> குருத்து

April 25, 2025

தேங்காய் சட்னியும், ரோபா அணுகுமுறையும்!


மாலை ஏழு மணி போல அந்த கடையை கடந்த பொழுது, பசித்தது. உணவகத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.


ஒரு தோசை சொல்லி… தந்தார்கள். கொடுத்த தேங்காய் சட்னி நன்றாக புளித்தது.
பக்கத்து டேபிள்களில் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதெப்படி எனக்கு மட்டும்? இருந்தும் கேட்டுவிடலாம் என கிச்சனுக்கு போனேன். எல்லோருக்குமே 20 வயது தாண்டாது. இளம் பெண்கள்.

”சட்னி கெட்டு போயிருச்சுமா! புது சட்னி வேண்டும்!” என அந்த பெண்ணிடம் தெரிவித்தேன். அப்படியா! கவனிக்கவில்லையே! என சொல்லி வருத்தம் தெரிவிக்கும் என நினைத்தேன். ஒரு ரோபாவை போல ”அரைச்சிட்டு இருக்காங்க சார்!” என்றது.

அந்த பெண்ணுக்கு பின்னால், இன்னொரு பெண் வேகவேகமாக பார்சலுக்கு அந்த கெட்டுப்போன தேங்காய் சட்னியை ஒரு எந்திரம் போல பார்சல் செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ஒரு மாதிரியாக இருந்தது. ”கெட்டுப்போயிருச்சுன்னு சொன்னேன். அந்த பெண் எதுவும் கேட்காத மாதிரி பார்சல் பண்ணிகிட்டு இருக்கு!” என்றேன். பதிலில்லை.

இந்த பெண்களிடம் பேசி பிரயோஜனமில்லை என புரிந்தது. ”இங்க யாரும்மா மேனேஜர்?” என்றேன். (போய் சொல்லிக்கங்க! என்ற மாதிரி) கை காட்டியது. அந்த இளைஞனும் 2000 கிட்ஸ் தான். “சட்னி கெட்டுப்போயிருச்சு! கெட்டுப் போன சட்னியை பார்சல் பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்றேன்.

என்னுடன் கிச்சனுக்கு வந்தார். சட்னி அரைத்துக்கொண்டிருந்த தகவலைச் சொன்னதும், “சார் உங்க டேபிளுக்கு போங்க! நான் கொடுத்துவிடுகிறேன்” என்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்மா புது சட்னியைக் கொண்டு வந்தார். இப்பொழுது தான் பக்கத்து டேபிள்களில் இருந்து கெட்டுப் போன சட்னியைப் பற்றி புகார் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இளையராஜா - ஒரு நாள் வாழ்க்கை


ஒரு நாள் வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு சமஸ் பேட்டியில் சொல்கிறார்.

திரைப்பட உலகில் பிசியாக இருந்த பொழுது, காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத ஆசிரியர் வீட்டுக்கு வந்துவிடுவார். அரை மணி நேரம் வகுப்பு.

காரை எடுத்துக்கொண்டு பெசண்ட் நகர் கிளம்புவேன். டி.வி. கோபாலகிருஷ்ணன் காத்துக்கொண்டிருப்பார். அவரிடம் கர்நாடக சங்கீதம் பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

ஒருமணி நேரம் பூஜை செய்வேன். 6.50 க்கு ஸ்டுடியோ கிளம்புவேன். 7 மணிக்கு இசை கோர்ப்பு பணி துவங்கிவிடும். ஒரு உதவியாளர் அன்று பதிவு செய்வதற்காக காத்திருக்கும் மெட்டை இசைக் குறிப்புகளை கொண்டு நினைவூட்டுவார். டேப் ரிக்கார்டர் வந்த பிறகு அதில் உள்ள மெட்டை போட்டுக்காண்பிப்பார்.

அந்த பாடலுக்குரிய இசைக் கோர்வைகளை எழுத துவங்குவேன். எந்த பாடலுக்கும் அரை மணி நேரம் தான் எடுத்துக்கொள்வேன். (ஒரே ஒரு பாடல் மட்டும் 45 நிமிடம் ஆகியிருக்கிறது. ) நான் எழுதியதை வைத்து, இசைக் கலைஞர்களையும், பாடகர்களையும் வரச்சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த இடைவேளையில் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.

காலை உணவு சாப்பிட்டுவேன். இசைக்கலைஞர்கள் அவரவர்களுக்கான குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். அதை எப்படி வாசிப்பது என தெரியாது. என்ன பாடலுக்கு வந்தோம் என தெரியாது. ஓவ்வொருவருக்கும் சொல்லிக்கொடுத்து, திருத்தங்கள் செய்து சொல்லிக்கொடுத்து, ரிகர்சல் துவங்கும்.

இந்த வேளையில் பாடலாசிரியர் வருவார். அவருக்கு விளக்கி, பாடலை அரை மணி நேரத்தில் பெற்று, பாடகர்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பாடலை விளக்கி… பயிற்சி கொடுத்து…. மொத்தமாக இசைக் கலைஞர்களோடு பாடலை பாடத் துவங்கி பயிற்சி எடுப்பார்கள். இடையிடையே திருத்தங்கள் செய்வேன். எப்பொழுது பிழையில்லாமல் பாடுகிறார்களோ அப்பொழுது பாடல் பதிவு நடக்கும்.

கொஞ்சம் சிரமமான பாடலாக இருந்தால்… திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருப்பார்கள். பாடல் பதிவின் வேலை (Shift) என்பது 7 முதல் 1 மணி வரை. அதற்குள் பாடலை முடிக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த வேலை நேரத்திற்கு போய்விடும். பெரும்பாலும் 1 மணிக்குள் பாடலை முடித்துவிடுவோம்.

அடுத்த பாடல் இதே போல 2 முதல் 9 வரை தொடரும். அதற்கு பிறகு வீட்டுக்கு போய், கிளம்பி… மீண்டும் பெசண்ட் நகர் போய் கர்நாடக சங்கீத பயிற்சி தொடரும். வீடு திரும்ப 12 மணியாகிவிடும்.

அடுத்த நாள் காலை 4 மணிக்கு மீண்டும் துவங்கும்.

சாதனைக்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது.

நம்ம ஒரு நாள் வாழ்க்கை வந்து வந்து போவது தான் சிரமமாக இருக்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதை தடுக்க முடியாதா? 🙂

வங்கி உணவு நேரம்!


பஞ்சாப் நேசனல் வங்கிக்கு இன்று நேரடியாக‌ போயிருந்தேன். இப்பொழுதெல்லாம் இணையத்திலேயே வரவு செலவு நடப்பதால், வங்கிக்கு போகவேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறது. நண்பர் ஒருவர் ஒரு உதவி கேட்டதால், போயிருந்தேன்.


காசாளர் இருக்கையில் இல்லை. சாப்பிட போயிருப்பதாக தெரிவித்திருந்தார்கள். நான் போகும் பொழுது 2.10. 2.30க்கு காசாளர் வந்து சேர்ந்தார். அதுவரை என்னைப் போல வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.

வங்கியின் தொழில் நேரம் : 10 முதல் 4 மணி வரை எழுதிப்போட்டிருக்கிறார்கள். ஏன் ஒரு ஊழியர் சாப்பிட போகமாட்டாரா! அந்த நேரத்தை தெளிவாக எழுதி போடலாமே! வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் குறையும் அல்லவா! வழக்கமாக 1.30 முதல் 2 மணி வரை இருக்கும் என நினைத்து... 2.10க்கு போனால், அந்த சமயத்தில் சாப்பிட போயிருக்கிறார்.

ஏன் முறையாக தெரிவிக்க‌வில்லை? ஒருவேளை காசாளர் சாப்பிட செல்லும் பொழுது, வேறு ஒரு ஊழியர் தற்காலிக பொறுப்பேற்க வேண்டுமா? இல்லையெனில், அதில் உள்ள நடைமுறை சிக்கலில் அதை செய்யவில்லையா?

நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குறை இருந்தால், எங்களிடம் சொல்லுங்கள் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் வங்கி மேலாளரை இருக்கையில் இல்லை. அவரும் சாப்பிட சென்றுவிட்டார் என நினைக்கிறேன்.

சரி. அங்குள்ள ஒரு பணியாளரிடம் தெரிவித்தால், அவங்க 2.15க்கு தான் சாப்பிட சென்றார் என சிம்பதியுடன் சொல்கிறார். ”அவங்களுக்கான சாப்பாடு நேரத்தை தாரளமாக எடுத்துக்கொள்ளட்டடும். சாப்பாடு நேரம் என ஏன் போர்டில் தெரிவிக்கவில்லை என்றேன்?” புன்னைகைத்து அமைதியாகிவிட்டார். அவரிடம் பதில் இல்லை.

குறுஞ்செய்தியில்... வங்கிக்கு சென்று வந்த அனுபவம் கேட்டார்கள். வந்த பொழுது காசாளர் சாப்பிட சென்றிருக்கிறார். போர்டில் உணவு நேரத்தை எழுதிப் போடுங்கள். இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தேன்.

நான் சொல்வது சரியா? உங்கள் அனுபவம் என்ன?