> குருத்து

May 17, 2025

Final Destination - Blood lines (2025) துரத்தும் மரணம்


ஒரு கொடூர விபத்து நடப்பது ஒருவருக்கு மட்டும் காட்சிகளாக முன் அறிவிப்பு வரும். முன் அறிந்தவர் பதட்டமாகி.. அந்த விபத்தைத் தடுக்க…. பலர் செத்து சிலர் அதிருஷ்டவசமாக காப்பாற்றப்படுவார்கள்.

”அவர்கள் எல்லாம் சாகவேண்டிய ஆட்கள். அவர்கள் பிழைத்தால் விட்டுவிடுவேனா” என மரணம் வரிசை வரியாக துரத்தும். தப்பித்தார்களா? பிழைத்தார்களா? என்பது இந்த படங்களின் சாரம்.

****

இப்பொழுது இந்தப் படத்துக்கு வருவோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்கை வியூ உணவகம், பார் ஒன்றை துவக்குகிறார்கள். அதில் கலந்துகொள்ள காதல் ஜோடி செல்கிறது.

அங்கு காதலிக்கு விபத்துக்கான முன் அறிவிப்பு காட்சிகள் வருகின்றன. வழக்கம் போல பலரையும் காப்பாற்றிவிடுகிறார்.

2025 வந்துவிடுவோம். இப்பொழுது. இந்த காட்சி நாயகிக்கு கனவுகளாக வந்து தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது. தூக்கம் தொலைந்து அன்றாட வேலைகளை செய்யவே சிரமப்படுகிறார்..

ஏன் என புரியாமல் வீட்டில் கேட்கும் பொழுது... (அம்மாவின் அம்மாவான) பாட்டி அந்த நிகழ்வுக்கு பிறகு துரத்தும் மரணத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வாழ்கிறார். ”அவர் மிகவும் பயமுறுத்துவார். அவரைச் சந்திக்காதே!” என எச்சரிக்கிறார்கள்.

ஆனால் போய் சந்திக்கிறார். அந்த விபத்தில் இருந்து தப்பித்த எல்லோரும் வரிசையாக … குறிப்பாக அவர்களுடைய சந்ததியினரும் கொல்லப்படுகிறார்கள். நம்ம குடும்பத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆகையால் கவனமாய் இருங்கள் என எச்சரிக்கிறார்.

பிறகு என்ன ஆனது? மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்தார்களா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.
***

நம்ம எமன், சித்திரகுப்தன் கணக்கு தான். அங்கு விதி என சொல்லாமல், செத்துடனும்னா செத்துடனும்! என மரண விளையாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு விபத்து. அதில் தப்பித்தவர்கள் வரிசையாக கொல்லப்படுவார்கள். ஏதாவது ஒருவர் எதையாவது செய்து தப்பிப்பார். அப்படி தப்பித்தவர் குடும்பத்தை விரட்டி கொல்வதாக இந்த பாகத்தில் யோசித்திருக்கிறார்கள். நல்ல பேய் யோசனை தான்.

ஒரு பேய் படத்தில் நம் கையை வைத்தே நம் கழுத்தை நெறித்து கொல்ல வைத்துவிடும். எங்காவது உயரத்தில் இருந்து எளிதாக தள்ளிவிட்டு கொ*ன்றுவிடும். ஆனால், இந்த படங்களில் மரணம் எல்லா சாத்தியங்களையும் அறிவியல்பூர்வமாக பயன்படுத்தும் என்பது தான் முரண் நகைச்சுவை. 🙂

அதே போல ஏகப்பட்ட கலாட்டா! ஏகப்பட்ட ரத்தம்! கொஞ்சம் டீசண்டா, கொலை செய்யக்கூடாதா! எனவும் மரணத்தை கேட்க வைத்துவிடுகிறது. 🙂
ரத்தம் படம் பார்க்கும் நம் மீதும் தெறிப்பதால் 18க்கு மேல் தான் பார்க்கலாம் என சான்றிதழ் தந்திருக்கிறார்கள். இளகிய மனதுகாரர்கள் தவிர்ப்பது நலம்.
இந்த சீரிசில் இரண்டாம் பாகத்தைத் தான் முதன் முதலில் பார்த்தேன். பிடித்திருந்தது. பிறகு அடுத்தடுத்த பாகங்களில் ஆர்வம் இல்லாது செய்துவிட்டார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஓக்கே தான். திரையரங்குகளில் தமிழ் மொழி மாற்றம் (Dubbed) செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

Hanna – தொலைக்காட்சி தொடர் (2019 – 2021) உணர்ச்சிகள் கலந்த அதிரடி தொடர்


குழந்தை வேண்டாம் என கலைக்க வருபவர்களை அணுகி, நல்ல பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். இதில் ஒரு அம்மா தன் பிள்ளை தனக்கு வேண்டும் என அடம்பிடிக்கிறார். அதிலிருந்து கதை துவங்குகிறது.


அமெரிக்க சி.ஐ.ஏ வெளி உலகுக்கு தெரியாமல் ஒரு திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். குழந்தைகளை சின்ன வயதில் இருந்தே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மருந்துகள் கொடுத்து, ஆய்வுகள் செய்து, பயிற்சிகள் கொடுத்து அவர்களை தாங்கள் சொல்லும் வேலைகளை எந்த மறுப்பும் இல்லாமல் செய்ய தயார்படுத்துகிறார்கள்.

அங்கிருந்து ஒரு குழந்தையை (நாயகி) எடுத்துக்கொண்டு ஓட… துரத்துகிறார்கள். அம்மா இந்த போராட்டத்தில் இறந்துவிட, அப்பா அந்த குழந்தையை காட்டில் வைத்து வளர்க்கிறார். நல்ல பயிற்சி தருகிறார்.

ஒரு கட்டத்தில் காட்டை விட்டு வெளியே வந்து, அந்த திட்டத்துக்கு வளர்க்கப்படும் (நாயகியைப் போலவே) பெண்களை காக்க, அந்த திட்டத்தை முறியடிக்க அப்பாவும், மகளுமாய் தங்களுக்கு துணை நிற்பவர்களோடு இணைந்து ஆட்கள், ஆயுதங்கள், அதிகாரம் என வலுவாய் இருப்பவர்களோடு மல்லுக்கட்டுகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாகவும், சண்டைகள் மூலமாகவும் நம்மை கவர முயல்கிறார்கள்.
****


அமெரிக்க சி.ஐ.ஏ. உலகம் முழுவதும் தங்களது எதிர்ப்பாளர்களை எப்படி ஆளைத் தூக்குகிறார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு. இந்த கதையின் மையம் இன்னும் அபாயம். வருங்காலத்தில் தங்கள் அரசியலை, அதிகாரத்தை யாரெல்லாம் கேள்வி கேட்பார்களோ அவர்களை எல்லாம் இளைஞர்களாக இருக்கும் பொழுதே தூக்குவதற்கு ஆட்களை தயார் செய்வது தான் கதையே. ஆகையால் அதோடு நம்மால் ஒன்ற முடிகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட படங்கள் முழுக்க ஆக்சனை மட்டுமே வைத்து நகர்கிற படங்களாக இருக்கும். இந்தப் படம் குடும்பத்தைப் பிரிந்து வாழும் குழந்தைகள், அன்புக்காக ஏங்குபவர்கள், குற்ற உணர்வு என பல உணர்வுகளையும் சரியான விகிதத்தில் கலந்து எடுத்திருப்பது நன்றாக இருந்தது.

எல்லா தொடர்களில் இருக்கும் ஒற்றுமை… சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் தான் நம்ப கூடியவர்களிடமே விளக்கமாய் பேச மறுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இதன் பின்னணி மிக மோசமாக இருப்பதால், இன்னும் இறுக்கம் அதிகம். அதனாலேயே நிறைய சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

எல்லா தொடர்களையும் போலவே ஆங்காங்கே மெல்ல மெல்ல நகர்கிறார்கள். கடைசி இரண்டு, மூன்று அத்தியாயங்களில் சுறுசுறுப்பாக நகர்த்துகிறார்கள். 2011ல் இதே பெயரில் ஒரு படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா பாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள். நாயகி கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டாத இறுக்கமான முகம். ஆனால் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார். படத்தில் அவரே சொல்வது போல, ”எனக்கு சண்டைப் போடத்தான் தெரியும்.” என்பது உண்மை தான். அந்த இளம் பெண்களில் ஜூல்ஸ் என வருபவர் நன்றாக ஈர்க்கிறார்.

இந்த மாதிரி தொலைக்காட்சித் தொடர்களில், வலைத்தொடர்களில் எனக்கு ஒரு வியப்பு. நிறைய இயக்குநர்கள் மாறினாலும், படம் எடுக்கும் முறை, உணர்வு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

இது தான் காட்சி. இது தான் கேமரா கோணம். இதை எடுத்துக்கொடுங்கள் என சொல்லிவிடுவார்களா என சந்தேகம் வருகிறது. உங்களுக்கு இப்படித் தோன்றிருக்கிறதா?

முதல் சீசன் 8, இரண்டாவது சீசன் 8, மூன்றாவது சீசன் 6 மொத்தம் 22 அத்தியாயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 45 நிமிடங்களைத் தாண்டுகிறது. நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள். இது பிரைமில் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆறுதலாக தமிழ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

May 9, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) - ஒப்பந்த பணியாளர் அத்தியாயம் 16


ஒப்பந்த பணியாளர் (Contractor), துணை ஒப்பந்த பணியாளர் (Sub Contractor)

 

ஒப்பந்த பணிகளை நிறைவேற்றுகிறவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்தும் நடைமுறையில் ஒரு குழப்பமான புரிதலே இருக்கிறது.  இது சம்பந்தமாக கடந்த சில வருடங்களில் நிறைய வழக்குகள் நடைபெற்று  தீர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.  அதைப் பற்றியெல்லாம் விரிவாக இல்லாவிட்டாலும், அதன் அடிப்படையான அம்சங்களை மட்டும் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

 


ஒரு நிறுவனத்தின் பணிகளை நிறைவேற்றுகிறவர்கள் பணியாளர்கள் தான்.  இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என நடைமுறையில் வெவ்வேறு பெயர்களை வைத்துக்கொண்டாலும், பி.எப் சட்ட விதி என்பது அனைவரையுமே பணியாளர்கள் என்று தான் வகைப்படுத்துகிறது.

 

பணியாளர் என்பவர் யார்?

 

(f) “employee” means any person who is employed for wages in any kind of work, manual or otherwise, in or in connection with the work of 6 [an establishment], and who gets his wages directly or indirectly from the employer, 7 [and includes any person) 

(i) employed by or through a contractor in or in connection with the work of the establishment;

 

(f) "பணியாளர்" என்பது 6 [ஒரு நிறுவனத்தின்] வேலையில் அல்லது அது தொடர்பாக, கைமுறையாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்தவொரு வேலையிலும் கூலிக்காகப் பணியமர்த்தப்பட்ட எந்தவொரு நபரையும் குறிக்கிறது, மேலும் அவர் தனது கூலியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலாளியிடமிருந்து பெறுகிறார், 7 [மற்றும் எந்தவொரு நபரும் இதில் அடங்குவர்)

 

(i) நிறுவனத்தின் வேலையில் அல்லது அது தொடர்பாக ஒரு ஒப்பந்ததாரரால் அல்லது அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்;இந்தப் புரிதலில் சில உதாரணங்களைப் பார்க்கலாம்

 


ஒப்பந்த பணியாளர் (Contractor), துணை ஒப்பந்த பணியாளர் (Sub Contractor)

 

நிறுவனத்தின் பணிகளை நேரடியாக செய்பவர்களைப் பற்றி மேலே விவாதித்தோம்.   நிறுவனம் தொடர்பான பணிகளை… ஒரு ஒப்பந்தக்காரர் நிறுவனத்தின் உள்ளேயே ஒரு பகுதியிலோ வெளியேயோ ஒருவர் நிறைவேற்றும் பொழுது, வேலைகளை தருபவர் முதன்மை முதலாளியாக (Principle Employer) நிறுவனம் ஆகிவிடுகிறது.

 

முதன்மை முதலாளியிடமிருந்து வேலைகளைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப் பணிகளை எந்த பணியாளர்களை வைத்து நிறைவேற்றுகிறாரோ, அந்த பணியாளர்களுக்கு முதன்மை முதலாளியே பி.எப். செலுத்தவேண்டும் என பி.எப். சட்டம் வலியுறுத்துகிறது.  இப்படி செலுத்தப்பட்ட பி.எப் நிதியை ஒப்பந்தக்காரரிடம்  வசூலித்துக்கொள்ளலாம்.

 

இந்த பொறுப்பில் இருந்து விலக வேண்டுமென்றால்…. பி.எப். பதிவு எண் பெற்றிருக்கும் ஒப்பந்தக்காரரை நியமித்துக்கொள்ளவேண்டும்.  அதனால் தான் பெரிய நிறுவனங்கள் பி.எப். பதிவு பெற்ற ஒப்பந்தக்காரரைக் கொண்டு தன் பணிகளை முடித்துக்கொள்கின்றன. 

 


கண்காணிக்கும் பொறுப்பு

 

தான் வேலைக்கு நியமித்த  ஒப்பந்ததாரர் தான் தனியாக பி.எப். பதிவு எண் வைத்திருக்கிறாரே, அதனால் அந்த பதிவுச் சான்றிதழை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு நமக்கு இதில் பொறுப்பில்லை என ஒதுங்கிக்கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை.  பல வழக்குகளில் முதன்மை முதலாளி தான் பொறுப்பு என தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  நடைமுறையில் இதன் பொறுப்பை பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதை உணர்ந்திருக்கவில்லை. இதில் நிறுவனத்தைப் பாதிக்க கூடிய பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன.

 

ஒப்பந்தக்காரர் ஒவ்வொரு மாதமும் பி.எப். பணம் சரியாக கட்டுகிறாரா என்பது மட்டுமில்லாமல் நம்முடைய இடத்தில் வேலை செய்த குறிப்பிட்ட பணியாளர்களுக்கு பி.எப் சரியாக செலுத்துகிறாரா என்பதையும் கவனமாக சரிப்பார்க்கவேண்டும்.  ஒப்பந்த பணிகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஒப்பந்தக்காரரிடம் நூறு பேருக்கும் மேலாக வேலை செய்பவர்களை வைத்திருப்பார். ஆனால், கணக்கிற்கு இருபது பேருக்கு பணம் செலுத்திவிட்டு, அந்த செலுத்திய சலானை மட்டும் பல நிறுவனங்களுக்கும் அனுப்பிவைத்துவிடுவார்.  

 

அதனால், ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் பெயர்களோடு (Electronic challan cum Return) பணியாளர்கள் எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள் என்கிற விவரமும், அந்த பணியாளருக்குரிய (UAN) அடையாள எண்களும் இருக்கும். அதை அத்தாட்சியாக பெற்றுக்கொள்ளவேண்டும்.

 

அதோடு ஒருங்கிணைந்த சலான் (Combined Challan) ஒன்றும் உருவாக்கப்படும். அதில் நிறுவனத்தில் எத்தனைப் பணியாளர்கள், எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்கள் என்கிற விவரமும் இருக்கும்.  அந்த சலானில் கீழே இப்படி எழுதப்பட்டிருக்கும். This challan is not proof of payment. To know the payment status please use “TRRN query Search” at www.epfindia.gov.in . இது பணம் கட்டுவதற்கு முன்பாக உருவாக்கப்படும் சலான்.   ஆனால் இதையே பணம் கட்டியதற்கான ஒப்புகை ரசீதாக சிலர் ஒப்பந்ததாரர்கள் கொடுத்துவிடுவதால், எச்சரிக்கும் விதமாக இப்படி குறிப்பிடுகிறது.

 

நிறுவனம் பி.எப். பணம் செலுத்திய பிறகு ஒப்புகை ரசீது  (Temporary Return Reference Number)  என்ற பெயரில் பிஎப். உருவாக்கித்தரும்.  அதில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்கள்? என்ன தேதியில் செலுத்தியுள்ளார்கள்? என்கிற விவரங்கள் அதில் காணப்படும்.   இந்த ஒப்புகை ரசீதையும் முதன்மை நிறுவனர் பெற்று பாதுகாத்து வரவேண்டும்.

 

பெரிய நிறுவனங்கள் ஒப்பந்த பணியாளர்கள் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்த பிறகு, அவர்களுக்கான உரிய தொகையை முழுமையாக கொடுக்காமல், பணியாளருக்குரிய உரிய ஆவணங்களை, பணம் செலுத்திய சலான்களை பெற்ற பிறகு தான்  முழுப் பணத்தையும் விடுவிக்கிறார்கள். பிஎப் சட்டமும் இதை அனுமதிக்கிறது. இதன் மூலம் முதன்மை முதலாளியின் பொறுப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

 

இதன் தொடர்ச்சியில்… ஒரு கூடுதலாக விசயம்.   ஒரு நிறுவனம் தனியாக இயங்கிவருகிறது. அதன் உரிமையாளர்கள் வேறு.   ஆனால், அவர்களுடைய சர்வீஸ் பில் வரிசையாக அனைத்து பில்களும் முதன்மை முதலாளிக்காக மட்டுமே பில் செய்து இருந்தால், பி.எப். செலுத்தவேண்டியதற்கு முதன்மை முதலாளியே பொறுப்பாகிவிடுவார்.

 

இது பற்றி ஒப்பந்ததாரர்களை  பி.எப். சட்டம் இப்படி வலியுறுத்துகிறது.

"ஒவ்வொரு ஒப்பந்ததாரரும், ஒவ்வொரு மாதமும் முடிவடைந்த ஏழு நாட்களுக்குள், தனது மூலமாகவோ அல்லது தனது மூலமாகவோ பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பங்களிப்புகளை மீட்டெடுப்பதைக் காட்டும் அறிக்கையை முதன்மை முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் திட்டத்தின் விதிகளின் கீழ் முதன்மை முதலாளி ஆணையருக்கு வழங்க வேண்டிய தகவல்களையும் அவருக்கு வழங்க வேண்டும்."

 

பொதுவாக ஒப்பந்ததாரரைக் கொண்டு வேலையை செய்யும் நிறுவனங்கள் இத்தனை கவனத்துடன் இருப்பதில்லை. ஒருவேளை இதையெல்லாம் செய்யவில்லை என்றால்,  எதிர்காலத்தில் தணிக்கையின் பொழுது, பெரிய சுமையாக முதன்மை முதலாளிக்கு வந்து நிற்கும். ஆகையால் கவனம் கொள்ளுங்கள்.

 

இதில் கூடுதலாக கவனம் கொள்ளவேண்டியது.   ஒப்பந்ததாரரை வைத்து கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலான வேலைகளை செய்கிறார்கள்.  இதில் தமது பணியார்களுக்கு மட்டும் நிறுவனங்கள் பி.எப் நிதியை செலுத்திவருகின்றன.   ஒப்பந்ததாரர் எவ்வளவு பணியாளர்களை கொண்டு வேலை செய்கிறார்களோ, அத்தனை பணியாளர்களுக்கும் பி.எப் செலுத்தவேண்டும்.  அதனை மேலே சொன்னது போல முதன்மை முதலாளி கவனிக்கவேண்டும்.

 

கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்  தினசரி மாறுகிறார்கள். அவர்களிடம் ஆதார் இருப்பதில்லை என்ற நடைமுறையில் சில சிரமங்கள் இருந்தாலும், இந்த காரணங்களை பி.எப். அனுமதிப்பதில்லை. ஆகையால் கட்டுமான தொழிலாளர்களுக்கே பிஎப்  செலுத்தப்படவேண்டும் என்றால், இது போல இருக்கிற மற்ற துறைகளும் விடுபட சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

 

நிறுவனம் குறித்து அறிதல்

 

ஒரு நிறுவனம், ஒரு ஒப்பந்தக்காரர், துணை ஒப்பந்தக்காரர் என பி.எப்பில் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனம் குறித்தும் அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு  பி.எப். வசதி செய்து தந்திருக்கிறது.

 

https://unifiedportal-emp.epfindia.gov.in/publicPortal/no-auth/misReport/home/loadEstSearchHome

 

இந்த தளத்தில் போய் நிறுவனத்தின் பெயர், பதிவு எண் என்ற இரண்டு விவரங்களைக் கொடுத்தாலே, அந்த நிறுவனத்தின் விவரங்களை நாம் பார்க்க முடியும்.  இப்பொழுது  பி.எப். பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்களா, கடைசியாக எந்த மாதத்திற்கு பணம் செலுத்தினார்கள்  என்பதையும் நாம் பார்க்கமுடியும்.

 

”தற்காலிக” பணியாளர்

 

ஒரு நிறுவனத்தில்  பணிக்காக இணைபவர்களை  இரண்டு, மூன்று அல்லது ஆறு  மாதங்கள் ’தற்காலிக’ பணியாளராக வைத்திருந்து… அவர் தொடர்கிறரா, நிறுவனத்திற்கு பொருந்துகிறாரா என பார்த்து, பிறகு பி.எப். பில் இணைப்பதை வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.   பி.எப். சட்ட விதிப்படி இந்த நடைமுறை தவறு.

 

ஒரு பணியாளர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் இருந்தே அவர் பணியாளர்  என்று தான் கருதவேண்டும்.  ஆகையால் முதல் நாளில் இருந்தே, அவரை பி.எப்பில் இணைக்கவேண்டும் என்பது தான் சரியானது.

 

மேலே சொன்னதுபடி, ”தற்காலிகமாக” வைத்திருந்த சில மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை நிறுவனத்தில் செலவு கணக்குகளில் தான் நிறுவனங்கள் எழுதுகின்றன. பி.எப். தணிக்கையின் பொழுது, இப்படி எழுதப்படும் சம்பளத்திற்கும், பி.எப் செலுத்தவேண்டும் என அதிகாரி உத்தரவிடும் பொழுது, நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. ஆகையால் “தற்காலிக” என்ற நடைமுறையை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

 

இந்தியில் மட்டும் விளக்க காணொளிகள்

 


பி.எப். திட்டத்தில் கிட்டத்தட்ட எட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் இணைந்து பயன்பெற்று வருகிறார்கள். கடந்த ஜனவரி 2025ல் மட்டும் 8.25 லட்சம் பேர் இணைந்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.   இதிலும் குறிப்பாக… இந்தி புரியும் மாநிலங்களை தவிர்த்து   தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து இதில் பெரும் பங்கு என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

பி.எப் திட்டம் குறித்தும், கடந்த பத்து ஆண்டுகளில் எல்லாவற்றையும் டிஜிட்டல் வழியாக மாற்றுவதிலும் தொடர்ந்து  புதிய புதிய அறிவிப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால்,  இது சம்பந்தமாக தேடும் பொழுது… பி.எப் அலுவல்களுக்கென இயங்கும் தளத்தில்  விளக்க காணொளிகளுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்.

 

அந்த தளத்தை சென்று பார்த்தால் https://www.youtube.com/@socialepfo  என்ற யூடியூப் தளத்தில் இன்றைய தேதியளவில் 669 காணொளிகள் சின்ன காணொளிகளாகவும், நீண்ட விளக்க காணொளிகளையும் பதிவேற்றியிருக்கிறார்கள்.   அதில் 16.7 லட்சம் அந்த தளத்தை பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் இந்தியில் மட்டும் அனைத்து காணொளிகளும் இருக்கின்றன.

 

இந்தி தெரியாத மாநிலங்களும், இந்தி தெரியாத தொழிலாளர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்ற எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள்.   பி.எப் அலுவலகம் சென்று கேட்கலாம் என்றால் எப்பொழுதும் பெரும் தொழிலாளர்கள்  கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.  அரை நாளாவது விடுப்பு எடுத்தால் தான்  சந்தேகத்தை தீர்க்கமுடியும்.  ஆகையால் இந்த சிக்கலை தீர்க்க இந்தியாவின் பிற மொழிகளிலும் காணொளிகளை வெளியிடவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

 

தனிப்பட்டமுறையில் சில யூடியூப் சானல் நடத்துகிறவர்கள் அவர்களுக்கு தெரிந்த வரையில் தொடர்ந்து காணொளிகளைப் பகிர்ந்துவருகிறார்கள். அது ஒரு ஆறுதல்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721


குறிப்பு :   இந்தக் கட்டுரை ”தொழில் உலகம்” மே மாத இதழில்  வெளிவந்துள்ளது.