> குருத்து: January 2014

January 10, 2014

பணக்காரர்களுக்கு மட்டுமே உடல்தான உறுப்புகள்!

மூளைச் சாவால் இறந்தவர்களின் உடலை தானம் செய்யும்போது, அதில் இருந்து பெறப்படும் உறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிற அவல நிலை தமிழகத்தில் தொடர்கிறது. கிட்னி போன்ற உடல் உறுப்புகளின் தேவையுள்ள ஏழை நோயாளிகளின் பட்டியலை அரசு மருத்துவமனைகள் பராமரிக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மூளைச்சாவும் உடல் தானமும்

மூளைச்சாவால் இறப்பவர்களின் உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகளைக் கொண்டு, பல பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என்பதால், கடந்த 2008-ம் ஆண்டு மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இதற்கென உடல்உறுப்பு தான மத்திய பதிவுத்துறை (Central Registry For Organ Donation) என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியது. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக இந்த அமைப்பில் மருத்துவமனைகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மொத்தம் 58 மருத்துவமனைகள் பதிவு செய்து, அனுமதி பெற்றுள்ளன. அதில் 6 மருத்துவமனைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகள் என்பது வருத்தமான தகவல். இதேபோல இதயம், கல்லீரல், கணையம் என்று எல்லா உறுப்புகளுக்கும் தனியார் மருத்துவமனைகளே அதிகளவில் அனுமதி பெற்றுள்ளன.

கெட்டிக்கார” தனியார் மருத்துவமனைகள்

அதுமட்டுமின்றி, தானம் பெற வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் பற்றிய விவரத்தையும் மத்திய பதிவுத்துறையில் பதிவு செய்யும் பணியிலும், அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுகின்றன. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழைக்குக் கிடைக்காமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணக்கார நோயாளிக்குக் கிடைக்கும் சூழல் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு வரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டும் உடல் உறுப்பு தானம் மூலம் 75 சிறுநீரகங்கள் கிடைத்தன. அதில் 13 சிறுநீரகங்களை மட்டும் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பயன்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், மீதியுள்ள 62 சிறுநீரகங்களை தனியார் மருத்துவமனைக்கு பகிர்ந்தளித்துள்ளது. அதேநேரத்தில், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ கடந்தாண்டு வரை தானமாக பெற்ற சிறுநீரகங்களில் 120ஐ தங்கள் நோயாளிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, 55ஐ மட்டும் மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. அந்த சிறுநீரகங்களும் கூட மற்ற தனியார் மருத்துவமனை நோயாளிகளைத் தான் சென்றடைந்துள்ளதாகத் தெரிகிறது.

வீணடிக்கப்படும் உடல் உறுப்புகள்

இதுபற்றிய தகவல்களை ஆதாரப்பூர்வமாக திரட்டியுள்ள சமநீதி (ஈக்வல் ரைட்) அமைப்பின் செயல் இயக்குநர் சி.ஆனந்தராஜ் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறார். “ஏழைகளின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், உடல்தானம் விஷயத்திலும் மோசமாகவே உள்ளது. உதாரணமாக கடந்த 7.11.13 அன்று நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஆழ்வார்(39), 8.12.13 அன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜான்(38), 1.1.14 அன்று சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த வைத்தியநாதன் ஆகியோரது உடல்கள் தானமாக பெறாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

தமிழகத்தில் கடந்தாண்டு மட்டும் 16,175 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதில் மூளைச்சாவால் இறந்தவர்களின் உடல்களும் இவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில், ஏழைகள் பலர் உறுப்புகள் கிடைக்காமல் உயிர் இழக்கும் சூழல் தொடர்கிறது. இவர்களின் தேவை குறித்து, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் சென்னையில் உள்ள உடல் உறுப்பு தானம் மத்திய பதிவுத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்துவதில்லை.

ரூ.100 கோடிக்கு வர்த்தகம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வந்த கிட்னிகள், தனியார் மருத்துவமனைக்குச் சென்றதற்கு இதுதான் காரணம். தனியார் மருத்துவமனைகள், தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை வைத்து லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 750 சிறுநீரகங்கள் தானமாக கிடைத்துள்ளன. அதில் 600-க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளன.

இதில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.

அரசு என்ன சொல்கிறது?

இந்தப் பிரச்னை பற்றி உடல்உறுப்பு தான மத்திய பதிவுத்துறை ஒருங்கிணைப்பாளரும், சென்னை அரசு மருத்துவமனை மருத்துவருமான டாக்டர் அமலோற்பவநாதனிடம் கேட்டபோது, “இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இரண்டு அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்கின்றன. அதனால், தான் தனியார் அதிகம் பயன்பெற்றது போன்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் கிடைக்கிறபோது, உறுப்புகளை வழங்க அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தான் முன்னுரிமை தரப்படும். பின்னர் தான் பதிவு செய்துள்ள பயனாளிகள் பட்டியலுக்கு தரப்படும். இதில் சுழற்சி முறை கடைபிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் உடல் தானம் பெற முடியாத சூழல் இருப்பது உண்மை தான். அதற்குரிய வசதிகள், கூடுதல் மருத்துவர்கள் இல்லாதது தான் காரணம். மேலும் கேள்விகள் இருந்தால், மெயில் அனுப்புங்கள். போனில் பதில் சொல்ல முடியாது” என்றார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு!

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று சி.ஆனந்தராஜிடம் கேட்டபோது, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் - 1994 பிரிவு 3(6)ன் படி, இறந்தவர் மூளைச்சாவால் தான் இறந்துள்ளார் என்பதை நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு உறுதி செய்து சான்றிதழ் அளித்த பின்னரே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இதற்கான குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல, தானமாக கிடைக்கும் உறுப்புகள் ஏழைகளுக்கு அதிகளவில் கிடைக்கும் வகையில், உறுப்பு தேவையுள்ள நோயாளிகள் பட்டியலை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உறுப்பு தேவைக்காக பதிவு செய்துள்ள நோயாளிகளின் விவரம், மருத்துவமனை பெயர், சீனியாரிட்டி உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். இந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும். இதுவரையில் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லக் காரணமாக இருந்த அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். இனிமேலாவது எல்லாம் சரியாக நடைபெறுவதற்குத் தேவையான புதிய விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்” என்றார்.

2500 கி.மீ. பறந்த கிட்னி!

மதுரை தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று, 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கொல்கத்தா தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயல் இழந்ததால் உயிருக்குப் போராடிய நோயாளிகள் பலர் இருந்தும் அது அவர்களைச் சென்றடையவில்லை. தமிழக மருத்துவ வரலாற்றில் மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் ஒன்று கூட, அதே நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஏழை நோயாளிகளுக்குக் கிடைக்கவில்லை என்பது மிக வேதனையான விஷயம்!

- தி இந்து