> குருத்து

October 18, 2008

ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 - பாதாள சாக்கடை கொலைகள்!


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டவிரோதம் என 1993ம் ஆண்டு அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கலாம் என சட்டத்தில் இருக்கிறது.

- 15 ஆண்டுகளுக்கு பிறகு, இப்பொழுது உயர்நீதி மன்றம் பொதுநல மனு ஒன்றை விசாரித்து, மேற்கண்ட சட்டத்தை அரசு அதிகாரிகளுக்கு நினைவுப்படுத்தியிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில், ஒரு வருடத்திற்கு பாதாளச் சாக்கடையில் இறந்தவர்களின் மன்னிக்கவும் கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை 22327. இதில் 99.99% பேர் தாழ்த்தப்பட்டோர்.

இந்த நாடு வல்லரசு ஆவது பற்றி, இன்றைக்கு கூட செய்திதாள்களில் அப்துல்கலாம் நினைவுப்படுத்தியிருக்கிறார்.

அவலச் சிரிப்பு மனதிற்குள் எழுகிறது.

கீழ்க்கண்ட கட்டுரை,புதிய ஜனநாயகத்தில் கடந்த மார்ச் 2008ல் வெளிவந்த கட்டுரை. இந்த செய்திக்கு பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக விளக்குகிறது.

*****

கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாத போலீசு, இராணுவ, துணை இராணுவப் படையினரில், 1990 முதல் 2007 மார்ச் மாதம் வரை மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 5100 பேர். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாண்டு போன அச்சிப்பாய்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் கருணைத் தொகையும் ஓய்வூதியமும் பதக்கங்களும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ஏறத்தாழ 22,000 பேர் துப்புரவுப் பணியாற்றும்போது மாண்டு போகிறார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரணமோ, உதவிகளோ செய்யப்படுவதில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அரியானா மாநிலத்தின் ஹல்தேரி கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயதான குமார் காஷ்யப் என்ற சிறுவனை மீட்க இராணுவப் படை விரைந்தது. மீட்புப் பணியைப் பார்வையிட மாநில முதல்வர் ஹூடா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே குவிந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டதை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. நாளேடுகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு ரூ. 7 இலட்சம் பெறுமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது நச்சுவாயு தாக்கி தத்தளிக்கும் துப்புரவுத் தொழிலாளியை மீட்க எந்த இராணுவமும் வருவதில்லை. இராணுவம் கிடக்கட்டும்; தீயணைப்புப் படையின் மீட்புக் குழுகூட வருவதில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்ப்பதில்லை. மாண்டுபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமும் இல்லை.

மனிதக் கழிவுகள், அடுப்பங்கரைக் கழிவுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆடுமாடுகளின் கழிவுகள், இறைச்சிக்கூட கழிவுகள் என அனைத்தும் பாதாளச் சாக்கடையில் பாய்கின்றன. பெருநகரங்களில் இப்பாதாள சாக்கடைகளில் ஆங்காங்குள்ள மனிதக் குழி மூடிக ளைத் திறந்து வெற்றுடம்புடன் இறங்கி துப்புரவுத் தொழிலாளர் அடைப்புகளை அகற்றுகின்றனர். டெல்லி மாநகரில் ஏறத்தாழ 5600 கி.மீ. நீளத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள பாதாள சாக்கடையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான திறப்புக் குழிகள் உள்ளன. சென்னையில் 2800 கி.மீ. நீளத்துக்கு ஏறத்தாழ 80,000க்கும் மேற்பட்ட திறப்புக் குழிகள் உள்ளன. அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் இக்குழிகளில் இறங்கி மூழ்கி எழுகின்றனர்.

மூழ்கி எழுந்தால் உடலெங்கும் கழிவுகள் படிந்து துர்நாற்றம் குடலைப் புரட்டும். பாதாள சாக்கடையில் மூச்சை அடக்கி மூழ்கும்போது கழிவுகள் உதட்டில் படியும். மீண்டு வெளியே வந்து உடலைக் கழுவிய பிறகும் நாற்றம் அருவருப்பூட்டும். பச்சைத் தண்ணீரைக் குடித்தால் கூட குமட்டும்.

பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அழுகியும் நொதித்தும் பலவகை நச்சு வாயுக்கள் உருவாகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு எனும் கொடிய நச்சு வாயு மூளைக்குச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து மயக்கத்தையும் மரணத்தையும் விளைவிக்கும். மீதேன் என்பது இன்னுமொரு கொடிய நச்சு வாயு. இதுவும் மரணத்தை விளைவிக்கும். இவை தவிர கரியமலவாயு, கார்பன் மோனாக்சைடு முதலான நச்சு வாயுக்களும் துப்புரவுத் தொழிலாளிகளைத் தாக்குகின்றன. வாடையோ நிறமோ இல்லாத சில கொடிய நச்சுவாயுக்களைக் கண்டறியவும் முடியாது. பாதாள சாக்கடையின் மனிதக் குழி எனும் மரணக் குழியில் இறங்கி திடீர் மரணமடைவது மட்டுமின்றி, பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளுக்கும், தோல் நோய்களுக்கும் பலியாகின்றனர்.

""நச்சு வாயு உள்ளதா என்று சோதித்தறிய எங்களுக்கு எவ்வித சாதனமும் வழங்கப்படுவதில்லை. பாதாள சாக்கடையின் மனிதக்குழி மூடிகளைத் திறந்து பார்ப்போம். கரப்பான்பூச்சிகள் ஓடினால் பிரச்சினை இல்லை. அவை செத்துக் கிடந்தால் அபாயம். இதுதான் நச்சுவாயு உள்ளதா என்பதைக் கண்டறிய நாங்கள் வைக்கும் சோதனை. கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தால் நச்சுவாயு உள்ளதாகத் தீர்மானித்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு, பின்னர் குழியில் இறங்குவோம்'' என்கிறார் கிருஷ்ணையா என்ற துப்புரவுத் தொழிலாளி.

""நாங்கள் குழியில் இறங்கி, தீக்குச்சியைப் பற்ற வைத்து கீழே பிடித்துப் பார்ப்போம். தீக்குச்சி சுடர்விட்டு எரிந்தால் நச்சுவாயு உள்ளதாக முடிவு செய்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு குழியில் இறங்குவோம்'' என்று இன்னுமொரு சோதனை முறையைக் கூறுகிறார் முனியசாமி என்ற தொழிலாளி.

மூங்கில் குச்சிகள்தான் அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளிகளுக்குத் தரப்படும் சாதனம். சில நேரங்களில் இரும்புக் கம்பிகள் தரப்படும். ""குழியினுள் மூழ்கி மூச்சை அடக்கி மூங்கில் குச்சியால் குத்தி அடைப்புகளை உடைக்கும்போது, திடீரென உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெள்ளமெனப் பாய்ந்து எங்களை இழுத்துச் சென்றுவிடும். எதிர்நீச்சல் போட்டு எழமுடியாமல் மாண்டவர்கள் ஏராளம்'' என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சதீஷ் என்ற துப்புரவுத் தொழிலாளி.

பாதாள சாக்கடைக்குள் இறங்கும் துப்புரவுத் தொழிலாளிக்கு கயிறு மட்டும்தான் பாதுகாப்புச் சாதனமாகத் தரப்படுகிறது. கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டு பாதாள சாக்கடைக்குள் மூழ்கும் தொழிலாளி அபாயம் ஏற்படும்போது கயிறை அசைத்தால், மேலே கயிறைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு தொழிலாளி அவரை இழுத்து மேலே தூக்குவார். ""பல நேரங்களில் மாண்டு போன சக தொழிலாளியின் பிணத்தைத் தூக்குவதற்குத்தான் இந்தக் கயிறு பயன்பட்டிருக்கிறது'' என்று விம்முகிறார் இராமையா என்ற தொழிலாளி.

ஆனால், மேலைநாடுகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் துப்புரவுத் தொழிலாளிக்கு சாக்கடைக் கழிவுகள் உடலில் படாதிருக்க கவச உடைகள் தரப்படுகின்றன. மூச்சுக் கவசங்கள், கைகால்களுக்கான தனிச்சிறப்பான உறைகள் தரப்படுகின்றன. பாதாள சாக்கடையில் துப்புரவுத் தொழிலாளி இறங்குமுன் நச்சுவாயு உள்ளதா என்று நவீன கருவிகளைக் கொண்டு சோதிக்கப்படுகிறது. குழியில் இறங்கியதும் எந்திர விசிறி மூலம் காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளிக்கென தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு தொழிலாளியும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், கயிறுதான் துப்புரவுத் தொழிலாளிக்குத் தரப்படும் பாதுகாப்புக் கவசம். இத்தொழிலுக்கென எவ்வித சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் என்பதாலேயே துப்புரவுத் தொழிலாளிகள் நம் நாட்டில் நரபலி கொடுக்கப்படுகிறார்கள். டெல்லி குடிநீர்வடிகால் வாரியத்தில் மட்டும் கடந்த 2005ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 200 துப்புரவுத் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தொழிலாளிகளில் 95% பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் கண்நோய்கள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறு, மஞ்சள் காமாலை நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். ஓய்வு பெறுமுன்னரே பெரும்பா லான தொழிலாளிகள் நோய் தாக்கி மரணமடைகின்றனர். சராசரியாக 45 ஆண்டுகள்தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைக் காலமாக உள்ளது. அபாயகரமான இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு சம்பளத்தோடு பேரிடர் உதவித் தொகையாக ரூ. 50 முதல் ரூ. 200 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து பாதாளச் சாக்கடையில் இறங்கும் அதேநேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆறு மாதங்களில் இச்சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிக்கு மாதம் ரூ. 12,000 கூட ஊதியமாகக் கிடைப்பதில்லை. ""எல்லா பாதுகாப்புக் கவசங்களுடன் ரூ. 50,000 வரை சம்பளம் கொடுத்தாலும் பார்ப்பனர்களும் ஆதிக்கச் சாதியினரும் இத்தொழிலைச் செய்ய முன்வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமே இத்தொழிலை நிர்ப்பந்தமாகச் செய்யுமளவுக்கு இங்கே தீண்டாமை புரையோடிப் போயுள்ளது'' என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார், தாழ்த்தப்பட்ட வால்மீகி சங்கப் பிரமுகரான புருசோத்தமன் வகேலா.

""ஏதோவொரு கம்பெனியின் ஆதாயத்துக்காக டெல்லி மாநகராட்சி 50 பாதுகாப்புக் கவசங்களை வாங்கியது. இங்கு நாங்கள் 800 பேருக்கு மேல் இருக்கும்போது, யார் இதை அணிய முடியும்? மேலும் அதன் எடையோ 18 கிலோ. இது தவிர வாயுக்கலன் எடையோ 13 கிலோ. இவற்றைச் சுமந்துக் கொண்டு சாக்கடை குழியில் இறங்கினால், மீண்டு வர முடியாமல் அங்கேயே சமாதி ஆக வேண்டியதுதான்'' என்று பாதுகாப்புக் கவசங்களின் யோக்கியதையும் அரசின் அலட்சியத்தையும் சாடுகிறார் டெல்லியைச் சேர்ந்த துக்காராம் என்ற தொழிலாளி.

ஆனால் அரசோ, நாங்கள் பாதுகாப்புக் கவசம் வழங்கியும் கூட, அவற்றைத் துப்புரவுத் தொழிலாளிகள் பயன்படுத்துவதில்லை என்று பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறது. இதேபோல அடிக்குழாய் மூலம் சேற்றை உறிஞ்சும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு, நம் நாட்டு பாதாள சாக்கடைகளுக்குப் பொருத்தமில்லாததால் துருப்பிடித்து கிடக்கின்றன.

தனியார்மயக் கொள்கை தீவிரமாக்கப்பட்ட பிறகு, பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இத்தனியார் நிறுவனங்கள் அற்பக் கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி கொழுத்த ஆதாயமடைகின்றனவே தவிர துப்புரவுத் தொழிலாளிக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதில்லை. ஆபத்தான பாதாள சாக்கடைப் பணிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளி மாண்டு போனால், அற்பத் தொகையை நிவாரணமாகக் கொடுப்பதற்கு மேல் அவை வேறொன்றும் செய்வதில்லை. ஒப்பந்தத் தொழிலாளி என்பதால் வழக்கு விசாரணையும் நடப்பதில்லை. அரசோ இது ஒப்பந்த நிறுவனத்துக்கும் தொழிலாளிக்குமான தாவா என்று கூறி, கை கழுவிக் கொள்கிறது. கடந்த மார்ச் 2006லிருந்து ஆகஸ்ட் 2007 வரை டெல்லியில் 14 துப்புரவுத் தொழிலாளிகள் பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்போது மாண்டு போயுள்ளனர். இவர்களில் 12 பேர் ஒப்பந்தக் கூலிகள். இவர்களது குடும்பத்தாருக்கு எவ்வித நிவாரணமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று ஏற்கெனவே குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், நாடெங்கும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியே விரிவடைந்து வருகிறது. இத்தகைய ஒப்பந்த முறையானது, துப்புரவுத் தொழிலாளிகளின் உயிரைப் பறிப்பதோடு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலையையும் பறிக்கிறது. சென்னை மாநகராட்சி, 2003ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் துப்புரவுப் பணியை ஒரு கோடி ரூபாய் ஏலத்துக்கு கே.கே.குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் கையளித்தது. அத்தனியார் நிறுவனமோ பாதாள சாக்கடையில் மூழ்கி மூச்சை அடக்கி நீந்திச் சென்று அடைப்புகளை நீக்கும் தனிச்சிறப்பான நீச்சல் பணியாளர்கள் 250 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அற்ப கூலிக்கு அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக மதிப்பது ஒருபுறமிருக்க, தான் இயற்றிய சட்டத்தையே இந்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டு, துப்புரவுத் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்டோரை நாயினும் கீழானவர்களாகவே நடத்தி வருகிறது. மனித மலத்தைத் தலையில் சுமப்பது, உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது ஆகியன 1993ஆம் ஆண்டில் இந்திய அரசால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்படும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கும் தொடரப்படும். இருப்பினும் மலம் அள்ளும் துப்புரவுப் பணி இந்திய அரசாலேயே சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் மலம் அள்ளும் தொழில் இன்னமும் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. இரயில்வே துறையில் ஏறத்தாழ 14,500 ரயில் பெட்டிகளில் பழங்கால முறையிலான கழிவறைகளே நீடிக்கின்றன. ரயில் நின்ற பிறகுதான் பயணிகள் கழிப்பறைக்குச் செல்வதால் ரயில் நிலையங்கள் மலக்காடாகின்றன. மனிதர்கள் மலம் அள்ள சட்டபூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், 6856 ரயில் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரான துப்புரவுத் தொழிலாளிகளே மலம் அள்ளும் வேலையைச் செய்கின்றனர். இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புக ளும் பலமுறை போராடிய போதிலும், வழக்கு தொடுத்த போதிலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ரயில் பெட்டிகளில் நவீன கழிப்பறைகளை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், அதிக செலவு பிடிப்பதால் திட்டம் தாமதமாகிறது என்றும் பசப்பி வருகிறது இரயில்வே துறை.

இரயில்வே துறையிலேயே சட்டவிரோதமாக இக்கொடுமை தொடரும்போது, நகராட்சிகள் பஞ்சாயத்துக்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. துடப்பம், இரும்புவாளி, தகர முறத்தோடு இன்னமும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை அள்ளும் கொடுமை பல மாநிலங்களில் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நாடெங்கும் ஏறத்தாழ 13 லட்சம் தாழ்த்தப்பட்டோர் மனித மலம் அள்ளுவதைச் செய்து வருவதாக துப்புரவுத் தொழிலாளர் சங்கம் (சஃபய் கரம்சாரி அந்தோலன் குஓஅ) கூறுகிறது. இச்சட்டவிரோத சமூகக் கொடுமைக்கு எதிராக இச்சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, எல்லா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மனித மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி என்று யாருமே இல்லை என்றும் கூசாமல் புளுகின. மேலும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் மாற்று வேலைவாய்ப்பும் செய்யப்பட்டதாகவும் அவை கணக்குக் காட்டி ஏய்த்தன.

இரயில்வே முதற்கொண்டு நகராட்சிகள் பஞ்சாயத்துகள் வரை மலம் அள்ளுவது உள்ளிட்ட துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதால், மைய அரசும் மாநில அரசுகளும் தாங்கள் மலம் அள்ளும் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தவில்லை என்று கூறி மோசடி செய்கின்றன. மேலும், துப்புரவுப் பணி என்பது மாநில அரசின் பொறுப்பு என்கிறது மைய அரசு. இதன்படி மலம் அள்ளுவதும் துப்புரவுப் பணிதான் என்பதாகச் சுருக்கி, இச்சமூகக் கொடுமையை சாதாரண துப்புரவு சுகாதாரப் பிரச்சினையாகச் சுருக்கி விட்டது மைய அரசு.

மனித மலத்தை அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை இச்சமூகக் கொடுமை தொடர்ந்த போதிலும், இதுவரை ஒரு வழக்கைக் கூட அதிகார வர்க்கமோ, போலீசோ பதிவு செய்யவில்லை. இச்சட்டம் வெறும் காகிதச் சட்டமாகவே உள்ளது. துப்புரவு அதிகாரி, சுகாதார அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமே இச்சட்டத்தின்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளியால் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். அரசு எந்திரத்தில் உள்ள சாதிவெறி கொண்ட அதிகார வர்க்கம் இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவது இன்னுமொரு மூட நம்பிக்கைதான்.

மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு வேறு தொழில் செய்து பிழைக்க தாழ்த்தப்பட்டோர் முயுற்சித்தாலும், பார்ப்பன இந்துமத சாதியக் கட்டுமானம் அவர்களை மீண்டும் பழிவாங்குகிறது. அரியானா மாநிலத்தின் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா தேவி எனும் இளம் பெண், சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு, வங்கியில் கடன் பெற்று கிராமத்தில் துணி வியாபாரம் செய்தார். பிணங்களின் மீது இறுதியாகப் போர்த்தப்படும் துணிகளைக் களவாடி அவர் துணி வியாபாரம் செய்வதாக ஆதிக்க சாதியினர் வதந்தியைப் பரப்பி, அவரது வியாபாரத்தையே முடமாக்கினர். நட்டமடைந்த அவர் வியாபாரத்தை விட்டு, வேறு வழியின்றி இப்போது மீண்டும் மலம் அள்ளும் தொழிலையே செய்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹாரப்பா நாகரிக காலத்தில் கூட, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, செங்கற்களிலான கால்வாய் மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துக் காட்டுகின்றன. ஆனால் தொழில்நுட்பப் புரட்சி நடக்கும் இன்றைய நவீன காலத்தில் இன்னமும் நம்நாட்டில் மனித மலத்தை அள்ளும் கொடுமை தொடர்கிறது. நாடெங்கும் நவீன கழிப்பறைகளைக் கட்டியமைத்து இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த, போதிய நிதி இல்லை என்று அரசு வாதிடுவது மிகப் பெரிய மோசடி. சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப ""சந்திராயன் ஐஐ'' திட்டத்துக்கு ரூ. 386 கோடியை அரசு வாரியிறைக்கிறது. ஆனால், மலம் அள்ளும் கொடுமையை நிறுத்தவும், பாதாள சாக்கடைகளை நவீனப்படுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் நரபலி கொடுக்கப்படுவதைத் தடுக்கவும் மட்டும் நிதியில்லையாம்!

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஏழாண்டுகளில் ரூ. 1,20,536 கோடிகளை நகராட்சிகளுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் மைய அரசு வாரியிறைத்துள்ளது. இதில் ஏறத்தாழ 40% தொகை வடிகால்கள், பாதாள சாக்கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீண்டும் பழைய வழியிலான பாதாளச் சாக்கடைக் குழாய்களும் மனிதக் குழிகளும் அமைக்கப்படுகின்றனவே தவிர, துப்புரவுத் தொழிலாளிகளின் பாதுகாப்புக்காக சல்லிக்காசு கூட செலவிடப்படுவதில்லை. ஏனெனில், அருவருப்பான ஆபத்தான தொழில் என்றாலும், பாதாள சாக்கடையைத் துப்புரவு செய்ய மலிவான உழைப்புக்கு தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்கிற அரசின் சாதியத் திமிர் தான் இதற்குக் காரணம்.

அதிகார வர்க்கம், போலீசுஇராணுவம், நீதித்துறை அடங்கிய இன்றைய அரசு எந்திரம்தான், சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக மலம் அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்டோரை நிர்பந்தமாகத் தள்ளுகிறது. எவ்விதப் பாதுகாப்போ நிவாரணமோ இன்றி, பாதாள சாக்கடைதுப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரை தொடர்ந்து நரபலி கொடுத்து வருகிறது. அவர்களை அறிந்தே தீராத கொடிய நோய்களில் தள்ளி வதைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்றே இத்தொழிலை ஒதுக்கி பார்ப்பன சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காக்கிறது. தீண்டாமைக்கும், தொடரும் இக்கொடுமைக்குமான முதல் குற்றவாளியே இன்றைய அரசமைப்புதான்.

கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சாதியத் திமிர் கொண்ட இக்கேடுகெட்ட அரசமைப்பை வீழ்த்தாமல் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோர் நரபலியாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட முடியாது. உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசை நிறுவாமல் மனித மலம் அள்ளும் சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டவும் முடியாது.

· பாலன்

(அனுமதியுடன்)

September 18, 2008

இனி மெல்ல, மெல்ல இருளும், தமிழகம்!




கடந்த சில ...மன்னிக்கவும்... பல நாள்களாக மின்சாரம் இல்லாது, இருளில் மூழ்கி கிடந்தது தமிழகம். பதிலாய், ஆற்காடு வீராச்சாமி வருண பகவானும் (!), வாயு பகவானும் (!) தன் கடமையை சரி வர செய்யாதது தான் காரணம் என்றார்.

வீராச்சாமி தி.மு.க காரராய் இருப்பதால், கை காட்டியதோடு நின்றுவிட்டார். இவரே, பாரதிய ஜனதாவில் அமைச்சராய் இருந்திருந்தால் மாநிலங்கள் முழுவதும் யாகங்கள் நடத்தச் சொல்லி ஆலோசனை சொல்லியிருப்பார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இம்பூட்டு மின்சார சப்ளையாம். ஒரு இந்தியனாய் நாம் பெருமைப்பட்டு கொள்ள வேண்டிய முக்கிய செய்தி இது.

வருண பகவான்(!) கருணையில் மழையும், வாயு பகவான்(!) காற்றாலைகளையும் இயக்கியதால் தமிழக மக்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டோம்.

இதெல்லாம் எல்லோரும் அறிந்த பழைய செய்தி.

புதிய செய்தி, மின்சார வெட்டிலிருந்து தப்பித்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனி தான், மிகப் பெரிய சிக்கலே இருக்கிறது.

தமிழக மின்சார வாரியத்தின் உபரி நிதி (இது வணிகவியல் சொல்லாடல். புரிகிற மாதிரி சொன்னால் லாபம். மின்சார வாரியம் லாப நோக்கமற்ற அமைப்பின் கீழ் வருவதால், லாபம்
என சொல்லக்கூடாது). கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டே வந்து, இப்பொழுது இழப்பில் வந்து நிற்கிறது. (அதாவது நட்டத்தில்)

ஆண்டும் உபரியும்

2002-03 1712 கோடி
2003-04 747 கோடி
2004-05 850 கோடி
2005-06 805 கோடி
2007-08 455 கோடி (நன்றி - தினமலர் (16.09.08)

நடப்பு ஆண்டில் 1421 கோடி இழப்பாகி இருக்கிறது.

இதற்கு காரணமாய் சொல்லப்படுவது என்னவென்றால்.... மின்சார பற்றாக்குறையும், அதனால் அதிக விலைக்கு தனியாரிமிருந்து கொள்முதல் செய்வதால் ஏற்படும் மிகை செலவு. பிறகு, நிறைய திட்டங்களுக்கு தரப்படுகிற இலவச மின்சாரம் தான்.

மானியம் யாருக்கு தருகிறார்கள் என்றால்,

விவசாயிகளுக்கு,
சொந்தமாக தறி வைத்திருந்து தாமே நெய்யும் நெசவாளிகளுக்கு,
இலவச கலர் டிவி பெற்ற வீடுகளுக்கு,
சமத்துவபுர வீடுகளுக்கு,
இலவசமாய் இரண்டு ஏக்கர் நிலம் பெற்றவர்களுக்கு,
முதன்முதலாய் தொழில்கள் தொடங்குவோருக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும்,
பிறகு... சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு.

அரசின் நிதி, தொழிற்கொள்கைகள், நடப்பு நிகழ்வுகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால்....
வருங்காலத்தில் யார் தேறுவார்கள் என பறவைப் பார்வை பார்த்தால்....

இந்த தேசத்தில் பாவப்பட்ட ஜென்மங்களாய் போனவர்கள் விவசாயிகள். இந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள், உலகத்துக்கே தெரிந்து, அசிங்கப்பட்டு போன பின்பு, மத்திய அரசு 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்தது. (அதில் உள்ள கோளாறுகள் தனி)

அடுத்து, நெசவாளிகளுக்கு. விவசாயத்திற்குப் பிறகு, அதிக மக்களுக்கு வாழ்வு தருகிற தொழில். மதுரையில் செல்லூர் என்ற பகுதி கைத்தறிக்கு புகழ் பெற்ற பகுதி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தினமணியின் வணிகமணி பகுதியில், "தெற்கு ஆசியாவிலேயே கைத்தறித் துண்டு அதிக உற்பத்தி செல்லூரில் தான்" என படித்திருக்கிறேன்.
இன்றைக்கு அந்த பகுதி எப்படியிருக்கிறது என விசாரித்துப் பார்த்தால்... தொழில் நசிந்து போய், பல குடும்பங்கள் ஜெயமங்கலம், வெள்ளக்கோயில், சென்னிமலை என இடம்
பெயர்ந்து விட்டார்கள். வாழ்வுக்காக குறைந்த விலையில் கிட்னி விற்று கொண்டிருக்கிறார்கள் என செய்திகளில் படிக்கிறோம். இவர்களும் தேற மாட்டார்கள்.

இலவச டி.வி. பல காலத்துக்கு வேலை செய்யாது என்பது பலரும் அறிந்த செய்தி தான். எனவே, அவைகளும் தேறாது.

முன்பு போல, ஒரு பேச்சுக்குக் கூட இப்பொழுதெல்லாம், தேர்தலில் பங்கெடுக்கிற எந்த கட்சிகளும் சமத்துவம், சமூக நீதி என்றெல்லாம், மறந்தும் கூட பேச மறுக்கிறார்கள். ஆகையால், சமத்துவபுரங்கள் இனி எழாது.

நவீன இயந்திரங்கள், இறக்குமதிக்கு இருந்த தடைகளை நீக்கி விட்டதினாலும், அரசால் புறக்கணிக்கப்படுவதின் மூலம் சிறிய தொழில்கள் திட்டமிட்டே அழிக்கப்படுவதை நாம் கண் முன்பே பார்த்துக்கொண்டேயிருக்கிறோம். ஆகையால், இனி அவர்களும் தேறமாட்டார்கள்.

இந்த பட்டியலில் தேறுபவர்கள் எனப் பார்த்தால்... பிரகாசமாய் பளிச்சிடுகிறவர்கள் "சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் தான்".

நமது உள்துறை அமைச்சர் ஸ்டாலின்

பன்னாட்டு நிறுவங்களின் வருகையால்.... "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உற்பத்தியை விட, கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி 100 சதவிகித உற்பத்தி
பெருகிவிட்டது.. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் செலவை விட, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் செலவு 11% குறைகிறது என பன்னாட்டு நிறுவனமான நோக்கியா சந்தோசமாய்
சொன்னது" என உளப்பூரிப்புடன் சொல்கிறார். கொழுத்த பன்னாட்டு நிறுவங்களுக்கு கோடிகளில் லாபம். எல்லாம் இழந்து நிற்கும் மக்களுக்கு 1ரூ. அரிசி. அண்ணாவின் கனவுத் திட்டமாம். (Operation success. Patient died)



பன்னாட்டு நிறுவனங்கள் - நமது விவசாய நிலங்கள், நம்முடைய நிலத்து நீர், மலிவான விலையில் மனித உழைப்பு என பயன்படுத்திக் கொண்டு, கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
இது தவிர அரசு கலால் வரி விலக்கு, விற்பனை வரி விலக்கு, இலவச மின்சாரம் - என சலுகைகளை அள்ளித் தருவது ஏன்? மின்சாரம் இங்கு மிதமிஞ்சிய உற்பத்தியெல்லாம்
கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்கையில் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு, அதிக விலைக்கு வாங்கி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக தருகிறார்கள்.


கோவையில் சிறிய, நடுத்தர, பெரிய என 3000 பஞ்சாலைகள் இருக்கின்றன. அதன் சங்கத் தலைவர் "பன்னாட்டு நிறுவங்களுக்கு என்னென்ன சலுகைகள் தருகிறீர்கள் என அரசு விளக்க வேண்டும்" எனக் கேட்கிறார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இரகசியமாக இருக்கின்றன. அரசு இது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என கோரிக்கை தற்பொழுது எழுந்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கட்டமைப்பிலேயே "365 - நாட்களும் தடையில்லா மின்சாரம்" தர வேண்டும் ஒரு விதி இருக்கிறது. நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. நம் வீடுகள், நம் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் எல்லாம் இருளில் மூழ்கி கிடக்கும் பொழுது, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் தங்கு தடையின்றி
தானே வழங்கியிருப்பார்கள். (இது சம்பந்தமாக வலையில் தேடிப் பார்த்ததில், எந்த தகவலும் இல்லை. அங்கு வேலை செய்கிற தொழிலாளர்கள் தான் தெரியப்படுத்த வேண்டும்.)

ஏற்கனவே தமிழகத்தில் இயங்குகிற நோக்கியா, மகேந்திரா சிட்டி, இன்னும் இரண்டும் போக.... தமிழகத்தில் புதிதாக 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாகப் போகிறதாம்.
பணிகள் தொடங்கப்பட்டு, சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன. இனி அவைகளுக்கும், இலவச மின்சாரம் தடையின்றி தருவார்கள். ஒரு கட்டத்தில், நட்டத்தில் இயங்குவதாய் சொல்லி,
தமிழக மின்சார வாரியத்தின் தலையில் துண்டைப் போர்த்தி, இழுத்து மூடிவிடுவார்கள். பிறகு, சிறப்பு பொருளாதாரத்தில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் மின்சாரம் தயாரித்து,
யூனிட்டுக்கு இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு நம்மிடமே விற்பார்கள்.

யூனிட் 1ரூ, 2 ரூ என்று இருக்கும் பொழுதே, மக்கள் வரிக் கட்ட திணறுகிறார்கள். யூனிட் 20 ரூ. 30 ரூ. என்றால்...

இனி, தமிழகம் மெல்ல மெல்ல இருளும்! என்பது இப்பொழுது உணர முடிகிறது அல்லவா!

இருளை விரட்டாமல் வெளிச்சம் வராது நமக்கு!
பன்னாட்டு நிறுவங்களை மண்ணிலிருந்து விரட்டாமல், நம் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!


பின்குறிப்பு : 1ரூ அரிசி அறிவிப்பு செய்யும் பொழுது, கருணாநிதி "இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், திருடு போய்விடும்! திருடு போய்விடும்! என சொல்கிறார்கள். ஒரு திருடனைப் போல ஏன் சிந்திக்க வேண்டும்" என்றார்.

"புதிது புதிதாய் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, இந்த மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, இந்த மண்ணின் மக்களை எப்படி நிராதாரவாய் நிற்க வைத்து விட்டு, கொஞ்சம் கூட மனம் கோணாமல் ஒரு நல்லவரைப் போல எப்படி தான் வலம் வர முடிகிறது?" என நாம் கேட்கலாம் அல்லவா!

http://sezindia.nic.in/HTMLS/dated-10-8-06-amending-sez-rules06.pdf

365 நாட்களும் தடையில்லா மின்சாரம் என்கிற விதியை, SEZ அரசு வலையிலிருந்து எடுக்கப்பட்டது.

3. After rule 5 of the principal rules, the following rule shall be inserted,
namely:-

“5A. Infrastructure requirements relating to information technology.-
In case of a Special Economic Zone relating to information
technology, the following facilities shall be ensured, namely:-

(a) twenty-four hours uninterrupted power supply at stable
frequency in the Zone;


(b) reliable connectivity for uninterrupted and secure data
transmission;
(c) provision for central air-conditioning system; and
(d) a ready to use, furnished plug and pay facility for end
users.”.

August 29, 2008

அலைமோதும் மக்கள்! அள்ள நினைக்கும் அரசு




சென்னையில் வீட்டு வாடகை எகிறி கொண்டு, எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. வாடகைத்தர நடுத்தர வர்க்கங்களே திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு சொந்தகாரர்கள் இப்பொழுதெல்லாம், வாடகையை அதிகப்படுத்தி கேட்பதில்லை. மாறாக, காலி பண்ண சொல்கிறார்கள். ரூ. 3000 நாம் தந்து கொண்டிருந்தால், காலி பண்ண வைத்து, புதியவர்களிடம் ரூ. 5000க்கு வாடகைக்கு விடுகிறார்கள்.

பல குடும்பங்களுக்கு, சென்னையில் ஒரு வீடு என்பது கனவாகத் தான் இருக்கிறது. என் நண்பர்களில் இருவர் நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவரும் சேர்ந்து, சென்னையில் வீடு வாங்க நினைத்து, எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது, ஆச்சரியப்படுகிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் மனநிலை புரிந்து, அரசு ஒரு திருடன் மாதிரி, மக்களிடமிருந்து முடிந்ததை சுருட்டப் பார்க்கிறது.

கடந்த ஜுலை 31ந் தேதி செய்தித்தாள்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு விளம்பரம் செய்திருந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - சென்னை முகப்பேர் ஏரி திட்டப்பகுதியில் மத்திய தர வர்க்கத்தினருக்காக 170 வீடுகள் 1998 - ஆம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன.

இடைக்காலத்தில் பல்கலை கழக மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு, இப்பொழுது, "உள்ளது உள்ளபடியே உள்ள நிலையில்" (மழையால் வீடு ஒழுகுது, ஓட்டை இருக்கிறது, அதனால் பாம்பு வருகிறது என சரி செய்து கொடுங்கள் என வீட்டு வசதி வாரியத்திடம் யாரும் உரிமை கோரமுடியாது). குறைவான விலையில் ரூ.6 1/4 லட்சத்திலிருந்து 7 1/2 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்திருக்கிறது.

விண்ணப்பம் - ரூ. 110. பதிவு செய்ய ரூ. 400 (BY D.D.) (பணம் திரும்ப தரப்பட மாட்டாது.)

20தேதி வரை 1.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருக்கின்றன என பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.

கணக்குப் போட்டுப் பார்த்தால்.... 170 வீடுகள் @ 7 லட்சம் எனில்.... ரூ. 12 கோடி

1.5 லட்சம் விண்ணப்பம் விற்பனையெனில் .... 1.5 லட்சம் @ ரூ. 510.... 7 கோடியே 65 லட்சம்

இந்த மாத இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும். அவ்வளவு கூட்டமாம். அப்படியானால்..

அடப்பாவி மக்கா! வீடு விற்காமலே, 10 கோடி லாபம்.

170 வீடுகள் 170 மக்கள் பெற இருக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால், 2 லட்சம் மக்களிடம் கொள்ளையடிப்பது எந்த விதத்தில் சரி!

இந்த கொள்ளையை ஊடகங்களில் அம்பலப்படுத்தி, தொடர்ச்சியாய் பேசப்படவும்... முதலவர் கருணாநிதி 22ந் தேதி பதிவுக்கட்டணத்திற்காக வாங்கும் ரூ. 400 பணத்தை, திரும்ப தருவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்.

இந்த அரசின் மீது இன்னும் நம்பிக்கை வைத்தால், நாம் தாம் பரிதாபத்துக்குரியவர்கள்.

******

பின்குறிப்பு : கூட்டம் அலை மோதி, சுற்றியுள்ள வங்கிகள் தனது அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, வீ.வ.வாரியத்திற்கு DD தருவதை நிறுத்திவிட்டன. மக்கள் வங்கி வங்கியாக அலைகிறார்கள்.

அடுத்து ஒரு தலை போகிற பிரச்சனை இருக்கிறது. இது நாள் வரையும், வீ.வ.வாரிய அலுவலகங்கள் 4 இடங்களிலேயும், 4 வங்கிகளின் கிளைகள் 20 இடங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்து முடித்துவிட்டார்கள்.

ஆனால், பதிவதோ, வீ.வ.வாரிய 4 இடங்களில் மட்டும். அங்கெல்லாம், கடந்த 1 வாரமாக திருவிழா கூட்டமாம். நாளையும், நாளை மறுநாளும் இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகும். அரசு தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையெனில், அடிக்கிற வெயிலில் மக்கள் நின்று, பலர் மயங்கி விழுவர். அதிகபட்சமாக கூட்ட நெரிசலில், சில தலைகள் நசிவது நிஜம்.
பொறுப்பில்லாத அரசு. பாவம் மக்கள்.