திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்து, திரை உலக பிரபலங்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். அந்த நிகழ்வை துவக்கி வைத்து பேசியவர் இயக்குநர் மிஷ்கின்.
அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ஓடிடி. திரையரங்கு டிக்கெட் விலை, ஸ்னாக்ஸ் விலை, ஒரு குடும்பம் படம் பார்க்க வேண்டுமென்றால், ஆயிரத்தைத் தாண்டுகிறது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மாதம் ஒரு படம் பார்ப்பது பெரிய விசயம். ஆகையால், மக்கள் திரையரங்குகள் வருவது குறைந்து கொண்டே வருகிறது. இனியும் குறையும். ஆக சமூகம் ஓடிடிக்கு மெல்ல மெல்ல நகருகிறது.
படைப்பாளிகளுக்கு இது சவால் தான். நமக்கு முன்பு ஒரு கதையை சொல்வதற்கு 2.30 மணி நேரம் இருந்தது. காலப்போக்கில் இப்பொழுது 2 மணி நேரமாக குறைந்து இருக்கிறது. ஓடிடியில் இப்பொழுது (30 நிமிடங்களிலிருந்து) ஒரு மணி நேரமாக இன்னும் குறைந்திருக்கிறது. இந்த குறைந்த நேரத்தில் ஒரு கதையை எங்கு துவங்கி, எங்கு முடிக்கப் போகிறோம்.
இன்னொரு பிரச்சனை. இந்திய பார்வையாளர்கள் இப்பொழுது இந்திய வெப் சீரிஸைப் பார்ப்பதில்லை. வெளிநாடுகளின் சீரிஸை தான் பார்க்கிறார்கள் என தகவல் சொல்கிறார்கள். திரையரங்கிலாவது 2 மணி நேரம் நிறுத்தி வைக்கலாம். ஓடிடியில் அப்படி நிறுத்த முடியாது. சில பிரேம்கள் போரடித்தாலும், அடுத்த சீரிஸூக்கோ, அடுத்தப் படத்திற்கோ பார்வையாளர்கள் நகர்ந்து விடுகிறார்கள். நாமே அப்படித்தானே செய்கிறோம்.
”ஒரு நொடியில் 24 பொய்கள்” சொல்கிறோம். அதை தெரிந்துகொண்டு தான் ஒரு பார்வையாளன் பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருகிறான். அவனை நாம் ஏமாற்றக் கூடாது. நல்ல கதைகளை தருவது தான் ஒரு படைப்பாளியின் அறம்.
இப்படி பல விசயங்களை அந்த உரையில் பேசியிருக்கிறார். பின்னூட்ட பெட்டியில் அந்த உரையின் சுட்டி தருகிறேன். கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=3Zp4drEHE4E
0 பின்னூட்டங்கள்:
Post a Comment