> குருத்து

June 13, 2022

சனாதன தர்மம் என்றால்?


ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது,"

- ஆளுநர் ரவி.
”சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.”

- இணையத்தில் இருந்து...
****
சுருக்கமாக சனாதன தர்மத்தை மக்கள் கடைப்பிடிப்பது மூலம் இந்த மண்ணிலேயே அவர்களுக்கான சொர்க்க பூமியை உருவாக்குவது தான் அவர்களின் நோக்கம். நமக்கெல்லாம் செத்ததுக்கு பிறகு தான் ”சொர்க்கம்”.

Sleep Tight (while you sleep) Spanish Psychological Thriller (2011)


நகரம். சில வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அது. நாயகனுக்கு நடுத்தர வயது. அங்கு வரவேற்பாளராகவும், அங்குள்ள வீடுகளில் சின்ன சின்ன வேலைகள் என்றால் அவனே செய்கிறான். அவனுடைய அம்மா உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கிறார்.


இத்தனை வயது வரை, அவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியில்லை. அப்படி ஏதும் அபூர்வமாய் நடந்தாலும், அவனால் சந்தோசப்படமுடியவில்லை. அதனால், அவனுடன் சுற்றி உள்ளவர்கள் யார் மகிழ்ச்சியாய் இருந்தாலும், உள்ளுக்குள் எரிகிறது. அந்த புன்னகையை, மகிழ்ச்சியை அழித்துவிடவேண்டும் என சிந்திக்கிறான். அதற்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும், இறங்குகிறான்.

அங்கு வாழும் மனிதர்களில் ஒரு பெண் தனியாக வாழ்கிறாள். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறாள். தங்களுக்காக வேலை செய்யும் ஆள் என நாயகனிடம் இயல்பாக பழகுகிறாள். அவளின் ஒவ்வொரு செயலிலும் உள்ள உற்சாகம், புன்னகை அவனை தொந்தரவு செய்கிறது. ஒவ்வொரு வீட்டின் சாவியும் ஒரு டூப்ளிகேட் அவனிடம் இருப்பதால், அவளின் வீட்டிற்குள் நுழைந்து, சின்ன சின்ன வேலைகள் செய்கிறான். அதனால், அவளுக்கு உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.

அவளுக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்புகிறான். விடாமல், கடிதம் எழுதுகிறான். இன்னும் அதைவிட கொடூரமாய், அவள் இரவு வருவதற்கு முன்பு போய் படுக்கைக்கு கீழே ஒளிந்துகொள்கிறான். அவள் வந்து தூங்கியதும், மயக்க மருந்து கொடுத்து, அவளுடன் உறவு கொள்கிறான். காலையில் ஐந்து மணி போல அலாரம் வைத்து கமுக்கமாய் எழுந்து வந்துவிடுகிறான்.

இப்படியே அவன் செய்யும் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள். படத்திலும் இல்லை. அவன் செய்கிற அத்தனை செய்கைகளையும் படுத்த படுக்கையாய் இருக்கிற, பேச முடியாத, ஆனால் கேட்க முடிகிற அவனின் அம்மாவிடம் தான் போய் சொல்வான். அவனுக்கு பேசுவதற்கு வேறு ஆட்கள் இல்லை.

சில படங்களில் நீதி வெல்வதில்லை. இந்தப் படத்திலும்! நடைமுறையில் கூட நீதி எப்பொழுதும் வெல்வதில்லை தானே. ஊரையே கொள்ளையடித்த ஒரு ஆள் வயதாகி மற்றவர்களைப் போல மடிகிறான். அவர்களுக்கு எல்லாம் சமூகத்தில் தண்டனை கிடைத்துவிடுகிறதா என்ன? நீதி கிடைக்கும் படங்கள் ஒருவித நிம்மதியை பார்வையாளனுக்கு தருகின்றன. நீதி கிடைக்காத இந்தப் படம் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. அவனுக்கு ஏன் மகிழ்ச்சி கிடைக்கவில்லை? அப்படியே கிடைத்தாலும், அவனால் ஏன் மகிழ்ச்சிடைய முடியவில்லை? இப்படிப்பட்டவர்களை எப்படி குணப்படுத்துவது? சமூகம் என்ன சிஸ்டம் வைத்திருக்கிறது?. என கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.

குறைவான பாத்திரங்கள் தான். வெறுக்கும் நாயகனாக வரும் Luis Tosar ஸ்பெயினில் முக்கிய நடிகர் என்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது Notify me என்ற தளத்தில் மட்டும் இந்தப் படம் இருப்பதாக Justwatch
தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள். நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன். போகிற போக்கில் ஒன்றிரண்டு அடல்ட் காட்சிகள் உண்டு.

அறத்தை சொல்வோம்!


திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்து, திரை உலக பிரபலங்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். அந்த நிகழ்வை துவக்கி வைத்து பேசியவர் இயக்குநர் மிஷ்கின்.


அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ஓடிடி. திரையரங்கு டிக்கெட் விலை, ஸ்னாக்ஸ் விலை, ஒரு குடும்பம் படம் பார்க்க வேண்டுமென்றால், ஆயிரத்தைத் தாண்டுகிறது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மாதம் ஒரு படம் பார்ப்பது பெரிய விசயம். ஆகையால், மக்கள் திரையரங்குகள் வருவது குறைந்து கொண்டே வருகிறது. இனியும் குறையும். ஆக சமூகம் ஓடிடிக்கு மெல்ல மெல்ல நகருகிறது.

படைப்பாளிகளுக்கு இது சவால் தான். நமக்கு முன்பு ஒரு கதையை சொல்வதற்கு 2.30 மணி நேரம் இருந்தது. காலப்போக்கில் இப்பொழுது 2 மணி நேரமாக குறைந்து இருக்கிறது. ஓடிடியில் இப்பொழுது (30 நிமிடங்களிலிருந்து) ஒரு மணி நேரமாக இன்னும் குறைந்திருக்கிறது. இந்த குறைந்த நேரத்தில் ஒரு கதையை எங்கு துவங்கி, எங்கு முடிக்கப் போகிறோம்.

இன்னொரு பிரச்சனை. இந்திய பார்வையாளர்கள் இப்பொழுது இந்திய வெப் சீரிஸைப் பார்ப்பதில்லை. வெளிநாடுகளின் சீரிஸை தான் பார்க்கிறார்கள் என தகவல் சொல்கிறார்கள். திரையரங்கிலாவது 2 மணி நேரம் நிறுத்தி வைக்கலாம். ஓடிடியில் அப்படி நிறுத்த முடியாது. சில பிரேம்கள் போரடித்தாலும், அடுத்த சீரிஸூக்கோ, அடுத்தப் படத்திற்கோ பார்வையாளர்கள் நகர்ந்து விடுகிறார்கள். நாமே அப்படித்தானே செய்கிறோம்.


உலக அளவில் எப்படிப்பட்ட கதைகளை கையாள்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு பட்ஜெட் கிடைக்கிறது? நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதெல்லாம் கூட சவால் தான். இதை எப்படி எதிர்கொள்ள போகிறோம்?

”ஒரு நொடியில் 24 பொய்கள்” சொல்கிறோம். அதை தெரிந்துகொண்டு தான் ஒரு பார்வையாளன் பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருகிறான். அவனை நாம் ஏமாற்றக் கூடாது. நல்ல கதைகளை தருவது தான் ஒரு படைப்பாளியின் அறம்.

இப்படி பல விசயங்களை அந்த உரையில் பேசியிருக்கிறார். பின்னூட்ட பெட்டியில் அந்த உரையின் சுட்டி தருகிறேன். கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=3Zp4drEHE4E