> குருத்து

September 5, 2023

ஒரு கதை சொல்லட்டுமா சார்?


ஒருநாள் ஒரு பொழுது எனக்கு செருப்பு வாங்க போனேன். வாங்கினேன். பணம் செலுத்தும் பொழுது ஜிபேயில் செலுத்த முயன்றேன். இப்போதைக்கு சாத்தியமில்லை. Failed என வந்தது. என்னோட டெபிட் கார்டு கொடுத்து பணம் செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.


இரண்டு நாட்கள் கழித்து, வங்கி கணக்கை சரிப்பார்த்த பொழுது, ஜிபேயும் அந்த கடைக்காரருக்கு என் பணத்தை "இந்தா வைச்சுக்கோ!" என எடுத்துக்கொடுத்து தெரியவந்தது.

ஜிபேயிக்கு போன் செய்து கேட்டேன். "என் பணத்தை எடுத்து சந்தோசமாக எடுத்து கொடுத்திருக்கீங்க‌! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க!"

உடனே மன்னிப்பு கேட்டு, "உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்" என இனிமையான குரலில், பதட்டமே இல்லாமல் அந்த பெண் சொன்னாள்.

வங்கிக்கு போவதற்கு முன்பு, கடைக்காரரிடம் கேட்டுவிடலாம் என போன் செய்தேன். சரிப்பார்த்து விட்டு இரண்டு மணி நேரத்தில் அழைக்கிறேன் என சொன்னவர், அமைதியாய் இருந்தார். மீண்டும் போன் செய்த பொழுது, எனக்கு ஒரு முறைதான் பணம் வந்துள்ளது என்றார்.

வங்கிக்கு போனால், "நீங்கள் எங்களது வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்" என்றார்கள். அவர்களை தொடர்பு கொண்டால், "உங்கள் புகார் பதிவை செய்துகொண்டோம்" என்றார்கள். ஒரு வாரம் கழித்தும் பணம் வந்தபாடில்லை.

நான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு மின்னஞ்சல் செய்து கேட்டேன். "புகார் செய்துள்ளோம். சார்ஜ் பேக் (Charge Back) ஆகும்" என்றார்கள்.

சார்ஜ் பேக் என்றால் என்ன? எவ்வளவு நாட்கள் ஆகும் என தேடியதற்கு... பதில் 120 நாட்கள் ஆகும் என்கிறது கூகுள்.

இது தான் டிஜிட்டல் இந்தியா நிலைமையாக இருக்கிறது.

சரி! இருக்கிற செருப்பை சந்தோசமாக போடலாம் என நினைத்தால்... கும்பகோணம் போய்விட்டு, சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். எனது கோச்சில், 2 வயது குழந்தையுடன் ஒரு குடும்பமும் இருந்தது. தாம்பரத்தில் இறங்கப்போவதாக பேசிக்கொண்டார்கள். எனது செருப்பை, வெளியே கண்ணில் படாமல், படுக்கைக்கு கீழே "பத்திரமாக" வைத்திருந்தேன்.

5.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைவதால், 5.10க்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடித்து எழுந்து பாத்ரூம் போக செருப்பைத் தேடினால், எனது புதுச்செருப்பை தேடினால், நான் வைத்திருந்த இடத்தில், நாளையோ, நாளை மறுநாளோ சாக இருந்த ஒரு செருப்பு இருந்தது. சுத்தி முத்திப் பார்த்தேன். ஒன்று அவசரத்தில் போட்டு இறங்கியிருக்கவேண்டும். இல்லையெனில் எடுத்துப் போட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியது தான் என முடிவில் செய்திருக்கவேண்டும். அநேகமாக என் உயரத்தில் என் பாடிக்கு பொருந்திய அந்த குடும்பஸ்தான் தான் இதைச் செய்திருக்கவேண்டும் என கணித்தேன். போச்சு! அந்த செருப்பும் போச்சு!

இனி அந்த கடை கிடையாது. ஜிபேயும் கிடையாது என முடிவு செய்து, புதுக்கடையில் காசு கொடுத்து புதுச் செருப்பு ஒன்றை மீண்டும் வாங்கினேன்.

கதை. உண்மை கதை. ஆனால் சோக கதை சார்.

September 3, 2023

DD Returns 3 - தமிழ்


நாயகியின் சகோதரி திருமண நேரத்தில் காணாமல் போகிறார். பெரிய இடம் என்பதால்… அவர்கள் கொடுத்த பெரும் பணத்தை திரும்ப கேட்கிறார்கள். "இல்லையெனில் இளைய பெண்ணைக் கட்டிக்கொடு" என கேட்கிறார்கள்.


இளைய பெண்ணை காதலிக்கும் நாயகன், குறுக்கு வழியில்… பணத்தை புரட்டி கொடுக்கிறார். இந்த உண்மை தெரிய வர… வேறு சில சம்பவங்களும், பணமும் இதன் தொடர்ச்சியில் ஒன்று சேர… இடியாப்ப சிக்கலாக்குகிறது. அந்த பெரும் பணம் ஆங்காங்கே கைமாறி ஒரு பேய் பங்களாவில் மாட்டிக்கொள்கிறது.

அந்தப் பணத்தை மீட்க, அந்த பேய் பங்களாவில் நுழைகிறார். அவரைத் தேடி வந்த கும்பலும் உள்ளே நுழைகிறார்கள். ஒழுங்காக விளையாடி ஜெயித்தால் பெரும்பணம். இல்லையெனில் எல்லோருக்கும் சாவு என அங்கு வாழும் சூதாடி பேய்கள் கறாராக சொல்லிவிடுகின்றன.

விளையாடி உயிர் பிழைத்தார்களா? என்பதை நகைச்சுவையாய் சொல்லியிருக்கிறார்கள்.
***

தில்லுக்கு திட்டு - முதல் இரண்டு பாகங்களை இயக்குநர் இராம்பாலா இயக்கியிருக்கிருந்தார். இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருப்பதால், பெயரை கொஞ்சம் மாற்றி, அதன் சுருக்கமாய் DD returns 3 என வைத்துவிட்டார்கள்.

சந்தானத்தின் சமீபத்திய படங்கள் எல்லாம் சுமாராக போக இந்தப் படம் கொஞ்சம் வசூலில் கை கொடுத்திருக்கிறது. ஒரு பேய் பங்களா. அதிலிருந்து மீள்வது என அதே கதை தான். இன்னும் கொஞ்சம் ஏன் மெனக்கெட மாட்டேன் என்கிறார்கள். புரியவில்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகள் என எதுவுமே இல்லை. அதனால் நாயகன், நாயகி உட்பட யாரோடும் நம்மால் ஒன்ற முடியவில்லை. எல்லாமே மேலோட்டமாக இருக்கிறது. பேய் + காமெடி என்றாலும், பேயின் ”வீரியத்தை” குறைக்கிறார்கள். கல்லா கட்டுவதற்கு ”பேய்” கை கொடுப்பதால், ”பேய்” மீதும் இயக்குநர்கள் கொஞ்சம் மரியாதை வைக்கவேண்டும். சந்தானத்தின் வழக்கமான சேட்டைகள், வசனங்கள் மிக குறைவு. அடக்கி வாசித்திருக்கிறார் எனலாம்.
சந்தானம், சுரபி, முனீஸ்காந்த், கிங்க்ஸ்லி, பெப்சி விஜயன் பலரும் நடித்திருக்கிறார்கள். Zee5ல் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

August 31, 2023

Home for Rent (2023) தாய்லாந்து திகில் படம்


கணவன், மனைவி, பள்ளி செல்லும் மகள் என அமைதியாக வாழ்ந்துவருகிறது அந்த குடும்பம். அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலங்கோலப்படுத்திவிட்டு, அந்த ஆள் காணாமல் போய்விடுகிறான்.


வீட்டுத்தரகர் “உங்க குடும்பம் சின்ன குடும்பம். உங்களுக்கு இந்த வீடு போதுமானது. உங்க பொண்ணு பக்கத்தில் தான் படிக்கிறாள். இப்பொழுது நீங்கள் இருக்கிற அந்த பங்களா நல்ல வாடகைக்கு போகும். நல்ல ஆளா நான் பிடிச்சிட்டு வர்றேன்” என சொல்கிறார்.

அவர்களுக்கும் அது சரி தான் என வீடு மாறிக்கொள்கிறார்கள். புதிய வீட்டில், ஒரு ரிட்டையர்டு டாக்டர், அவருடைய உதவியாளர் என குடிவருகிறார்கள்.

சில நாட்களுக்கு பிறகு, பக்கத்து வீட்டில் கூடியிருக்கும் ஒரு அம்மா “டாக்டரம்மா வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறது. இரவானால் மந்திரம் ஜெபிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆயிரக்கணக்கான காக்கைகள் வீட்டுக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஏதோ பில்லி சூனிய கும்பல் போல தெரிகிறது. என்னவென்று பார்” என போனில் தெரிவித்து பீதியை கிளப்புகிறார்.

குடியிருக்கும் தன் வீட்டிலும் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. தன் கணவர் நடவடிக்கைகளும் மர்மமாக இருக்கின்றன. ஏதோ ஒரு சிவப்பு புத்தகத்தைப் படிக்கிறார். ஜபிக்கிறார். பூட்டி வைத்துகொள்கிறார். எடுத்துப் பார்த்தால், எதுவும் எழுதப்படாதவெள்ளைத் தாள்களாக இருக்கின்றன.

நம்மைச் சுற்றி விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என பதறுகிறாள்.

அவள் பயந்தது போலவே, சில நிகழ்வுகள் நடக்கின்றன. அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதை கொஞ்சம் பயங்காட்டி சொல்லியிருக்கிறார்கள்.
***

வழக்கமான அவ்வப்பொழுது வந்து பயமுறுத்துகிற பேய் படம் இல்லை. கொஞ்சம் கதை. கொஞ்சம் சென்டிமெண்ட். கொஞ்சம் பேய். கொஞ்சம் திகில் என எல்லாமும் கலந்தப்படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், செமத்தியாக வந்திருக்கவேண்டிய படம். கோட்டை விட்டிருக்கிறார்கள் என்று தான் சொல்வேன். ஆனால் இப்பொழுதும் பார்க்க கூடிய படமாக வந்திருப்பது ப்ளஸ்.

அந்த குழந்தையும், அம்மாவும் முக்கிய பாத்திரங்கள். நன்றாக செய்திருக்கிறார்கள். மற்றவர்களும் நன்றாக ஒத்துழைத்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி பேய்படங்களைப் பற்றி விளம்பரப்படுத்தும் பொழுதெல்லாம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என விளம்பரப்படுத்துகிறார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

நெட் பிளிக்சில் இருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் பார்த்தேன். திகில் பட விரும்பிகள் பாருங்கள். பெரிய எதிர்பார்ப்போடு பார்க்காதீர்கள். பிறகு என்னைத் திட்டாதீர்கள்.