> குருத்து

October 1, 2020

12 years slave (2013)


“I don’t want to survive. I want to Live” – Soloman Northup.

கதை. 1842ல் அமெரிக்காவில் நடக்கிறது. கருப்பினத்தினவரான நாயகன் அமெரிக்காவின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். தச்சராக தொழில் செய்கிறார். வயலின் வாசிப்பவராகவும் இருக்கிறார். இருவர் அவரைத் தேடிவந்து, தாங்கள் சர்க்கஸில் வேலை செய்து வருவதாகவும், சில நாட்கள் அவர் வந்து வயலின் வாசித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்கிறார்கள். அவர்களுடன் செல்கிறார். முதல்நாள் அவர்களுடன் மது அருந்தி, தூங்கப்போனால், விடிந்தால், அவர் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அந்த இருவரும் அவரை ஒரு அடிமையாக விற்றுவிட்டு சென்றிருக்கிறார்கள்.


தான் சுதந்திரமனிதன் என சொல்கிறார். கொடூரமாக அடித்து துவைக்கிறார்கள். மற்ற கருப்பினத்தவர்களுடன் அடிமைச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறார். அவரை ஒருவர் வாங்கிச்செல்கிறார். அடிமைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அடிக்கலாம். அதிகப்பட்சமாக கொல்லலாம். பல்வேறு கொடுமைகளுக்கு பிறகு அவர் மீண்டாரா என்பது முழுநீளக்கதை.


****

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த கருப்பின மக்களை விலங்குகளைப் போல பிடித்து வந்து, அமெரிக்காவில் அடிமை உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். ”ஏழு தலைமுறைகளின் கதை” ”கருப்பு அடிமைகளின் கதை” புத்தகத்தின் மூலம் அந்த வரலாறை நாம் கற்றுக்கொள்ள முடியும்.


பல்வேறு போராட்டங்களின் மூலம் 1865ல் அடிமை முறையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஒரு நூற்றாண்டை கடந்தும், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் மனதில் இன்னும் நிறவெறி இன்னும் சிறுபான்மை வெள்ளையர்களிடம் இருக்கிறது. அதை அவ்வப்பொழுது வெளிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் : ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தனவரை கழுத்தில் அழுத்திக்கொன்ற விவகாரம். போராட்டங்கள் தான் பணியவைத்தது. போலீசை மன்னிப்பு கேட்க வைத்தது. கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வைத்தது.


படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. நடித்தவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள். 12 வருடங்கள் கடந்து போனதை படத்தில் நம்மால் உணரமுடியவில்லை.


அமெரிக்காவில் சாலமன் என்பவர் தனக்கு நேர்ந்த அநீதியை புத்தகமாக எழுதியுள்ளார். அதை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். சிறந்த படம், சிறந்த (நாவலிருந்து தழுவிய) திரைக்கதை, சிறந்த துணைநடிகை என மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது.


பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

Old Boy, Driving Licence, Athiran - ஒரு பார்வை

 



Old Boy (2003) தென்கொரியா

ஒருவனைப் பிடித்துக்கொண்டுப்போய், 15 வருடம் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியே வந்து, கொலை வெறியோடு யாரென தேடித்திரிகிறான். என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லியிருக்கிறார்கள்.


"புறங்கூறாமை" குறித்து நம்ம தாத்தா வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். புறம் பேசுவது எப்பொழுதுமே ஆபத்து என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். முக்கியமான கொரியன் படங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். இதன் வெற்றியில் இந்தியில் கொஞ்சம் கதையை மாற்றி எடுத்திருக்கிறார்கள்.

Driving Licence (2019) மலையாளம்


ஒரு பிரபல திரை நட்சத்திரம். அவருடைய ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிடுகிறது. ஒரு படத்தின் இறுதிக்காட்சிக்காக ஓட்டுநர் உரிமம் தேவைப்படுகிறது. பிரதி எடுக்க வாய்ப்பில்லை. புதிதாக தான் எடுக்கவேண்டிய கட்டாயம். அதை எடுக்கப் போக, அந்த நட்சத்திரத்தின் ரசிகரே அதிகாரியாக இருக்கிறார். ஒரு குழப்பத்தில், இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


ஒரு பிரபலத்தின் புகழ், அதனால் வரும் குழப்பம், அந்த பிரபலம் நிதானம் இழப்பது அதை தொடர்ந்து என்னென்ன சிக்கல்களை அடுக்கடுக்காய் உருவாக்குகிறது என்பது சுவாரசியம். பிரபல நடிகர் Vs பரம ரசிகர் என உருவாக்கியது இன்னும் ஆச்சர்யம் தந்தது. பிரதிவிராஜ், சுராஜ் இருவரும் பிரதான பாத்திரங்கள். அருமையாக செய்திருக்கிறார்கள். ”அய்யப்பனும் கோஷியும்” எடுத்த சாக்சி இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர். அவரை இழந்தது பெரிய இழப்பு தான்.


Athiran (2019) மலையாளம்


ஒரு காட்டுப்பங்களாவில் ஒரு மனநல மருத்துவமனை. அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய நாயகனான மருத்துவர் வருகிறார். அங்கு சில மர்மங்கள் இருப்பதை அறிகிறார். ஒரு பெண்ணை அடைத்து வைத்திருப்பதை அறிகிறார். அந்த பெண்ணை மீட்க போராடுகிறார். இறுதியில் மீட்டாரா என்பது முழு நீளக்கதை.


படத்தில் என்னமோ இருக்கிறது போலவே பில்டப் கொடுக்கிறார்கள். கடைசி வரை ஜவ்வாக இழுத்து 10 நிமிடம் ட்விஸ்டை சொல்லி முடிக்கிறார்கள். முடியல! பகத் பாசில், சாய் பல்லவி இருந்தும் தேறவில்லை. படம் பார்க்கும் பொழுது, Shutter Island நினைவுக்கு வந்து போனது. நீங்களும் எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள் என்பதற்காக தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

Identity (2003)


Identity (2003)

American psychological slasher film


கதை. கடும் மழை. அந்த நெடுஞ்சாலையில் திடீரென ஆறுபோல குறுக்காலே ஓடி, போகவிடாமல் செய்கிறது. அந்த திசையில் காரில் போனவர்கள் எல்லாம் பக்கத்தில் தனித்து இருக்கும் மோட்டலுக்கு வந்து சேர்கிறார்கள்.


ஒரு நடிகை, அவருடைய கார் டிரைவர், அம்மா, அப்பா, ஒரு பையன் என ஒரு குடும்பம், அன்றைக்கு கல்யாணம் செய்த ஒரு இளம் ஜோடி, தனியாக ஒரு பெண், ஒரு கைதி, அந்த கைதியை ஒப்படைக்க செல்லும் ஒரு அதிகாரி என பத்துபேர் வந்துசேர்கிறார்கள்.


முதலில் நடிகை மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரிடம் வேறு ஒரு அறையினுடைய சாவி இருக்கிறது. அந்த கைதியை வந்து தேடுகிறார்கள். அவரை பூட்டி வைத்த அறையில் காணவில்லை. அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். பிறகு அந்த கைதியே கொலை செய்யப்படுகிறார்.


இந்த கொலைகள் ஏன் நடக்கின்றன? யார் செய்தது? என்பதை பரபரவென சொல்லியிருக்கிறார்கள்.


****


அடுத்து என்ன? அடுத்து என்ன? என்பதை சரியாக கொண்டு சென்றிருக்கிறார்கள். 'அந்நியன்' நாயகன் போல கதையின் நாயகனுக்கு மனநிலையில் பிரச்சனை இருக்கிறது. இதற்கும், மோட்டலில் நடக்கும் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்கிறார்கள்.


இந்த மாதிரி சைக்காலஜிக்கல் படங்களில் இறுதி காட்சிகளில் குழப்பவது போலவே இந்த படத்திலும் குழப்பியிருக்கிறார்கள். படம் பார்த்தவர்கள் குழம்பி போய் புலம்புவதை ஆங்காங்கு பார்த்தேன். விமர்சனம் எழுதுகிறவர்கள் ஸ்பாய்லராகிவிடும் என்பதால், அதை எழுதுவதை தவிர்க்கிறார்கள். ஆனால், முடிவை விளக்குவதற்கென்று யூடியூப்பில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடலாம்.


மனித மனம் எவ்வளவு சிக்கலாக இருக்கிறது. சமூகம் இங்கு கோளாறுகள் இல்லாமல் சரியாக இயங்கினால் தான் தனி மனிதர்களும் நன்றாக வாழமுடியும் என்பதை உணரமுடிகிறது.


படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது. பாருங்கள்