> குருத்து: 2024

April 20, 2024

Porter லில் உள்ள சிரமம்


ஒரு சொசைட்டி என் வழியாக என் பகுதியில் இருக்கும் தணிக்கையாளர் ஒருவருக்கு ஒரு பொருளை அனுப்ப கொடுத்தனுப்பியது. போர்ட்டரை தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.


என் வீட்டில் இருந்து அவருடைய அலுவலகம் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. அவர்களுடைய ஆப்பில் அடிப்படை விவரங்களை கொடுத்ததும்.. அதற்கான கட்டணம் என ரூ. 25ஐ காட்டியது. குறைவாக காட்டுகிறதே என மனதில் பட்டது. நீண்ட நாட்கள் கழித்து பயன்படுத்துவதால், தள்ளுபடியில் தருவதாக நினைத்துக்கொண்டேன்.

பைக்கில் ஒருவர் வந்து அந்த பொருளை வாங்கும் பொழுது... ”பணம் நீங்கள் தருகிறீர்களா?” என கேட்டார். ”நீங்கள் பொருளைக் கொடுப்பவரிடம் வாங்கி கொள்ளுங்கள்” என்றேன். சரி என்றார்.

சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 25 என கட்டணம் காட்டிய தகவலை அனுப்பிவிட்டு மறந்துபோனேன். சரியாக 45 நிமிடங்கள் கழித்து ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. போர்ட்டலில் இருந்து ஒரு இளம்பெண் பேசினாள்.

“என்ன சார்? 25ரூ தான் சார்ஜ் கொடுத்திருக்கிறீர்கள்?” என கேட்டார். ”நான் ஏதும் சார்ஜ் தீர்மானிக்கவில்லையே! உங்களுடைய ஆப் தான் இவ்வளவு கட்டணம் என காட்டியது!” என்றேன். தங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கேள்வி கேட்பதாக அவளின் குரல் ஓங்கி இருந்தது. “அது எங்கள் ஆப் காட்டியது இல்லை! கூகுள் மேப் குறைவான தூரத்தைக் காட்டுகிறது.” என்றாள். “கூகுள் மேப் காட்டும் தூரத்தை வைத்து விலை தீர்மானிப்பது உங்கள் ஆப் தானே! நானில்லையே” என்றேன். இருவர் பேசும் பொழுது, கொண்டுப் போய் சேர்த்த நபரும் லைனிலேயே இருந்தார். அவருடைய பொது அறிவில் அது என் மேல் தவறு இல்லை. போர்ட்டர் ஆப்பில் தான் தவறு இருக்கிறது! புரிந்துகொண்டார். பிறகு ஒருவழியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. அந்த பெண்ணால் அது என் பிரச்சனையில்லை, தங்களுடைய நிறுவன ஆப்பில் உள்ள பிரச்சனை என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சென்னையில் பொருளை எடுத்து செல்லும் பல வாகனங்களில் போர்ட்டர் விளம்பரத்தைப் பார்க்கிறேன். அப்படி ஒரு பெரிய நெட்வொர்க்கில் அடிப்படையாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஆகையால் போர்ட்டரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாய் இருங்கள். இல்லையெனில் இப்படியொரு சிக்கலை நீங்களும் எதிர்கொள்வீர்கள்.

பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


சமீப காலங்களில் பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் பல சமயங்களில் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


பல சமயங்களில் வேலை செய்யவில்லை என்பதால், ஒரு நிறுவன முதலாளி தளம் கொடுக்கும் தாமதத்தை, சிரமத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், "உங்களுடைய கணக்கிற்கு தொகையை அனுப்பிவிடுகிறேன். நீங்கள் கட்டிவிடுகிறீர்களா?" என கேட்கிறார்கள். அதே தளத்தில் தானே நானும் பணம் செலுத்தவேண்டும். சிரமமாய் இருக்கிறது.

தொகையைச் செலுத்துவது கூட பிரச்சனையில்லை. நிறுவனங்களுக்கு வரி செலுத்தும் பொழுது, வரி ஆலோசகர்கள் தங்களுடைய கணக்கில் இருந்து செலுத்துவதைத் தவிருங்கள். நாளை நிறுவனம் ஏதோ ஒரு பிரச்சனையில் அவர்களுடைய வங்கி முடங்கும் போழுது, உடனே நம்ம வங்கிக்கணக்கில் பணத்தை எடுப்பதற்கு உத்தரவிட்டுவிடுவார்கள் என சொன்னதில் இருந்து.... ஒரே திகிலாகவே இருக்கிறது.

தொழிலாளர்களுக்கான பி.எப். தளம் எப்பொழுதுமே தகராறு தான். தொழிலாளர்கள் பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த தளத்தை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என நினைப்பேன். தளம் தருகிற அத்தனை சிரமங்களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பு அம்சங்களுக்கன என கடந்த சில மாதங்களில் ஆதார் ஓடிபி இருந்தால் தான் உள்ளேயே நுழையமுடியும் என மாற்றிவிட்டார்கள். பி.எப். தளமே எப்பொழுதாவது தான் வேலை செய்யும். அப்படி வேலை செய்யும் பொழுது, ஆதார் தளம் ஓடிபி அனுப்பாமல் தகராறு செய்கிறது.

இதில் இ.எஸ்.ஐ தளமும் அப்படித்தான். இப்படி வேலை செய்யவில்லை என இ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்திற்கு குறிப்பாக தொழில்நுட்ப பிரிவுக்கு போன் செய்தால், கொஞ்சம் கூட கூசாமல், "ஆறு மணிக்கு மேல் வேலை செய்யுமே" என என கூலாக பதில் சொல்வார்கள்.

நாம் வரி ஆலோசகர்கள் ஆறு மணிக்கு மேல் வேலை செய்துவிடுவோம். ஆனால் பல நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் என்ன செய்வார்கள்? இதற்காகவே ஆறு மணிக்கு மேல் வரை இருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

பிஎப். தொழிலாளர்களுக்கான தளத்தை குறித்து ஒரு அனுபவம் :

ஒரு நிறுவனம் சென்னையில் இருக்கிறது. அவர்கள் பக்கத்து மாநிலத்தில் ஒரு
பெரிய கல்லூரியில் கேன்டின் கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்கள்.

அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருடைய குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டும் என பி.எப்.பில் தன் கணக்கில் கடன் விண்ணப்பித்து தாருங்கள் என கேட்டுள்ளார்.

1. நான் அந்த நிறுவனத்தின் பி.எப். ஆலோசகர் என்பதால் முதலில் என்னைத் தொடர்புகொண்டு எனி டெஸ்கில் இணைத்துகொள்ளவேண்டும். (இது முதல் டாஸ்க். நான் சிஸ்டத்தில் இருக்கும் பொழுது தான் என்னை இணைக்கமுடியும்.)

2. சென்னையில் உள்ள பணியாளர் நேரடியாக அங்கு வேலை செய்யும் அந்த தொழிலாளியிடம் பேசக்கூடாது. கடந்த கால கசப்பான நினைவுகள் இந்த விதிக்கு தள்ளியிருக்கிறது. அங்கு இருக்கும் மேற்பார்வையாளரிடம் தான் ஓடிபி கேட்கவேண்டும். அவர் தன் வேலைகளில் எப்பொழுதுமே ரெம்ப ரெம்ப பிசி. அவர் தான் அந்த தொழிலாளியிடம் ஓடிபி கேட்டுத்தரவேண்டும். இது அடுத்த பெரிய டாஸ்க்.

3. தளத்தில் உள்ளே நுழைவதே பெரிய டாஸ்க். தளம் நம் ”அதிர்ஷ்டத்திற்கு” வேலை செய்து, ஓடிபி கேட்கும் பொழுது ஆதார் தளம் பல சமயங்களில் ஓடிபி தருவதில்லை. அப்படியே ஆதார் ஓடிபி தந்துவிட்டால், மேற்பார்வையாளரிடம் தெரிவித்து, அவருடைய பிசியான வேலையில் நினைவில் வைத்து அவர் அந்த தொழிலாளியை தொடர்புகொள்ளும் பொழுது, (அப்பொழுது தான் பஜ்ஜியோ, போண்டாவோ சுடச்சுட சுட்டுக்கொண்டிருப்பார்) ஓடிபி வாங்கித் தருவதற்குள் அந்த ஓடிபி அநேகமாக காலவதியாகிவிடும். விக்கிரமாதித்தன் போல சற்றும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து...

இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை முயற்சி செய்தும் பி.எப்பில் முன்பணத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

அந்த தொழிலாளியை அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இணையம் இருக்கும் ஒரு ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பிக்க சொல்லுங்கள். எளிதாக வேலை முடிந்துவிடும் என சொன்னால்... நிறுவனத்தின் விதி அதை சொல்லக்கூடாது என கறாராக சொல்கிறது. அதிலும் கடந்த கால கசப்பான நினைவுகள் இருக்கின்றன என்கிறார்கள்.

குறிப்பாக அந்த நிறுவனத்தில் விசேச சூழல் ஒரு பக்கம் இருக்கட்டும். பி.எப். தளம் சீரான நிலையில் வேலை செய்து, ஆதார் தளமும் ஓடிபி தந்துவிட்டால், எல்லாம் உடனே முடிந்துவிடும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

நம்மால் சாத்தியமானது எல்லாம், சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டுக்குமான மின்னஞ்சலுக்கு புகார் அனுப்புவது மட்டுமே! அதை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

Killa (கோட்டை) 2014


மராத்தி மண்ணில் கொங்கன் பகுதிக்கு அம்மா தன் மகனுடன் வந்து சேர்கிறார். அவர் வருவாய் துறையில் ஒரு இடைநிலை அதிகாரி. மகன் ஏழாவது படிக்கிறான். அவருடைய கணவன் கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.

புதிய அலுவலகம். புதிய சக ஊழியர்கள். வளைந்து போகச் சொல்லும் உள்ளூர் பிரமுகர்கள் என புதிய சூழலை சிரமத்துடன் எதிர்கொள்கிறார். புதிய ஊர். புதிய பள்ளி. சுற்றிலும் புதிய மனிதர்கள் அவனால் இயல்பாக அங்கிருக்க முடியவில்லை. அவன் நினைவில் அவன் வாழ்ந்த பூனே இன்னும் நிறைய தங்கியிருக்கின்றன.

புதிய நண்பர்களை கண்டடைந்து, முரண்பட்டு, திரும்ப பேசி…. அந்த பையன் நிலைமையை புரிந்து கொண்டு, இயல்பு நிலைக்கு மாறும் பொழுது, அம்மாவிற்கு அடுத்த மாற்றல் உத்தரவு வந்து சேருகிறது.



அந்த பையன் அவன் வயதுக்குரிய தொல்லைகளுக்கு ஆளாக்காமல், கொஞ்சம் தெளிவாக தான் இருக்கிறான். சூழ்நிலை தான் அவனை இறுக்கமாக்குகிறது.

அம்மா – மகன் முரணுக்கு பிறகான புரிதல், பள்ளி நண்பர்கள் முரணுக்கு பிறகான நெருக்கம் எல்லாம் இயல்பாக இருக்கிறது. அந்த பெண்ணின் மீது அக்கறை கொண்டு, இன்னொரு திருமணத்தை யோசிக்கவில்லையா என கேட்பது அழகு.

கடற்கரையை ஒட்டிய நிலம், மழையும், ஈரமுமாய், அலைகள் சத்தம் எதிரொலிக்கும் கோட்டையுமாய் கொங்கன் நம்மை அத்தனை ஈர்க்கிறது. நம்மூர் நாகர்கோவில் நிலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அந்த நிலம் தான் அந்த பையனின் மனநிலையை விரைவில் சமநிலைக்கு கொண்டு வந்தது எனலாம். மீண்டும் அந்த ஊரை விட்டு போகும் பொழுது, பூனே நிலம் அவன் நினைவில் மங்கி, கொங்கன் நிலம், அதன் நினைவுகளும் அவனை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றன.

அந்த பையன், அவனின் அம்மா, சக பள்ளி மாணவர்கள் எல்லோரும் படம் முடிந்தும் நினைவில் நிற்கிறார்கள். புகழ்பெற்ற “பாதாள் லோக்” வலைத்தொடர், திரீ ஆப் அஸ் படத்தை எடுத்த இயக்குநர் அவினாஷ் அருணுக்கு இந்தப் படம் முதல்படம்.

ஜீ5ல் இருக்கிறது. அமைதியான, அழகான படத்தை விரும்புவர்கள் மட்டும் முயற்சி செய்யுங்கள்.


ரயில் நிலையங்கள்


ரயில் நிலையங்கள் எப்பொழுதும் பிடித்தமானவை.

பேருந்து நிலையங்களில் டீசலின் மணமும், வெட்கையும் எப்பொழுதும் சூழ்ந்து நிற்கும்.

தொலைதூரம் காற்றோட்டமாய் அழைத்து செல்வதால் ரயிலின் மீதும், காற்றோட்டமான நிலையங்களின் மீதும் அலாதி பிரியமுண்டு.
புத்தகம் படிப்பதற்கு நல்ல சூழலைத் தருபவை.

ஏதாவது ரயில் பயணம் என்றால்... முன்கூட்டியே போய்விடுகிற வழக்கமுண்டு. காத்திருப்பதில் ஏதும் சலிப்பு தட்டுவதில்லை.

ரயில்வே நிலையங்கள் வடிவத்தில் ஒன்று போல கட்டப்பட்டிருந்தாலும்... அந்த ஊரின் நினைவுகளோடு கலந்திருப்பதால் ஒவ்வொரு நிலையமும் தனித்த தன்மையுடையவை.

ரயில் எப்பொழுதும் கூடுதல் நேரம் ஓய்வெடுக்கும் இரவு வேளைகளில் ரயில் நிலையங்களின் அமைதியும், அழகும் நிறைந்து இருக்கும்.

தொடர்ச்சியாக ஒலிக்கும் அறிவிப்புகள் அசரீரி போல கேட்டுக்கொண்டே இருக்கும். தேநீர்காரர்கள் மட்டும் அந்த சுமாரான தேநீரோடு வேகவேகமாக அங்கும் இங்கும் அலைந்து திரிவார்கள்.

கேரளா போன்ற ஈரம் அதிகமுள்ள ஊர்களில் இப்படி நிலையங்கள் மரம், செடி, கொடி படர்ந்திருக்கும் நிலையங்களில் குளிர்ச்சியும் கூடி நிற்கும்.

இந்த நிலையமும் கேரளாவின் ஒரு நிலையம் தான்.

இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்யவேண்டும். அதே போல எல்லா ரயில் நிலையங்களிலும் அமர்ந்து புத்தகமும் வாசிக்கவேண்டும்.

April 14, 2024

தோசை பிரியரும், விபத்தும்!


சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு அம்மா, தோசை குறித்த ஒரு தலைப்பில் விவாதிக்கும் பொழுது தன் மகன் 25 தோசைகளுக்கு மேல் விரும்பி சாப்பிடுவான் என மகிழ்ச்சியாய் பகிர்ந்துகொண்டார். அந்த பையனை அந்த சமயத்தில் இணையத்தில் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.


கடந்த வாரம் அந்த பையன் தாம்பரம் மின்சார ரயில் பாதையை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டான். டிரோல் செய்த கண்ணேறு பிரச்சனையால் தான் இப்படி அல்ப ஆயுசில் செத்துப்போய்விட்டான் என சிலர் இரக்கப் பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். அதை விமர்சித்தும் ஆங்காங்கே பதிவுகளை பார்க்க
முடிந்தது.

சென்னை வந்த புதிதில் இப்படி ரயில்வே பாதைகளை கடந்து செல்பவர்களைப் பார்த்து பதைப்பதைத்து பார்த்திருக்கிறேன்.

என் துணைவியாரின் சொந்தக்கார பெண் குரோம்பேட்டையில் தன் தோழியுடன் ரயில் பாதையைக் கடக்கும் பொழுது திடீரென ரயில் வர… மோதியதில் உடன் வந்த தோழி பலியாக...சொந்தக்காரப் பெண் தன்னுடைய காலை முழுவதும் இழந்தார்.


அதற்கு பிறகு செய்திகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிக்கையில் ஒரு குட்டி செய்தியாக மூலையில் வரும். இவ்வளவு நபர்கள் ரயில் பாதையை கடக்கும் பொழுது இறந்துவிட்டார்கள். அதில் அடையாளம் காணப்பட்டவர்கள் இத்தனைப் பேர். காணப்படாதவர்கள் இத்தனைப் பேர் என்ற கூடுதல் குறிப்புகளும் தருவார்கள்.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அநேகமாக 90லிருந்து 100 பேர்வரைஎன பலமுறை பார்த்திருக்கிறேன். இதெல்லாம் தலைநகர், அதை ஒட்டிய பகுதிகளில் மட்டும் தான்! ஆக ஒரு நாளைக்கு ஒரு நபர் என்ற அளவில் இறக்கிறார்கள் என கணக்கு வைக்கலாம்.

இதெல்லாம் ட்ரோல், விதி, கர்மா என கடந்து போய்விட முடியுமா! சென்னை என்பது இரவும் பகலும் உற்பத்தியில் ஈடுபடுகிற தூங்காத் தலைநகரம். இதில் மக்கள் பாதுகாப்பாக ரயில் பாதைகளைக் கடக்கும் வழிகளை இத்தனை ஆண்டுகளில் உருவாக்கியிருக்க வேண்டுமா இல்லையா! அதை ரயில்வே நிர்வாகம் செய்ய தவறியிருக்கிறது.

ஒரு ரயில்வே பாதையை கடப்பதற்கு ஒரு பாலம் கட்டுகிறார்கள். அது 100 படிகள் வைத்து கட்டுகிறார்கள். லிப்ட் கிடையாது. நகரும் படிக்கட்டுகள் இருப்பதில்லை. இதை எப்படி வயதானவர்கள், குழந்தைகள் கடப்பார்கள் என்ற அக்கறையே இல்லை. கடமைக்கு பாலத்தைக் கட்டி கணக்கு காட்டுகிறார்கள். சுத்திப் போவதை விட கொஞ்சம் கவனத்துடன் கடந்துவிடலாம் என கடக்கிறார்கள். விபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ரயில்வேயில் ஒரு காலகட்டம் வரை சேவை என்கிற மனப்பான்மை இருந்தது. இப்பொழுது எப்படி கல்லாக் கட்டலாம் என லாப வெறி கொண்ட முதலாளித்துவ நிறுவனம் போல மாறிவிட்டது. அதனை பல்வேறு உதாரணங்கள் உண்டு.


முன்பாவது நிலைமை பரவாயில்லை. இப்பொழுது செல்போன்களினால் கவனச்சிதறல் அதிகம் இருக்கிற காலம். ஆக, இன்னும் கவனத்துடன் வசதிகளை செய்து தந்து மனித உயிரிழப்புகளை காக்கவேண்டும். ஆனால் செய்வதில்லை.

ரயில்வேயில் வேலை செய்கிற கார்டுகளுக்கு (Guard) ஒரு தொழிற்சங்கம் உண்டு. அதன் தொழிற்சங்கத் தலைவர் “இப்படி தொடர்ச்சியான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு நிறைய பரிந்துரைகளை கொடுத்திருக்கிறோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை. ஏதாவது பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகு தான் ஒவ்வொன்றாக கணக்கில் கொள்கிறார்கள்” என வருத்தப்பட்டு சொன்னார்.
ஆக நாம் விவாதிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தையும், அதைக் கட்டுப்படுத்துகிற இந்த ஒ ன் றி ய ஆட்சியையும் தான்!
அதைவிட்டுவிட்டு கண்ணேறு, கர்மா, விதி என விவாதித்துக்கொண்டிருந்தால், என்றைக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மனித உயிரிழப்புகளும் நிற்கப்போவதில்லை!

April 13, 2024

கணக்கு எழுதுங்கள்!


வருமானம் வருகிறது. செலவு செய்கிறோம். பெரும்பாலும் பலர் பட்ஜெட் போடுவதோ, கணக்கு எழுதுவதோ இல்லை. (எழுதிப் பார்க்கும் பொழுது வரும் மன உளைச்சலை யார் தாங்குவது?

🙂 )
பொருளாதார வல்லுநர்கள், தனிநபர்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால்..

"கணக்கு எழுதுங்கள். எழுதுவதன் மூலம் வாழ்வில் பலவற்றை ஒழுங்குப்படுத்த முடியும்".

என் அனுபவத்தில்.. சில மாதங்கள் எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு என மாத துவக்கத்தில் நானே பட்ஜெட் போட்டுக்கொண்டு, இந்த செலவை, சேமிப்பை செய்யலாம். அடுத்த மாதம் செய்யலாம் என நகர்த்துவேன். பயனுள்ளதாக இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக நேரம் கிடைக்கும் பொழுது தினம் 5 நிமிடங்கள் செலவழித்து செலவு கணக்கையும் முறையாக எழுத ஆரம்பித்தேன்.

இன்னமும் துல்லியமாக வருமானமும், செலவும் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன.

இதைச் செய்யலாம். இதைச் செய்யவே கூடாது என தெளிவாக திட்டமிடவும், நகர்த்தவும் முடிகிறது.

ஆகையால் நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

தொடர்ந்து எழுதி வந்திருந்தால் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு விலைவாசி கூடியது என்பதும் இன்னும் பளிச்சென புரிந்திருக்கும்.

"நீ உதவி செய்பவனாக மாறு"


எப்பொழுதும் எனக்காக யாரிடமும் கேட்க தோன்றியதேயில்லை. ஒருவேளை அப்படி கேட்பதாய் இருந்தால், குறைந்தது ஆயிரம் முறை யோசனை செய்து, முடிந்தமட்டிலும் கேட்பதை தவிர்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் என்னிடம் இருப்பதே போதுமானதாக இருந்தது அல்லது அதற்குள் தான் வாழவேண்டும் என்ற கடுங்கோட்பாட்டில் வாழ்ந்தேன் என்றும் சொல்லலாம். எப்பொழுது தன் தேவைகளை/நேரத்தை தானே சரியாக பாரமரித்து கொள்கிறார்களோ அவர்களால் தான் மற்றவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. இதைப் பொதுமைப்படுத்தவில்லை. என்னளவில் சொல்கிறேன்.


****

"உலகம் உதவி கேட்பவர்களால் நிறைந்து இருக்கிறது!"என்றார் அவர் சலிப்புடன்.
"நீ உதவி செய்பவனாக மாறு"

"நானா! நான் என்ன உதவி செய்ய முடியும்!" என்று திகைத்தேன்

"எனக்கே உதவிகள் நிறைய தேவைப்படுகின்றன.
நான் முற்றிலுமாக நொறுங்கிப் போய் விட்டேன்."என்றேன்.

"எந்தச் சூழலிலும்
எவராலும் செய்யக்கூடிய
ஒரு சிறிய உதவி
அந்த உதவிக்காகக் காத்திருக்கிற
அதனினும் ஒரு சிறிய கை
உண்டு.
அதைக் கண்டுபிடி!" என்றார் அவர்.

நான் வாழ்நாள் முழுவதும்
ஒரு திசையைப் பார்த்து
அமர்ந்து கொண்டிருந்த
ஒரு பொம்மை
வேறு திசையைப் பார்த்து
திருப்பி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.

இப்போது என் முன்னால் இருந்தது
முற்றிலும் வேறு ஒரு உலகம்.

என்னால் உதவப்படக் கூடியவர்கள் நிறைந்ததொரு உலகம்.
அந்த நாளுக்குப் பிறகு
நான் உதவி என்று
எவரிடமும் கேட்டதில்லை.
உதவாதவர்கள் மீது
கோபம் கொண்டதில்லை.

நான் கொடுக்க ஆரம்பித்ததும்
வினோதமாக
எனக்கு உதவி என்று எதுவும்
தேவைப்படவுமில்லை.

- போகன் சங்கர்

April 11, 2024

இன்ஸ்பெக்டர் ரிஷி (2024) முதல் சீசன் 10 அத்தியாயங்கள்


தேன்காடு என காடுகளோடு இருக்கக்கூடிய ஒரு மலைகிராமம். ஒரு குகையில் வன தேவதையை வணங்கி, மலைவாழ் மக்கள் பூஜை செய்கிறார்கள். 25 அடிக்கு ஒரு பெரிய குழி வெட்டி, அதில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அங்கு வந்த அத்தனை பேரும் குழந்தைகள் உட்பட இரண்டிரண்டு பேராக உள்ளே குதிக்கிறார்கள். இது தான் முதல் காட்சி.


நிற்க. சமகாலத்தில் ஒரு புகைப்படக்காரர் மர்மமான முறையில் காட்டில் இறந்துகிடக்கிறார். மக்கள் வனரட்சி தேவதை ஆங்காங்கே உலாவுவதாக பயத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.

துப்பு துலக்க நாயகனான இன்ஸ்பெக்டர் ரிஷி அந்தப் பகுதிக்கு வருகிறார். இறுக்கமாக இருக்கிறார். முன்பு தன் தொழில் ரீதியான ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு ஒரு கண் போய்விடுகிறது. ஒற்றைக்கண்ணொடு தான் சமாளிக்கிறார். அவருக்கு இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உதவிக்கு வருகிறார்கள்.

கொலைகள் எந்த தடயமும் இல்லாமல் நடக்கிறது. எங்கு விசாரணை துவங்கினாலும், ஒரு கட்டத்தில் ஒரு முட்டுச் சந்தில் கொண்டு போய் நிற்கிறார்கள். ஆனால் ஆட்கள் மர்மமான முறையில் இறப்பது தொடர்கிறது. தொடர்ந்து ஆட்கள் சாவதால், அந்த பகுதியில் நடைபெறும் பல ”வளர்ச்சி” வேலைகள் தடைபடுகிறது.

காட்டை காக்க வனரட்சி தேவதை தான் கொலைகள் செய்கிறதா? அல்லது அதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்பதை காட்டின் பின்னணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

****


காட்டின் பின்னணியில்… அடிக்கிற கன வெயிலுக்கு இதமாக… கண்ணுக்கு குளிர்ச்சியாய் பார்க்கவே அழகாக இருக்கிறது. ஆங்காங்கே சிஜியில் வரும் விலங்குகளும் அருமையாக இருக்கின்றன.

சுற்றுப்புற சூழலில் அக்கறை இல்லாமல், லாபம் என்ற ஒரே நோக்கத்தில் சட்ட ரீதியாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் கதை அமைத்திருக்கிறார்கள். காடுகளோடு அந்த மலை வாழ் மக்கள் எத்தனை ஒன்றி வாழ்கிறார்கள் என்பதையும் உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் காட்டியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.

திறமையான இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்தினாலும், இயக்குநர் ஒன்பது அத்தியாயம் வரை அவரை கட்டிபோட்டு வைத்திருந்து… கடைசி அத்தியாயத்தில் தான் சரசரவென அதன் புதிர்களை அவிழ்க்கிறார். இந்த மாதிரி வலைத்தொடர்களில் அடுத்த தொடருக்கான ஒரு விதையையும் விட்டு வைப்பார்கள். இதிலும் அப்படியே!

நாயகன் நவீன் சந்திரா (சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்-ல் பார்த்த நினைவு) கொடுத்தப் பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார். இரண்டு உதவி ஆய்வாளராக வருபவர்களும் சிறப்பு. ஒருவர் ரவிகண்ணா சமீபத்தில் சில படங்களில் பார்த்து வருகிறேன். இன்னொருவர் நளினி ஜீவரத்தினம்.

நாயக பிம்பம் என வழக்கமாக திரையில் காட்டுவதை வலைத்தொடர்களில் உடைத்து வருவதை கவனிக்கிறேன். இதில் முதன்மை பாத்திரங்களாக வரும் மூவருடைய தனிநபர் வாழ்க்கையையும் இயல்பாக, சிக்கல்களை எதிர்கொள்பவர்களாக காட்டியிருக்கிறார்கள்.

கொஞ்சம் இளைத்து நாயகி சுனைனா தொடர் முழுவதும் வருகிறார். அவரும் சிறப்பு. மேலும், குமாரவேல், மைம் கோபி, வேல ராமமூர்த்தி என அவர்களும் பொருத்தமாக வருகிறார்கள். தென்னிந்திய மொழிகளில் கூடுதலாக இந்தியில் மொழிமாற்றம் செய்திருப்பதால், பிற மொழி நடிகர்களும் கலந்து கட்டி நடித்திருக்கிறார்கள். சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் நினைவில் நிற்கிறார்கள்.

”திரு திரு துறு துறு” என ஒரு படம். 2009ல் வந்தது. நன்றாக ஓடியதாகவும் நினைவு. அதை இயக்கியவர் நந்தினி. ஆனால் அதற்கு பிறகு காணாமல் போய்விட்டார். இப்பொழுது இந்த தொடர் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் வந்து இருக்கிறார். வாழ்த்துகள்.

இந்தத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

April 7, 2024

வருங்கால வைப்பு நிதி திட்டம் : நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 5





இந்த தொடர் ஆரம்பித்த பிறகு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருங்கால வைப்பு நிதி தொடர்பாக தங்களுடைய சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். ஆகையால் தொழிலாளர்களால் அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்களுக்கு  பதிலளித்தால் சரியாக இருக்கும் என எழுதியுள்ளேன்.

 

தொழிலாளியினுடைய சம்பளத்திலிருந்து மாதம்தோறும்  பி.எப் நிதியை நிறுவனம் பிடித்தம் செய்கிறது.  நிறுவனம் தான் செலுத்தவேண்டிய பங்களிப்பையும் சேர்த்து பி.எப் நிறுவனத்திற்கு  மொத்தமாக செலுத்துகிறது.  ஒருவேளை நிறுவனம்  தாமதமாக செலுத்தினால் தொழிலாளிக்கு கிடைக்கவேண்டிய வட்டி குறைவாக கிடைக்குமா?

 

நிறுவனம் தொழிலாளியிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய தொகையை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவேண்டும்.  தன்னுடைய பங்கையும் சேர்த்து, பி.எப்.க்கு செலுத்தவேண்டிய நிதியை ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் செலுத்திவிடவேண்டும்.  ஒருவேளை சில நாட்களோ, சில மாதங்களோ செலுத்த தாமதப்படுத்தினால், அதற்கான வட்டியையும், அபராதத்தையும் செலுத்தவேண்டும்.

 

தொழிலாளியினுடைய நிதியை கையாளும் பி.எப். நிறுவனம்  தொழிலாளிக்கு 2023 – 24 கணக்காண்டுக்கு தருகிற வட்டி 8.25%. நிறுவனம் தான் செலுத்தவேண்டிய நிதியை தாமதமாக செலுத்தினால், செலுத்தவேண்டிய வட்டி ஆண்டுக்கு 12%.  இது மட்டுமில்லாமல்,  அபராதமாக (Penal Damages)  2 மாதம் வரை 5%, 4 மாதம் வரை 10%,  6 மாதம் வரை 15%, ஆறு மாதங்களுக்கு மேலாக என்றால் 25% லிருந்து அதிகப்பட்சம் 100% வரை அபராதம் விதிப்பார்கள்.


ஆகையால், தாமதமாக நிறுவனம் செலுத்தினால்,  அதற்குரிய வட்டியையும், அபராதத்தையும் பி.எப் பெற்றுவிடுவதால், தொழிலாளிக்கு வட்டி குறையும் என்ற பேச்சுக்கு இடமில்லை.

 

இதில் இன்னொரு சிரமம் என்னவென்றால்,  அந்த நிறுவனம் தாமதமாக பணம் செலுத்தும் பொழுது,  இந்த இடைவேளைக்குள் பி.எப். நிதிக்காக தொழிலாளி விண்ணப்பிக்கும் பொழுது,  நிறுவ்னம் பணம் செலுத்தும் வரை, தொழிலாளியின் பணத்தை விடுவிக்கமாட்டார்கள். அதுவரை தொழிலாளி காத்திருக்கவேண்டும் என்கிறது பி.எப்பின் நடைமுறை.

 

ஒவ்வொரு மாதமும் நிறுவனம் பி.எப். நிதி செலுத்திய ஒரு வாரத்திற்குள் தொழிலாளியின் கணக்கில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற  ஒரு குறுஞ்செய்தியை பி.எப் நிறுவனம் அனுப்பிவைக்கிறது.  (இந்த குறுஞ்செய்தி, ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிற பத்து பேரில் ஐந்து பேருக்கு மட்டும் இப்போதைக்கு வருகிறது. எதிர்காலத்தில் இந்த பிரச்சனையை சரி செய்யும் என நம்புவோம்.)

 

சரிபார்ப்பதற்கு இன்னொரு வழி, பி.எப். Umang (என்றால் உற்சாகம்) என்ற ஆப் ஒன்றை செயல்படுத்துகிறது.  அதன் மூலம் பல வசதிகளை பெறமுடியும். குறிப்பாக நிறுவனம் நிதியை செலுத்துகிறதா எனவும் தொழிலாளி தெரிந்துகொள்ளமுடியும்.   

 

இன்னொரு வழியாக,  பி.எப். (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login) ஒரு தளத்தை பராமரித்து வருகிறது.  அதில் UAN, கடவுச்சொல்லை பயன்படுத்துவதின் வழியாக உள்ளே போய் சரிபார்க்கமுடியும்.


இப்படி சோதிப்பதின் மூலம் பணம் வரவில்லை என தெரியும் பொழுது, நிறுவனத்தை தொழிலாளர்கள் ஏன் செய்தி வருவதில்லை என நிறுவனத்தை கேட்பதின் மூலம் ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் செலுத்த கோரமுடியும்.

 

ஒருவேளை நிறுவனம் பல மாதங்கள் பி.எப். பணத்தை செலுத்தவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள் செலுத்துகிற வரை தொழிலாளி காத்திருக்கத்தான் வேண்டுமா?

 

பி.எப்.  ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் (ஆறு மாதங்களுக்கு மேலாக) பணம் செலுத்தாத நிறுவனங்களை கண்டறிந்து, ஏன் தாமதம் என பதில் கேட்டு அறிவிப்பை வழங்கும் (Notice) வழங்கும்.  எவ்வளவு செலுத்தவேண்டும்? நேரில் வந்து பதில் சொல்வதற்கு வாய்ப்புகளை தரும். அவர்கள் சொல்லும் காரணம் பொருத்தமாக இருந்தால், காரணத்தை ஏற்கும்.  பணத்தை கட்டுவதற்காக  சில நாட்கள் அனுமதிக்கும் அதற்கு பிறகும்   நிறுவனம் செலுத்த தவறும் பட்சத்தில்… அந்த நிறுவனத்தின் வங்கி விவரங்களை பி.எப். நிறுவனம் துவங்கும் பொழுதே வாங்கி வைத்திருப்பதால்,  நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்படும் வங்கி மேலாளருக்கு அவர்கள் செலுத்தவேண்டிய தொகையை ஒரு அறிவிப்புடன் தெரிவிக்கும். 

 


வங்கி மேலாளர்  அந்த நிறுவனத்தின் கணக்கில் பணம் இருந்தால், அதற்கு ஒரு DD எடுத்து பி.எப். நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பார்.  ஒருவேளை அப்போதைக்கு பணம் இல்லையெனில்,  பணம் வரவாகும் பொழுது, முதல் வேலையாக அதைச் செய்வார்.  இப்படி பணத்தை எடுப்பதற்கு நிறுவனத்தின் அனுமதியும் தேவையில்லை. ஏற்கனவே நிறுவனத்திற்கு முறையாக அறிவிப்பையும் கொடுத்துவிடும்.

 

ஒருவேளை வங்கி கணக்கில் பணம் இல்லை.  இனி வருவதற்கும் வாய்ப்பு இல்லை நிலை இருந்தது என்றால்..  அடுத்து அந்த நிறுவனத்தின்/முதலாளியின் சொத்துக்களை ஜப்தி செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாக செய்யத் துவங்கும்.


இப்படி பணம் செலுத்த கோரி பிஎப். நோட்டிசு அனுப்பாத பட்சத்தில், ஒரு தொழிலாளி தன்னுடைய பி.எப். தொகையை பெற விண்ணபிக்கும் பொழுது, அந்த நிறுவனம் பணம் செலுத்தாதது, பி.எப். நிறுவனத்திற்கு தெரியவரும். அதற்குப் பிறகு  நோட்டிஸ் அனுப்பி மேலே சொன்ன நடைமுறையை அமுல்படுத்துவார்கள்.

 

தொழிலாளியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும், ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையையும் பிஎப்-க்கு செலுத்தவேண்டும்.  நிறுவனத்தின் பங்காக செலுத்தவேண்டிய நிதியையும் தொழிலாளியிடமிருந்து பிடித்தம் செய்யலாமா?

 

இப்படி நிச்சயம் கூடாது. அப்படி பிடித்தம் செய்வது கிரிமினல் குற்றம்.

 

ஒரு தொழிலாளி நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது, தொழிலாளி தன்னுடைய பி.எப். பணத்தைப் பெறுவதற்கு நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுமா?  வேலை செய்யும் பொழுது நடந்த ஏதோ ஒரு முரண்பட்டை காரணம் சொல்லி, பணத்தை எடுக்கவிடாமல் நிறுவனம் தடுப்பது சாத்தியமா?

 

ஒரு தொழிலாளியின் கணக்கில் செலுத்தப்படும் பி.எப். நிதி என்பது அவருக்கு சொந்தமானது.  பி.எப். உருவாக்கிய விதிகளுக்கேற்ப அந்த தொழிலாளி அந்த நிதியை கையாளலாம்.  இதில் நிறுவனம் எந்த காரணத்தை முன்னிட்டும் தலையிட முடியாது. 

 

பி.எப். தொழிலாளர்களுடைய பி.எப் பணத்தை கையாள்கிறது.  ஆனால் அந்த தொழிலாளியை அடையாளம் காணுவதற்கு அதற்கென பிரத்யேக வழியில்லாத நிலை முன்பு இருந்தது.  அதனால், ஒரு தொழிலாளியை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில்,  நிறுவனத்தின் முதலாளி/அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அந்த தொழிலாளி பி.எப் பணத்தைப் பெறுவதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாத அவசியமாக இருந்தது.

 


ஆனால், ஆதார் அமுலாக்கத்திற்கு பிறகு, ஆதார்  பயோ மெட்ரிக் அடையாளத்துடன் இருப்பதால், ஆதாரை ஒரு முக்கிய அடையாளமாக பிஎப். இறுகப் பிடித்துக்கொண்டது.  அதனால் நிறுவனத்தின் முதலாளி கையெழுத்திட வேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.  ஆதாரை அடிப்படையாக கொண்டு தொழிலாளியே பணத்தை பெற்றுவிடமுடியும்.

 

ஆனால், ஒரு தொழிலாளி வேலை செய்யும் பொழுதே, தன்னுடைய பி.எப். கணக்கில்  ஆதார், வங்கிக்கணக்கு எண், பான் எண்ணை எல்லாம் இணைத்திருக்கவேண்டும்.   அதை அந்த நிறுவனம் தன்னுடைய டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரித்து இருக்கவேண்டும்.   ஒருவேளை நிறுவனம் அதை அங்கீகரிக்க தவறினால், பி.எப். அலுவலகத்தில் இது தொடர்பாக முறையிட்டால், நிறுவனத்திற்கு அதை செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அலுவலர் வலியுறுத்தி செய்ய சொல்வார்.

 

நஷ்டம், நொடித்துப் போதல் என வேறு வேறு காரணங்களினால்,  சில நிறுவனங்கள் மூடப்படும் பொழுது, அந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி  ஆதார், வங்கிக்கணக்கு, பான் எண்ணை டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்க முடியாத பொழுது என்ன செய்வது?

 

நிறுவனம் மூடப்பட்ட நிலையில், நிறுவனத்தினுடைய முதலாளி/அங்கீகரிக்கப்பட்ட அலுவலருக்கு பதிலாக   நீதிபதி, அஞ்சல், அஞ்சல் உதவி அதிகாரி, வங்கி மேலாளர், அரசு பொறுப்பு அதிகாரி (any Gazetted Officer) என இன்னும் சிலரை கையெழுத்திடுவதற்கு பி.எப். அனுமதிக்கிறது. ஆகையால், கவலைப்பட தேவையில்லை.

 

ஒரு தொழிலாளி தன்னுடைய பி.எப். பணத்தை பெறக்கோரி விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் பொழுது, பணம் தொழிலாளியின் வங்கி கணக்கிற்கு 20 நாட்களுக்குள் வந்துவிடும்.  ஒருவேளை வங்கி கணக்கு வரவில்லையென்றால் யாரிடம் முறையிடுவது?

 

முதலில் பி.எப் சம்பந்தமாக புகார் கொடுப்பதற்காக, பி.எப் நிர்வாகமே ஒரு ”EPF : புகார் மேலாண்மை அமைப்பு” என்ற பெயரில் ஒரு வலைத்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   அந்த வலைத்தளத்தில் தொழிலாளியினுடைய அடிப்படை பி.எப். விவரங்கள், மொபைல் எண், என்ன குறைபாடு என்பதை சரியாக தெரியப்படுத்தவேண்டும்.

 

https://epfigms.gov.in/grievance/grievancemaster


 

ஒரு வாரத்திற்குள் தொழிலாளி கொடுத்த எண்ணுக்கு அந்த புகாருக்கு உரிய பதிலை அல்லது என்ன செய்யவேண்டும் என்பதை அனுப்பி வைக்கும்.    அதை சரி செய்துவிட்டு, மீண்டும் விண்ணப்பித்தால், பணம் வந்துவிடும். 

 

ஒருவேளை அந்த பதில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், தொழிலாளி வேலை செய்கிற/செய்த நிறுவனத்திற்கென்று ஒரு அருகில் உள்ள பி.எப் அலுவலகத்தை தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். சென்னையில் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் இருக்கிறது.  துணை அலுவலகங்களாக அம்பத்தூர் பி.எப் அலுவலகம் முகப்பேரிலும், தாம்பரம் பி.எப் அலுவலகம் தாம்பரத்திலும் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.எப். அலுவலகங்கள் உண்டு.   ஆகையால் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு  எந்த பி.எப். அலுவலகம் என கேட்டுக்கொண்டு, அங்கு அணுகவேண்டும்.

 

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அலுவலகங்கள் இயங்கும்.  தொழிலாளி தான் வைத்திருக்கிற அடிப்படை விவரங்களை எடுத்துக்கொண்டு, அலுவலகம் சென்றால், தொழிலாளியின் குறைபாடு கேட்கப்பட்டு, என்ன செய்வது என்பது உரிய வழிகாட்டல்களைத் தருவார்கள். அதைச் சரி செய்தோம் என்றால், தொழிலாளியின் பி.எப். பணம் வங்கிக்கு வந்துவிடும்.

 


ஒரு தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கும் பொழுது, இப்பொழுது பி.எப். பணத்தை பெற விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா நிறுவனங்களில் கணக்குகளும் கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றவேண்டும் என பி.எப். கோருகிறது. எல்லா கணக்குகளிலும் தொழிலாளியின் அடையாள எண்ணான ஓரே UAN (Universal Account No.) தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அதுவாகவே மாறாதா?

 

UAN என்ற அடையாள எண்ணை பி.எப் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தின் கணக்கு எண்ணை அடிப்படையாக கொண்டு,  தரப்படும்.  அந்த தொழிலாளி ஒவ்வொரு நிறுவனம் மாறும் பொழுது, பழைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்ற உரிய விண்ணப்பம் கொடுத்து மாற்றிக்கொள்ளவேண்டும்.

 

ஆனால், UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய வின்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை  தொடர்கிறது.   விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும் என நம்புவோம்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,

பி.எப்., இ.எஸ்.ஐ,  ஜி.எஸ்.டி ஆலோசகர்.

9551291721

 

மின்னஞ்சல் முகவரி : ilakkiyaassociates@gmail.com


****

பின்குறிப்பு :

 

 “ஆனால், UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய விண்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை  தொடர்கிறது.   விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும் என நம்புவோம்.”


”தொழில் உலகம்” இதழுக்கு மார்ச் 20 தேதியன்று,  இப்படித்தான் ஐந்தாவது அத்தியாயத்தை எழுதி முடித்து அனுப்பினேன்.  ஏப்ரல் 1ந் தேதி கட்டுரை வெளியானது.   ஏப்ரல் 3 ந்தேதி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.


பி.எப். சந்தாதாரர்களின் குரலை நாம் பிரதிபலிக்கிறோம் என்பது மகிழ்ச்சி.


https://www.business-standard.com/finance/personal-finance/new-epfo-rule-for-you-no-need-to-request-for-pf-transfer-on-changing-jobs-124040300403_1.html