> குருத்து: July 2014

July 30, 2014

சுவாரசியமான வாசகர் கடிதங்கள்!

படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசகர் கடிதங்களும் அவ்வப்பொழுது எழுதி வந்திருக்கிறேன். பலரும் தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வந்தால் போதும் என, ‘சூப்பர்’ ‘அசத்திட்டீங்க!’ என சுருக்கமாய் எழுதுகிறார்கள். அதில் என்ன பலன் இருக்கிறது? நான் எழுதிய சில வாசகர் கடிதங்களும் சில அனுபவங்களும் சுவாரசியமானவை!

ஒருமுறை திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு மாலை இதழில் பல பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்ட ஒரு பெண் பேராசிரியர், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் விழாவிற்கான சிறப்பிதழில் அம்மன் புகழ் பாடியிருந்தார். கோபம் வந்து, ”ஒரு பேராசிரியர் இப்படி அம்மன் புகழ் பாடலாமா?” என கடிதம் எழுதினேன். கடிதம் எழுதி 15வது நாளில் அந்த பேராசிரியர் “உங்களை மாதிரி முற்போக்கான இளைஞர்கள் தான் நாட்டுக்குத் தேவை” என்கிற சாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்.

சில காலம் காலை வேளையில், கோடை பண்பலை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களின் ஒலிபரப்பின் எல்லை பெரியது என்பதால், எல்லோருரையும் பேசவைக்கவேண்டும் என்ற திட்டத்தில் இன்று இந்த மாவட்டத்துகாரர்கள் பேசவும், பெண்கள் மட்டும் பேசவும் என கோட்டா முறையை பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் கேட்கும் எந்த பாடலையும் ஒலிபரப்புவார்கள். விடுமுறை என்பதால், ஞாயிறு மட்டும் குழந்தைகளுக்கு! ஆனால், அவர்கள் ஏதாவது குத்தாட்ட பாடலை கேட்டுவிட்டால், இந்த பாடலை ”குழந்தைகள் நீங்கள் இம்மாதிரி பாடலை கேட்க கூடாது” என அறிவுரை சொல்லி, பண்பலைகாரர்களே “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ என்ற ரேஞ்சுக்கு ஒரு பாடலை ஒலிபரப்புவார்கள்.  வந்தது கோபம்.  வாரம் முழுவதும், அண்ணன், மாமா, சித்தி, தாத்தா எல்லோரும் குத்தாட்ட பாடல்கள், ஆபாச பாடல்கள் கேட்டால் ஒலிபரப்புவீர்கள்! குழந்தைகள் கேட்டால் போடமாட்டீர்கள்! இது என்ன நியாயம்?” என்று எழுதினேன்.  அடுத்த வாரத்திலிருந்து, எல்லோருக்கும் நல்ல பாடல் போடுவீர்கள் என்று தானே முடிவெடுத்திருப்பார்கள்! என நினைக்கிறீர்கள். ம்ஹூம்! குழந்தைகளும் எந்த பாடல் கேட்டாலும் ஒலிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்! நொந்தே போனேன்!

சொந்த ஊரில் புதிய கலாச்சார வாசகன் நான்.  அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பேன்.  அப்படியே சென்னைக்கு வந்த சமயம், வாசகர் கடிதம் ஒன்றை எழுதி போட்டேன். இதழிலிருந்து நேரே என்னைத் தேடி வந்துவிட்டார்கள். எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை, அப்பொழுது தான் சரியான திசையில் பயணப்பட துவங்கியது! இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

எழுதி அனுப்பிய வாசகர் கடிதங்களை விட, எழுத நினைத்த வாசகர் கடிதங்கள் அதிகம்!  எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்களும் கூட உண்டு!

இப்படிதான் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்துவிட்டு, நாயகன் தன் வாழ்வில் கடந்த வந்த பெண்களை எல்லாம் சந்திக்கும் பொழுது, தான் உயிருக்குயிராக காதலித்த பெண் விதவையாக இருப்பாள். அதையும் இரண்டு சொட்டு கண்ணீரில் கடந்துவிடுவான். வந்தது கோபம். ”அவளைத்தானடா நீ கல்யாணம் முடிக்கவேண்டும்!” என நாலுபக்கம் கடிதம் எழுதி, முகவரி இல்லாததால், அனுப்பமுடியாமல் போய்விட்டது!


கால ஓட்டத்தில் செல்பேசியால் கடிதங்கள் அரிதாகி வருகின்றன! அன்றொருநாள் என் எட்டு வயது மகளுக்கு கடிதம் பற்றி விளக்கம் கொடுத்துகொண்டிருந்தேன். என்னதான் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசினாலும், கடிதம் இன்னும் மனதுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது!

சமஸ்கிருத வாரம் - இந்துத்துவாவின் திணிப்பு!


July 26, 2014

மாறும் மனிதர்கள்!

பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!
பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

July 25, 2014

வழ. சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய‌ நீதிபதி கர்ணனே மன்னிப்பு கேள்!




                                               (வழக்குரைஞர் சங்கரசுப்பு)
 
"மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!"

இன்று மதியம் 1.30 மணியளவில் நீதிமன்ற ஆவின் கேட் அருகே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது!

நேற்று காலையில் மூத்த வழக்குரைஞரும், மக்கள் வழக்குரைஞருமான சங்கரசுப்பு நீதிபதி கர்ணன் முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் பொழுது, "என்னைப் பற்றி விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டுறீங்களோ! இன்றிரவிற்குள் உன்னை புழல் சிறையில் தள்ளி, களி திங்க வைக்கிறேன்" என ஒருமையில் பேசியும், மிரட்டியும் இருக்கிறார்.

இப்படி அடாவடியாக மிரட்டுவதற்கு அடிப்படை என்ன?

வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ராஜ்யத்தை கடலோர மக்களின் தொடர்போராட்டங்களால் கடந்த சில மாதங்களாக தமிழக அரசும், மத்திய அரசும்  முடக்கிவைத்திருக்கிறது!


தாதுமணல் கொள்ளையை துவக்கத்திலிருந்து, கடலோர மக்களுடன் உடன் நின்று, தமிழகம் தழுவிய அளவில் மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ‍ ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களும் என தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. அதேவேளையில் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வைகுண்டராஜன் தரப்புக்கு தலைவலியாக இருந்துவந்திருக்கிறது!


தனது கொள்ளையை தொடர இப்பொழுது வைகுண்டராஜனை நீதிபதி கர்ணனை தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரோ வைகுண்டராஜன் வைத்த வழக்குரைஞரை விட விசுவாசமாய் தொடர்ந்து பேசிவருகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், வேதனையும் அறியாதவராய் அலட்சியமாய் பேசிவருகிறார்.  வழக்கை ஒத்திவைக்கிறேன் என தெரிவித்துவிட்டு, ரகசியமான முறையில் வைகுண்டராஜனுக்கு ஆதரவாய் தீர்ப்பளித்துவிட்டார்.

இதைக் கண்டித்து நீதிமன்ற வளாகங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம்

"இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா? 


பொதுமக்களே, வழக்குரைஞர்களே!

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன். 
இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா? 
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த
தாதுமணலை சிந்தாமல் சிதறாமல்
நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கவே!
இப்பொழுது புரிகிறதா? 
எலி ஏன் அம்மணமாய் ஓடியதென்று!
 

கடலோர மக்களின்
உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
கொள்ளையன்  வைகுண்டராஜனுக்கு
துணை போகும் கர்ணனைப் போன்ற
தேசத்துரோக, மக்கள் விரோத நீதிபதியின்
நாட்டாமையை முறியடிப்போம்"

என சுவரொட்டி ஒட்டி அம்பலபடுத்தியதும் தான் நீதிபதி கர்ணனின் கோபத்துக்கு காரணம்!

வழக்கை நடத்தியதும், சுவரொட்டி ஒட்டியதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம். அவர்களை தொட்டால், இன்னும் நாலைந்து சுவரொட்டிகள் நமக்கு எதிராக விழும் என அறிந்து, மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவாகவும், மிரட்டியும் பேசியுள்ளார்.

தன்மானமுள்ள வழக்குரைஞர்கள் நீதிபதி கர்ணனின் பேச்சை கண்டிக்கவேண்டும்! இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்!

போராட்டம் வெற்றியடைய நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்! 

  

July 17, 2014

வேட்டி - கனவான்களே! தனியார் பள்ளிகளை கண்டிக்க தயங்குவது ஏன்?


July 2, 2014

நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!



முன்குறிப்பு : தமிழில் தீர்ப்பு எழுதும் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் செல்வாக்கில் 1994ல் ஒரு தீர்மானத்தைப் போட்டு தமிழில் தீர்ப்பு எழுதுவதை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

தமிழ் உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் பல வகைகளில் தொடர்ந்து போராடி நெருக்கடி தந்து, நீதிபதிகளும், நீதிமன்றமும் இனிமேலும் இழுத்தடிக்கமுடியாது என்ற நிலையில் இப்பொழுது இந்த தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தொடர் போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தனது பங்களிப்பை செய்திருக்கிறது! போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.

தொடர்ந்து போராடுவோம்!

******

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி


கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்த மனு 2013 பிப். 22-ம் தேதி தள்ளுபடியானது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.

பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை.

எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

செய்தி : தி தமிழ் இந்து - 01/07/2014