> குருத்து

November 14, 2021

இசை அல்லது இளையராஜா - பாடலாசிரியர் யுகபாரதி


இளையராஜாவைப் பற்றி ஒரு பாடலாசிரியரின் பார்வையில் தன் அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அவர் சொன்ன செய்திகளில் சில அறிந்தவையாக இருந்தாலும், சில குறிப்புகள் புதிதாக இருந்தன. ஆச்சர்யம் தந்தன.


இளையராஜாவிற்கு மொழி அறிவு அதிகம். அவரே வெண்பா வடிவில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அதற்காக அவர் எழுதிய பத்து நூல்களின் பட்டியலும் தருகிறார். ஆகையால் தான் மெட்டுக்கேற்ற பாடல் வரிகளை எழுதும் பொழுது, பொருத்தமான வரிகள் இல்லையெனில் பாடலாசிரியர்களோடு முரண்பட்டிருக்கிறார் என்கிறார். அதற்கு சில பாடல்களையும், தன் அனுபவத்தையும் சொல்கிறார்.


ஒரு இசையமைப்பாளருக்கு மொழி, மக்கள், நிலப்பரப்பு குறித்த அறிவு அவசியம் என்கிறார். இல்லையெனில் அதற்கு நியாயம் செய்யமுடியாது. அது இளையராஜாவிற்கு இருந்ததால் தான் மக்களின் இதயம் தொட்டிருக்கிறார் என்கிறார். சரி தான்.


அதே போல எழுதிய பாடலுக்கு இசை என்பது ஒரு வரம்புக்குள் நின்றுவிடும். அதனாலேயே மெட்டுக்கு பாடல் இசைப்பது என்பதை தொடர்ந்து இளையராஜா செய்திருக்கிறார் என்கிறார். இதைப் படித்ததும், வேறு ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. எம்.எஸ்.வி ஆர்மோனியத்தில் மெட்டு சொல்ல, கண்ணதாசன் சரளமாக பாடல் சொல்வார் என சொல்வார்கள். இளையராஜா காலத்திற்கு பிறகு இப்படி பாடலாசிரியரோடு உட்கார்ந்து பணியாற்ற நேரமில்லாமல் போயிருக்கிறது. ராஜா போட்ட தான் போட்ட மெட்டை ஒரு கேசட்டில் பதிவு செய்து கொடுப்பார். அதற்கு பாடலாசிரியர்கள் எழுதி தரவேண்டும் என்பதாக நிலைமை மாறியிருக்கிறது. அதனாலேயே கண்ணாதாசனுடன் இணைந்து பணியாற்றுவது ராஜாவிற்கு மிகவும் குறைந்திருக்கிறது.. இதை திரைத்துறை சார்ந்த ஒருவர் பேட்டியில் இதைக் குறிப்பிட்டார்.


இராஜா எப்பொழுதுமே எளிய ரசிகனை எட்டக்கூடிய இசையை தந்திருக்கிறார். தன்னுடைய அபரிமிதமான இசை அறிவை எந்த இடத்திலும் உறுத்துகிறபடி காட்டியதில்லை. இசை நுட்பம் அறிந்துவர்கள் அறிந்துகொள்ள சாதுர்யமான சில இடங்களில் காட்டுவார் என்கிறார். சரிதான்.


ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் “ஒரு நல்ல இயக்குநராக மிளிர வளரும் இயக்குநர்கள் இராஜா அவர்களுடன் பணியாற்றவேண்டும்” என மிஷ்கின் சொன்னார். அதையே நானும் சொல்கிறேன். “ஒரு நல்ல பாடலாசிரியராக நிலைபெற வேண்டுமென்றால் அவருடன் பணியாற்றவேண்டும்”. ஒவ்வொரு முறையும் அவருடன் பணியாற்றும் கற்றுக்கொள்கிறேன் என்கிறார்.


30 பக்கங்களில் நிறைய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அவரே சொல்வது போல இசை, மொழி, நிலப்பரப்பு, பாடும் முறை, பாடலை பாடுபவரின் உச்சரிப்பில் தென்படவேண்டிய நெளிவு சுழிவுகள் என இன்னும் பல தலைப்புகளில் எழுதவேண்டும் என்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் யுகபாரதி.

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி – சித்திரக்கதை

நோபல் பரிசின் வரலாற்றில் இரண்டுமுறை நோபல் பரிசு பெற்று அசத்தியிருக்கிறார். ஒருமுறை இயற்பியலிலும், மறுமுறை வேதியியலிலும் என்பது இன்னும் ஆச்சர்யம். ஒரு பறவை பார்வையில் மேரி க்யூரி அவர்களின் பிறப்பு முதல் கண்டுபிடிப்பு வரை இந்த சித்திரக்கதை விளக்குகிறது.



மேரி க்யூரி 1867ல் போலந்தில் பிறந்தார். மேரியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். சிறப்பாக படித்து பள்ளிப்படிப்பை முடித்தார். நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் இருந்தது போல, அப்பொழுது ஜார் மன்னனின் ஆட்சியதிகாரத்தில் இருந்த ரசியா ஆதிக்கத்தின் கீழ் போலந்து இருந்தது. ஆகையால் போலந்தில் மேற்கொண்டு படிக்க முடியாது என உணர்ந்து, மேற்படிப்புக்காக பாரிசு செல்கிறார்.


படிப்பை முடித்துவிட்டு, சோறு, தண்ணியை கூட கண்டுகொள்ளாமல் ஆய்வில் இறங்குகிறார். தன்னை போலவே ஒரு அறிவியலாளரை திருமணம் செய்துகொள்கிறார். 1903ல் முதல் இயற்பியலில் நோபல் பரிசு வேறு ஒருவருக்கும், இவருக்கும் தரப்பட்டுள்ளது. தன் ஆய்வை தொடர்ந்து செய்ததில் 1911ல் வேதியியலில் பங்களிப்பை செய்தற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

பெற்றோருடைய வழியிலேயே ஆய்வு செய்த மகளுக்கும், மருமகனுக்கும் 1935ல் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. மேரி குடும்பத்தை ”நோபல்” குடும்பம் என தாரளமாக அழைக்கலாம். மேரி அவர்களுடைய கண்டுபிடிப்புக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று காப்புரிமைக்காக விலை பேசியிருக்கிறது. எல்லா மக்களுக்கும் தன் கண்டுபிடிப்பு போய் சேரவேண்டும் என உறுதியாக இருந்திருக்கிறார். அதே போல தன் தேசத்தின் மீதான அன்பில் தன் கண்டுபிடிப்புக்கு போலந்து பெயரையே “பொலோனியம்” என பெயர் வைத்திருக்கிறார். துவக்க காலம் என்பதால், உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வில் ஈடுபட்டதால், ரேடியத்தின் பாதிப்பு அதிகமாகி 66 வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “முகத்துக்கு பூசுகிற கிரீமை தயாரித்து, வித்து காசு சம்பாரிச்சுக்கிட்டு திரியறீங்க! முதல்ல கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிங்கப்பா” என பெரு முதலாளிகளை சாடினார். அம்பது லட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களை உலகம் முழுவதும் கொரானாவும், அனைவருக்கும் மருத்துவம் தராத முதலாளித்துவமும் கொன்றிருக்கிறது. பரந்துபட்ட மக்களை நேசிக்கிற மேரி க்யூரிக்கள் தான் உலகத்திற்கு இப்பொழுது தேவை.

ஆங்கிலத்தில் வெளிவந்ததை தமிழில் மொழிபெயர்த்து தந்த குமரேசன் முருகானந்தம் அவர்களுக்கு நன்றி. இது போல பல அறிவியலாளர்கள் கதைகளை இளம் தலைமுறைக்கு உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பக்கங்கள் : 25

November 12, 2021

Jungle Cruise (2021) Fantacy Adventure Movie


20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நகர்கிறது கதை. அமேசான் காடுகளின் உட்புற பகுதியில் எல்லா நோய்களையும் குணப்படுத்துகிற ஒரு மலர் இருப்பதாக ஒரு கதை நிலவுகிறது. அதை பலர் மறுக்கிறார்கள். எப்பொழுதும் போல சிலர் அதை நம்புகிறார்கள். நாயகி அதை கண்டுபிடித்தால், மக்களின் உயிரை காப்பாற்றலாம் என தேடிச்செல்கிறாள். உடன் தன் தம்பியையும் அழைத்து செல்கிறாள்.


சுற்றுலாவாசிகளை தன் கப்பலில் அமேசான் காடுகளின் வழியே அழைத்து சென்றுவருகிறார் நாயகன். சில ஜிம்மிக்ஸ் வேலைகள் எல்லாம் செய்து கூடுதலாக சம்பாதிக்கிறார். அந்த மருந்து கிடைத்தால், மொத்த உலகையும் ஆளலாம் என கணக்குப் போட்டு, ஒரு நவீன கப்பல், கருவிகளுடன் ஒரு ஜெர்மானிய தளபதியும் அங்கு வருகிறான்.

அந்த மலர் யாருக்கு கிடைத்தது, இறுதியில் என்ன ஆனது என்பதை அமேசான் காடுகள் வழியே கப்பல் பயணம், அருவி, பயங்கர பாம்புகள், சண்டைகள், சாசகம் என சொல்லியிருக்கிறார்கள்.
****

உலகெங்கும் இருக்கிற டிஸ்னியின் தீம் பார்க்குகளில் ஒரு பகுதியாக இருக்கும் ஜங்கிள் க்ரூஸை லைவ் ஆக்ஷன் படமாக்க வேண்டுமென்பது டிஸ்னியின் பல ஆண்டுக்கால ஆசை. அதை இதில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்களாம்.

வழக்கம் போல ராக் சாகசகாரனாக வருகிறார். சண்டை போடுகிறார். வில்லனிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார். இந்த ரொமான்ஸ் தான்.. இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம். நாயகி Emily சுறுசுறுப்பாக சாசகங்கள் செய்கிறார். இவரை இதற்கு முன்பு Quiet Place படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தில் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போலவே எனக்கு இருக்கிறது. நீங்கள் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

பெரிசா எதையும் எதிர்பார்க்காதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால், சேர்ந்து பாருங்கள். ஜாலியாக இருக்கும். ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.