> குருத்து: ஒரு நம்பிக்கை கதை

September 22, 2026

ஒரு நம்பிக்கை கதை

 


நமது உறுப்பினர் ஒருவர் அந்த நிறுவனத்தின் அக்கவுண்ட் மேனேஜராக பொறுப்பேற்றார்.   நிறுவனத்திற்கு பி.எப்., இ.எஸ்.ஐ இருந்தது.   பணம் செலுத்தாதது, தாமதமாக செலுத்தியது என சில நோட்டிசுகள் இருந்தன.

 

நாம் சரியாக செலுத்துகிறோம். ஆனால் ஏன் இந்த நோட்டிசு வந்தன என கேட்ட பொழுது,  என் நினைவு உடனே வந்து, அணுகினார்.

 

கடந்த கால வரலாற்றை தேடிப் பார்த்தால், நிறுவனம் வரி ஆலோசகருக்கு சின்சியராக பணம் அனுப்ப, அவர் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சாலனை செலுத்தாமல் விட்டிருக்கிறார். நிறுவனம் அவர் செலுத்தினாரா என சோதிக்கவும் இல்லை. விளைவு நோட்டிசுகள்.

 

பிறகு எந்தெந்த மாதம் செலுத்தவில்லை என சொன்ன பிறகு, அவரிடம் அந்த பணத்தைக் கேட்டார்கள்.   சில தொழிலாளர்கள்  இதனால் நம்பிக்கை இழந்து, ஒவ்வொருவராக பி.எப்., இ.எஸ்.ஐ திட்டத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

 

மீண்டும் இணைய சொன்னால், உறுதியாய் மறுக்கிறார்கள். நிர்வாகம் ”தொழிலாளர்களிடம் நீங்கள் பேச முடியுமா” என கேட்டதற்கு, ”அவசியம். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன்.

 

ஊழியர்கள் எல்லோரையும் அந்த ஹாலுக்கு வரவழைத்தார்கள். அரை மணி நேரம். திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்கினேன்.  மீதி அரை மணி நேரம் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை அடுத்தடுத்து கேட்டார்கள். விளக்கினேன்.   குறிப்பாக ”மாதம் மாதம் செலுத்துகிறார்களா என நீங்களே பார்க்கலாம்” என்றேன். மேலும் “பி.எப். பணத்தை எடுப்பதற்கு இப்பொழுது நிர்வாகத்தின் அனுமதி தேவையில்லை. ஆதாரின் அடிப்படையில் நீங்களே க்ளைம் செய்யலாம்” என்றேன்.  அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்தது போல உணர்ந்தேன்.

 

நிர்வாகத்தின் பொறுப்பாளர் சில கேள்விகள் கேட்டார். அவருக்கும் விளக்கினேன். என்னுடைய கட்டணத்தைக் கேட்டுவிட்டு, முன்பு இருந்தவரை விட இன்னொரு மடங்கு கேட்கிறீர்கள் என்றார். நல்ல சேவைக்கு நல்ல கட்டணம் அவசியம் என்றேன். பழையை ஆலோசகர் செய்தது எல்லாம் நினைவுக்கு வந்து போயிருக்கும் போல.! புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார்.

 

நோட்டிசுகளுக்கு கவனம் செலுத்தி , அதை முதலில் முடித்தேன்.  முதலில் தொழிலாளர்கள் எல்லோரும் முன்வரவில்லை.  வந்தவர்களை இணைத்தோம்.  பிறகு மெல்ல மெல்ல மற்ற தொழிலாளர்களும் நம்பிக்கை வந்து திட்டத்தில் இணைந்தார்கள்.

 

நான் போகும் பொழுது இருந்த தொழிலாளர்களை விட, இப்பொழுது மூன்று மடங்கு தொழிலாளர்கள் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 

கடந்த சில மாதங்களாக, பி.எப். திட்டத்தில் முதன்முறையாக ஊழியர்களை புதிதாக இணைத்தால், தொழிலாளர்களுக்கு மானியம், நிர்வாகத்திற்கும் மானியம் என அறிவித்த திட்டத்தில் இவர்கள் தகுதி பெற்றார்கள்.

 

ஜூன் மாதத்தில் இரண்டு தவணைகளில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ. 45000 வரை பி.எப். மானியத்தை செலுத்தியிருந்தது.  மேனேஜரிடம் ”மானியம் வந்திருக்கிறது. ஒரு வார்த்தை சொல்லவில்லையே எனக் கேட்டால்…, “வரவில்லை சார்” என முதலில் தெரிவித்தார்.  குறிப்பாக தேதி,  தொகை குறித்து சொல்லி, தேடச்சொன்னால், ”ஆமாம் சார். எங்கிருந்து வந்தது என தெரியாமல்… சஸ்பென்ஸ் கணக்கில் வைத்திருக்கிறோம்” என்றார். நிர்வாகத்தின் பொறுப்பாளரிடம் தெரிவியுங்கள். நிச்சயம் மகிழ்வார் என்றேன்.

 

புதிதாக பி.எப். திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கும் இதே போல மான்யம் வந்திருக்கும். அதையெல்லாம் கேட்டுக்கொள்ளவேண்டாம். நிர்வாகம் கேட்டுவிடும் என்ற பயத்தில் வரவில்லை என்பார்கள் என்றேன். சிரித்தார்.

 

- இரா. முனியசாமி,

வரி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

15/09/2026

0 பின்னூட்டங்கள்: