> குருத்து

March 4, 2022

காதல் கடவுளும், மன்னிப்பும்!


'முதல் நீ முடிவும் நீ' படத்தில் ஒரு காட்சி. பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் நாயகனை அவளை விரும்பும் ஒரு சக மாணவி எதிர்பாராத தருணத்தில் முத்தம் கொடுத்துவிடுவாள். விதி வலியது. சரியாக அந்த நொடியில் உள்ளே நுழையும் அவனின் காதலி பார்த்துவிடுவாள். அழுதுகொண்டே வெளியே செல்வாள். அவன் தனது நிலையை விளக்க முயற்சிப்பான். அவள் எதையும் கேட்கிற மனநிலையில் இருக்கமாட்டாள். அழுதுகொண்டே வீட்டிற்கு போய்விடுவாள்.

 
காதலின் கடவுளான கியூபிட் அந்த பொண்ணுக்கு போய் அறிவுரைகள் வழங்காமல், மெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போய், "போய் அவளிடம் மன்னிப்பு கேள்! இல்லையெனில் உன் காதல் புட்டுக்கும். காதலி உனக்கு கிடைக்கவே மாட்டாள்" என அறிவுரை சொல்வார். "செய்யாத தப்புக்கு நான் எப்படி மன்னிப்பு கேட்பது?” என உறுதியாய் மறுத்துவிடுவான்.
 
அந்த கடவுள் அவன் ஒரு இசையமைப்பாளராக நன்கு வளர்ந்த பிறகும், வேண்டுமென்றே நிறைய அழவிட்டு... ஏகத்துக்கும் டிராமா செய்து, ”செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கவைத்து..!” கடவுளே இப்படி செய்ததால் தான்... செய்யாத தப்புக்கு இன்னும் மன்னிப்பு கேட்டுக்கொண்டே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் கணவன். 🙂
 
”செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்; செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் புருஷன்” 
 

March 2, 2022

மன்னனின் காதல்! - ஜோதா அக்பர் (2008)


பாபரின் மகன் ஹிமாயூன். ஹிமாயூனின் மகன் அக்பர். தனது இளம் வயதிலேயே போர்க்களத்தில் நிற்கிறார். வளர்ந்த பிறகு, பரந்துபட்ட இந்துஸ்தானை ஆளவேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், தனது முன்னோர்களால் அப்படி ஆளமுடியாதது பெரிய வருத்தமாய் இருக்கிறது. இந்த சமயத்தில் ரஜபுத்ர வம்சத்தில் உள்ள ஒரு சிற்றரசனுக்கு உள்ளுக்குள் ஒரு பகை. அதை சரிசெய்ய, தன் மகளை அக்பருக்கு திருமணம் செய்துவைக்க முன்வருகிறார். அக்பரும் இந்துக்களின் நம்பிக்கையை பெறலாம். இதன் மூலம் தன் ராஜ்யத்தை நீட்டிக்கும் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என கணக்குப் போட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.


நாயகியான இளவரசி ஜோதா அக்பரிடம் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். தான்
மதம் மாறமாட்டேன். அரண்மனைக்குள் தனக்கென ஒரு சிறியதாய் கோயில் கட்டி, வழிபட அனுமதி கோருகிறார். அக்பர் ஏற்றுக்கொள்கிறார். திருமணம் நடக்கிறது. இன்னும் தனக்கு தயக்கம் இருக்கிறது. தயக்கம் உடைந்த பிறகு தான் தாம்பத்யம் என்கிறார். அக்பரும் ஏற்கிறார்.

அக்பரின் கோட்டைக்குள்ளேயே, சொந்த உறவுகளுக்குள்ளேயே அதிகாரத்திற்கான போட்டி தீவிரமாய் இருக்கிறது. அக்பரின் நல்ல குணங்களை புரிந்துகொண்டு மெல்ல மனம் மாறும் பொழுது, நாயகி சதி செய்வதாக மாட்டிவிடுகிறார்கள். நாயகியை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். பிறகு இருவரும் புரிந்துகொண்டு ஒன்றாக சேர்ந்தார்களா? ராஜ்யத்திற்கான ஆபத்துக்களை எப்படி எதிர்கொண்டார்? என்பதையும் மீதி கதையில் சொல்கிறார்கள்.
***

ஒரு பேரரசராக இருந்த மன்னனின் காதல் கதையை சுவாரசியமாய் எடுத்திருக்கிறார்கள். இவர்களின் காதல் கதையை விட, படம் முழுவதும் சதி வேலைகள், கழுத்தறுப்பு வேலைகள் எங்கும், எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுவே காதல் கதைக்குள் ஒரு திரில்லராக பயணிக்கிறது.

ஒரு மன்னனின் மகளாக இருந்துகொண்டு, தன் அண்ணனுக்கு எழுதிய ஒரு சிக்கலான கடிதத்தையும், அம்மா கொடுத்த விசக்குப்பியையும் பொறுப்பாய் தான் வாக்கப்பட்ட பேரரசரின் அரண்மனைக்கு எடுத்து வருவது ஆச்சர்யம். நம்பும்படி
இல்லை.

பதினாறாம் நூற்றாண்டின் மன்னன், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கவேண்டும் என ரஜபுத்திர இளவரசியை கட்டியதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. அந்த காலக்கட்டத்தில் மன்னர்கள் ஏகப்பட்ட மனைவிகளை கட்டுவார்கள். அக்பருக்கும் அப்படி நிறைய மனைவிகள் இருந்தார்கள். அந்த காலக்கட்டத்தின் எதார்த்த நிலைமை இப்படி இருக்க பேரரசன் நாயகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததெல்லாம் மிகையாக தான் இருக்கிறது. சுவையான கற்பனை என புரிந்துகொள்ளலாம். மற்றபடி, இசுலாமிய மன்னனாக இருந்தாலும், அக்பர் பிற மதத்தினரின் உணர்வுகளை மதித்தார் என்றே வரலாறும் சொல்கிறது.

மற்றபடி, அக்பரின் வரலாற்றில் நாயகியின் பெயரில் அப்படி ஒரு மனைவி இல்லை என்கிறார்கள். ரஜபுத்திரர்களின் வரலாற்றில் அப்படி சொல்லப்படுகிறது என்கிறார்கள். அக்பர் அப்படி திருமணம் செய்யவில்லை. அக்பரின் மகனுக்கு தான் அப்படி ஒரு திருமணம் முடித்தார்கள் என்கிறார்கள். படத்தின் துவக்கத்திலும் இப்படி நிறைய கதைகள் இருப்பதாக எழுத்தில் போடுகிறார்கள். படம் வந்த பொழுது, இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள். ரஜபுத்திரர்கள் இந்தப் படத்தை வெளியே வரவிடமாட்டோம் என மல்லுக்கு நின்றார்கள். படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இரண்டு தேசிய விருதுகள் உட்பட, வேறு பல விருதுகளை வென்றது.

அக்பராக ஹிருத்திக். ஜோதாவாக ஐஸ்வர்யா. மொத்தப் படத்தையும் இருவரும் தாங்கியிருக்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பு. அரண்மனைகள், போர்க்கள காட்சிகள் எல்லாவற்றுக்கும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஏ. ஆர். ரகுமான் இசையும் சிறப்பு. ”லகான்” எடுத்தவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இந்தியில் இருக்கிறது. ஆங்கில சப் –டைட்டிலுடன் கிடைக்கிறது. தமிழில் கொஞ்சம் சிரத்தையாக மெனக்கெட்டு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். யுடியூப்பில் நல்ல பிரதியிலேயே இலவசமாக பார்க்க கிடைக்கிறது. படத்தின் நீளம் தான் அதிகம். 3.30 மணி நேரம். நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள்.

தனக்கென ஒரு சின்னஞ்சிறு உலகம் Wanda Vision (2021) ஒரு தொடர் 9 அத்தியாயங்கள்



பிரபஞ்சத்தில் மக்கள்தொகை பெருகியது தான் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணம். ஆகையால், பாதிபேரை ஒழித்துக்கட்டிவிட்டால் பெரும்பாலான‌ பிரச்சனை ஒழிந்துவிடும் என கொடூரமாக சிந்திக்கிறான் தானோஸ். அதற்காக பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த கற்களை சேகரிக்க துவங்குகிறான். அவெஞ்சர்ஸ் எல்லோரும் ஒன்றிணைந்து மல்லுக்கட்டினாலும், அவனை தடுக்க முடியவில்லை. உலகத்தில் பாதிபேர் காணாமல் போய்விடுகிறார்கள். (இன்பினிட்டி வார் படம் நினைவுக்கு வரவேண்டும்.)


தானோஸ் விசனிடம் இருக்கும் கல்லையும் எடுத்துவிட்டதால், அவன் இறந்துவிடுகிறான். அவனின் காதலியான வாண்டா தனித்து விடப்படுகிறாள். தன் பிரியத்திற்குரிய கணவனின் உடலை கேட்கும் பொழுது, அவனின் உடலை அக்கு வேறு, ஆணிவேறாக பிரித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் மனம் உடைந்து போகிறாள்.

ஆழ்ந்த‌ சோகத்தில் அவளுடைய சொந்த ஊருக்கு போகிறாள். பழைய நினைவுகள் அழுத்த‌ அவள் வெடித்து அழுகையில், அவளின் சக்தியால் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கிக்கொள்கிறாள். விசனையே புதிதாக உருவாக்கிவிடுகிறாள். அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்கள் அந்த ஊரில் இயல்பாக வாழக்கூடிய மனநிலை கொண்ட மனிதர்களாகிவிடுகிறார்கள். அந்த ஊரைச் சுற்றி ஒரு வலுவான சுவரை உருவாக்குகிறாள். யாரும் வெளியிலிருந்து உள்ளே வரமுடியாது. இங்கிருந்து வெளியே யாரும் செல்லவும் முடியாது.

வாண்டாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்கிறது. வெளிஉலகில் விசன் கொல்லப்பட்டது கூட இந்த உலகத்தில் வாழும் விசனுக்கு தெரியாது. வாண்டா கருவுறுகிறாள். இரட்டையர்களாக இரு பையன்கள் பிறக்கிறார்கள்.

வெளிஉலகில் உள்ள அரசின் ஆட்கள் இதை மோப்பம் பிடித்து உள்ளே வர முயல்கிறார்கள். வாண்டாவின் அதீத ஆற்றலை அடைய ஒரு சக்திவாய்ந்த‌ சூன்யகாரியும் உள்ளே வருகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

குடும்பம் மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால், பெண்கள்/ஆண்கள் அக உலகில் கற்பனையான உலகை அமைத்து அதில் மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்கிகொள்வார்கள். அப்படி வாண்டா உருவாக்கிய உலகத்தைப் பற்றியது தான் இந்த கதையும்! அது போலி என நன்றாக தெரியும். இருந்தும், அதில் மகிழ்ச்சி காண்கிறாள். அதற்கு ஏதாவது ஆபத்து என்றால் கொந்தளிக்கிறாள்.

ஒரு நல்ல குடும்பத்தின் அல்லது குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்வதாக இருக்கிறது. முதலாளித்துவ உலகில் குடும்ப உறுப்பினர்கள் சிதறுண்டு, முதலாளித்துவ சிந்தனையான தனிநபர் வாதம், நுகர்விய பண்பாடு என பல அம்சங்கள் குடும்பங்களையும் சிதைக்கிறது. அமெரிக்காவில் மட்டுமில்ல! உலகம் முழுவதிலுமே இதற்கான தாக்கம் இருக்கிறது. குடும்பத்தை காப்பாற்றவேண்டுமென்றால் கூட முதலாளித்துவ சமூகத்தை மாற்றாமல் சாத்தியமில்லை. இந்த சமூக அமைப்பிலேயே குடும்பத்தை சீரமைத்து விடமுடியாது. பெரும்பாலோர் வாண்டாவை போல ஒரு அக உலகத்தை உருவாக்கி வாழவேண்டியது தான்!

நாலு அத்தியாயங்கள் மெல்ல நகர்பவை. மீதி ஐந்து அத்தியாயங்கள் சாகசங்கள் நிறைந்தவை. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. அவெஞ்சர்ஸ் சீரிஸ்களில் இதுவும் ஒன்று. காமிக்ஸ் ரசிகர்கள், அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் பாருங்கள்.