> குருத்து: மன்னனின் காதல்! - ஜோதா அக்பர் (2008)

March 2, 2022

மன்னனின் காதல்! - ஜோதா அக்பர் (2008)


பாபரின் மகன் ஹிமாயூன். ஹிமாயூனின் மகன் அக்பர். தனது இளம் வயதிலேயே போர்க்களத்தில் நிற்கிறார். வளர்ந்த பிறகு, பரந்துபட்ட இந்துஸ்தானை ஆளவேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், தனது முன்னோர்களால் அப்படி ஆளமுடியாதது பெரிய வருத்தமாய் இருக்கிறது. இந்த சமயத்தில் ரஜபுத்ர வம்சத்தில் உள்ள ஒரு சிற்றரசனுக்கு உள்ளுக்குள் ஒரு பகை. அதை சரிசெய்ய, தன் மகளை அக்பருக்கு திருமணம் செய்துவைக்க முன்வருகிறார். அக்பரும் இந்துக்களின் நம்பிக்கையை பெறலாம். இதன் மூலம் தன் ராஜ்யத்தை நீட்டிக்கும் கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என கணக்குப் போட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.


நாயகியான இளவரசி ஜோதா அக்பரிடம் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். தான்
மதம் மாறமாட்டேன். அரண்மனைக்குள் தனக்கென ஒரு சிறியதாய் கோயில் கட்டி, வழிபட அனுமதி கோருகிறார். அக்பர் ஏற்றுக்கொள்கிறார். திருமணம் நடக்கிறது. இன்னும் தனக்கு தயக்கம் இருக்கிறது. தயக்கம் உடைந்த பிறகு தான் தாம்பத்யம் என்கிறார். அக்பரும் ஏற்கிறார்.

அக்பரின் கோட்டைக்குள்ளேயே, சொந்த உறவுகளுக்குள்ளேயே அதிகாரத்திற்கான போட்டி தீவிரமாய் இருக்கிறது. அக்பரின் நல்ல குணங்களை புரிந்துகொண்டு மெல்ல மனம் மாறும் பொழுது, நாயகி சதி செய்வதாக மாட்டிவிடுகிறார்கள். நாயகியை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். பிறகு இருவரும் புரிந்துகொண்டு ஒன்றாக சேர்ந்தார்களா? ராஜ்யத்திற்கான ஆபத்துக்களை எப்படி எதிர்கொண்டார்? என்பதையும் மீதி கதையில் சொல்கிறார்கள்.
***

ஒரு பேரரசராக இருந்த மன்னனின் காதல் கதையை சுவாரசியமாய் எடுத்திருக்கிறார்கள். இவர்களின் காதல் கதையை விட, படம் முழுவதும் சதி வேலைகள், கழுத்தறுப்பு வேலைகள் எங்கும், எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுவே காதல் கதைக்குள் ஒரு திரில்லராக பயணிக்கிறது.

ஒரு மன்னனின் மகளாக இருந்துகொண்டு, தன் அண்ணனுக்கு எழுதிய ஒரு சிக்கலான கடிதத்தையும், அம்மா கொடுத்த விசக்குப்பியையும் பொறுப்பாய் தான் வாக்கப்பட்ட பேரரசரின் அரண்மனைக்கு எடுத்து வருவது ஆச்சர்யம். நம்பும்படி
இல்லை.

பதினாறாம் நூற்றாண்டின் மன்னன், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை பரவலாக்கவேண்டும் என ரஜபுத்திர இளவரசியை கட்டியதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. அந்த காலக்கட்டத்தில் மன்னர்கள் ஏகப்பட்ட மனைவிகளை கட்டுவார்கள். அக்பருக்கும் அப்படி நிறைய மனைவிகள் இருந்தார்கள். அந்த காலக்கட்டத்தின் எதார்த்த நிலைமை இப்படி இருக்க பேரரசன் நாயகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததெல்லாம் மிகையாக தான் இருக்கிறது. சுவையான கற்பனை என புரிந்துகொள்ளலாம். மற்றபடி, இசுலாமிய மன்னனாக இருந்தாலும், அக்பர் பிற மதத்தினரின் உணர்வுகளை மதித்தார் என்றே வரலாறும் சொல்கிறது.

மற்றபடி, அக்பரின் வரலாற்றில் நாயகியின் பெயரில் அப்படி ஒரு மனைவி இல்லை என்கிறார்கள். ரஜபுத்திரர்களின் வரலாற்றில் அப்படி சொல்லப்படுகிறது என்கிறார்கள். அக்பர் அப்படி திருமணம் செய்யவில்லை. அக்பரின் மகனுக்கு தான் அப்படி ஒரு திருமணம் முடித்தார்கள் என்கிறார்கள். படத்தின் துவக்கத்திலும் இப்படி நிறைய கதைகள் இருப்பதாக எழுத்தில் போடுகிறார்கள். படம் வந்த பொழுது, இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள். ரஜபுத்திரர்கள் இந்தப் படத்தை வெளியே வரவிடமாட்டோம் என மல்லுக்கு நின்றார்கள். படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இரண்டு தேசிய விருதுகள் உட்பட, வேறு பல விருதுகளை வென்றது.

அக்பராக ஹிருத்திக். ஜோதாவாக ஐஸ்வர்யா. மொத்தப் படத்தையும் இருவரும் தாங்கியிருக்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பு. அரண்மனைகள், போர்க்கள காட்சிகள் எல்லாவற்றுக்கும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஏ. ஆர். ரகுமான் இசையும் சிறப்பு. ”லகான்” எடுத்தவர் தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இந்தியில் இருக்கிறது. ஆங்கில சப் –டைட்டிலுடன் கிடைக்கிறது. தமிழில் கொஞ்சம் சிரத்தையாக மெனக்கெட்டு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். யுடியூப்பில் நல்ல பிரதியிலேயே இலவசமாக பார்க்க கிடைக்கிறது. படத்தின் நீளம் தான் அதிகம். 3.30 மணி நேரம். நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: