நாயகன் போலீசு அதிகாரியாக இருக்கிறார். வேறொரு வழக்கில் சிக்கி, அவரை பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட இழப்பால்… அவர் கொஞ்சம் மன அழுத்தத்தோடு இருக்கிறார்.
ஒரு பேருந்து நடத்துநர் தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய தங்க செயினை ஒரு அவசர மருத்துவ தேவைக்கு அதை அடகு வைக்கும் பொழுது, நகை போலி என நிறுவனம் சொல்கிறது. அது புகாராக மாறி போலீசு ஸ்டேசனுக்கு வருகிறது.
இந்த வழக்கு நாயகனை ஒரு போதை கும்பலிடம் கொண்டு சேர்க்கிறது. அந்த போதைக்கும்பல் மிகவும் ஈவிரக்கமற்றதாக, கொலைகார கும்பலாக இருக்கிறது. இவர் தேடிப்போக,அந்த கும்பல் வேறு ஒரு விசயத்திற்காக இவரையே தேடி வருகிறது.
பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***
இயக்குநர் பாலுமகேந்திரா மென்மையான காதல் படங்களாக எடுத்தவர். அவர் பட்டறையில் வந்த இயக்குநர்களோ அதற்கு மாறுபட்ட ஆட்கள். இயக்குநர் வெற்றிமாறனின் ஆடுகளம் பார்த்துவிட்டு, “ஏம்பா! இவ்வளவு (Suffocation) பதட்டமாக படம் எடுக்கிறீர்கள்?” என கேட்டாராம், இந்தப் படம் துவக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் நமக்கும் அப்படித்தான் இருக்கிறது.
இந்தப் படம் பார்க்கும் பொழுது, நான் மகான் அல்ல, வேட்டையாடு விளையாடு எல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வரிசையில் மலையாள திரை உலகத்தின் பங்கு என இதைச் சொல்லலாம்.
இந்த கதையை எழுதியவர் Shahi Kabir. ஏற்கனவே புகழ் பெற்றா Joseph கதையை எழுதியவர். இந்தப் படத்தின் இயக்குநர் Jithu Ashraf. இது முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யம்.
குஞ்சக்கோபன் தான் மொத்த கதையும் தன் தோளில் நகர்த்துகிறார். இறுக்கமான முகம். எப்பொழுதாவது புன்னகைக்கிறார். ஒரு போலீசு அதிகாரியாக இருந்து கொண்டு, துணைக்கு ஆள்களை அழைத்துக் கொள்ளாமல் அந்த குழுவிடம் எசகுபிசகாக சிக்கிக்கொள்கிறார். அவருடைய துணைவியாராக பிரியாமணி துணை நின்றிருக்கிறார். படத்தின் துவக்க காட்சி போலீசின் கிறுக்குத்தனத்தை காண்பிக்க வைத்திருக்கிறார்கள். டெரர் தான்.
சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. 18+ என உள்ளே நுழையும் பொழுதே போர்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி மனப்பதட்டத்துடன் பார்க்க விருப்பப்படுகிறவர்கள் பாருங்கள். விரைவில் ஓடிடிக்கு வரும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment