> குருத்து: தனக்கென ஒரு சின்னஞ்சிறு உலகம் Wanda Vision (2021) ஒரு தொடர் 9 அத்தியாயங்கள்

March 2, 2022

தனக்கென ஒரு சின்னஞ்சிறு உலகம் Wanda Vision (2021) ஒரு தொடர் 9 அத்தியாயங்கள்



பிரபஞ்சத்தில் மக்கள்தொகை பெருகியது தான் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணம். ஆகையால், பாதிபேரை ஒழித்துக்கட்டிவிட்டால் பெரும்பாலான‌ பிரச்சனை ஒழிந்துவிடும் என கொடூரமாக சிந்திக்கிறான் தானோஸ். அதற்காக பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த கற்களை சேகரிக்க துவங்குகிறான். அவெஞ்சர்ஸ் எல்லோரும் ஒன்றிணைந்து மல்லுக்கட்டினாலும், அவனை தடுக்க முடியவில்லை. உலகத்தில் பாதிபேர் காணாமல் போய்விடுகிறார்கள். (இன்பினிட்டி வார் படம் நினைவுக்கு வரவேண்டும்.)


தானோஸ் விசனிடம் இருக்கும் கல்லையும் எடுத்துவிட்டதால், அவன் இறந்துவிடுகிறான். அவனின் காதலியான வாண்டா தனித்து விடப்படுகிறாள். தன் பிரியத்திற்குரிய கணவனின் உடலை கேட்கும் பொழுது, அவனின் உடலை அக்கு வேறு, ஆணிவேறாக பிரித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் மனம் உடைந்து போகிறாள்.

ஆழ்ந்த‌ சோகத்தில் அவளுடைய சொந்த ஊருக்கு போகிறாள். பழைய நினைவுகள் அழுத்த‌ அவள் வெடித்து அழுகையில், அவளின் சக்தியால் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கிக்கொள்கிறாள். விசனையே புதிதாக உருவாக்கிவிடுகிறாள். அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்கள் அந்த ஊரில் இயல்பாக வாழக்கூடிய மனநிலை கொண்ட மனிதர்களாகிவிடுகிறார்கள். அந்த ஊரைச் சுற்றி ஒரு வலுவான சுவரை உருவாக்குகிறாள். யாரும் வெளியிலிருந்து உள்ளே வரமுடியாது. இங்கிருந்து வெளியே யாரும் செல்லவும் முடியாது.

வாண்டாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்கிறது. வெளிஉலகில் விசன் கொல்லப்பட்டது கூட இந்த உலகத்தில் வாழும் விசனுக்கு தெரியாது. வாண்டா கருவுறுகிறாள். இரட்டையர்களாக இரு பையன்கள் பிறக்கிறார்கள்.

வெளிஉலகில் உள்ள அரசின் ஆட்கள் இதை மோப்பம் பிடித்து உள்ளே வர முயல்கிறார்கள். வாண்டாவின் அதீத ஆற்றலை அடைய ஒரு சக்திவாய்ந்த‌ சூன்யகாரியும் உள்ளே வருகிறாள். பிறகு என்ன ஆனது என்பதை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

குடும்பம் மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால், பெண்கள்/ஆண்கள் அக உலகில் கற்பனையான உலகை அமைத்து அதில் மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்கிகொள்வார்கள். அப்படி வாண்டா உருவாக்கிய உலகத்தைப் பற்றியது தான் இந்த கதையும்! அது போலி என நன்றாக தெரியும். இருந்தும், அதில் மகிழ்ச்சி காண்கிறாள். அதற்கு ஏதாவது ஆபத்து என்றால் கொந்தளிக்கிறாள்.

ஒரு நல்ல குடும்பத்தின் அல்லது குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்வதாக இருக்கிறது. முதலாளித்துவ உலகில் குடும்ப உறுப்பினர்கள் சிதறுண்டு, முதலாளித்துவ சிந்தனையான தனிநபர் வாதம், நுகர்விய பண்பாடு என பல அம்சங்கள் குடும்பங்களையும் சிதைக்கிறது. அமெரிக்காவில் மட்டுமில்ல! உலகம் முழுவதிலுமே இதற்கான தாக்கம் இருக்கிறது. குடும்பத்தை காப்பாற்றவேண்டுமென்றால் கூட முதலாளித்துவ சமூகத்தை மாற்றாமல் சாத்தியமில்லை. இந்த சமூக அமைப்பிலேயே குடும்பத்தை சீரமைத்து விடமுடியாது. பெரும்பாலோர் வாண்டாவை போல ஒரு அக உலகத்தை உருவாக்கி வாழவேண்டியது தான்!

நாலு அத்தியாயங்கள் மெல்ல நகர்பவை. மீதி ஐந்து அத்தியாயங்கள் சாகசங்கள் நிறைந்தவை. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. அவெஞ்சர்ஸ் சீரிஸ்களில் இதுவும் ஒன்று. காமிக்ஸ் ரசிகர்கள், அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: