> குருத்து

May 28, 2024

கொலை (2023)



ஒரு இளவயது பாடகி. முதல் காட்சியிலேயே தன் வீட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.


நாயகன் துப்பறிவதில் நிபுணர். பல வழக்குகளை வெற்றிகரமாக கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இப்பொழுது சொந்த பிரச்சனைகளினால் ஒதுங்கி நிற்கிறார். அவரின் மாணவியான ஐ.பி.எஸ் அதிகாரி கேட்டுக்கொண்டதின் பேரில் வழக்கை விசாரிக்க வருகிறார்.

பாடகி என்றாலும், தோற்றத்தில் மாடல் போல இருப்பதால், மாடலிங் துறையில் இருந்து அழைப்பு வருகிறது. மெல்ல மெல்ல புகழ் பெறுகிறார். அந்த துறையில் உள்ள சில அம்சங்கள் பிடிக்காமல் போக, அங்கிருந்தும் துண்டித்து கொள்கிறார். வேறு சில விசயங்களிலும் தலையிடுகிறார். எங்கெல்லாம் முரண்பட்டாரோ அங்கெல்லாம் பகைவர்கள் உருவாகிறார்கள்.

விசாரணையில் அவளுடைய நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரர், மாடலிங் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் என சிலர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். இறுதியில் கொன்றது யார் என விடை சொல்கிறார்கள்.
****


கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் வந்த ஒரு இங்கிலீஷ் படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் நிறைய மெனக்கெட்டு செதுக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, ஓப்பனை, எல்லாம் வடிவத்தில் கைகூடினாலும், திரைக்கதை பலவீனத்தால் படம் நம்மை ஒட்டவிடாமல் வெளியே தள்ளிவிடுகிறது.

அந்த பெண்ணே தன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை சொல்வது போல ஆங்காங்கே காட்சிகள் விரிந்தாலும், அழுத்தம் இல்லை. அதனால், எவன் கொன்னா நமக்கென்ன என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. கொலைக்காக சொல்லப்படும் காரணமும் வலுவாக இல்லை.

பல மொழிகளுக்கு யோசித்து எடுத்திருப்பார்கள் போல! நடிகர்களின் தேர்வு அப்படி இருக்கிறது. ஐ.பி.எஸ் பெண் அதிகாரியாக வரும் ரித்திகா நாயகனான விஜய் ஆண்டனிக்கு துணைக்கு வந்து போகிறார். விஜய் ஆண்டனியாவது நன்றாக செய்தாரா என்றால், ம்ஹூம். அவரும் வந்து போகிறார். ஈர்க்கவில்லை. ஒரு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. “நீ என்னடா பண்ணுற! எங்க அப்பாவிற்கு உதவியாக இருக்கிறேன். உங்க அப்பா என்னடா பண்றார்? அவர் சும்மா இருக்கிறார்”. நாயகி மட்டும் நல்ல தேர்வு.

பாலாஜி கே. குமார் இயக்கி ”விடியும் முன்” என்ற படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் வடிவத்தில் நல்ல மெனக்கெடல் இருக்கும். அந்தப் படத்தின் திரைக்கதை கொஞ்சம் நன்றாக இருந்ததால், தப்பித்துவிட்டது.

பிரைமில் இருக்கிறது.

The outlaws (Crime City) (2017) தென்கொரியா


உண்மைக் கதை. 2004 காலக்கட்டம். தென்கொரியாவின் தலைநகரம் சியோல். அங்குள்ள சைனா டவுன் பகுதியில் சூதாட்ட விடுதிகள், மற்றும் கிளப்புகளை, இன்னபிற வேலைகளை முக்கியமாக இரண்டு குழுக்கள் இயக்கிவருகின்றன. அவ்வப்பொழுது தொழில் போட்டியில் இரண்டு குழுக்களும் மோதிக்கொள்கிறார்கள்.


நாயகன் அந்த மாவட்டத்தின் போலீசு அதிகாரியாக இருக்கிறார். இரண்டு குழுக்களும் மோதிக்கொள்ளும் பொழுது, சட்ட ஒழுங்கு கெடுகிறது என இரண்டு குழுக்களின் தலைவர்களையும் சந்திக்க வைத்து சமாதானம் எல்லாம் செய்துவைக்கிறார்.

இப்பொழுது சீனவைச் சேர்ந்த மூவர் அங்கு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் அங்குள்ள குழுக்களின் தலைமையை கைப்பற்றுவது. ஈவு இரக்கமில்லாமல் ஆட்களை வதைக்கிறார்கள். கொல்கிறார்கள்.

போலீசுக்கு ஏகப்பட்ட அழுத்தமாகிறது. அந்த மூவரையும், அவர்களுடைய ஆட்களையும் பிடித்தார்களா? உண்மைக் கதை என்பதால், அதற்கான தன்மைகளுடன் ஆக்சன் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
****


அந்த மூவரின் மோசமான நடவடிக்கைகளை ஒருபக்கம் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது, இந்தப் பக்கம் நாயகன் அவர்களைப் பிடிப்பதற்கான வேலைகளையும் நகர்த்திக்கொண்டே போகிறார். இருவரும் எப்பொழுது சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்க்கும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும்.

நாயகனின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும். மாபியா கும்பல்களோடு தான் நம்ம வாழ்க்கை. அதனால் அதற்கு தகுந்த மாதிரி, நடந்துகொள்ளவேண்டும் என்பதாக நடந்துகொள்வார்.

உயரதிகாரி தனக்கு உள்ள அழுத்தத்தால், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கடுமையாக திட்டும் பொழுது, வெளியே அழைத்து வந்து, ”அவங்க கடந்த இரண்டு வாரமாக வீட்டுக்கே போகவில்லை. ஆகையால் நமக்கு அழுத்தம் இருக்கலாம். அதை எல்லாம் நாம் அப்படியே காண்பித்துவிடக்கூடாது” என்பார்.

Lee Dong-seok தான் நாயகன். மொத்தப் படத்தையும் தன் தோளில் கொண்டு போகிறார். வில்லனாக வரும் அவரும் அவருக்கு இணையான பாத்திரம். இதன் வெற்றிக்கு பிறகு இன்னும் இரண்டு படங்கள் வந்துவிட்டது.  அவைகளும் நன்றாக இருக்கிறதாம். 

சண்டை பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. தமிழிலும் கிடைக்கிறது. நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன்.

May 27, 2024

12th fail (இந்தி)


மத்தியப் பிரதேச சம்பல் பள்ளத்தாக்கு பகுதி. நாயகன் +2 படிக்கிறார். மாணவர்கள் காப்பியடிக்க அந்த பள்ளி தலைமையே அனுமதிக்கிறது. அதிகாரிகள் சோதிப்பதில் கூண்டோடு பிடிபடுகிறார்கள்.


நாயகனுக்கு ஒரு போலீசு அதிகாரியின் அதிகாரம், நேர்மை பிடித்துப்போகிறது. பள்ளியே காப்பியடிக்க அவர் மட்டும் தெரிந்ததை எழுதி தோல்வியடைகிறார். அப்பா உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவரால் பழிவாங்கப்பட்டு வேலையை இழக்கிறார். மீண்டும் வேலையை பெற முயற்சி செய்கிறார். தொடர்ந்து படிக்கிறார்.

குடும்பத்தை வறுமை வாட்டுகிறது. இருப்பினும் வைராக்கியமாக போலீசு தேர்வுக்கு படிக்க கிளம்புகிறார். மாநில அரசு போலீசு தேர்வுகளை அப்பொழுது நிறுத்தி வைக்கிறது.

ஆகையால், தில்லிக்கு குடிமைப் பணி தேர்வுக்கு நகர்கிறார். கிடைத்த கடுமையான வேலையில் ஒட்டிக்கொண்டு படிக்கிறார். மொத்தம் நான்கு முயற்சிகள் தான். அதற்குள் தேர்ச்சியடைய வேண்டும். இல்லையெனில் பெட்டியை கட்டிக்கொண்டு ஊர்பக்கம் கிளம்பவேண்டியது தான்.

இடையில் காதல் வருகிறது. சோதனைகள் வருகின்றன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, படிப்பை முடித்தாரா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***


உண்மை கதை. இப்பொழுது மும்பையில் போலீசில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். படம் வெளிவந்து, வெற்றி பெற்று, பலரும் அருமை என எழுதிவிட்டார்கள்.

ஒரு படத்தில் விளையாட்டாக சொல்வார்கள். காதலர்கள் ஊரைவிட்டு அல்லது அந்த சூரியன் அந்தியில் மறையும் பொழுது அவர்களும் ஒரு புள்ளியாக மறைந்துபோகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என யாரும் கவலைப்படுவதில்லை!

படத்தின் இறுதியில், நாயகனை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவர் சொல்வார். ”இந்த சிஸ்டத்துக்கு இப்படியும் நபர்கள் வேண்டும்” என்பார். அது ஒரு முக்கியமான வசனம்.

அரசு, அரசாங்கம் இருக்கிறது. கார்ப்பரேட், பெரிய முதலாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் பின்னிலிருந்து இயக்குகிறார்கள் என யாராவது சொன்னால், எப்படி என நீண்ட நாட்கள் மண்டையை குழப்பிக்கொண்டிருந்தேன். லஞ்சம் வழியாக தான் இவர்கள் அந்த சிஸ்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள் என ஜெர்மனிய தாடிக்காரன் தான் தெளிவித்தான்.

சகாயம் ஐ.ஏ.எஸ். சந்தித்த சவால்கள் என தன் அனுபவங்களை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அதிகாரமும், லஞ்சமும் இந்த சிஸ்டத்தை எப்படி ஆக்டோபஸ் போல பிடித்திருக்கிறது என புரிந்துகொள்ளமுடியும். அவர் பலமுறை அதில் சிக்குண்டு, மயிரிழையில் தப்பி வெளியே வந்ததை எழுதியிருப்பார்.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு குரூப் 4 தேர்வில் தேர்வாகி, பத்திர பதிவில் வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அவனுடைய பங்காக ரூ. 300 கொடுத்துள்ளார்கள். மறுத்துவிட்டான். அடுத்த பத்து ஆண்டுகளில் சென்னையில் லஞ்சம் இல்லாத ஒரு இடத்துக்கு நகர்த்திவிட்டார்கள் அல்லது நகர்ந்துவிட்டான். ஏதாவது ஒரு விசேசத்தில் சந்தித்தால், நேர்மையாக இருப்பதால் வரும் பிரச்சனைகளை கதை கதையாக நொந்து சொல்வான். இப்பொழுது அந்த வேலையை உதறிவிட்டு, வழக்கறிஞராக பணிபுரிகிறான்.

ஒரு சிஸ்டம் லஞ்சத்தில் திகழும் பொழுது, நேர்மையாக ஒரு அதிகாரி அதன் பகுதியாக இருக்கிறார் என்பது எவ்வளவு சிரமம் என்பதை மனோஜ் சர்மாவிடம் இப்பொழுது கேட்டால், கதை, கதையாய் சொல்வார். அது தான் சுவாரசியமான, விறுவிறுப்பான சொல்லப்படாத உண்மைக் கதையாக இருக்கும். இந்த மோசமான சிஸ்டம் எத்தனை நேர்மையான மனிதர்களை வதைத்திருக்கிறது. அதிகப்பட்சம் கொன்றிருக்கிறது என்பதை பல உண்மை சம்பவங்களைப் பட்டியலிட்டு சொல்லமுடியும்.

இதை எதிர்மறையாக சொல்லவில்லை. இந்த சிஸ்டம் எத்தனை கோளாறாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்காக சொல்கிறேன். இதை ஒரு புலம்பலாக கூட சொல்லவில்லை. இதை மாற்றுவதற்கு எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.

மற்றபடி படம் எனக்கு பிடித்திருந்தது. முன்னாபாய், 3 இடியட்ஸ் திரைக்கதைகளில் பங்குபெற்று, தயாரித்த வினோத் சோப்ரா தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நல்ல படம். ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள். அதற்கு பிறகு கொஞ்சம் அசைபோடுங்கள்.