> குருத்து

August 9, 2008

அறியப்படாத அமெரிக்கா

நாம் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய படங்கள் அமெரிக்கா பற்றி பேசி, நமக்குள் உருவாக்கியிருக்கும் கருத்தாக்கம் வேறு.

உண்மையான அமெரிக்கா வேறு. இன்றைய அமெரிக்காவின் நிலை எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலை தான்.

அதை இந்த கட்டுரையில் உள்ள உண்மைகள் நிரூபிக்கின்றன.

******

ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.


சொர்க்கபுரி; குப்பை கூட்டும் தொழிலாளி கூட காரில் வந்திறங்கிப் பணியாற்றுவார்; எந்தக் கவலையுமின்றி சுகமாக வாழும் மக்கள்; பொருளாதார வளமும் ஜனநாயக மாண்புகளையும் கொண்ட நாடு; குடி, கூத்து, கும்மாளம் என ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்கும் மக்கள் என அமெரிக்க வல்லரசின் செல்வச் செழிப்பைப் பற்றி முதலாளித்துவ எழுத்தாளர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்கள்.


ஆனால், அதே அமெரிக்காவில்தான் வறுமை, வேலையின்மை; வேலையிழந்து வாழ்விழந்து உழைக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்; தற்கொலைகள், போதை மருந்து, கொலைகொள்ளைகள் என சமூகம் அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது.


கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஐந்து பெரும் கடன் முதலீட்டு வங்கிகளுள் ஒன்றான பேயர் ஸ்டேர்ன்ஸ் என்ற வங்கி, ஒரே நாளில் குப்புற விழுந்து திவாலாகியது. அதை மீட்டெடுத்து முட்டுக் கொடுக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. அமெரிக்காவின் பணவீக்கம், கடந்த ஆண்டைவிட 4.3% அதிகரித்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் எரிவாயுவின் விலை விண்ணை முட்டுகிறது. அமெரிக்காவின் 3.7 கோடிமக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 12.7% என்றும், ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அரசே ஒப்புக் கொள்கிறது.


ஒருபுறம், டாலரின் மதிப்புச் சரிவு; மறுபுறம், உற்பத்தித் தேக்கம், பணவீக்கம். இதுவும் போதாதென ""சப்பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்குத் தரப்படும் கடன் கொள்கையால் அமெரிக்காவின் வீட்டுமனைக்கடன் வியாபாரத் தொழில் மிகப் பெரிய நிதி நெருக்கடியலில் சிக்கி, அந்தாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது.


இன்னொருபுறம், வர்த்தகப் பற்றாக்குறை. அதை ஈடுகட்ட வழிதெரியாமல் செயற்கையாக 75,000கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் விட்டுள்ளது அந்நாடு. அமெரிக்காவின் உற்பத்தியின் மதிப்பை விட பலமடங்கு மிதமிஞ்சிய அளவில் காகிதப் பணத்தை அச்சிட்டு தள்ளி புழக்கத்தில் விட்டு, டாலரின் மதிப்பை செயற்கையாக ஊதிப் பெருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரம்பை மீறிய இத்தகைய அராஜக சூதாட்டங்களால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கி, அந்நாட்டின் பொருளாதாரமே மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது.


1930களில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை விஞ்சும் வகையில், இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம்'' என்று அலறுகிறார், பிரபல நிதி முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஒருவருமான ஜார்ஜ் சோரஸ்.


இந்த நெருக்கடியின் சுமைகள் அனைத்தையும் ஏழை நாடுகளின் மீது திணித்து தப்பித்து வந்த ஏகாதிபத்தியவாதிகள், சந்தைப் பொருளாதாரத்தின் அராஜகத்தாலும் ஊகவணிகச் சூதாட்டத்தாலும் உள்நாட்டிலேயே பொருளாதார முறைகுலைவுகள் ஏற்படத் தொடங்கியதும், அந்நெருக்கடியின் சுமைகளை சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் மீது சுமத்துகின்றனர். ஆலை மூடல், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டுகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அமெரிக்காவில் அடுத்தடுத்து பரவத் தொடங்கியுள்ளன.


நமது நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, அன்று வெள்ளைக்காரன் ஆங்காங்கே கஞ்சித் தொட்டி வைத்து, பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்றி மனிதாபிமான நாடகமாடினான். அதைப் போலவே, அமெரிக்காவில் வேலையிழந்து வாழ்விழந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கமே ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது. மேலை நாடுகளில் இதனை ""பிரட் லைன்'', ""சூப்லைன்'' என்று குறிப்பிடுவார்கள். குபேரபுரி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் இத்தகைய கஞ்சித் தொட்டிகளில் ஒரு துண்டு ரொட்டியும் ஒரு குவளை சூப்பும் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வரிசையில் காத்திருக்கின்றனர்.


1970களில் 3.9 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் வேலையற்றோரின் எண்ணிக்கை, 1980களில் 11 சதவீதமாக உயர்ந்து, இன்று 16% அளவுக்கு அதிகரித்து விட்டது. முழுமையாக வேலையற்றவர்களோடு, வேலையிழந்து வேறிடத்தில் பகுதி நேரமாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இது ஏறத்தாழ 20%க்கும் மேலாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகளே குறிப்பிடுகின்றன.

அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வேலை தர வேண்டியது அரசின் கடமை. வேலை கொடுக்க இயலாத நிலையில், வேலையற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்க வேண்டும். ஆனால், பல்வேறு மோசடிகள் மூலம் வேலையில்லாத இளைஞர்களில் ஏறத்தாழ 40% பேருக்கு மட்டுமே அமெரிக்க அரசு உதவித் தொகை வழங்குகிறது. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு நாளொன்றுக்கு 70 கோடி டாலர்களை (ஏறத்தாழ ரூ. 3000 கோடி) வாரியிறைக்கும் புஷ் அரசு, வேலையற்றோருக்கான உதவித் தொகையை அனாவசியச் செலவு என்று கூறி, அதைப் பெருமளவு குறைத்து விட்டது. இதனால், வாழவழியின்றி வேலையற்றவர்கள் பலர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இத்தகைய உழைக்கும் மக்கள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள், பூங்காக்கள், டெலிபோன் "பூத்'துகள் என பொது இடங்களில்தான் வாழ்கின்றனர். கடுங்குளிர் நிறைந்த அமெரிக்காவில் இவர்களால் எப்படி வாழ முடியும்? பெரிய அட்டைப் பெட்டிகளில் புகுந்து கொண்டு படுத்துறங்குவது, குப்பைத் தொட்டிகளிலிருந்து கிழிந்த கம்பளி ஆடைகளை எடுத்துப் போர்த்திக் கொள்வது முதலானவற்றால் எப்படியோ பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறை பனிக்கும் கீழான கடுங்குளிரில் விறைத்து மாண்டு போனவர்கள் ஏராளம்.


அரசின் புள்ளிவிவரப் படியே, குபேர நாடான அமெரிக்காவில் வீடிழந்து தெருவில் வாழும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர். நியூயார்க் நகரில் மட்டும் இத்தகையோரின் எண்ணிக்கை 70,000 பேருக்கும் மேலாகும் என்று அம்மாநகர ஆளுநரின் அறிக்கை குறிப்பிடுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஏறத்தாழ 80,000 பேர் வீடற்றவர்களாக, வேலையற்றவர்களாக உழல்கின்றனர். இவர்களில் கருப்பின மக்களே மிக அதிகமாக உள்ளனர். அமெரிக்காவின் ஒட்டு மொத்த கருப்பின மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.


அமெரிக்கா மட்டுமல்ல; மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், வேலையற்றோரின் எண்ணிக்கை 10.9 சதவீதமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறத்தாழ 11%க்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்தின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.


ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ""கம்யூனிசம் தோற்றுவிட்டது; உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது'' என்று எக்காளமிட்ட ஏகாதிபத்திய உலகம், சந்தைப் பொருளாதாரத்தின் படுதோல்வியாலும் பொருளாதார வீழ்ச்சியாலும் தடுமாறித் தத்தளிக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை; வறுமை தாண்டவமாடத் தொடங்கி விட்டது. ஒருபுறம், உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் செல்வம் கோடானுகோடிகளாகப் பெருத்துக் கொண்டே போகிறது.

மறுபுறம், வறுமையும் வேலையின்மையும் கொள்ளை நோய் போலப் பரவி வருகிறது. மலைக்கும் மடுவுக்குமான இந்த இடைவெளி, இன்று அமெரிக்காவின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்ட வருகிறது. மரணப் படுக்கையில் வீழ்ந்துவிட்ட ஏகாதிபத்தியத்தின் தலையைச் சீவி, இனி அதன் உயிரைப் பறிப்பதுதான் இன்றைய உடனடித் தேவையாகியுள்ளது.

நன்றி புதிய ஜனநாயகம்

June 16, 2008

வறுமைக்கோடு என்றால்!




முன்குறிப்பு : பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளின் வரிசையில், இப்போழுது 'வறுமைகோடு" பற்றி.

சகலருக்கு புரியும் படி எளிமையாக பத்திரிக்கையாளர் ஜவஹர் எழுதியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.

'சுதந்திரம்' கிடைத்து, 60 ஆண்டுகள் கழித்தும் வறுமைக்கோடு பற்றி இன்றைக்கு பேசுகிறோம். அவ‌ல‌ம் தான்.

இந்தியாவையும், உலகையும் குத்தி குத‌றுகிற‌ கழுகான‌ அமெரிக்கா, இந்திய‌ர்க‌ள் தின்று தீர்ப்ப‌தால் தான் உல‌கில் உண‌வு ப‌ஞ்ச‌ம் என்கிற‌து. நாமும் அமைதியாக‌ கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

*******

"வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 23 கோடியே 77 லட்சம் பேர்" என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுக்ராம் தெரிவித்துள்ளார். 1987-88ம் ஆண்டுக் கணக்கின்படி இந்த நிலவரம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேர்கோடு தெரியும்... வளைகோடு தெரியும்... அது என்ன வறுமைக்கோடு?

வறுமையில் வாடுவோர் இத்தனைபேர் என்று சொல்ல வேண்டியது தானே?

அப்படியென்றால் வறுமை என்றால் என்ன?

உடனே நீங்கள் பதில் சொல்லிவிடுவீர்கள்.

"உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே தட்டுப்பாடு உள்ள நிலைமைதான் வறுமை" என்று.

ஆனால் அரசும், பொருளாதார நிபுணர்களும் உங்களது வரையறையை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உணவு என்றால் என்ன உணவு? கஞ்சியா? கூழா அல்லது பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த நல்லுணவா? உடை என்றால் என்ன உடை? காடாத் துணியா? 'கார்டன் வரேலியா'?

உறையுள் என்றால் எட்டடிக் குச்சா? எட்டடுக்கு மாளிகையா?

மருத்துவ வசதி என்றால் சுக்குக் கசாயாமா? அப்பல்லோ ட்ரீட்மெண்ட்டா?

கல்வி என்றால் ஓரோன் ஒண்ணு. ஈரோன் ரெண்டு என்னும் ஆரம்பக் கல்வியா? அல்லது தியரி ஆப் ரிலெட்டிவிட்டி குவாண்டம் தியர் என்று மிரட்டும் உயர் கல்வியா?

இவற்றில் எது கிடைக்கவில்லை என்றால் வறுமை? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாம் அப்படியே திகைத்துப்போய் நிற்கிறோம். உடனே வெற்றிப் புன்னகையுடன் அவர்களே பதிலும் சொல்கிறார்கள்.

"நகரத்தில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் உள்ளவர் சராசரியாக 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். இதற்குக்கூட வசதி இல்லாத நிலைமைதான் வறுமை.



இந்த 2100-2400 கலோரி உணவு தான் வறுமைக்கோடு. இந்த அளவுக்குச் சாப்பிட வசதி இல்லாதவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ஆவர். இந்த அளவுக்கோ அல்லது அதிகமாகவோ சாப்பிட வசதி உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் ஆவர்" என அரசின் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கலோரி என்றால்?

ஒரு கிராம் எடையுள்ள தண்ணீரை ஒரு டிகிரி சூடாக்கத் தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு ஒரு கிலோ கலோரி.

மனிதன் வேலை செய்ய, உயிர் வாழ சக்தி தேவை. வேலை செய்யும் போது உடம்பில் உள்ள சத்து எரிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யச் சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சத்து உடம்பில் சேர்கிறது. மீண்டும் வேலை செய்யும் பொழுது மீண்டும் சத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு சுழற்சி. உணவில் இருந்து கிடைக்கும் இந்த சக்தியும் 'கிலோ கலோரி' என்ற அதெ அளவிலேயே அளக்கப்படுகிறது. நடைமுறையில் சுருக்கமாகக் 'கலோரி' என்றே குறிக்கப்படுகிறது.

சுலபமாக புரியும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்தால் விசயம் விளங்கிவிடும்.

ஒரு இட்லிக்கு - 75 கலோரி கிடைக்கிறது

ஒரு மணி நேரம் நடந்தால் - 160 கலோரி செலவாகிறது.

ஒரு வேளைக்கு ஒரு கிண்ணம் சோறு - வெறும் சோறு மட்டும் சாப்பிட ஒருவருக்கு வாய்ப்பு வசதி இருக்கிறதா? அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே இருக்கிறார். அவர் ஏழை அல்ல.

அப்படியென்றால் அவர் பணக்காரரா? இல்லை. 'ஏழை அல்லாதவர்' (Non-poor) அப்படித்தான் அரசு சொல்கிறது.

நகரத்தில் உள்ள ஒருவர் 2100 கலோரி உணவு சாப்பிட வாய்ப்பு இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர் என்பது அரசின் கணிப்புதானே. அதன்படி பார்த்தால் சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள கிண்ணத்தில் இருக்கும் சோற்றில் 700 கலோரி சக்தி இருக்கிறது.

ஒருவேளைக்கு கிண்ணம் என்று மூன்று வேளைக்கு மூன்று கிண்ணம் வெறும் சோறு சாப்பிட்டால் 2100 கலோரி சக்தி கிடைத்துவிடும். அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே போய்விடுவார். அவர் ஏழை அல்ல, 'ஏழை அல்லாதவர்'!

அப்படியானால் மற்ற தேவைகள்? அதற்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்துவிடலாம். மொத்தத்தில் ஒரு கணவன், ஒரு மனைவி, மூன்று குழந்தைகள் ஆகிய 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 988 ரூபாய் செலவிடும் சக்தி இருந்தாலே மேற்சொன்ன தேவைகள் அனைத்தும் கிடைத்துவிடுமாம். அந்தக் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாம்.

இதில் கணவன் மட்டும் வேலை பார்த்தாலும் சரி... அல்லது மனைவி, குழந்தைகள் அனைவருமே வேலை பார்த்தாலும் சரி... மொத்தத்தில் அந்தக் குடும்பத்தினர் மாதத்துக்கு 988 ரூபாய் செலவழிக்கிறார்களா? அப்படியானால் அவர்கள் ஏழை அல்ல! இவ்வாறுதான் அரசு நிர்ணயித்திருக்கிறது. (இப்போது இந்தத் தொகை சற்று உயர்த்தப்பட்டுள்ளது)

இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் சுமார் 80% பேர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச உணவுக்கும், வழியின்றித் தவிக்கிறார்கள் என்பதையும் அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது.

எனவே, இந்த வறுமைக்கோட்டுக்கு நிர்ணயமே சரியல்ல; வறுமையின் தீவிரத்தையும், வறியவர்களின் எண்ணிக்கையையும் இது குறைத்துக் காட்டுகிறது என்று அரசு சார்பற்ற பொருளாதார நிபுணர்கள் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனெனில்-

ஏழைகள் பெரும்பாலோர் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் தான். அவர்களுக்கு 2100 கலோரி. 2400 கலோரி என்ற அளவு நிச்சயமாகப் போதாது. இத்தகைய ஆண்களுக்கு 3900 கலோரியும், பெண்களுக்கு 3000 கலோரியும் தேவை. ஆனால் வறுமைகோட்டுக்கு 2100-2400 என்ற சராசரி கணக்குத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு நிர்ணயம் உணவுக்கு மட்டுமே ஓரளவு முக்கியத்துவம் தருகிறது. உடை, வீடு, மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. எனவே இது உண்மையில் 'வறுமைக்கோடு' அல்ல. பஞ்சைக்கோடு-பராரிக்கோடு (Not poverty line but 'destitution line')

கணவன், மனைவி குழந்தைகள் ஆகிய அத்தனை பேரும் வேலை பார்த்துச் சம்பாதித்து மாதத்துக்கு 988 ரூபாய் செலவழித்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று நிர்ணயிக்கப்படுவது அபத்தம். இப்படிச் சராசரி செலவினத்தைக் கொண்டு நிர்ணயிப்பதைவிட, சராசரி நபர் வருமானம் என்பதைக் கொண்டு நிர்ணயிப்பது ஓரளவுக்கு உண்மையான நிலவரத்தைக் காட்டும் என்றெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 77 லட்சம்; இதில் 2100 கலோரியை விடக் குறைவாகப் பெறுபவர்களின் சதவிகிதம் 78.2 என்று சொல்லும் பொழுது இதெல்லாம் உயிரற்ற வெறும் எண்கள் அல்ல; ரத்தமும், சதையும், ஜீவனும் கொண்ட நமது சக மனிதர்கள்.. இந்த மனிதர்களின் அவலங்கள்...

18.08.2002 - ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

June 5, 2008

பணவீக்கம் என்றால் என்ன?


முன்குறிப்பு : இந்தியாவில் எல்லா பத்திரிக்கைகளிலும் அடிக்கடி அடிபடுகிற வார்த்தை பணவீக்கம். இன்றைக்கு பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தினால், ஏற்கனவே இருக்கிற பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் வேறு வழியே இல்லாமல் தான், இந்த விலையேற்றம் என்கிறார்கள். ஏற்கனவே வாங்குகிற சம்பளம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, இந்த விலையேற்றம் இன்னும் மக்களை வாட்டி வதைப்பதாக இருக்கும்.

நம்பி, வாக்களித்த மக்களுக்கு "வேறு வழியே இல்லாமல்" தான் என பொறுப்பற்ற முறையில் சொல்கிற இவர்கள் தான் உலக வங்கிக்கும், உலக வர்த்தக கழகத்துக்கும் ஆகச் சிறந்த விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

இங்கு விலைவாசி உயர்வுக்குக்காக போராடுகிற பா.ஜனதா, அதிமுக, பா.ம.க., ம.தி.மு.க, சி.பி.எம்., என தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என எல்லோரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் தான். இப்பொழுது, மக்களின் எதிர்ப்பை வாக்கு வங்கியாக மாற்றப்பார்க்கிறார்கள்.
******

பணவீக்கம் என்ற சொல் வணிகவியல் சார்ந்த கலைச்சொல். "பணவீக்கத்தை" பற்றிப் புரிந்து கொள்ள தேடியதில், பத்திரிக்கையாளர் ஜவஹர் எளிமையாக எழுதி இருந்தார்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

******

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

******

பின்குறிப்பு :

ஜவஹர் சொல்கிற வழிமுறைகள் எளிதாய் தோன்றும். ஆனால், அதை நிறைவேற்றுகிற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர் வழிகள். கடைந்தெடுத்த காரியவாதிகள். காரணமானவர்களே அதை களைவார்கள் என்பது, "திருடனாய் பார்த்து திருந்துகிற கதை தான்".
நடைமுறை சாத்தியமில்லை.

அரசியல் அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றும் பொழுது, இவை எல்லாம் எளிதாய் நடைமுறை சாத்தியமாகும்.