> குருத்து: August 2023

August 31, 2023

Home for Rent (2023) தாய்லாந்து திகில் படம்


கணவன், மனைவி, பள்ளி செல்லும் மகள் என அமைதியாக வாழ்ந்துவருகிறது அந்த குடும்பம். அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலங்கோலப்படுத்திவிட்டு, அந்த ஆள் காணாமல் போய்விடுகிறான்.


வீட்டுத்தரகர் “உங்க குடும்பம் சின்ன குடும்பம். உங்களுக்கு இந்த வீடு போதுமானது. உங்க பொண்ணு பக்கத்தில் தான் படிக்கிறாள். இப்பொழுது நீங்கள் இருக்கிற அந்த பங்களா நல்ல வாடகைக்கு போகும். நல்ல ஆளா நான் பிடிச்சிட்டு வர்றேன்” என சொல்கிறார்.

அவர்களுக்கும் அது சரி தான் என வீடு மாறிக்கொள்கிறார்கள். புதிய வீட்டில், ஒரு ரிட்டையர்டு டாக்டர், அவருடைய உதவியாளர் என குடிவருகிறார்கள்.

சில நாட்களுக்கு பிறகு, பக்கத்து வீட்டில் கூடியிருக்கும் ஒரு அம்மா “டாக்டரம்மா வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறது. இரவானால் மந்திரம் ஜெபிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆயிரக்கணக்கான காக்கைகள் வீட்டுக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஏதோ பில்லி சூனிய கும்பல் போல தெரிகிறது. என்னவென்று பார்” என போனில் தெரிவித்து பீதியை கிளப்புகிறார்.

குடியிருக்கும் தன் வீட்டிலும் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. தன் கணவர் நடவடிக்கைகளும் மர்மமாக இருக்கின்றன. ஏதோ ஒரு சிவப்பு புத்தகத்தைப் படிக்கிறார். ஜபிக்கிறார். பூட்டி வைத்துகொள்கிறார். எடுத்துப் பார்த்தால், எதுவும் எழுதப்படாதவெள்ளைத் தாள்களாக இருக்கின்றன.

நம்மைச் சுற்றி விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என பதறுகிறாள்.

அவள் பயந்தது போலவே, சில நிகழ்வுகள் நடக்கின்றன. அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதை கொஞ்சம் பயங்காட்டி சொல்லியிருக்கிறார்கள்.
***

வழக்கமான அவ்வப்பொழுது வந்து பயமுறுத்துகிற பேய் படம் இல்லை. கொஞ்சம் கதை. கொஞ்சம் சென்டிமெண்ட். கொஞ்சம் பேய். கொஞ்சம் திகில் என எல்லாமும் கலந்தப்படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், செமத்தியாக வந்திருக்கவேண்டிய படம். கோட்டை விட்டிருக்கிறார்கள் என்று தான் சொல்வேன். ஆனால் இப்பொழுதும் பார்க்க கூடிய படமாக வந்திருப்பது ப்ளஸ்.

அந்த குழந்தையும், அம்மாவும் முக்கிய பாத்திரங்கள். நன்றாக செய்திருக்கிறார்கள். மற்றவர்களும் நன்றாக ஒத்துழைத்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி பேய்படங்களைப் பற்றி விளம்பரப்படுத்தும் பொழுதெல்லாம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என விளம்பரப்படுத்துகிறார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

நெட் பிளிக்சில் இருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் பார்த்தேன். திகில் பட விரும்பிகள் பாருங்கள். பெரிய எதிர்பார்ப்போடு பார்க்காதீர்கள். பிறகு என்னைத் திட்டாதீர்கள்.

August 30, 2023

சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு! பயப்படுறியா குமாரு!


வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 200 குறைத்து அறிவித்திருக்கிறார்கள். ரூ. 400 இருந்த சிலிண்டர் விலையை கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ. 850 வரை மெல்ல மெல்ல ஏற்றி... ரூ. 1250க்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.



வீடுகளில் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்துகிற சிலிண்டர் விலை ஏற்றம் என்பது அநியாயமானது. எல்லா வர்க்கத்தினருக்கும் ஒரே விலை என்பது இன்னும் அநியாயம். சமைப்பதற்கான எரிபொருள்களிலேயே ஆரோக்கியமான எரிபொருள் கேஸ் தான். மற்ற எரிபொருட்கள் பயன்படுத்துவதால், ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் புகை போன்ற பிரச்சனைகளில் நோய்வாய்ப்பட்டு ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள் என உலக சுதாகார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.


அப்படிப்பட்ட கேஸ் விலையை தான் இவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே போய், மக்களின் உயிர்களை பறிக்கிறார்கள். இப்பொழுது தேர்தல் நெருங்குவதால், ரூ. 200 குறைத்து அறிவித்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வாக்கு கேட்டு தெருவிற்கு வரும் பொழுது, மக்கள் சிலிண்டரை வாசலில் வைத்து கேள்வி கேட்கவேண்டும்.

August 27, 2023

The Himalayas (2015)


உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இமயமலையில் ஒரு சாகச பயணம்

”மலையேற்றத்தின் பொழுது, ஒரு புதிய ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 7000 மீட்டர்களைத் தாண்டும் பொழுது, வாழ்க்கையை வாழ கற்றுகொள்ள முடியும். அதுவே 8000 மீட்டர்களை தாண்டும் பொழுது, வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். அதைத் தாண்டி பயணிக்கும் பொழுது.. உங்களை உணர்வீர்கள். நீங்கள் வாழ்வில் பயன்படுத்துகிற அத்தனை முகமூடிகளும் கழன்றுவிழும்.”

****

இமயமலையில் கடுங்குளிரில் ஒரு கேப்டன் தலைமையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். பயணிகளின் உடைமைகளை எடுத்து வந்தவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார். உடலை விட்டுவிட்டு கிளம்பிவாருங்கள் என சொன்னால், ”அதெப்படி நண்பனை விட்டுவிட்டு வருவது!” என அடம்பிடிக்கிறார்கள். ஒருவழியாக கீழே வந்த பிறகு, கேப்டன் அந்த இருவரையும் திட்டுகிறார் “தலைவன் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்கவேண்டும். மற்றவர்களின் உயிருக்கும் சிக்கலாக்க கூடாது. இனி மேல் இமயமலை பக்கம் வந்தால்… தொலைத்துவிடுவேன்” என எச்சரித்து அனுப்புகிறார்.

சில ஆண்டுகள் கழித்து திட்டு வாங்கிய அந்த இருவர் மீண்டும் மலையேறுவதற்காக வந்து நிற்கிறார்கள். முதலில் மறுக்கும் கேப்டன், மன்னிப்பு கேட்ட பிறகு அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இந்தமுறை சொன்னதை கேட்டு நடக்கிறார்கள். பிரியத்துக்குரியவர்களாகிவிடுகிறார்கள்.

ஆண்டுகள் கடக்கின்றன. கேட்பனுக்கு காலில் ஒரு சிக்கல் வந்துவிடுகிறது. இனி மலையேறக்கூடாது. மீறினால் காலை மறந்துவிடவேண்டியது தான் என மருத்துவர் எச்சரிக்கிறார். இப்பொழுது திட்டு வாங்கிய இரண்டு ஜூனியர்கள் இப்பொழுது மலையேறுவதில் திறன் மிக்கவர்களாகிவிடுகிறார்கள். ”தென்கொரியாவில் மலையேற்றத்தில் இப்பொழுது நீ தான் முதலில் இருக்கிறாய்” என கேப்டனே பாராட்டுகிறார்.

ஒரு குழுவை வழிநடத்தி அழைத்து செல்லும் பொழுது… சீதோஷ்ண நிலை மாறி ஒரு விபத்து ஏற்படுகிறது. அவரின் ஜூனியர்கள் இருவர் உட்பட, மூவர் மாட்டிக்கொள்கிறார்கள். மைனஸ் 40 டிகிரி. உறைய வைக்கும் பனி. இப்பொழுது காப்பாற்ற போனால், அது ஒரு தற்கொலைக்கான முயற்சி தான் என போகாமல் விடுகிறார்கள்.


தனது ஜூனியர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்ற செய்தி அறிந்ததும், கேப்டன் துடித்துப்போகிறார். நாட்கள் கடக்கின்றன. அவர்களுடைய உடல்களையாவது கண்டறிந்து கீழே கொண்டு வரலாம் என தனது பழைய குழு ஆட்களை தேடிச் செல்கிறார். முதலில் வேறு வேறு காரணங்கள் சொல்லி மறுப்பவர்கள் பிறகு ஒன்றிணைகிறார்கள்.

இந்த குழு இறந்து போன அவர்களின் உடல்களை கொண்டுவந்தார்களா? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

இமயமலையில் பயணம், குறிப்பாக எவரெஸ்ட்டை தொடுவதற்கான பயணம் குறித்த படங்களில் தென்கொரியாவிலிருந்து இந்தப் படம் வந்திருக்கிறது.

இமயமலையில் ஏறுவது என்பது பெரிய போராட்டமானது. பல லட்சம் செலவு வைக்கக்கூடியது. மைனஸ் 30, 40 டிகிரி என்பது உறைய வைக்கும் பனி. எத்தனை லேயர்கள் நாம் கவசமாக உடையணிந்திருந்தாலும், அதையும் மீறி உடலுக்குள் துளைக்க கூடியது. உயிர் போகும் அளவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தக்கூடியது. கொஞ்சம் சீதேஷ்ண நிலை மாறினால், தவறி விழுந்தால், உயிர் போகும் சாத்தியமும் கூடியது. எத்தனை பாதுகாப்பாய் இருந்தாலும், ஆண்டுக்கு சிலர் இறந்துகொண்டு தான் இறக்கிறார்கள். இத்தனையையும் மீறி மனிதர்கள் மீண்டும் மீண்டும் பனி மலை மலையேறுவதற்கு எது தூண்டுகிறது?


அந்த கேப்டனிடம் ஊடககாரர்கள் கேள்வி கேட்பார்கள். இத்தனை முறை இமயமலையில் பயணித்திருக்கிறீர்கள். என்ன உணர்கிறீர்கள்?

”மலையேற்றத்தின் பொழுது, ஒரு புதிய ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 7000 மீட்டர்களைத் தாண்டும் பொழுது, வாழ்க்கையை வாழ கற்றுகொள்ள முடியும். அதுவே 8000 மீட்டர்களை தாண்டும் பொழுது, வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். அதைத் தாண்டி பயணிக்கும் பொழுது.. உங்களை உணர்வீர்கள். நீங்கள் வாழ்வில் பயன்படுத்துகிற அத்தனை முகமூடிகளும் கழன்றுவிழும்.” என்பார்.

தனது சிஷ்யர்கள் இரண்டு பேர் மாட்டிக்கொண்டார்கள். அவர்களின் உடல்களையாவது கீழே கொண்டுவந்து அடக்கம் செய்யவேண்டும் என்ற போராட்டம் உணர்ச்சிகரமாக காட்டியிருக்கிறார்கள்.

பெரிய போராட்டத்திற்கு பிறகு, தனது சிஷ்யன் இருக்கும் இடத்திற்கு போய் உடலைப் பார்த்து. “நான் ரெம்ப தாமதமாக வந்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள் சகோதரா!” என அழுது மன்னிப்பு கேட்பார். ஆனால் உடலை கொண்டு வருவது அத்தனை சாத்தியப்படவில்லை. அவருடைய மனைவி போனில் “அவருக்கு மிகவும் பிடித்த இமயமலையின் ஒரு பகுதியாக அவரும் இருந்துவிட்டு போகட்டும். நீங்கள் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என அழுதுகொண்டே சொல்வார்.

படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உள்ள படம் என்பதால், அதற்குரிய தன்மைகளுடன் தான் (Slow drama) இருக்கிறது. கொரியக்காரர்கள் உணர்வுப்பூர்வமாக படம் எடுத்துவிடுகிறார்கள். அது படத்தை காப்பாற்றிவிடுகிறது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். இணையத்தில் எங்கும் இல்லை என just watch தளம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

August 22, 2023

மத்தகம் – வலைத்தொடர் ஒரு நல்ல திரில்லர்


“போலீசு கையிலும் துப்பாக்கி. நம்ம கையிலும் துப்பாக்கி. நாம் டிரிக்கரை அழுத்தினா போதும். சுட்டுவிடலாம். அவர்கள் சுடுவதற்கான ஆணை வரும் வரை காத்திருக்கவேண்டும்”

*****

நாயகன் போலீசில் உயரதிகாரி. இரவில் வழக்கமான சோதனையின் பொழுது, ஒரு கிரிமினல் மாட்டுகிறான். அவனை விசாரிக்கும் பொழுது ஒரு பெரிய சதித்திட்டம் உருவாகப் போகிறது என தெரிய வருகிறது.

சென்னையில் ஓரிடத்தில் தொழிற்முறை குற்றவாளிகளை எல்லாம் ஒரு விருந்துக்கு வரச்சொல்லி ஏற்பாடு நடக்கிறது. அது ஒரு வழக்கமான விருந்து அல்ல! ஒரு பெரிய குற்ற செயல் அரங்கேறுவதற்கான முன்னேற்பாடு என தெரிய வருகிறது. இதை முறியடிக்க நாயகன் அதற்கான விசாரணைகளை, சில முன்னேற்பாடுகளை செய்கிறார்.

மறுபுறம் படாளம் சேகர் என ஒரு தேர்ந்த கிரிமினல். சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் செத்துப்போன ஆள். இப்பொழுது இந்த விருந்துக்கான ஏற்பாட்டை செய்கிற ஆளே அவன் தான். விருந்துக்கு கிரிமினல்களை அழைக்கிறான். வர மறுப்பவர்களை மிரட்டி வரவழைக்கிறான்.

ஒரு பக்கம் நாயகன் அவர்களின் திட்டம் என்ன? யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என அறிய முன்னேறுகிறான். இன்னொரு பக்கம் வில்லன் விருந்து வெற்றிபெற்றே தீரவேண்டும் என ஒவ்வொரு ஏற்பாட்டையும் கவனமாக செய்கிறான்.

இந்த முதல் வலைத்தொடரில் இந்த எலியும் பூனை விளையாட்டை சுவாரசியமாக துவங்கியிருக்கிறார்கள். இனி என்னாக போகிறது என்பதை அடுத்தடுத்த சீசனில் பார்க்க போகிறோம்.
****


ஒரு பக்கம் போலீஸ். இன்னொரு பக்கம் குற்றக்கும்பல். இரண்டும் எதிரெதிர் என கட்டமைக்கிறார்கள். அதில் ஆளும் கட்சியைச் சார்ந்த அந்த மந்திரியை நம். 2 என அழைக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டு, எதிரெதிர் என சொல்லக்கூடிய இரண்டு ஆட்களையுமே தன் அதிகாரத்தை தக்கவைக்க அவர் தான் இயக்குகிறார் என்பது நாம் கவனமாக கவனித்தக்க விசயம்.

இந்த எலி பூனை விளையாட்டை எத்தனை சுவாரசியப்படுத்துகிறார்கள் என்பது தான் இந்த வலைத்தொடரின் சுவாரசியம். “கிடாரி” இயக்கி கவனிக்க வைத்தவர் இவர்.… பிறகு ஜெயலலிதாவின் வாழ்வு என ”குயின்” இயக்கிய பிரசாத் முருகேசன் தான் இதையும் இயக்கியிருக்கிறார்.

யார் இயக்கியது என கவனிக்காமல் பத்து நிமிடம் பார்ப்போம். பிறகு மெல்ல பார்க்கலாம் என பார்க்க துவங்கினேன். எல்லா அத்தியாயங்களையும் மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு தான் வேறு வேலைக்கே போக முடிந்தது. ”மத்தகம்” என்றால்… யானையின் நெற்றிப்பொட்டு என்கிறார்கள். நல்ல வார்த்தை அறிமுகம். அதில் என்ன சிறப்பு என தேடவேண்டும். படத்தில் நிறைய இடங்களில் இங்கிலீஷ். குறிப்பாக உயர் அதிகாரியிடத்தில்! இயல்பில் அப்படி பேசினாலும், தமிழ் பேச வைத்திருக்கலாம்.

நாயகனாக அதர்வா. கொடுத்த பாத்திரத்தை சரியாக செய்திருந்தாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமாக செய்திருக்கலாம். வில்லனாக குட் நைட் மணிகண்டன். அவரைப் பற்றிய முந்தைய படங்கள் நினைவுக்கு வந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாத்திரமாக இணைந்துவிட்டார். வாழ்த்துகள். நிறைய புதிய பாத்திரங்கள் ஆங்காங்கே வந்தாலும் கூட நம் நினைவில் நிற்பது ஆச்சர்யம். சில படங்களில் தான் அப்படி அமையும். இதில் அமைந்திருக்கிறது.

முதல் சீசன் ஐந்து அத்தியாயங்களோடு துவங்கியிருக்கிறது. இனி அடுத்தடுத்த சீசன் இதே மாதிரி சுவாரசியமாக இருக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

August 20, 2023

ஜெயிலர்


முன்னாள் ஜெயிலர். இப்பொழுது ஓய்வு பெற்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.   மகன் போலீசில் உயரதிகாரியாக இருக்கிறார். ஒரு பெரிய சிலை கடத்தல் மாபியா கும்பலை துரத்திக்கொண்டு இருக்கிறார். திடீரென ஒருநாள் காணாமல் போகிறார்.

 

அவரைத் தேடும் முயற்சியில் ஜெயிலர் இறங்க… போன் செய்து ”மொத்த குடும்பத்தையும் காலி செய்கிறேன்” என  வில்லன் மிரட்டுகிறான்.   தனது செல்வாக்கை பயன்படுத்தி, வில்லன் கும்பலை எப்படி எதிர்கொண்டார் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

ஓய்வு பெற்ற ஜெயிலர். அவருடைய செல்வாக்கு என இந்தப் படம் அடிப்படையே பலவீனமாக இருக்கிறது.    அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். இப்பொழுது விழுந்து விழுந்து மரியாதை செய்பவர்கள் அதிகாரத்தை இறங்கிவிட்டால், ஒரு பயலும் தன்னை மதிக்கமாட்டார்கள் என மற்றவர்களை விட அவர்களுக்கு நன்றாக உணர்ந்து இருப்பார்கள். 

 


அதனால் தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூட அதிகாரத்தை விட்டு இறங்கினால் மதிக்கமாட்டார்கள் என  கவர்னருக்கு அடிபோடுகிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக வேலையில் இருக்கும் பொழுதே அதற்கான அடித்தள வேலைகளை கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.

 

இராயப்பேட்டை மருத்துவமனையில் ம.க.இ.கவைச் சேர்ந்த ஒரு தோழர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க தினமும் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து போய்க்கொண்டிருப்பார்கள்.  அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஒருவரை பார்க்க அபூர்வமாக ஆள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.  இது தான் யதார்த்த நிலை.

 

படத்தில் ஓவர் பில்டப். எதார்த்தம் தெரிவதால், எல்லாமே நமக்கு அபத்தமாக படுகிறது.  அவர் சர்வ சாதாரணமாக கொலைகளை செய்கிறார். பெரிய பெரிய வேலைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்கிறார். தாங்க முடியவில்லை.

 

ஒன்று அதிகாரத்தில் இருப்பது போல காண்பித்திருக்கலாம். எல்லோரும் ஒத்துழைப்பார்கள் என புரிந்துகொள்ளலாம். இல்லையெனில், பெரிய பணக்காரராக காண்பித்து, தனது செல்வாக்கால் நகர்த்துகிறார் என்றாவது சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பார்வையாளர்களால் புரிந்துகொள்ளமுடியும்.  ஒரு ரிட்டையர்டு ஜெயிலர் ஒரு சாதாரண வீட்டில் இருந்துகொண்டு  இவ்வளவு ஆட்டம் போடுவதெல்லாம் தாங்க முடியவில்லை.

 

ஜெயிலருக்கான புரமோசன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. மொத்த இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் .பியின் முதல்வர் காலில் சாஷ்டாங்கமாக ரஜினி விழுந்தார் என செய்திகள் வருகின்றன.

இந்த பொழப்புக்கு நிம்மதியாக வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடலாம். அதிகாரம், புகழ், பண போதை யாரை விட்டது? ரஜினியை விடுவதற்கு!

August 19, 2023

Farzi – இந்தி வலைத்தொடர்

 


”ஒருவர் உயரத்தில் இருந்து விழும் போது முதலில் பறப்பது போல் தோன்றும்”

- படத்தில் இருந்து....!

நாயகனின் தாத்தா “Kranti” என்னும் புரட்சிகர இதழ் ஒன்றை சொந்தமாக நடத்திவருகிறார். ஆனால் பெரும்கடனில் இருக்கிறது. இன்றைக்கு மூடுவதா, நாளைக்கு மூடுவதா என நொண்டிக்கொண்டிருக்கிறது.

தாத்தா அருமையான ஓவியர். நாயகனுக்கு சிறு வயதில் இருந்து கற்பிக்கிறார். அவன் எந்தவொரு ஓவியத்தையும் அச்சு பிசகாமல், வரையக் கூடிய ஆளாக இருக்கிறான். ஓவியம் வரைந்து குறைவான வருமானத்தில் வாழ்க்கையை கடத்துகிறான்.

அவன் தன் தாத்தா போல அவனில்லை. அவனின் ஓவியத் திறன், அச்சுத் தொழிலில் கில்லாடியான நண்பன். தாத்தாவின் அச்சகம். கள்ள நோட்டு அடித்தால் என்ன என யோசிக்க துவங்குகிறான். ஒத்த சிந்தனை உள்ள நண்பனும் ஒத்துக்கொள்கிறான். தாத்தாவிடம் வேலை செய்யும் ஒரு முக்கிய நபரையும் உள்ளிழுத்து, நோட்டை அடிக்க துவங்குகிறார்கள். முதலில் கொஞ்சம் சொதப்பினாலும், தேர்ந்த நோட்டை அடிக்க துவங்கி, உள்ளூரில் கைமாற்றிவிடுகிறார்கள்.

இது புறம் நடக்க, உலக அளவில் இன்னொரு பெரிய கள்ள நோட்டு மாபியா கும்பல் பெரிய வலைப்பின்னலுடன் இயங்கிவருகிறது. இந்திய அதிகாரிகள் அவனைப் பிடிக்க பல வழிகளில் முயன்று வருகிறார்கள்.


ஒரு கட்டத்தில் நாயகனும், மாபியா கும்பலும் நோட்டு அடிப்பதில் ஒன்றிணைகிறார்கள். அச்சு அசலாக 2000 நோட்டுகளாக 12000 கோடி அடித்து இந்தியாவிற்குள் சாதுரியமாக கொண்டு வருகிறார்கள்.

இந்த பெரும் பணத்தை இந்திய சந்தையில் இறக்குவதற்குள் அதிகாரிகள் அவர்களைப் பிடித்தார்களா என்பதை முழு நீளக் கதையில் விவரித்து இருக்கிறார்கள்.

தாத்தா 70 காலத்தை சேர்ந்த லட்சியவாதி. சமூகத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியில், அவரும் அவர் வயதில் உள்ள ஊழியர்களும் வறுமையில் கூட உற்சாகமாய் வேலை செய்கிறார்கள். ஆனால் நாயகனான பேரனோ எல்லா விழுமியங்களை தொலைத்து நிற்கிற ஒரு இளைஞன். கிராந்தியின் நிழலில் வளர்ந்தாலும், அதன் சித்தாந்தம் தன் மேல் விழாமல் வளர்கிறான். என்ன செய்தாவது குறுக்கு வழிகளில் முன்னேறவேண்டும் என துடிக்கிறான். படத்தில் இவன் புத்தி தான் வில்லன். ஆனால் கதையின் நாயகனாக வேறு இருப்பதால், கதையை கொண்டு செலுத்துவதில் கொஞ்சம் ஆங்காங்கே திணறித்தான் போயிருக்கிறார்கள்.

அந்த அரசியல்வாதி முக்கியமான ஆள். நிஜ அரசியல்வாதியை போலவே உருவாக்கியிருக்கிறார்கள். தேர்தல் தான் முக்கியம். தன் புகழ், தனக்கான இடம் தான் முக்கியம். நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன என பளிச்சென காட்டுகிறார்.

அந்த அதிகாரியும் சுத்தமான ஆளில்லை. தனக்கான ஒரு குழு. அதிகாரம். அதற்காக அரசியல்வாதியின் பலவீனத்தை சொல்லி சொல்லியே, இதைச் செய்வதால் அரசியல்வாதிக்கு என்ன பலன் என சொல்லி சொல்லியே தனக்கான வேலையை செய்கிறார்.

”ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திருடன் இருக்கிறான், வாய்ப்புக்காக மட்டுமே காத்திருக்கிறான்” என படத்தில் வசனம் வருகிறது. இந்தச் சமூகத்தை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம். எல்லா திருடர்களும் இப்படி தங்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்.


Farzi என்றால் போலி என அர்த்தம். கள்ள நோட்டு மட்டுமா போலி. பிரதமர் போலி. கவர்னர் போலி. இன்னபிற அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எங்கும் போலி மயமாய் தான் பரந்து விரிந்து இருக்கிறார்கள். இவங்க எங்க கள்ள நோட்டு கும்பலை பிடிச்சு, நாட்டைக் காப்பத்தறது என பார்க்கும் நமக்கு தான் ஆயாசமாக இருக்கிறது. இதையும் மீறி இந்த எலி, பூனை விளையாட்டை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.


இந்தியாவில் கள்ள நோட்டு என்பது ஒரு பெரிய பிரச்சனை. இன்றைக்கு கூட ஒரு வழக்கறிஞர் 50 லட்சம் அடித்து, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என இருவரும் மாட்டியிருக்கிறார்கள்.

இந்தியாவில் கள்ள நோட்டு எவ்வளவு புழங்குகிறது என தகவல்களை தேடிப்பார்த்தால், ஆர்.பி.ஐ. சொல்லும் அதிகாரப்பூர்வ தகவலே மிக அதிகமாக இருக்கிறது. உண்மையில் எவ்வளவு சுற்றும் என யோசித்தாலே தலைச் சுற்றுகிறது. இப்பொழுது உள்ள பலவீனமான சிஸ்டத்தை வைத்துக்கொண்டு எப்படி பிடிக்க போகிறார்கள் என்பது கவலை தரும் விசயம்.

“பேமிலி மேன்” இயக்குநர்களான Raj & DK தான் இந்த சீரிஸையும் இயக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிராப்ட் நன்றாக கைகூடி வந்திருக்கிறது. இதிலும் அவர்களின் வளர்ச்சி நன்றாக தெரிகிறது.

கதையின் நாயகர்களின் குடும்பத்தை பொதுவாக நமது படங்களில் குழப்பம் செய்வதில்லை. விதிவிலக்காக சில படங்கள் இருக்கலாம். ஆனால் இவர்களின் நாயகர்கள் வீட்டில் குழப்பம் இருப்பதை இயல்பாக காட்டியிருக்கிறார்கள். பேமிலிமேனில் கொஞ்சம் குழப்பமாய் காண்பித்தவர்கள், இந்த சீரிசில் கொஞ்சம் வளர்ந்து, அதிகாரியும் அவன் மனைவியும் விவாகரத்து செய்கிறார்கள். வளர்ச்சி தான். 🙂

மற்றபடி, ”நாயகனாக” ஷாகித் கபூர், அதிகாரியாக நம்ம விஜய் சேதுபதி, பெரிய வில்லனாக கே.கே. மேனன், ஆர்.பி. ஐ அதிகாரியாக ராசி கண்ணா என எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வெப் சீரிஸ்க்கு இன்னும் சென்சார் வரவில்லை என நன்றாக தெரிகிறது. ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் சரளமாய் புழங்குகிறது.

அமேசான் பிரைமில், ஒரு சீசன். எட்டு அத்தியாயங்கள் என மொத்தம் ஆறு மணி நேரம் என விரிகிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த சீசன் வெற்றியடைந்துவிட்டதால், மீண்டும் இன்னொரு சீசனோடு இவர்கள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது.

நெய்மர் – மலையாளம் – (2023)


கல்லூரி செல்லும் பையன் அவன். ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளோடு பழக வாய்ப்பு தேடும் பொழுது “அவள் நாய் வளர்க்கிறாள். நீயும் நாய் வளர்த்தால், அவளோடு பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என நண்பன் யோசனை சொல்கிறான்.


அந்த பையனின் அப்பா முடிவெட்டும் தொழிலாளி. அவரிடம் வெளிநாட்டு நாய் வாங்க பணம் எல்லாம் கிடையாது. அம்மாவுக்கு தெரிந்த ஒருவர் மூலம் ஒரு நாட்டு நாயை வாங்கி வந்து வளர்க்கிறான்.

தான் விரும்பும் பெண்ணுடன் பழக வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ, நாயோடு நெருக்கமாகிறான். ஆனால் அந்த நாய் ஊருக்குள் சின்ன சின்ன பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது.

இதனால் கடுப்பான பையனின் அப்பா, நாயை இரவோடு இரவாக மாநிலம் விட்டு மாநிலம் கடத்துகிறார்.

நாய் நினைப்பாகவே இருக்கும் அவன், நாய் எந்த ஊரில் இருக்கிறது என தெரிந்துகொண்டு, மீட்க தன் நண்பனுடன் பயணிக்கிறான்.

இறுதியில் நாயை கண்டுபிடித்தனா? என்பதை சுவாரசியமான பின்பகுதியில் சொல்லியிருக்கிறார்கள்.
***


நாயை வைத்து சாகசம் இல்லாமல், இயல்பாக, உணர்வுப்பூர்வமாக சொன்ன கதைகள் மிகவும் குறைவு. விலங்குகளை வைத்து வித்தை காட்டிய படங்கள் தமிழில் அதிகம். சமீபத்தில் சார்லி 777 என ஒரு கன்னடப்படம். இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் எடுத்திருந்தார்கள். இந்தப் படம் உணர்வுப்பூர்வமாகவும், கொஞ்சம் வித்தைக் காட்டவும் வைத்து பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள்.

நாய் என்பது மனிதன் வேட்டையாட ஆரம்பித்த காலம் தொட்டு, காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக வளர்க்க துவங்கி, வேட்டைக்கும் பயன்படுத்த துவங்கிவிட்டான். மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள உறவு நீண்ட நெடியது. இன்றைக்கும் வீடுகளில் நாய்கள் வீட்டை காவல் காப்பதில் முக்கியம் வகிக்கின்றன.

ஆனால், சம கால சூழ்நிலையில் நாய் வளர்ப்பது என்பது தனது அந்தஸ்தை காட்டுகிற விசயமாக தான் இருக்கிறது. ஆகையால், தங்களது அந்தஸ்துக்கு ஏற்ப விதவிதமான வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள். ஒரு விலங்கு அந்தந்த நாட்டு சூழ்நிலையோடு வளர்வது தான் சரியானது. இங்கு தெருவில் இருப்பதாலேயே நாட்டு நாய்கள் கைவிடப்பட்ட நாய்களாக தான் இருக்கின்றன. இந்த நாட்டு நாய்களும் வெளிநாட்டு நாய்களைப் போலவே அறிவுள்ளவை. ஆற்றலுடையவை. இவைகளை நாம் வளர்த்து பாதுகாக்கவேண்டும் என நாய்கள் குறித்து ஒருவர் ஒரு பேட்டியில் கவலையுடன் தெரிவித்த விசயம் இந்தப் படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது.

நெய்மர் – பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர். படத்தில் நாய் வளர்ப்பவர் தான் வளர்க்கிற எல்லா நாய்களுக்கும் விளையாட்டு வீரர்களின் பெயர்களை வைத்து அழைக்கிறார். அப்படி இந்த நாய்க்கும் நெய்மர் என பெயர் வைக்கிறார்.

கதை இப்பொழுது நடப்பதாக காண்பித்தாலும்… அந்த பையனின் மனநிலை, அணுகுமுறை எல்லாம் 90 கிட்ஸ் போல தான் நடந்துகொள்கிறான். இப்பொழுதுள்ள பையன்கள் எல்லாம் மிக தெளிவு. அதே போல அவங்க அப்பா அவனை அடித்து துவைக்கிறார். கல்லூரி செல்லும் பையன்களை எல்லாம் அப்பாக்கள் இப்பொழுதும் அடிக்கிறார்களா என்ன? அதே போல காதலிக்க துவங்கும் பொழுதே கல்யாணம் செய்யவேண்டும் என்றெல்லாம் வாய்விட்டு சொல்கிறான். இதெல்லாம் பழைய தலைமுறை பேச்சு.

முதல் பாதி கொஞ்சம் சுமாராக சென்றாலும், இரண்டாம் பாதி, நெய்மர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரசியப்படுத்துகின்றன. “நெய்மர்” நாய் தான் மொத்தப்படத்தையும் தனது துடிப்பான நடிப்பால் காப்பாற்றியிருக்கிறது. படத்தில் நடித்த மற்றவர்கள் அதற்கு துணை நின்றிருக்கிறார்கள்.

இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வசூல் பெற்ற படம். ஆகையால் தமிழ், தெலுங்கு என பிற மொழிகளிலும் டப் செய்து டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியிட்டிருக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

August 17, 2023

நாயக பிம்பம்!


ஒரு நிறுவனத்துக்கு வேலை விசயமாக போயிருந்தேன். அங்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளி மெட்ரோ நிலையம் வரைக்கும் பைக்கில் கொண்டு வந்துவிட்டார்.


அவருடைய குடும்பம் குறித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, அவருடைய ஒன்றரை வயது பையனின் பெயர் என கேட்ட பொழுது.. "யாஷ் ரவி" என்றார்.

தமிழ் பெயர்கள் வைத்திருக்கலாமே? என்றேன்.

எனக்கு இறையன்புவை பிடிக்கும். அந்த பெயரை வைக்கலாம் என்றால், பழைய பெயராக இருக்கிறது என என் துணைவியார் ஒத்துக்கொள்ளவில்லை என்றார்.

யாஸ் ரவிக்கு என்ன அர்த்தம்? எனக் கேட்டேன்.

எங்க அப்பா பெயர் இரவிச்சந்திரன். 60களில் தமிழ் படங்களின் நாயகனுடைய பெயர்.

எனக்கு பெயர் வைத்தப்பொழுது... ஆந்திராவில் புகழ்பெற்ற "சிரஞ்சீவி" என நடிகரின் பெயர் வைத்தார்.

இப்பொழுது என் மகனுக்கு... கன்னடத்தில் கே.ஜி.எப் நாயகனான "யாஷ்" பெயரை வைத்தேன். அப்பா நினைவாக ரவியையும் சேர்த்துக்கொண்டேன்.

இப்பொழுது புரிந்தது "யாஷ் ரவி". விளையாட்டாக கேட்டேன். அடுத்த குழந்தைக்கு கேரள நாயகனின் பெயரா? என்றேன்.

இந்தக் குழந்தைக்கு எனக்கு பிடித்த பெயரை வைத்துவிட்டதால், அடுத்த குழந்தைக்கு என் மனைவியார் தான் முடிவு செய்வார் என்றார். 

August 16, 2023

”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!


”அப்ரோச்” அமைப்பின் சார்பில் நடைபெற்ற இலவச ஹோமியோ சேவை மையத்தின் ஆண்டு விழா அழைப்பிதழை பகிர்ந்திருந்தார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் போகவேண்டும் என நினைப்பேன். அவர்கள் நடத்துகிற அதே நாளில் வேறு கூட்டங்களுக்கு போகவேண்டிய நெருக்கடியில் இருப்பேன். ஆனால் இன்று (15/08/2023) வாய்ப்பு கிடைத்தது. போய் கலந்துகொண்டேன்.

உள்ளே நுழைந்த பொழுது, கூட்டத்தை தலைமையேற்று தோழர் மணிவண்ணன் நடத்திக்கொண்டிருந்தார்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் ஜவஹர், தோழர் இராமசாமி மூலமாக ”அப்ரோச்” எனக்கு அறிமுகமானது. பாடி பிரிட்டனியா அருகே இலவச ஹோமியோ மையம் செயல்பட்ட பொழுது இரண்டொரு முறை போயிருக்கிறேன். பின்னாட்களில் ஒருமுறை அம்பத்தூர் ஓ.டியில் தோழர் ஜவஹர் சிறப்பு பங்கேற்பாளராக பேசிய பொழுது கலந்துகொண்டிருக்கிறேன். இப்பொழுது அம்பத்தூர் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் பழைய இ.எஸ்.ஐ சாலை என்னுமிடத்தில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தோழர் சத்யா அவர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஞாயிறுகளில் அவசர அவசியம் என்றால் ”அப்ரோச்” மருத்துவர்கள் தான் உதவி செய்கிறார்கள்.

மருத்துவம் வணிகமயமாகி, அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது, இத்தனை வருடங்களாக ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வது அசாத்தியமான செயல்பாடு. மருத்துவர்கள், ஹோமியோபதி கற்கும் மாணவர்கள், புரவலர்கள், அங்கு வேலை செய்யும் தன்னார்வலர்கள் பெரியவர்கள் துவங்கி சிறுவர், சிறுமிகள் வரை என அந்த அரங்கில் திரண்டிருந்த அத்தனை பேரும் அப்ரோச்சோடு அத்தனை நெருக்கமான உறவோடு இருக்கிறார்கள். அதனால் தான் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து இயங்குவது சாத்தியமாகியிருக்கிறது. அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

”அப்ரோச்”சில் இயங்கும் அனைவருக்கும் அதன் செயல்பாட்டாளர்கள் கைத்தறி துண்டுகள் அணிவித்து, புத்தகங்கள் பரிசாக தந்து உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.

”எண்களும் மருத்துவமும்” என்ற தலைப்பில் சீனிவாச இராமனுஜம் கொஞ்சம் அறிவியல் பூர்வமான விசயத்தை எளிய முறையில் விளக்கிப் பேசினார். என்னைப் போல பார்வையாளர்களை மனதில் வைத்து இப்படி மருத்துவம் சார்ந்த ஒரு தலைப்பில் வருடம் வருடம் பேச பேச்சாளர்களை பேச அழைக்கிறோம் என்றார் அதன் செயலர் தோழர் இராமசாமி. இதை தொடர்ந்துச் செய்யுங்கள் என கோருகிறேன்.

இறுதி சிறப்புரையாக ”அப்ரோச்” செயல்பாட்டாளர்களை பாராட்டியும் சமகால அரசியல் சூழல் எத்தனை சிக்கலாக இருக்கிறது என்பதையும் பேசி, மக்கள் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய காலக்கட்டம் என்பதை வலியுறுத்தி பேசினார் நெய்வேலி பாலு அவர்கள்.

இறுதியில் அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு பரிமாறப்பட்டது. தோழர்கள் மருத்துவர் சத்யாவிடமும், மோகனா, சமுலா அவர்களிடம் விடைபெற்று வந்தேன்.

தொடரட்டும் ”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!
தோழமையுடன்....

August 12, 2023

இன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த விளக்க கூட்டம் குறித்து!

 

அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,

 

வணக்கம்.  தலைவர் அவ்வப்பொழுது ஒரு தலைப்பில் பேசுங்கள் என சொல்லும் பொழுது, அது பெரிய வேலை.  ”அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டோம்” என நம்பிக்கை ஆழமாய் இருந்தது.

ஆனால் நம் தலைவர் தான் விடுவதில்லையே! மீண்டும் வலியுறுத்துகிற பொழுது,  பேசலாம் என முடிவுக்கு வந்தேன்.

அதை முதலில், இ.எஸ்.ஐ, பி.எப் லிருந்து துவங்குவோம் என சொன்ன பொழுது, தலைவரும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.


 

படிக்கத் துவங்கிவிட்டேன்.  வில்லியப்பன் சாரிடம் அவ்வப்பொழுது சந்தேகங்களை கலந்து பேசிக்கொண்டேன்.

பிபிடி குறித்த அறியாமையால், தட்டச்சு செய்து அதில் இடுவது தானே! என நானாக நினைத்துக்கொண்டேன்.  அந்த வேலையை செய்யும் பொழுது தான் அது எப்படிகவனத்துடனும், நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் புரிந்தது.  நேற்றும், நேற்றைக்கு முதல் நாள் இரவும் பிபிடிக்காக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

முதல் உரை என்பதால், கொஞ்சம் உள்ளுக்குள் மெல்லிய பதட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.  அந்த பதட்டம் மேலெழும்பி வந்துவிடகூடாது என்பதில் எனக்கு நானே மறைத்துக்கொண்டேன்.

முதல் உரையிலேயே தமிழிலும் தயாரிப்பது என்பதற்காக‌ கூடுதல் உழைப்பு தேவைப்பட்டது.  ஆனால் நம் தாய் தமிழுக்காகவும், அப்பொழுது தான் தமிழ் பேசும் பல தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சென்று சேரும் என நினைத்தேன்.  அதனால் அதில் உறுதியாக இருந்தேன்.

எப்பொழுதும் போல கூட்டத்திற்கு 10.25க்குள் உள்ளே நுழைந்த பொழுது, 15 பேருக்கும் மேல் இருந்தவர்களைப் பார்த்ததும், கொஞ்சம் ”பயம்” தான் வந்தது.


என் உரை வரி ஆலோசகர்களுக்கு கிடையாது. பி.எப்பை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கானது என்பதால், அவர்களை மனதில் வைத்து அவர்களுக்கு புரியும் விதத்தில் இருக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆகையால், செக்சன்களை, நிறைய புள்ளி விவரங்களை தவிர்க்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

 


ஒரு மணி நேரத்திற்குள் பேசுவோமா, தாண்டிப் போகுமா என்ற பயம் இருந்தது.  அவ்வப்பொழுது நேரம் பார்த்து கொஞ்சம் வேகப்படுத்தி சமாளித்தேன். அநேகமாக 1.25 மணி நேரம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன்.

ஒரு தலைப்பில் படித்து, கலந்து பேசி, சந்தேகங்களை களைந்து, பிபிடி தயாரித்து பேசும் பொழுது தான் ஒரு உரை எத்தனை கடினம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.   நிறைய தேடித்தேடி படித்ததால், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.  அதற்காக தான் தலைவர் இவ்வளவு வலியுறுத்துகிறார் என்கிற ரகசியத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது.


நமது உறுப்பினர்களில் பெரும்பாலும் வரி ஆலோசகர்கள் தான். ஆகையால் நிறைய பேர் வரமாட்டார்கள் அல்லவா! என எனது கருத்தாக தலைவரிடம் தெரிவித்தேன். 40 பேர் வரை நம் கூட்டத்திற்கு இயல்பாக வருகிறார்கள். அதே எண்ணிக்கையில் வருவார்கள் என தெரிவித்தார். ஆனால்,  74 பேர் வரை கலந்துகொண்டார்கள். அதில் 28 பேர் நமது உறுப்பினர்கள் என்கிற செய்தி தலைவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. 

 

பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் உரை குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.  அனைவருக்கும் நன்றி.

 

1.25 மணி நேரம் பேசி முடித்ததும், மொத்த ஆற்றலும் வடிந்தது போல இருந்தது. கேள்வி பதில் பகுதி முழுக்க இரண்டு மூத்தவர்கள்  Dr. வில்லியப்பன் அவர்களும், கோவை பெருமாள் அவர்களும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சளைக்காமல் பதில் தந்தது அருமையாக இருந்தது. அவர்களுக்கு நன்றி.

 

பேச உற்சாகம் கொடுத்து பேச சொன்ன தலைவர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, வரவேற்புரை பேசிய  நமது இணைச்செயலர் செண்பகம் அவர்களும், நன்றியுரை வழங்கிய நமது பொருளாளர் செல்வராஜ் அவர்களுக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் நன்றி.

முதல் உரை என்பதால், அது தந்த அனுபவத்தை உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும், இனி வகுப்பு எடுக்கப் போகும் புதியவர்களுக்கும் நிச்சயம் பயன்படும் என்பதற்காக தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

ஆகையால், புதியவர்கள் உற்சாகத்துடன் வகுப்பு எடுக்க முன்வாருங்கள்.

நன்றி.


குறிப்பு : தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது, பிபிடி பகிருமாறு கேட்டார்கள்.  சில விடுபடுதல்கள், எழுத்துப்பிழைகள், திருத்தங்கள்  செய்த பிறகு, குழுவில் பகிர்கிறேன்.