> குருத்து

December 8, 2013

மழை!

கடையில் பலசரக்கு வாங்கும் பொழுது... ஒரு நடுத்தர வயது அம்மா கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"மழை பெய்தால், எங்கள் வீட்டில் எல்லா பக்கமும் ஒழுகும். வீட்டிற்கு வந்த தண்ணியை அள்ளி அள்ளி வெளியில் ஊத்துவதற்கே வேலை சரியாக இருக்கும். மழை பெய்யும் நாளில் சமைக்கமுடியாது. அன்னைக்கு பட்டினி தான். தூங்கமுடியாது. ஏதாவது குறைஞ்ச வாடகைக்கு ஒரு சின்ன அறையா, ஒழுகாம இருந்தா போதும்! நானும் என் இரண்டு பிள்ளைகளும் இருந்துக்கிருவோம். ஒரு வீடு பார்த்து சொல்லுங்க" என்றார்.

December 4, 2013

மருத்துவர் கோவன்!

நேற்று பாடியில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவர் சத்தியநாராயணனை பார்க்க போயிருந்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வரும் அப்ரோச்‍-சின் ஆண்டு விழாவிற்கு அழைப்புவிடுத்தார்.

அதில் ஒரு நிகழ்ச்சியாக, மக்களுக்கு இல்வசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவரும் மக்கள் மருத்துவர்களை கண்டறிந்து கெளரவிக்கிறோம். இந்த ஆண்டு ஒரு விவசாயியாக இருக்கும் ஒருவர் களத்துமேட்டிலேயே தன்னைத் தேடிவரும் விவசாய மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவருகிறார். அவரை அழைத்து வந்து கெளரவிக்கிறோம் என்றார்.

அடுத்த ஆண்டு திருச்சியில் 9 ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர் கோவனை கெளரவிக்க இருக்கிறோம் என்றார். அவரிடம் மருத்துவம் பார்த்த மக்களில் சிலர் எங்களிடம் தெரிவித்தனர் என்றார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா என்றேன். நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை என்றார். அந்த குழுவின் மையப்பாடகர் தான் தோழர் கோவன் என்றேன். ஆச்சர்யப்பட்டார்.

சில மைய வேலைகளின் பொழுது கோவன் தோழரிடம் மருந்து வாங்கி குணமானவர்களில் நானும் ஒருவன்!

நாம் அறிந்த தோழரை வேறொரு ஆளுமையாக நமக்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோசம் தான்!

December 3, 2013

மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்!

தினகரன் பத்திரிக்கை செய்தியில், "ஒரே ஒரு பக்தரை வைத்துக்கொண்டு, மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர்கள் போராட்டம் செய்கிறார்கள்" என ஆலய பாதுகாப்பு குழு என்ற பெயரில் தீட்சிதர் கும்பல் சொல்கிறது.

தமிழ் தீட்டுமொழி என்று அறிவிக்கும் தீட்சிதர்களின் திமிரை ஒடுக்கவும், கொள்ளை போகும் மக்களுக்கான தில்லை கோயிலை மக்களுக்கே மீட்டுக்கொடுப்பதற்காகவும், மழையில் கூட கோயிலுக்கு ஒதுங்காத தோழர்கள் இப்பொழுது அடாத மழையிலும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் போராடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

பக்தர்களாகிய மக்கள் தங்கள் கோயிலுக்காக  போராட்ட களத்திற்கு வரும் வரை தான், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கும், நக்சல்பாரி தோழர்களுக்கும் அங்கு வேலை! மக்களுக்காக காத்திருக்கிறார்கள் தோழர்கள்!