> குருத்து: பங்குச்சந்தையும் குரங்கு கதையும்!

May 31, 2008

பங்குச்சந்தையும் குரங்கு கதையும்!பங்குச்சந்தையைப் பற்றி அதன் தகிடு தத்தங்களை எளிய முறையில் பதிவில் விளக்கி எழுத வேண்டுமென்று, நிறைய நாள் ஆசைப்பட்டிருக்கிறேன்.

பாமரன் சொன்ன இந்த குட்டிக்கதை பங்குச்சந்தையை அதன் தன்மையை சிறிய அறிமுகமாக தருகிறது. உங்களோடு பகிர்ந்து கொள்ள பதிவிடுகிறேன். பாமரனுக்கு என் நன்றி. இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கும் நன்றி.

*******

2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து...

நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே...

குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா...

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.


- பாமரன்

8 பின்னூட்டங்கள்:

மங்களூர் சிவா said...

எத்தினி பதிவுலய்யா இந்த குரங்கு கதையே எழுதுவீங்க புதுசா ட்ரை பண்ணுங்க!!

:)))

மங்களூர் சிவா said...

ஒட்டு மொத்த Investor -ஐயும் குரங்குன்னுட்டீங்க!!

கலக்கறீங்க போங்க!!
:))

Anonymous said...

வாரன் பஃப்பட் அப்படின்னு ஒருத்தர் இருக்காரு. அவரப் பத்திக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க. பேராசை பிடிச்ச மக்கள் இருக்கும்வரை பங்குச் சந்தை இல்லைன்னாலும் வேற ஏதாவது விதத்தில் அவர்கள் தங்கள் பணத்தை இழந்து கொண்டே இருப்பார்கள். பங்குச் சந்தை ஒரு வழி மட்டுமே. அதிலும் பொறுமையுடன், புத்திசாலித்தனத்துடன் செல்வம் ஈட்டியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பதிவெழுதுவதில்லை.

Socrates said...

சிவா!

உங்களைப் போல நான் பதிவுலகில் உலாவுவதில்லை. அதனால், யார் இந்த குரங்கு கதைகளை பயன்படுத்தினார்கள் என்பதும் எனக்கும் தெரிவதில்லை.

பதிவுலகில் நிறைய அரட்டை அடிக்கிற மடமாக தானே பலர் பயன்படுத்துகிறார்கள்!

"நல்ல விசயத்தை நாலு பேரு தெரிஞ்சுக்கனும்னா ஒரு முறை இல்ல, நாலுமுறை பதிவிடலாம்"

இந்த 'கோட்' யாரும் சொல்லலைன்னா, நானா சொன்னதா நினைச்சுங்க!

Socrates said...

//அதிலும் பொறுமையுடன், புத்திசாலித்தனத்துடன் செல்வம் ஈட்டியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பதிவெழுதுவதில்லை//

அனானி அவர்களே!

பங்குச்சந்தை ஒரு பச்சையான சூதாட்டம். ஆனால், அதை இந்த அரசு என்னைப் போல கொச்சையாக சொல்வதில்லை.

நீங்கள் சொல்லும் தன்மையில், எல்லா தொழிலைப் போல, இதையும் ஒரு தொழிலாகத் தான் மக்களிடத்தில் அறிவிக்கிறது.

முதலாளித்துவ உலகில் "லாபம்" தான் அதன் அடிப்படை.

இங்கு இந்தியாவில் இருக்கிற எல்லா தரகு முதலாளிகளும் இந்த பங்குச்சந்தையில் கொட்டைப் போட்டவர்கள் தான். கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்கள் தான்.

பால்வெளி said...

பங்கு சந்தை பற்றி இவ்வளவு எளிமையான முறையில் விளக்குவது அரிது. பதிவுக்கு நன்றி.
நீங்கள் சொன்னது போல எனக்கும் இது புதிய விசயம்தான். அதனால் எத்தனை முறை பதிவிட்டலும் தப்பில்லை. அப்புறம் அனானி சொல்றது மாதிரி ஏதோ பங்குசந்தையில் புத்திசாலித்தனமா முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம் அப்படிங்கறதெல்லாம் சும்ம உதாரு! புத்திசாலித்தனமா எப்படி அடுத்தவன் ஏமாந்த சமயமா பாத்து நாம சுருட்டலாம்குறதுதான் அடிப்படை விதி. ஏறக்குறைய லாட்டரி சீட்டு மாதிரிதான். பத்து பேரு இழப்பதை ஒருத்தன் அள்ளிட்டு போறது. கேட்டா புத்திசாலித்தனம்குறது.

அப்புறம்... உங்க நண்பர் சொல்ல மறந்திருக்கலாம்.. இது பாமரன் எழுதின கதை இல்லை.. அவருக்கு அவரோட நண்பர் மின்னஞ்சல் அனுப்புனதா குமுதத்துல எழுதி இருந்தார்.

Socrates said...

//இது பாமரன் எழுதின கதை இல்லை..//

அனானிக்கு சிறப்பான பதில் சொல்லியிருக்கிறீர்கள். அடிக்கடி பதில் சொல்ல வாங்க.

உங்கள மாதிரி ஆளுக சேவை பதிவுலகிற்கு நிறைய தேவை.

"பாமரன் சொன்ன கதை" என்று தான் சொன்னேன்.

இருப்பினும் தகவலுக்கு நன்றி.

Anonymous said...

பதிவுக்கு நன்றி.