“I don’t want to survive. I want to Live” – Soloman Northup.
கதை. 1842ல் அமெரிக்காவில் நடக்கிறது. கருப்பினத்தினவரான நாயகன் அமெரிக்காவின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். தச்சராக தொழில் செய்கிறார். வயலின் வாசிப்பவராகவும் இருக்கிறார். இருவர் அவரைத் தேடிவந்து, தாங்கள் சர்க்கஸில் வேலை செய்து வருவதாகவும், சில நாட்கள் அவர் வந்து வயலின் வாசித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்கிறார்கள். அவர்களுடன் செல்கிறார். முதல்நாள் அவர்களுடன் மது அருந்தி, தூங்கப்போனால், விடிந்தால், அவர் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அந்த இருவரும் அவரை ஒரு அடிமையாக விற்றுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
தான் சுதந்திரமனிதன் என சொல்கிறார். கொடூரமாக அடித்து துவைக்கிறார்கள். மற்ற கருப்பினத்தவர்களுடன் அடிமைச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறார். அவரை ஒருவர் வாங்கிச்செல்கிறார். அடிமைகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அடிக்கலாம். அதிகப்பட்சமாக கொல்லலாம். பல்வேறு கொடுமைகளுக்கு பிறகு அவர் மீண்டாரா என்பது முழுநீளக்கதை.
****
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த கருப்பின மக்களை விலங்குகளைப் போல பிடித்து வந்து, அமெரிக்காவில் அடிமை உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். ”ஏழு தலைமுறைகளின் கதை” ”கருப்பு அடிமைகளின் கதை” புத்தகத்தின் மூலம் அந்த வரலாறை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
பல்வேறு போராட்டங்களின் மூலம் 1865ல் அடிமை முறையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஒரு நூற்றாண்டை கடந்தும், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் மனதில் இன்னும் நிறவெறி இன்னும் சிறுபான்மை வெள்ளையர்களிடம் இருக்கிறது. அதை அவ்வப்பொழுது வெளிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் : ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பினத்தனவரை கழுத்தில் அழுத்திக்கொன்ற விவகாரம். போராட்டங்கள் தான் பணியவைத்தது. போலீசை மன்னிப்பு கேட்க வைத்தது. கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வைத்தது.
படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. நடித்தவர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள். 12 வருடங்கள் கடந்து போனதை படத்தில் நம்மால் உணரமுடியவில்லை.
அமெரிக்காவில் சாலமன் என்பவர் தனக்கு நேர்ந்த அநீதியை புத்தகமாக எழுதியுள்ளார். அதை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். சிறந்த படம், சிறந்த (நாவலிருந்து தழுவிய) திரைக்கதை, சிறந்த துணைநடிகை என மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறது.
பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment