உண்மைக் கதை. 2004 காலக்கட்டம். தென்கொரியாவின் தலைநகரம் சியோல். அங்குள்ள சைனா டவுன் பகுதியில் சூதாட்ட விடுதிகள், மற்றும் கிளப்புகளை, இன்னபிற வேலைகளை முக்கியமாக இரண்டு குழுக்கள் இயக்கிவருகின்றன. அவ்வப்பொழுது தொழில் போட்டியில் இரண்டு குழுக்களும் மோதிக்கொள்கிறார்கள்.
நாயகன் அந்த மாவட்டத்தின் போலீசு அதிகாரியாக இருக்கிறார். இரண்டு குழுக்களும் மோதிக்கொள்ளும் பொழுது, சட்ட ஒழுங்கு கெடுகிறது என இரண்டு குழுக்களின் தலைவர்களையும் சந்திக்க வைத்து சமாதானம் எல்லாம் செய்துவைக்கிறார்.
இப்பொழுது சீனவைச் சேர்ந்த மூவர் அங்கு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் அங்குள்ள குழுக்களின் தலைமையை கைப்பற்றுவது. ஈவு இரக்கமில்லாமல் ஆட்களை வதைக்கிறார்கள். கொல்கிறார்கள்.
போலீசுக்கு ஏகப்பட்ட அழுத்தமாகிறது. அந்த மூவரையும், அவர்களுடைய ஆட்களையும் பிடித்தார்களா? உண்மைக் கதை என்பதால், அதற்கான தன்மைகளுடன் ஆக்சன் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
****
அந்த மூவரின் மோசமான நடவடிக்கைகளை ஒருபக்கம் சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது, இந்தப் பக்கம் நாயகன் அவர்களைப் பிடிப்பதற்கான வேலைகளையும் நகர்த்திக்கொண்டே போகிறார். இருவரும் எப்பொழுது சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்க்கும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும்.
நாயகனின் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும். மாபியா கும்பல்களோடு தான் நம்ம வாழ்க்கை. அதனால் அதற்கு தகுந்த மாதிரி, நடந்துகொள்ளவேண்டும் என்பதாக நடந்துகொள்வார்.
உயரதிகாரி தனக்கு உள்ள அழுத்தத்தால், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கடுமையாக திட்டும் பொழுது, வெளியே அழைத்து வந்து, ”அவங்க கடந்த இரண்டு வாரமாக வீட்டுக்கே போகவில்லை. ஆகையால் நமக்கு அழுத்தம் இருக்கலாம். அதை எல்லாம் நாம் அப்படியே காண்பித்துவிடக்கூடாது” என்பார்.
Lee Dong-seok தான் நாயகன். மொத்தப் படத்தையும் தன் தோளில் கொண்டு போகிறார். வில்லனாக வரும் அவரும் அவருக்கு இணையான பாத்திரம். இதன் வெற்றிக்கு பிறகு இன்னும் இரண்டு படங்கள் வந்துவிட்டது. அவைகளும் நன்றாக இருக்கிறதாம்.
சண்டை பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. தமிழிலும் கிடைக்கிறது. நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment