> குருத்து

February 27, 2025

Officer on duty – மலையாளம் – 2025


நாயகன் போலீசு அதிகாரியாக இருக்கிறார். வேறொரு வழக்கில் சிக்கி, அவரை பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட இழப்பால்… அவர் கொஞ்சம் மன அழுத்தத்தோடு இருக்கிறார்.


ஒரு பேருந்து நடத்துநர் தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய தங்க செயினை ஒரு அவசர மருத்துவ தேவைக்கு அதை அடகு வைக்கும் பொழுது, நகை போலி என நிறுவனம் சொல்கிறது. அது புகாராக மாறி போலீசு ஸ்டேசனுக்கு வருகிறது.

அதை விசாரிக்கும் பொழுது, அந்த பெரியவரின் மகள் ஒருவனிடம் சிக்கி, ஒரிஜினலை தொலைத்திருக்கிறாள். விசாரிக்க போலீசு நிலையத்திற்கு வரச் சொன்னால், உண்மை வெளிவந்துவிடும் என தற்கொலை செய்துகொள்கிறாள்.

இந்த வழக்கு நாயகனை ஒரு போதை கும்பலிடம் கொண்டு சேர்க்கிறது. அந்த போதைக்கும்பல் மிகவும் ஈவிரக்கமற்றதாக, கொலைகார கும்பலாக இருக்கிறது. இவர் தேடிப்போக,அந்த கும்பல் வேறு ஒரு விசயத்திற்காக இவரையே தேடி வருகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***


இயக்குநர் பாலுமகேந்திரா மென்மையான காதல் படங்களாக எடுத்தவர். அவர் பட்டறையில் வந்த இயக்குநர்களோ அதற்கு மாறுபட்ட ஆட்கள். இயக்குநர் வெற்றிமாறனின் ஆடுகளம் பார்த்துவிட்டு, “ஏம்பா! இவ்வளவு (Suffocation) பதட்டமாக படம் எடுக்கிறீர்கள்?” என கேட்டாராம், இந்தப் படம் துவக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் நமக்கும் அப்படித்தான் இருக்கிறது.

இந்தப் படம் பார்க்கும் பொழுது, நான் மகான் அல்ல, வேட்டையாடு விளையாடு எல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வரிசையில் மலையாள திரை உலகத்தின் பங்கு என இதைச் சொல்லலாம்.

இந்த கதையை எழுதியவர் Shahi Kabir. ஏற்கனவே புகழ் பெற்றா Joseph கதையை எழுதியவர். இந்தப் படத்தின் இயக்குநர் Jithu Ashraf. இது முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யம்.

குஞ்சக்கோபன் தான் மொத்த கதையும் தன் தோளில் நகர்த்துகிறார். இறுக்கமான முகம். எப்பொழுதாவது புன்னகைக்கிறார். ஒரு போலீசு அதிகாரியாக இருந்து கொண்டு, துணைக்கு ஆள்களை அழைத்துக் கொள்ளாமல் அந்த குழுவிடம் எசகுபிசகாக சிக்கிக்கொள்கிறார். அவருடைய துணைவியாராக பிரியாமணி துணை நின்றிருக்கிறார். படத்தின் துவக்க காட்சி போலீசின் கிறுக்குத்தனத்தை காண்பிக்க வைத்திருக்கிறார்கள். டெரர் தான்.

சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. 18+ என உள்ளே நுழையும் பொழுதே போர்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி மனப்பதட்டத்துடன் பார்க்க விருப்பப்படுகிறவர்கள் பாருங்கள். விரைவில் ஓடிடிக்கு வரும்.

February 22, 2025

The Gorge (2025) ஒரு நிதானமான ஆக்சன் படம்.


நாயகனும், நாயகியும் இருவரும் துப்பாக்கியை (Sniper) தூரத்தில் இருந்து சுடுவதில் கெட்டிக்காரர்கள். இருவருக்கும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லையெனன தெரிந்தே அவர்களை ஒரு வேலைக்கு தெரிவு செய்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் அந்த பள்ளத்தாக்கில் பயோ ஆயுதம் ஒன்றை தயாரிப்பது வல்லரசின் நோக்கம். ஆய்வு தோல்வியடைந்த பொழுது, அங்கு நிறைய மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இன்னமும் ஆய்வை தொடர்கிறார்கள்.

வெளி உலகத்திற்கு தெரியாத, அந்த பள்ளத்தாக்கை இரகசியமாக பாதுகாக்கிறார்கள். கிழக்கு கோபுரத்திலும், மேற்கு கோபுரத்திலும் இருவரையும் காவல் காக்க தனித்தனியாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு வருடம் பணிக்காலம். அவர்களுக்கு தேவையானது எல்லாமும் அந்த கோபுரத்திலேயே உண்டு. வெளியுலக தொடர்பு கிடையாது. சம்பந்தப்பட்ட ஆட்களையே மாதம் ஒருமுறை ரேடியோ மூலம் தொடர்புகொள்ளலாம். அவ்வளவு தான்.

பள்ளத்தாக்கில் இருந்து யார் மேலே ஏறி வந்தாலும், சுட்டுவிடலாம் என்பது உத்தரவு. குறிப்பாக பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் இருக்கும் அந்த ஒற்றை நபரோடு பேசக்கூடாது.

நாட்கள் நகர்கின்றன. மெல்ல மெல்ல அறிமுகமாகி, போர்டில் எழுதி எழுதி பைனாகுலர் வழியாக பார்த்துப் பார்த்து பேச துவங்குகிறார்கள். திடீரென அங்கு ஒரு ஆபத்து வருகிறது. அது அவர்களை பல பிரச்சனைகளுக்கு இட்டு செல்கிறது.

பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
***



முதல் கால் மணி நேரம் அறிமுகம். பிறகு கால் மணி நேரம் காதல். பிறகு ஆக்சன் என படம் முழுவதிலும் நம்மை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் சில வசனங்கள், நாயகன் எழுதிய ”She Collapsed the Night” என்ற குறுங்கவிதையோடு படம் முடிவடைவது என்பதெல்லாம் ரசிக்க வைக்கிறது.

Doctor Strange எழுதி இயக்கிய Scott Deriickson இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். Fantastic four படத்தில் வரும் Miles Teller நாயகனாக வருகிறார். “The Menu” படத்தில் பார்த்த Anya நாயகியாக வருகிறார்.


ஆக்சன் ரசிகர்கள் பாருங்கள். ஆப்பிள் டிவியில் இருப்பதாக Just Watch தளம் சொல்கிறது. தமிழ் சப் டைட்டிலுடன் பார்க்க கிடைத்தது.   பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

February 19, 2025

Mehta Boys (2025) இந்தி தந்தை மகன் - டிராமா


நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.


இறப்புச் சடங்கில் எல்லோரையும் வரவேற்பது போலவே, மகனையும் வரவேற்கிறார் அப்பா. இனி தனியாக இருப்பதும் சாத்தியமில்லை. மகனுடன் இருப்பதும் சாத்தியமில்லை. ஆகையால் மகள் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க செய்யலாம் என்ற முடிவில் கிளம்புகிறார்கள். அவருக்கு தன் சொந்த வீட்டை, ஊரை விட்டு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை.

ஒரு வழியாய் அவரை கிளப்பி விமான நிலையத்துக்கு வந்தால், அவருடைய பயணச் சீட்டுக்கு இடம் இல்லாமல் இரண்டு நாள் தள்ளிப்போகிறது. நெருக்கடியில் மகனுடன் தங்குகிறார். இன்னொரு சிக்கலில் கூடுதலாகவும் சில நாட்கள் தங்க நேரிடுகிறது.

இரண்டு பேருக்கும் ஒத்து வரவேயில்லை. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

தந்தை மகன் குறித்த உறவு சிக்கல் குறித்து இந்திய அளவிலேயே வந்த படங்கள் குறைவு. அதிலும் நல்ல படங்கள் இன்னும் குறைவு. கடைசியாய் பிரான்சிலிருந்து மெக்காவிற்கு தன் இளவயது மகனுடன் தரை மார்க்கமாக காரில் பயணப்படும் Le Grand Voyage படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் நல்ல படம்.

இந்திய படங்களுக்கான வழக்கமான கதைச் சொல்லல் முறை இல்லை. மேற்கத்திய பாணியில் இருந்தது. ஏன் இந்த முரண்பாடு என எங்கும் பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை. படத்தின் நிகழ்வுகளின் போக்கில் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான். படம் நெடுகிலும் வசனங்கள் குறைவு. ஆங்கிலம் தான் அதிகம்.

யார் இயக்குநர் என தேடினால், முன்னாபாய், 3 இடியட்ஸ் புகழ் Boman Irani தான் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். 2014ல் Bird Man என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி ஆஸ்கார் வெற்றி பெற்ற ஒருவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குளோசப் காட்சிகள் எல்லாம் வழக்கமான படங்களை விட இன்னும் நெருக்கமாக போயிருக்கிறார்.

ஏன் மகன்கள் அப்பாவோடு மோதல் போக்கு வருகிறது. இளவயதில் அப்பாவோடு நெருக்கமாக இருக்கிறார்கள். அதே போல குடும்பம் என ஆகி, தந்தையாக ஆன பிறகு தந்தையை பலர் புரிந்துகொள்கிறார்கள். இடைக்காலத்தில் மகனுடான விருப்பம், செயல்பாடுகளில் கொஞ்சம் ஆதிக்கத்தனத்தோடு தலையிடுவதால் முரண்பாடு வருகிறதா? ஒருவேளை நிதானமாக மதித்து நடந்தால் இந்த சிக்கல் வராதோ? இந்த நெருக்கடியான கட்டத்தில் அம்மா தான் இருவருக்கும் பாலமாக இருக்கிறார். அம்மாவும் இல்லாத குடும்பங்களில்?

Boman Irani தான் தந்தையாகவும் வருகிறார். மகனாக வரும் அவினாஷ் திவாரியும் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.

பிரைமில் இருக்கிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலம் தான் அதிகம். இடையிடையே தமிழ் வந்து வந்து போகிறது எனலாம்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.