நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.
இறப்புச் சடங்கில் எல்லோரையும் வரவேற்பது போலவே, மகனையும் வரவேற்கிறார் அப்பா. இனி தனியாக இருப்பதும் சாத்தியமில்லை. மகனுடன் இருப்பதும் சாத்தியமில்லை. ஆகையால் மகள் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க செய்யலாம் என்ற முடிவில் கிளம்புகிறார்கள். அவருக்கு தன் சொந்த வீட்டை, ஊரை விட்டு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை.
ஒரு வழியாய் அவரை கிளப்பி விமான நிலையத்துக்கு வந்தால், அவருடைய பயணச் சீட்டுக்கு இடம் இல்லாமல் இரண்டு நாள் தள்ளிப்போகிறது. நெருக்கடியில் மகனுடன் தங்குகிறார். இன்னொரு சிக்கலில் கூடுதலாகவும் சில நாட்கள் தங்க நேரிடுகிறது.
இரண்டு பேருக்கும் ஒத்து வரவேயில்லை. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
தந்தை மகன் குறித்த உறவு சிக்கல் குறித்து இந்திய அளவிலேயே வந்த படங்கள் குறைவு. அதிலும் நல்ல படங்கள் இன்னும் குறைவு. கடைசியாய் பிரான்சிலிருந்து மெக்காவிற்கு தன் இளவயது மகனுடன் தரை மார்க்கமாக காரில் பயணப்படும் Le Grand Voyage படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் நல்ல படம்.
இந்திய படங்களுக்கான வழக்கமான கதைச் சொல்லல் முறை இல்லை. மேற்கத்திய பாணியில் இருந்தது. ஏன் இந்த முரண்பாடு என எங்கும் பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை. படத்தின் நிகழ்வுகளின் போக்கில் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான். படம் நெடுகிலும் வசனங்கள் குறைவு. ஆங்கிலம் தான் அதிகம்.
யார் இயக்குநர் என தேடினால், முன்னாபாய், 3 இடியட்ஸ் புகழ் Boman Irani தான் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். 2014ல் Bird Man என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி ஆஸ்கார் வெற்றி பெற்ற ஒருவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குளோசப் காட்சிகள் எல்லாம் வழக்கமான படங்களை விட இன்னும் நெருக்கமாக போயிருக்கிறார்.
ஏன் மகன்கள் அப்பாவோடு மோதல் போக்கு வருகிறது. இளவயதில் அப்பாவோடு நெருக்கமாக இருக்கிறார்கள். அதே போல குடும்பம் என ஆகி, தந்தையாக ஆன பிறகு தந்தையை பலர் புரிந்துகொள்கிறார்கள். இடைக்காலத்தில் மகனுடான விருப்பம், செயல்பாடுகளில் கொஞ்சம் ஆதிக்கத்தனத்தோடு தலையிடுவதால் முரண்பாடு வருகிறதா? ஒருவேளை நிதானமாக மதித்து நடந்தால் இந்த சிக்கல் வராதோ? இந்த நெருக்கடியான கட்டத்தில் அம்மா தான் இருவருக்கும் பாலமாக இருக்கிறார். அம்மாவும் இல்லாத குடும்பங்களில்?
Boman Irani தான் தந்தையாகவும் வருகிறார். மகனாக வரும் அவினாஷ் திவாரியும் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.
பிரைமில் இருக்கிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலம் தான் அதிகம். இடையிடையே தமிழ் வந்து வந்து போகிறது எனலாம்.
வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment