> குருத்து: ஒரு கதை சொல்லட்டுமா சார்?

September 5, 2023

ஒரு கதை சொல்லட்டுமா சார்?


ஒருநாள் ஒரு பொழுது எனக்கு செருப்பு வாங்க போனேன். வாங்கினேன். பணம் செலுத்தும் பொழுது ஜிபேயில் செலுத்த முயன்றேன். இப்போதைக்கு சாத்தியமில்லை. Failed என வந்தது. என்னோட டெபிட் கார்டு கொடுத்து பணம் செலுத்திவிட்டு வந்துவிட்டேன்.


இரண்டு நாட்கள் கழித்து, வங்கி கணக்கை சரிப்பார்த்த பொழுது, ஜிபேயும் அந்த கடைக்காரருக்கு என் பணத்தை "இந்தா வைச்சுக்கோ!" என எடுத்துக்கொடுத்து தெரியவந்தது.

ஜிபேயிக்கு போன் செய்து கேட்டேன். "என் பணத்தை எடுத்து சந்தோசமாக எடுத்து கொடுத்திருக்கீங்க‌! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க!"

உடனே மன்னிப்பு கேட்டு, "உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்" என இனிமையான குரலில், பதட்டமே இல்லாமல் அந்த பெண் சொன்னாள்.

வங்கிக்கு போவதற்கு முன்பு, கடைக்காரரிடம் கேட்டுவிடலாம் என போன் செய்தேன். சரிப்பார்த்து விட்டு இரண்டு மணி நேரத்தில் அழைக்கிறேன் என சொன்னவர், அமைதியாய் இருந்தார். மீண்டும் போன் செய்த பொழுது, எனக்கு ஒரு முறைதான் பணம் வந்துள்ளது என்றார்.

வங்கிக்கு போனால், "நீங்கள் எங்களது வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்" என்றார்கள். அவர்களை தொடர்பு கொண்டால், "உங்கள் புகார் பதிவை செய்துகொண்டோம்" என்றார்கள். ஒரு வாரம் கழித்தும் பணம் வந்தபாடில்லை.

நான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு மின்னஞ்சல் செய்து கேட்டேன். "புகார் செய்துள்ளோம். சார்ஜ் பேக் (Charge Back) ஆகும்" என்றார்கள்.

சார்ஜ் பேக் என்றால் என்ன? எவ்வளவு நாட்கள் ஆகும் என தேடியதற்கு... பதில் 120 நாட்கள் ஆகும் என்கிறது கூகுள்.

இது தான் டிஜிட்டல் இந்தியா நிலைமையாக இருக்கிறது.

சரி! இருக்கிற செருப்பை சந்தோசமாக போடலாம் என நினைத்தால்... கும்பகோணம் போய்விட்டு, சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். எனது கோச்சில், 2 வயது குழந்தையுடன் ஒரு குடும்பமும் இருந்தது. தாம்பரத்தில் இறங்கப்போவதாக பேசிக்கொண்டார்கள். எனது செருப்பை, வெளியே கண்ணில் படாமல், படுக்கைக்கு கீழே "பத்திரமாக" வைத்திருந்தேன்.

5.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைவதால், 5.10க்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடித்து எழுந்து பாத்ரூம் போக செருப்பைத் தேடினால், எனது புதுச்செருப்பை தேடினால், நான் வைத்திருந்த இடத்தில், நாளையோ, நாளை மறுநாளோ சாக இருந்த ஒரு செருப்பு இருந்தது. சுத்தி முத்திப் பார்த்தேன். ஒன்று அவசரத்தில் போட்டு இறங்கியிருக்கவேண்டும். இல்லையெனில் எடுத்துப் போட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியது தான் என முடிவில் செய்திருக்கவேண்டும். அநேகமாக என் உயரத்தில் என் பாடிக்கு பொருந்திய அந்த குடும்பஸ்தான் தான் இதைச் செய்திருக்கவேண்டும் என கணித்தேன். போச்சு! அந்த செருப்பும் போச்சு!

இனி அந்த கடை கிடையாது. ஜிபேயும் கிடையாது என முடிவு செய்து, புதுக்கடையில் காசு கொடுத்து புதுச் செருப்பு ஒன்றை மீண்டும் வாங்கினேன்.

கதை. உண்மை கதை. ஆனால் சோக கதை சார்.

0 பின்னூட்டங்கள்: