பாசிச சட்டங்கள் திணிக்கப்பட்டன. கிடா வெட்டி சாமி கும்பிடப் போன பக்தர்களும் பூசாரிகளும் கைது செய்யப் பட்டார்கள். கிராமப்புறக் கோயில்கள் போலீசின் புறக்காவல் நிலையங்களாகவே மாற்றப்பட்டன.

தலித் மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பது, சிறுநீர்கழிப்பது, பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல்களை சாதி வெறியர்கள் முடக்குவது… என தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

அதிரடிப்படையின் அக்கிரமங்கள், லாக் அப் கொலைகள், போலி மோதல் கொலைகள், ஏட்டு முதல் எஸ்பி வரை நீண்டு சென்ற ஜெயலட்சுமி புராணம், கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி வரையிலான அனைத்து போலீசு அதிகாரிகளின் களவாணித் தனங்கள்.. என ஜெயலலிதாவால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட போலீசின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.

இவற்றின் விளைவாகக் கொண்ட த்திரத்தில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்கு இந்த எதிர்க்கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இன்று ஓட்டுக்கேட்டு உங்கள் மத்தியில் ஊர்ஊராகச் சூறாவளி சுற்றுப் பயணம் வரும் ஓட்டுப் பொறுக்கிகள் அன்று மக்களுடைய போராட்டங்களுக்கு தரவாகக் களத்தில் இறங்கினார்களா? இணைந்து போராடினார்களா? இல்லை. வீட்டிலிருந்தபடியே அறிக்கை விட்டார்கள். ஜெயலலிதாவிடம் அடிபடும் மக்கள் அடுத்த தேர்தலில் எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எண்ணி, மக்கள் அடிவாங்கு வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். இது மிகையல்ல, உண்மை.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறும் நாங்கள்தான் மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாகத் தமிழக மெங்கும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். போராடினோம். சிறையும் சென்றோம்.

ஒருவேளை மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாக மற்றெல்லாக் கட்சியினரும் ‘கூட்டணி சேர்ந்து’ போராடியிருந்தால் மக்கள் தனித்தனியே போராடி அடிவாங்கித் தோற்றுத் துவண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தனை அரசு ஊழியர்களும் சாலைப்பணியாளர்களும் நெசவாளர்களும் விவசாயிகளும் அநியாயமாகச் செத்து மடியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை தங்களுடைய சொந்தக் கரங்களாலேயே போராடி வென்றெடுப் பதை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

‘ஐந்தாண்டுகள் அடக்குமுறைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாற்காலியில் உட்காரவையுங்கள். நாங்கள் வந்து கிழிக்கிறோம்” என்று கூறி மக்களுடைய போராட்டங்களை முடமாக்குகிறார்கள். ஜனநாயக உணர்வை மழுங்கடிக் கிறார்கள்.

வாக்குரிமையை மிகவும் புனிதமான உரிமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகள், மக்களுடைய பிறவாழ்வுரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் எப்போதுமே கால்தூசுக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீசின் அனுமதி இல்லாமல் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் போலீசு அனுமதி தேவையில்லை எனும்போது, பேசுவதற்கும் போராடுவதற்கும் மட்டும் ஏன் போலிசைக் கேட்க வேண்டும்? வாக்குரிமையைப் போல கருத்துரிமையும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை எந்த ஆட்சியும் ஏற்பதில்லை.

அதனால்தான், மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால் குடிநீர் வாரிய அதிகாரி வருவதில்லை; போலீசு வருகிறது. சாலை கேட்டால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வருவதில்லை, போலீசு வருகிறது. பள்ளிக்கூடம் கேட்டால் கல்வித்துறை அதிகாரி வருவதில்லை, போலீசுதான் வருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் போராடும் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எதையும் ஓட்டுப் பொறுக்கிகள் அங்கீகரிப்பதேயில்லை.

வாக்குரிமையைத் தவிர வேறெந்த உரிமையைப் பற்றி மக்கள் பேசினாலும் அது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு வேப்பங்காயாய்க் கசக்கிறது. விவசாயிகள் வாழவேண்டுமானால் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கருணாநிதியோ

’2 ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் கஞ்சி குடித்துக்கொள்” என்று ‘கருணை’ காட்டுகிறார். இலவச மருத்துவம் மக்களின் உரிமை. ‘எனக்கு ஓட்டுப் போட்டால் பிரசவத்துக்கு பணம் கொடுக்கிறேன்” என்கிறார் விஜயகாந்த். இலவசக் கல்வி என்பது மக்களின் உரிமை. அம்மாவோ சைக்கிள் கொடுக்கிறார், ஏழை மாணவர்கள் 4 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தாயுள்ளத்துடன் தருமம் கொடுத்துவிட்டு பத்திரிகைகளில் பிலிம் காட்டுகிறார்.

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பேச்சே ஒரு பித்தலாட்டம். இப்போது நாம் காண்பது ஒரு புதிய வகை மன்னராட்சி. ராஜாவுக்குப் பிறந்தவன் ராஜா என்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் போடும் பிச்சைதான் உங்கள் வாழ்க்கை.

வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆயுதத்தை நமக்கெதிராக நாமே பயன்படுத்துவது மடமையில்லையா, என்பதுதான் எங்கள் கேள்வி.

தொடரும்.



நன்றி :
நல்லூர் முழக்கம்

April 4, 2011

தேர்தல் ஜனநாயகம் - கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும்.

இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை கொள்ளையடிப்பதற்கு விடப்படும் டென்டர். இப்படி டென்டர் எடுத்து சம்பாதித்த எம்.எல்.ஏ; எம்.பிக்கள் அமைச்சர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகிவிட்டார்கள். மல்லையா, அம்பானி, பிர்லா போன்ற தொழிலதிபர்களோ எம்.பிக்கள் ஆகிவிட்டார்கள். மொத்தத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், முதலாளிகள் மன்றமான லயன்ஸ் கிளப்பாகவே மாறிவிட்டன. இந்த முதலாளிகள் யாரேனும் ஒருவரைத் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தான் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை.

சட்டமன்றம் முதலாளிகள் மன்றமாக மாறி விட்டது மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புகளும் கோடீசுவரர்களுக்கும் பன்னாட்டு முதலளிகளுக்கும் மட்டுமே சேவைசெய்யும் விதத்தில், தனியார் மயக் கொள்கைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல் படுத்திவரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை, நமது நாட்டை முன்னேற்றுவதற்காக இங்குள்ள கட்சிகள் சிந்தித்து வகுத்த கொள்கை அல்ல. அது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் உலக நாடுகளையும் மக்களையும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்காக, அமெரிக்கா வகுத்துத் தந்த கொள்கை; உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திணிக்கப் பட்டிருக்கும் மறுகாலனியாக்கக் கொள்கை.

எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுச் சொத்துக்களையும், மக்களின் உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும், அதற்கு தரகுத் தொகையாக கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொள்வதும், வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் தொழில் பங்காளிகளாக சேர்ந்துகொண்டு கொள்ளையடிப்பதும்தான் இன்று நாம் காணும் ஓட்டுக் கட்சி அரசியல். இதில் ஓட்டு பொறுக்கிகளிடையான தொழில்போட்டியின் களம் தான் இந்தத் தேர்தல் களம். தனியார்மயக் கொள்கை என்ற பெயரில், சட்டபூர்வமாக கொள்கை முடிவெடுத்து கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் பகற்கொள்ளை அடிப்பதற்கு, அரசாங்கத்தையே கருவியாக்கி அடியாள் வேலை செய்யும் பணியைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அரசுகளும் செய்து வருகின்றன.

தொலைபேசி, வங்கி, காப்பீடு, எண்ணெய் எரிவாயு, துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற லாபம் ஈட்டுகின்ற பொதுத்துறைகள் எல்லாம் காங்கிரசு, பாஜக அரசுகளால் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை 22 லட்சம் கோடி ரூபாய். இது 14 ஸ்பெக்ட்ரம் கொள்ளைகளுக்கு இணையான தொகையாகும். சட்டிஸ்கார் மாநிலத்தில் 500 கிராமங்களைத் தீவைத்துக் கொளுத்தி, பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு அந்தக் கிராமங்களையே டாடாவின் இருப்புச் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கியிருக்கிறது சட்டீஸ்கார் அரசு. டன் 7000 ரூபாய் சந்தை மதிப்புள்ள இருப்புத் தாதுவுக்கு வெறும் 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, பல லட்சம் டன் இருப்புத் தாதுவை வெட்டி விற்பதற்கு ரெட்டி சகோதரர்கள் என்ற கிரிமினல் முதலாளிகள் கும்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது கர்னாடக அரசு. இதைப் போல பல அரிய கனிமப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசப்படுகின்றன. தமிழகத்தில் 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 650 கோடி ரூபாய் மனியம் அளித்து வருகிறது கருணாநிதி அரசு. லிட்டர் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரை லிட்டர் 1.3 பைசாவுக்கு கோகோகோலா நிறுவனத்திற்கு அன்றைய ஜெயலலிதா அரசு. ஆறுகளையே தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டு விற்றிருக்கிறது சட்டீஸ்கார் மாநில அரசு. இப்படி தனியார்மயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கார்ப்பரேட் கொள்ளையை பட்டியலிட்டு மாளாது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு போடுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளும் சட்டமன்றத்துக்கும், நாட்டாளுமன்றத்துக்குமே தெரியாத பரம ரகசியங்களாக பேணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நகர்ப்புற குடிநீர் திட்டம் முதல் குப்பைவாரும் திட்டம் வரையிலான அனைத்தையும் வகுப்பவர்கள் உலக வங்கி அதிகாரிகள், அதிகாரவர்க்கம், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஆகியோரடங்கிய குழுக்களேயன்றி மக்கள் பிரதிநிதிகள் அல்லர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டங்களும் திட்டங்களும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் ஒரு நாளும் விவாதிக்கப்பட்டதில்லை. இதுதான் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்க‌ளின் யோக்கியதை.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்ப இந்த அரசமைப்பே மாற்றப்பட்டுவிட்டது. அரசின் கட்டமைப்பு, சட்டங்கள் விதிமுறைகள், நாடாளுமன்றம் சட்டமன்றங்களின் அதிகார வரம்பு ஆகிய அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. இதுதான் மையமான பிரச்சனை. எப்பேர்ப்பட்ட நல்லவரோ, வல்லவரோ, யோக்கியரோ பதவியில் அமர்ந்தாலும் இந்த அரசமைப்பினைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்ய முடியுமே தவிர, மக்கள் நலன்னுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி செய்து கொடுத்து அதற்கு சேவைக் கட்டணமாக முதலாளிகள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளை மட்டுமே ஓட்டுக் கட்சிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1,76,000 கோடி பகற்கொள்ளை அடிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து ராசாவும் கருணாநிதி குடும்பமும் பெற்ற எலும்புத்துண்டுகளின் மதிப்பு சில ஆயிரம் கோடிகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை ராசா திமுக வின் ஊழலாக மட்டுமே சித்தரிக்கின்றனர். இதில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்த குற்றவாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களையோ, அவர்கள் செய்த தில்லுமுல்லுகளையோ வெளியில் சொல்வதில்லை. காரணம், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு சேவை செய்வதென்பது ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ஏற்றுக்கொண்ட கொள்கை.

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழியமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய லஞ்சத்தின் அளவும், முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையிடுவதற்கான புதிய வாய்ப்புகளும் எத்தனை பிரமாண்டமாக விரிந்து கிடக்கின்றன என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழல் காட்டிவிட்டது. இத்தகைய பொன்னான வாய்ப்பை தலைமுறை தலைமுறையாக தங்களிடமே வைத்துக்கொள்வதற்கு கருணாநிதி குடும்பமும், அதனை தட்டிப் பறிப்பதற்கு ஜெயா சசி குடும்பமும் களத்தில் நிற்கின்றன. இதில் எந்தக் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கான லைசன்சை உங்களிடமிருந்து பெறுவதற்காக நடத்தப்படுவது தான் இந்தத் தேர்தல்.

234 தொகுதிகளில் நிற்கும் சர்வ கட்சி வேட்பாளர்களும் கோடீசுவர அயோக்கியர்கள் மட்டுமே, “இவர்களில் எந்த அயோக்கியனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், ஆனால் காசு வாங்காமல் மனசாட்சிப்படி யோக்கியமான முறையில் தேர்ந்தெடுங்கள்” என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சுவரெழுத்து தெருமுனைப் பிரச்சாரங்கள், ஆட்டோ பிரச்சாரம் போன்ற உழைக்கும் மக்கள் கையாளக்கூடிய எளிய பிரச்சார முறைகளுக்கெல்லாம் தடைவிதித்து, இந்த தேர்தல் களத்திலிருந்தே உழைக்கும் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி பலாத்காரமாக விலக்கி வைக்கிறது. தொலைக்காட்சிகள், நாளேடுகளில் விளம்பரம் கொடுக்க முடிந்த கோடீசுவரர்கள் மட்டும் தான் இனி தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும் என்று பணநாயகத்தையே சட்டப்படி நிலைநாட்டி வருகிறது. “ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் பணம் வாங்குவதும் குற்றம் வழக்குப்போடுவேன்” என்று கர்ச்சிக்கிறது தேர்தல் ஆணையம். ஓட்டுப் பொறுக்கிகளோ “எம்.எல்.ஏ மந்திரி எங்களுக்கு, மிக்சி கிரைண்டர் உங்களுக்கு” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது வேடிக்கை போல தெரியலாம். ஆனால் இதன் உள்ளே ஒரு குரூரம் பொதிந்திருக்கிறது.

“னமக்கு கொள்கை லட்சியம் எல்லாம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுருட்டுவதற்குத்தான். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும் போது வெறுங்கையாகப் போய் ஓட்டுக் கேட்டால் ஓட்டு விழாது. எதிர்க்கட்சிக்காரனைவிட கூடுதலாக இலவசம் தருவதாக அறிவிக்க வேண்டும். அவனை மட்டம் தட்டிப் பேசுவதன் மூலம் நம்மை கொஞ்சம் யோக்கியனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்” என்ற அடிப்படையில் தான் இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றனர் ஓட்டுப் பொறுக்கிகள்.

உங்கள் கையை வெட்டி உங்களுக்கே சூப் வைத்துத் தருவது போல, டாஸ்மாக் சாராயக் கடை விற்பனை மூலம் இலட்சக் கணக்கான உழைப்பாளர்களைக் குடிகாரர்களாக்கி, அவர்களது மனைவியர்களை கைம்பெண்களாக்கி, மாணவர் சமூகம் வரையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கிச் சீரழித்து, பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட பணத்தைக் கொண்டுதான் இந்த இலவசங்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள். கருணாநிதி பதவியிலிருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டிய வருவாய் ரூ 50,000 கோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி வழங்கிய இலவசத் திட்டங்கள் அனைத்துக்குமான மொத்தச் செலவு 40,000 கோடியைத் தாண்டாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக்கின் வருமானம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 60 70,000 கோடிகளைக் கொண்டே இவர்கள் அறிவிக்கும் எல்லா இலவசத்திட்டங்களையும் நிறைவேற்றிவிட முடியும். ஒரு சமூகத்தையே கருவறுத்து அழிக்கின்ற இத்தகையதொரு நயவஞ்சகத் திட்டத்தை ஜென்ம விரோதியோ, பகை நாட்டானோகூட சிந்தித்துப் பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கொலைகார கபட வேடதாரிகள் தான் உங்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.

முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள். வாக்களிக்கப் போகிறீர்களா? புறக்கணிக்கப் போகிறீர்களா? ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துத்தனே ஆகவேண்டும் என்று வக்களிப்பதும், அல்லது குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளரையோ தோற்கடிப்பதன் மூலம் அவர்களைத் தண்டிக்கலாம் என்று சிந்திப்பதும் நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானங்கள் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ‘தண்டனைகளை’ பலமுறை அனுபவித்துத்தான் ஓட்டுப் பொறுக்கிகள் கோடீசுவரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கோடீசுவரர்கள் ஆவதற்கு வாய்ப்பு வழங்காதீர்கள்.

இந்த போலி ஜனநாயகத் தேர்தல் என்பது நமது போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற மயக்க மருந்து. தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடலாம் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகத்தை ஒழிப்போம்!

தேர்தலைப் புறக்கணித்து நக்ச்ல்பாரிப் பாதையில் அணிதிரள்வோம்!

தொடர்புக்கு: அ. முகுந்தன்,

110, 2 வது மாடி,

மாநகராட்சி வணிக வளாகம்,

63 ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை 24.

பேசி: 9444834519.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி


நன்றி : செங்கொடி

April 1, 2011

தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள்!