> குருத்து: சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie

April 19, 2026

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie


நாயகனான போலீஸ் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, புதிய இடத்திற்கு பணிக்கு வந்து சேர்கிறார்.  அது ஒரு காட்டுப் பகுதி. போகிற பாதையில் ஒரு போலீசு அதிகாரி ஜீப்பில் அடிபடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

 

அடிப்பட்ட போலீசிடம் ஒரு வாக்கி டாக்கி இருக்கிறது.  அதில், கைதிகளை அழைத்துக் கொண்டு, செல்லும் பொழுது, கைதிகள் தப்பியதாகவும், அவர்களை பிடிக்க  காட்டிற்குள் வந்ததாகவும், தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால், தன்னால் நகர முடியவில்லை. ஆகையால் தன்னைக் காப்பாற்றும்படி அழைக்கிறார்.

 

நாயகனுடன் ஒரு மேலாதிகாரியும், ஒரு போலீசும் உள்ளே செல்கிறார்கள்.  ஆனால் அவரை கண்டுப்பிடிப்பது மிக சிரமமாக இருக்கிறது. அந்த காடு குறித்தான செய்திகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  உள்ளே சென்றபவர்கள் யாரும் மீண்டும் திரும்பியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

 

அதற்கேற்றபடி, அங்கு நடக்கும் சம்பவங்கள், திரும்ப திரும்ப நடக்கின்றன.  வேறு காலத்தை சேர்ந்தவர்கள் காட்டில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மோதலிலும் மண்ணில் ரத்தம் சிந்தும் பொழுது  அங்கு நடக்கும் காட்சிகள் மாறுகின்றன.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***


 

இதே இயக்குநர் இந்த தளத்தில் ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து, அதை இப்பொழுது முழு நீளப்படமாக மாற்றியிருக்கிறார்கள். படத்தில்  இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

 

ஆங்கிலத்தில் இந்த வகையான படங்கள், வலைத் தொடர்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழில் சிம்புவின் ”மாநாடு” வந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.  மலையாளத்தில் இப்பொழுது வந்திருப்பதால், மக்களுக்கு புரியுமா என்ற சந்தேகத்தில் ஆங்காங்கே விளக்கம் கொடுக்கிறார்கள். அது உண்மை தான். இந்த மாதிரி படங்களை பார்த்திராதவர்களுக்கு குழப்பங்கள் உருவாவது சகஜம். ஏற்கனவே இந்த மாதிரி படங்களை நிறைய பார்த்திருப்பதால் எனக்கு பெரிய ஆச்சர்யம் தரவில்லை.

 

ஜித்து சதீசன் இயக்குநருக்கு முதல் படம் என்பதால் அதற்கேற்ப இயல்புகளுடன் தான் படம் இருக்கிறது. கேரளத்தில் ஓரளவு ஓடியிருக்கிறது.

 

நாயகனின் அப்பாவை நாயகன் பார்த்ததேயில்லை.  படத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார்.  இருவரிடமே கொஞ்சம் கூட ரியாக்சனே இல்லை. சில காட்சிகளுக்கு பிறகு, அவரை வழியனுப்பும் பொழுது, “அப்பா இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என சன்னமான குரலில் சொல்கிறார். அவ்வளவு தான்.  காட்டுக்குள்ளேயே பெரும்பாலான படம் என்பதால், பசுமையாக இருக்கிறது.

 

ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை ஆர்வமாக பார்ப்பவர்கள் பாருங்கள். மற்றவர்களுக்கு பிடிக்குமா? தெரியவில்லை.

 

0 பின்னூட்டங்கள்: