> குருத்து: Sleep Tight (while you sleep) Spanish Psychological Thriller (2011)

June 13, 2022

Sleep Tight (while you sleep) Spanish Psychological Thriller (2011)


நகரம். சில வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அது. நாயகனுக்கு நடுத்தர வயது. அங்கு வரவேற்பாளராகவும், அங்குள்ள வீடுகளில் சின்ன சின்ன வேலைகள் என்றால் அவனே செய்கிறான். அவனுடைய அம்மா உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கிறார்.


இத்தனை வயது வரை, அவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியில்லை. அப்படி ஏதும் அபூர்வமாய் நடந்தாலும், அவனால் சந்தோசப்படமுடியவில்லை. அதனால், அவனுடன் சுற்றி உள்ளவர்கள் யார் மகிழ்ச்சியாய் இருந்தாலும், உள்ளுக்குள் எரிகிறது. அந்த புன்னகையை, மகிழ்ச்சியை அழித்துவிடவேண்டும் என சிந்திக்கிறான். அதற்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும், இறங்குகிறான்.

அங்கு வாழும் மனிதர்களில் ஒரு பெண் தனியாக வாழ்கிறாள். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறாள். தங்களுக்காக வேலை செய்யும் ஆள் என நாயகனிடம் இயல்பாக பழகுகிறாள். அவளின் ஒவ்வொரு செயலிலும் உள்ள உற்சாகம், புன்னகை அவனை தொந்தரவு செய்கிறது. ஒவ்வொரு வீட்டின் சாவியும் ஒரு டூப்ளிகேட் அவனிடம் இருப்பதால், அவளின் வீட்டிற்குள் நுழைந்து, சின்ன சின்ன வேலைகள் செய்கிறான். அதனால், அவளுக்கு உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.

அவளுக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்புகிறான். விடாமல், கடிதம் எழுதுகிறான். இன்னும் அதைவிட கொடூரமாய், அவள் இரவு வருவதற்கு முன்பு போய் படுக்கைக்கு கீழே ஒளிந்துகொள்கிறான். அவள் வந்து தூங்கியதும், மயக்க மருந்து கொடுத்து, அவளுடன் உறவு கொள்கிறான். காலையில் ஐந்து மணி போல அலாரம் வைத்து கமுக்கமாய் எழுந்து வந்துவிடுகிறான்.

இப்படியே அவன் செய்யும் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள். படத்திலும் இல்லை. அவன் செய்கிற அத்தனை செய்கைகளையும் படுத்த படுக்கையாய் இருக்கிற, பேச முடியாத, ஆனால் கேட்க முடிகிற அவனின் அம்மாவிடம் தான் போய் சொல்வான். அவனுக்கு பேசுவதற்கு வேறு ஆட்கள் இல்லை.

சில படங்களில் நீதி வெல்வதில்லை. இந்தப் படத்திலும்! நடைமுறையில் கூட நீதி எப்பொழுதும் வெல்வதில்லை தானே. ஊரையே கொள்ளையடித்த ஒரு ஆள் வயதாகி மற்றவர்களைப் போல மடிகிறான். அவர்களுக்கு எல்லாம் சமூகத்தில் தண்டனை கிடைத்துவிடுகிறதா என்ன? நீதி கிடைக்கும் படங்கள் ஒருவித நிம்மதியை பார்வையாளனுக்கு தருகின்றன. நீதி கிடைக்காத இந்தப் படம் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. அவனுக்கு ஏன் மகிழ்ச்சி கிடைக்கவில்லை? அப்படியே கிடைத்தாலும், அவனால் ஏன் மகிழ்ச்சிடைய முடியவில்லை? இப்படிப்பட்டவர்களை எப்படி குணப்படுத்துவது? சமூகம் என்ன சிஸ்டம் வைத்திருக்கிறது?. என கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.

குறைவான பாத்திரங்கள் தான். வெறுக்கும் நாயகனாக வரும் Luis Tosar ஸ்பெயினில் முக்கிய நடிகர் என்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது Notify me என்ற தளத்தில் மட்டும் இந்தப் படம் இருப்பதாக Justwatch
தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள். நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன். போகிற போக்கில் ஒன்றிரண்டு அடல்ட் காட்சிகள் உண்டு.

0 பின்னூட்டங்கள்: