> குருத்து: அரசு
Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

January 29, 2022

நெடுஞ்சாலை மோட்டல் உணவகங்கள் - கொடுங்கனவு


அந்த அரசு பேருந்து மதுரையிலிருந்து கிளம்பிய பொழுது இரவு ஒன்பதை தாண்டிவிட்டது. குலுங்கி குலுங்கி தாலாட்டிக்கொண்டே சென்ற பேருந்து இன்னும் பலமாக குலுங்கி நின்றது. பேருந்தில் உள்ள சன்னலை ஒட்டி ஏதோ ஒன்றை வைத்து மோசமாக கீறிக்கொண்டே ஒரு குரல் பலரையும் எழுப்பியது. “பேருந்து இன்னும் 15 நிமிடம் தான் நிற்கும். ஆகையால் இறங்கி போங்க!” தூக்கம் கலைந்து, மெல்ல விழித்துப் பார்த்தால், பேருந்து நின்ற இடத்தில் அந்த சூழலுக்கு சம்பந்தமில்லாத மாதிரி சத்தமாக பாடல் கேட்டது. அநேகமாக மணி ஒன்றை தாண்டிவிட்டது. அது எந்த பகுதி? என்ன மாவட்டம்? என தேடிப்பார்த்தால், அந்த உணவகத்தின் பெயர் போர்டில் பேர் மட்டுமே இருந்தது.


கண்களை கசக்கிக்கொண்டே, டாய்லெட்டில் யூரின் போக நுழைந்தால் மூத்திர நாத்தம் மூக்கைத் துளைத்தது. பளிச்சென லைட் போட்டால், அங்கிருந்த மோசமான நிலைமை தெரிந்துவிடும் என்பதற்காக, ஒரு மங்கலான பல்பு எரிந்துகொண்டிருந்தது. அந்த சிறந்த சர்வீஸ் தந்ததற்காகவே அவருக்கு ரூ. 5 கொடுத்தேன்.

ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தேன். லேசாக பசித்தது. பிஸ்கெட் வாங்கலாம் என்றால், பிரிட்டானியாவை போல உள்ள டூப்ளிகேட் பிஸ்கட். சன் பீஸ்ட் போலவே ஒரு எழுத்து மாறி வேறு ஒரு பிஸ்கெட் பாக்கெட் இருந்தது. தூக்க கலக்கத்தில் மக்கள் வாங்கிவிடுவார்கள் என அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. குடிக்க தண்ணீர் எங்கும் இல்லை. ஒரு லிட்டர் பாட்டில் 25. அதுவும் அந்த உணவக முதலாளியே அந்த பிராண்ட் தயாரிப்பார் போலிருக்கிறது. வேறு எங்கும் அந்த பெயரைப் பார்த்ததில்லை.

”பசிக்குது ஏதாவது சாப்பிடலாம்” என உடன் வந்த நண்பர் என்னை அழைத்தார். விஷப்பரிட்சை வேண்டாம் என்றேன். கேட்கவில்லை. ’விதி’ யாரை விட்டது? இருவரும் உள்ளே போனோம். ”புரோட்டா சொல்லவா” என்றார். ”இருந்தாலும் இவ்வளவு தைரியம் ஆகாது!” என்றதும், கொஞ்சம் சுதாரித்து ஒரு தோசை கேட்டார். ”தோசை என்பது செட்டாக தான் கிடைக்கும். (பிரிக்க முடியாது. பிரித்தால் ஓனர் கோவித்துக்கொள்வார்) என்றார். ”சரி கொண்டு வாங்க! என்றார். உடனே வந்தது. பேருந்தை விட்டு இறங்கி ஓடிவருவார்கள். அப்படியே லபக்! லபக்குன்னு உள்ளே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பவும் ஓடிப் போய்விடுவது போல, சுட்டு ரெடியாக வைத்திருப்பார்கள் போல! ஆறிப்போயிருந்தது.

ஊரில் உள்ள தோசையின் அளவு வேறு. அங்கிருந்து இங்கு வரைக்கும் ஓடி வந்ததில், மிகவும் இளைத்திருந்தது. தட்டில் இருக்கும் பொழுதே புளிப்பு வாசனை மூக்கைத் தொட்டது. எப்பொழுது அரைத்த மாவோ? அதற்கு தொட்டுக்க கொடுத்த சாம்பாரை வாழ்நாளில் அவ்வளவு மோசமாய் பார்த்ததேயில்லை. சாப்பிட்டதுமில்லை., எப்படி சாப்பிட போகிறார்? என நினைக்கும் பொழுதே எனக்கே துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு தோசையை தட்டு, தடுமாறி சாப்பிட்டு முடித்தார். இன்னொன்றை அப்படியே வைத்துவிட்டார். வைத்து விட்டு போன பிறகு, இந்த டேபிளின் பக்கம் அந்த சர்வர் வந்து எட்டியே பார்க்கவில்லை. அந்த குட்டித்தோசை இரண்டுக்கு விலை ரூ.80. கோபத்தை அடக்க முடியாமல், அந்த கேசியரிடமே ”புளிச்சுப்போன மாவுங்க! எப்படிங்க சாப்பிடுறது? என நண்பர் கேட்டேவிட்டார். உடனடியாக ஒரு ரெடிமேட் பதிலை சொன்னார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிட்டேன். நல்லாத்தான் இருந்தது”

ஆறுதல்படுத்த ஒரு காபி வாங்கினார். சுடுதண்ணீரில் காபி பொடியை கலந்தது போல இருந்தது. அந்த நடுநிசியிலும், ”சுகராகம் சோகம் தானே” என இளையராஜா சளைக்காமல் இசைத்துக்கொண்டிருந்தார்.

மீண்டும் பேருந்தில் ஏறினோம். மீண்டும் தூங்கிக்கொண்டே சென்னை வந்து சேர்ந்தோம். இரவில் நடந்தது எல்லாம், ஒரு நரகத்தில் மாட்டிக்கொண்டது போலவும், அங்கு எங்களை விதவிதமாக கொடுமைப்படுத்தியது எல்லாம் ஒரு கொடுங்கனவாக நினைவில் வந்து போனது.

இரவு நேரத்திலோ, பகல் நேரத்திலோ கொஞ்சம் தூரமாய் பேருந்தில் பயணம் செய்த எல்லோருமே இதை எதிர்கொண்டிருப்பார்கள். அனுபவம் இதைப் போலவோ அல்லது இதைவிட மோசமாகவும் எதிர்கொண்டிருக்கலாம். இதைப் பற்றி தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். ஊடகங்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்த அவலத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக அரசு இதை கண்டுகொள்ளவேயில்லை.

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இருவருக்கும் ஓசியில சாப்பாடு. சிகரெட். அதனால் இங்கு நிப்பாட்டுகிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பேசினால், ”வாயிலேயே வைக்க முடியவில்லை. இன்னும் நான்கு, ஐந்து மணி நேரம் போகனுமேன்னு எதையாவது சாப்பிட வேண்டியிருக்கு. எங்க டிப்போவில் அதிகாரிங்க எங்களுக்கு இங்கு வந்து நிப்பாட்டி செல்லனும்னு உத்தரவு போடுறாங்க! பயணிகள் மோசமாக திட்டறாங்கன்னு வேறு உணவகத்திற்கு போனால், அடுத்த நாளே மெமோ குடுக்கறாங்க!” என்கிறார்கள்.

இது சம்பந்தமாக விசாரித்தால், முன்பு அரசு பேருந்து டிப்போவில் உள்ள போக்குவரத்து மேலதிகாரிகளைப் பார்த்து தள்ள வேண்டியதை கணிசமாக தள்ளி, அனுமதி வாங்கி உணவகத்தை நடத்தினார்கள். இதிலும் காசு பார்க்கலாம் என தெரிந்ததும், அரசு சமீப காலங்களில் வெளிப்படையாகவே டெண்டர் வெளியிடுகிறது. உணவகத்தில் நிறுத்தி செல்லும் ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ. 75ஐ அரசு அந்த உணவகத்திடம் வசூல் செய்கிறது. டாய்லெட்டை கூட தனியாக டெண்டர் விடுகிறதாம். அரசுக்கு நல்ல வருமானம். உணவகத்திற்கு நல்ல வருமானம். அல்லல்படுவதோ பொதுமக்கள்.

டெண்டரில் உள்ள விதிமுறைகளைப் படித்து பார்த்தால், புல்லரிக்கிறது. ”மக்களுக்கு சுத்தமான இலவச குடிநீர் வழங்கவேண்டும். சுகாதாரமான முறையில் டாய்லெட்டை பராமரிக்கவேண்டும். எம்.ஆர்.பி விலைக்கு விற்கவேண்டும்” என எல்லா
அருமையான
விதிமுறைகளும் தாள்களிலேயே தூங்கிவிடுகின்றன. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

உணவக அதிகாரிகளைப் பார்த்து ஊடகங்கள் சென்று கேள்விக்கேட்டால் “நாங்கள் புகார் வரும் பொழுது சோதிக்கிறோம். உணவில் தரமில்லை என அபராதம் விதிக்கிறோம். அதை கட்டிவிட்டு அவர்கள் எப்பொழுதும் போல தொடர்கிறார்கள்” என அலுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு நெடுஞ்சாலை உணவகத்தை நடத்த அரசின் 24 துறைகளிடமிருந்து அனுமதி பெறவேண்டியிருக்கிறதாம். ”யாரிடம் வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்! கொடுப்பவர்களுக்கு மாதம் மாதம் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறோம்” என அந்த உணவக நிர்வாகத்தினர் மக்களிடம் எகாத்தாளமாக பேசுவதின் பொருளை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. அதே குறைகள் தொடர…. பொதுமக்கள், ஊடகங்கள் என பலரும் தொடர்ந்து அபாயச் சங்கு ஊதிக்கொண்டே இருந்ததால்…. இப்பொழுது விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டதாகவும், மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

நெடுஞ்சாலை உணவகங்களின் நிலைமை தமிழ்நாடு தழுவிய தளவில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ பேருக்கு ஐந்து இடங்கள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என கணக்கு காட்டுவது போல இருக்கிறது!

கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பல தரப்பினரும் பல்வேறு காரணங்களுக்காக தினமும் தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பயணத்தை
இனிமையாக
்குவதில் உணவுக்கும், சுகாதாரத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பயணத்தை சுமையாக்குவதில் இவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
தொடர்ந்து போராடுவதை தவிர நமக்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை!

கட்டுரை தொடர்பான ஆதாரங்கள்

அத்துமீறும் நெடுஞ்சாலை உணவகங்கள் - கட்டுப்படுத்துமா அரசு ? புதிய தலைமுறை– 21/09/2021

நெடுஞ்சாலை உணவகங்கள் - நியூஸ்7 – 24/02/2017

January 4, 2022

புத்தாண்டை உற்சாகமாக வரவேற்போம்! அரசு தரப்பு அபத்தங்களை அம்பலப்படுத்துவோம்!


கொரானா மீண்டும் ஒரு புதிய அலை எழுந்து வருவதாக தொடர்ச்சியாக செய்திகளில் சொல்லப்படுகிறது. இன்னும் கவனமாக இருங்கள் என மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்துகிறார்கள்.


அதனடிப்படையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. புத்தக கண்காட்சி தள்ளிப்போயிருக்கிறது. இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கோவிலுக்கு கூட்டம் கூட்டமாய் போய்வருகிறார்கள். இருக்கட்டும்.

பாண்டிச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார்கள். அவர்களுக்கு சரக்கு தான் முக்கிய வருமானம். ஆண்டின் துவக்கத்திலேயே வருமானத்தை விட்டுவிட முடியாது. ஆகையால் கொரானா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, கொண்டாட அனுமதிக்கிறார்கள். ஆனால், புதிய தலைமுறையில் எப்படி செய்தி சொல்கிறார்கள் என்றால்…. “இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என சோதித்து அனுமதித்து இருப்பதாக” என கூசாமல் பேசுகிறார்கள். எல்லோரையும் சோதிப்பது சாத்தியமா? அப்படி செய்தார்களா? என ஒரு ஊடகமாக சோதிக்காமல், அரசு தரப்பு செய்திகளை வாந்தி எடுப்பது எந்த விதத்தில் சரி?

புத்தாண்டில் மக்களே விழிப்புணர்வுடன் இருப்போம்! அப்பொழுது தான் அரசு தரப்பு அபத்தங்களையும் நாம் கண்டிக்கமுடியும்!

October 22, 2021

ஆதுரசாலை - நாவல் - ஒரு பார்வை


போரூரில் நண்பர் ஒருவர் அக்குபஞ்சர் மருத்துவராக இருக்கிறார். இந்த நாவலைப் படியுங்கள் என பரிந்துரைத்தார். ஆதுரசாலை என்றால்... மருத்துவமனை என அர்த்தமாம்.


நாவல் வெப்பம், குளிர்ச்சி என இரண்டு பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார். முதல் பாகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யும் லேப்பில் (Lab) நடக்கும் சில அறம் சார்ந்த, அறிவியல் சார்ந்த கோளாறுகளை விளக்குகிறார். அதில் முதன்மையானது மருத்துவர்கள் தனது நோயாளிகளை சோதனைக்கு அனுப்புவதால் அதற்கு தரும் கமிசன். இந்த செய்தி உண்மை.

1990களில் மருந்து கடையில் சில காலம் வேலை செய்ததின் அனுபவத்தில் எனக்கே இந்த அனுபவம் உண்டு. மருத்துவர்களுக்கு லேப் நடத்துகிறவர்களும், ஸ்கேன் செண்டர் வைத்திருப்பவர்களும் தொடர்ந்து கமிசன் கொடுப்பது உண்டு. மதுரையில் அந்த பிரபல ஸ்கேன் மையத்தில் நண்பர் வேலை செய்த பொழுது, அந்த கமிசனின் அளவு தெரிந்த பொழுது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ரூ. 7000 என்றால், ரூ. 3500 வரைக்கும் கூட ’கமிசனாய்’ தருவார்கள். லேப்பும், ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் மக்களிடமிருந்து அடிக்கிற கொள்ளை இது. விரல்விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள் மட்டும் தனக்கு கமிசன் தேவையில்லை. அதை நோயாளிடம் குறைத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்பார்களாம். ஒரு ஆறுதல்.

அந்த ஸ்கேன் மையத்தில் இந்த கமிசனை மருத்துவர்களுக்கு கொடுப்பதற்கென்றே பல பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். மருத்துவம் சேவைத்துறை என்பார்கள். மருத்துவம் வணிகமாகி பல ஆண்டுகளாகிவிட்டது. அங்கு வேலை செய்த மருத்துவர்களில் ஒருவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்துப்போய், இங்கிலாந்தில் அரசே இலவசமாக மருத்துவம் பார்ப்பதால், அங்கு மருத்துவ துறையில் ஊழல் இல்லை என தெரிந்துகொண்டு, அங்கு வேலைக்கு போய்விட்டார். (இப்பொழுது நிலைமை அங்கும் மாறிவிட்டதாக தகவல் வருகிறது!)

இரண்டாம் பாகமான குளிர்ச்சி பகுதியில், லேப் விசயங்களில் நாவலின் நாயகன் அதிருப்தியாகி, ஒரு மருத்துவரிடம் வந்து சேர்கிறார். அந்த மருத்துவர் அலோபதி மருத்துவம் படித்து, பிறகு அதில் அதிருப்தியாகி இப்பொழுது சித்த மருத்துவம் பார்த்துவருகிறார். அவரிடம் உதவியாளராக சேர்கிறார்.

இந்த பகுதியில் சித்த மருத்துவத்தின் சிறப்பு, மற்ற மருத்துவ முறைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு எப்படி அலோபதி மருத்துவம் முன்னுக்கு வந்தது என்பதை வரலாற்று வழியிலும், வேறு சில அம்சங்களையும் சொல்லி செல்கிறார்.

நாவலாசிரியர் நாவலைப் பற்றி சொல்லும் பொழுது, சில ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ துறை சார்ந்த நாவலாக ’சாந்தி நிகேதனம்’ என்ற பெயரில் வெளிவந்த வங்காள நாவலும் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சுளுந்தீ” நாவலும் இந்த நாவலை எழுத தூண்டியதாக சொல்கிறார்.

நிலவுகிற அலோபதி மருத்துவ துறை வணிகம் சார்ந்ததாக, லாப வெறிகொண்ட துறையாக மாறிவிட்டது. ஆகையால், முடிந்த மட்டிலும் கொள்ளையடி என்கிற அளவுக்கு வந்துவிட்டார்கள். உலகை உலுக்கிய கொரானா காலங்களில் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் இருந்த சேமிப்பை எல்லாம் அடித்த கொள்ளையை ஊரேப் பார்த்தது.

அலோபதி தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மக்கள் மற்ற மருத்துவ முறைகளான சித்தா, ஹோமியோ, யுனானி வகைகளை அணுகிவருகிறார்கள். குறைவான கட்டணம் போன்ற காரணங்களால் மக்களிடம் மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்று வருகிறது. ஆனால், அந்த மருத்துவ முறைகள் வளர்ச்சியடையாமல் ஒரு நிலையிலேயே இருப்பது ஒரு பெரிய குறை. மற்ற மருத்துவ முறைகள் அலோபதி மருத்துவ முறையை, கொள்ளையை தொடர்ந்து தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பல மருத்துவ முறைகள் குறித்து வளர்ந்த நாடுகளில் கல்வி, அறிவு, அனுபவம் காரணமாக அதன் தன்மைகளை, சிறப்புகளை புரிந்துகொண்டு கையாண்டுவிடுகிறார்கள். நம்மை போன்ற பின்தங்கிய நாட்டில் மக்கள் பல்வேறு மருத்துவ முறைகள் சொல்லும் வழிமுறைகள் குறித்து குழம்பிபோய்விடுகிறார்கள்.

நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் இருதய நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்தார். மீண்டும் அந்த பிரச்சனை வராமல் இருக்க மருந்துகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். யாரோ ஒருவர் ”அந்த மருந்துகள் எடுத்துக்கொண்டால், இன்னும் சிக்கலாகிவிடும். ஆகையால் மருந்து சாப்பிடாதீர்கள்” என போகிற போக்கில் சொல்ல, அவர் சில காலம் மருந்துகள் எடுத்துகொள்ளவேயில்லை. வீட்டில் உள்ளவர்களும், நானும் சந்திக்கும் பொழுதெல்லாம் சொல்லியும் மருந்துகள் எடுத்துகொள்ள மறுத்துவிட்டார். பிறகு மீண்டும் இதயம் சிக்கலான பொழுது தான் தொடர்ந்து மருந்து எடுத்துகொண்டார்.

ஆக, நிலைமை போகிற போக்கைப் பார்த்தால்…வருங்காலங்களில் இந்த சிக்கல் இன்னும் கடினமாகும் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. இதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுகளை கண்டறிய முடியுமா என்றால் சாத்தியமில்லை.

சித்தா, ஹோமியோ, அக்குபஞ்சர், யுனானி என எல்லாமும் மனித சமூகத்தின் செல்வங்கள் தான். ஆகையால் எல்லா மருத்துவங்களின் மீதான சரியான அம்சங்களை கணக்கில் கொண்டு மக்களுக்கு பயன்படல்வேண்டும். மக்கள் நலன்கள் மீது அக்கறை கொண்ட அரசு இருந்தால் தான் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என துறைசார் வல்லுநர்களை கொண்டு ஒரு சுமூகமான, சரியான தீர்வை நோக்கி கொண்டு செல்லமுடியும் என தோன்றுகிறது.

மோடி மாதிரியான ஆட்கள் தொடர்ந்து ஆண்டால் என்ன செய்வது? ’விநோதய சித்தம்’ சமூத்திரக்கனி வழியில் சொல்வதென்றால், நரகத்திலிருந்து சொர்க்கம் நோக்கி காலன் கைப்படித்து நடக்கவேண்டியது தான்.

பக்கங்கள் : 375
விலை : ரூ. 400
நாவல் ஆசிரியர் : அ. உமர் பாரூக்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

October 8, 2021

”ஒரு ட்ரையல் பார்க்கட்டுமா சார்!”



வண்டியை வழக்கமாய் விடும் மெக்கானிக்கிடம் சர்வீஸ்க்கு விட்டிருந்தேன். எடுக்க போகும் பொழுது, அங்கு ஒரு சான்றிதழ் போல தொங்கவிட்டிருந்தார்


என்னவென்று தூசி துடைத்து படித்த பொழுது, ஒரு பைக் காணாமல் போனதாக போலீஸ் தந்த ரசீது அது. என்னவென்று கேட்டேன்.

”யாரும் படிக்க மாட்டங்க! நீங்க கேட்கிறீங்க! நான் பழைய வண்டிகளை வாங்கி விற்பது உங்களுக்கு தெரியும் அல்லவா! அப்படி ஒரு ஆள் வந்து, ஒரு பல்சர் பைக்கை ட்ரையல் பார்க்கட்டுமா! என கேட்டார். போன ஆள் அப்படியே எஸ்கேப் ஆயிட்டான்!” என்றார்.

”அவனோட டாக்குமெண்ட்ஸ் உங்ககிட்ட இருக்கும் அல்லவா!” என்றேன்.

“போன் அடிச்சா எடுக்கல! ஆதாரில் உள்ள அயப்பாக்கம் முகவரியில் போய் பார்த்தால், ஆள் அங்கு குடியிருக்கவில்லை! பக்கத்து கடைக்காரர் ”வண்டியை எடுத்துட்டு போய் என்ன செய்வான் தெரியலை! ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடு! உனக்கு தான் நல்லது”ன்னு சொன்னார்! அந்த புகாரை பதிவு பண்ணி ரசீது வாங்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே! என ரெம்பவும் அலுத்துக்கொண்டார்.

“பணம் ஏதும் கேட்டாங்களா!” என்றேன்.

”நாலு மணிக்கு எஸ்கேப் ஆனான். இரவு பத்து மணிக்கு புகார் கொடுக்க போனேன். என்ன இப்ப வர்றே! என அந்த போலீஸ்காரம்மா என்கிட்ட கேட்கிறாங்க! அவனை தேடி அலைஞ்சேங்கன்னு விளக்கம் கொடுத்தேன். ரசீது கேட்டா, இரண்டு நாள் கழிச்சு வா! இரண்டு நாள் கழிச்சு வா! என தொடர்ந்து அலையவிட்டாங்க! ஒரு நாள், “எந்த ஆதாரமும் இல்லாம புடி! புடின்னு கேட்கிறேயே! எப்படி புடிக்கிறது?”ன்னு என்கிட்டயே அந்த போலீஸ்காரம்மா கேட்டாங்க! எனக்கு சிரிப்பு வந்திருச்சு! ஒரு வழியாக மூணு மாசம் கழிச்சு தான் ரசீதே கிடைச்சது!”

வண்டியை காணாம போனது ஒரு துயரம்னா, வண்டி காணாமல் போனதற்கு கம்ப்ளைண்ட் கொடுத்து, புகார் வாங்கிறது அத விட துயரமாப் போச்சு! இதை விட இன்னொரு துயரம் என்னான்னா? வண்டியை எடுத்துட்டு போன ஆளோட முகத்தை பார்க்கனும்னு இந்த தெருவில் சிசிடிவி எந்த வீட்டுல இருக்குன்னு போய் விசாரிச்சு, அந்த வீடியோ புட்டேஜை கேட்டு வாங்கினேன். ஒரு நாள் கழிச்சு, ஒரு போலீஸ்காரர் வந்து என்னைத் தேடி வந்து கேட்கிறார். ”முந்தா நேத்து இதே தெருவில் ஒரு வீட்டுல நகை, பணம் எல்லாம் திருடு போயிருக்கு! நீங்க எதுக்கு சிசிடிவி புட்டேஜை கேட்டீங்கன்னு” என்னை திருடன் போல கேட்டார். அது தான் இன்னும் துயரம்!

"இப்ப எல்லாம் தெரியாதவங்களுக்கு வண்டியை டிரையல் பார்க்க கொடுக்கிறதே இல்ல சார்!"

***

இந்த ட்ரையல் கதை கேட்டதும் எனக்கு மோடி தான் பளிச்சென நினைவுக்கு வந்து போனார். இதுநாள் வரைக்கும் காங்கிரசுக்கும், மற்றவர்களுக்கும் ஓட்டு போட்டீங்களே! எங்களுக்கு இந்த முறை ஓட்டு போடுங்க! நாங்க ட்ரையல் பார்க்கிறோம் என கேட்டார்.

ஆட்சி கிடைத்ததும், சிபிஐ, உச்சநீதிமன்றம், ரிசர்வ் பேங்க், பிஎம் கேர் பணம், தேர்தல் ஜனநாயகம் என இருக்கிற எல்லா பர்னிச்சரையும் உடைச்சது தான் ஞாபகத்துக்கு வந்தது.

May 30, 2021

பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, எரிந்து கொண்டிருக்கும் வயிறுகள் கண்டுகொள்ளப்படவில்லை.


கொரானா இரண்டாவது அலையில், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, எரிந்து கொண்டிருக்கும் வயிறுகள் கண்டுகொள்ளப்படவில்லை.

தில்லியில் உள்ள ஒரு பகுதி ரேசன் கடையில் மக்கள் வந்து பொருட்களை கேட்டு செல்வதும், கடை அலுவலர் இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் அந்த பகுதியில் உள்ள மொத்தம் 110 ரேசன் கடைகளில் மே 15 முதல் மே 20 வரைக்கும் 44 கடைகளில் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்தார்கள். மீதிக்கடைகளில் இன்னும் ஏதும் விநியோகிக்கவில்லை. மாதத்தின் முதல் வாரத்திலேயே விநியோகித்துவிடுவது வழக்கம். ஆனால், இன்னும் விநியோகிக்காததற்கு காரணம் மாநில ரேசன் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மத்திய அரசு தரும் ரேசன் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை. மாநில பொருட்களுக்கு ஒருமுறையும், மத்திய அரசின் பொருட்களுக்கு ஒரு முறையும் இரண்டாவது அலையின் கடும் நெருக்கடியில் இருமுறை கொடுக்க முடியாது அல்லவா! ஆகையால் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒன் நேஷன். ஒன் ரேசன் கார்டு திட்டம் இன்னும் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது தனியாக எழுதவேண்டிய விசயம்.
கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவுக்கே வழியில்லாமல் நடந்தே பல லட்சம் பேர் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்தார்கள். இந்த பயணத்தில் பசியிலும், பட்டினியிலும், கொடுமையான வெய்யிலிலும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் செத்துபோனார்கள். அந்த அனுவத்தில் இந்த முறை சுதாரித்து ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். ஆகையால் பல வீடுகள் இப்பொழுது பூட்டிக்கிடக்கின்றன. ஆனால் சிலரால் அப்படி கிளம்ப முடியவில்லை. ”ஊருக்கு போனாலும் அங்கும் சாப்பிடுவதற்கு பணம் வேண்டுமே! தில்லியில் உள்ள வீட்டிற்கும் வாடகை கொடுக்கவேண்டுமே!” என்பது தான் காரணம்.
இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லை. அப்படி அறிவித்தால், மாநில அரசுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமே! ஆகையால் மத்திய அரசு அந்த பொறுப்பிலிருந்து கழன்று கொண்டது. ஆனால், மாநில அரசுகள் நிலவரத்தின் தீவிரத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கின்றன. தில்லியில் ஐந்தாவது வாரம் ஊரடங்கு தொடர்கிறது. மும்பையில் ஆறாவது வாரம். கொல்கத்தாவில் மூன்றாவது வாரம். சென்னையில் இரண்டாவது வாரம்.
தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. சிறு சிறு நிறுவனங்களிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மக்களின் உயிர்களை காக்க அரசு எடுத்துக்கொண்டு போய்விட்டது. அவர்களுக்கு வருமானத்திற்கு மாற்று வழிகள் இல்லை.
சிறு சிறு தொழிற்சாலைகள் இயங்கினால் தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவார்கள். ஊரடங்கு என தொடர்ந்து இருப்பதால், பணப்புழக்கம் நிறுவனங்களிடமும் இல்லாமல் போய்விடுகிறது. விளைவு வேலைப் பார்த்தத்திற்கான நிலுவை சம்பளத்தை கூட பெற முடிவதில்லை.
கடந்த ஆண்டாவது பெண்களின் கணக்கில் அரசு ரூ. 500 போட்டது. தொழிலாளர்களுக்கு சில திட்டங்களை அறிவித்தது. இந்த ஆண்டு இதுவரை எதையும் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழக அரசு நான்காயிரம் நிவாரண நிதியாக தருவதாக அறிவித்ததில் முதல் தவணையாக மே மாதம் ரூ. 2000 ரேசன் அட்டைதாரர்களுக்கு தந்திருக்கிறார்கள். இதெல்லாம் ரேசன் அட்டைதாரர்களுக்கானது! ரேசன் அட்டை இல்லாதவர்களும் இங்கு ஒவ்வொரு பகுதியிலும் லட்சங்களில் உண்டு. அவர்கள் பட்டினி கிடந்தால் என்ன செய்வது?
சென்னையில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதித்து இருக்கிறார்கள். அத்தியாவசிய தொழிற்சாலைகள் திறக்க அனுமதித்திருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லை. வாடகை, மருத்துவம் என அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?
கடந்த அலையின் பொழுது சிவில் சமூகம் தன் சக்திக்குட்பட்டு உணவு தந்து, பொருட்கள் தந்து ஏதுமற்றவர்களை காப்பாற்றியது. இந்த அலை கடந்த அலையை விட தாக்கம் பெரிது. சிவில் சமூகமும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. இப்பொழுது தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கு காலத்திலாவது மக்கள் சிலரிடம் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. இப்பொழுது கடனை வாங்கி வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
அசிம்பிரேம்ஜியின் பல்கலை கழகம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்ததில் மக்கள் வருமான இழப்பால் தங்கள் சாப்பிடும் அளவும், சத்தின் அளவும் குறைந்திருக்கிறது. 230 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றிருக்கிறார்கள். முறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பாதிபேர் முறைசார் தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். வருமான இழப்பு, வாழும் முறை எல்லாம் மாறியிருக்கிறது.
மும்பையில் முன்பு ஒரு அறையை பகிர்ந்துகொண்டு வாழ்ந்த ஒருவர், இப்பொழுது அறை வாடகை கொடுக்கமுடியாமல் இப்பொழுது தெருவில் தூங்குகிறார். கடலில் குளிக்கிறார்.
இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பணமாக கொடுக்கப்படவேண்டும் எனவும் அசிம்பிரேம்ஜி பல்கலை கழக ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் இந்த அவல நிலையை மத்திய அரசு புரிந்துகொண்டு நடக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுவதும் குறுக்கும் நெருக்குமாய் மக்கள் அலைந்த பொழுதே கண்டுகொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காக மட்டுமே சிந்திக்கும் நம் பிரதமர் இதையெல்லாம் கண்டுகொள்வாரா?
தொழிலாளி வர்க்கம் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். வறுமையில் சாவதா? உரிமைகளுக்காக போராடுவதா என!

May 27, 2021

கொரானா ஒரு புயலைப் போல தாக்குகிறது!


கொரானா ஒரு புயலைப் போல தாக்குகிறது!

மருத்துவமனைகளில் சுவாசிப்பதற்கு ஆக்சிசன் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்!

கொரானா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளது. ஆக்சிசன் இல்லை; படுக்கைகள் இல்லை; மருந்துகள் பற்றாக்குறை; கருப்புச் சந்தையில் பல ஆயிரங்களுக்கு மருந்துகள் விற்பனை; எரிப்ப்பதற்கு கூட பல மணிநேரங்கள் காத்திருக்கவேண்டிய அவலநிலை என செய்திகள் அலறிக்கொண்டு இருக்கின்றன.

500 கொரானா நோயாளிகள் உள்ள தில்லி GTB மருத்துவமனையில் ஆக்சிசன் தீர்ந்து போகும் நிலைக்கு வந்துவிட்டார்கள். “நாங்கள் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆக்சிசன் சிலிண்டர்கள் வந்ததை பார்த்ததும் நாங்கள் ஆனந்த கண்ணீர்விட்டோம்” என்கிறார் ஒரு மருத்துவர் இந்தியா டுடேவிடம்!

சிபிஎம்மும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் கொரானா நெருக்கடியை உணர்ந்து தங்களது பரப்புரையை நிறுத்திவிட்டார்கள். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். இந்த கடும் நெருக்கடியில் உத்திரபிரதேசத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கும் கும்பமேளாவையும் உற்சாகமாக நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

செவ்வாய்கிழமை இரவு “ஆக்சிசன், மருந்துகள் தேவை அதிகரித்துள்ளது. யாரும் பதட்டப்படவேண்டாம். தேவையான எல்லாவற்றின் உற்பத்தியையும் விரைந்து செயல்பட சொல்லி உத்தரவிட்டுள்ளோம்” என ஊடகங்கள் வழியே பிரதமர் அறிவிக்கிறார்.

கொரானாவின் இரண்டாவது அலை கடுமையாக இருக்கும் என பிற ஆய்வுகள் மட்டுமல்ல! மத்திய அரசின் சொந்த ஆய்வு கூட அதையே தான் உறுதிப்படுத்தியது! ஆனால் தலைநகரத்திலேயே கொரானா நோயாளிகள் ஆக்சிசனுக்காக அவர்கள் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய கிராமங்களை நினைத்துப் பார்த்தால், சொல்லவே தேவையில்லை!

#படம் : அகமதாபாத்தில் மருத்துவமனையில் நுழைவதற்காக ஆம்புலன்சில் காத்திருக்கிறார்கள்.

பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையும், திருப்பதியும்!


கொரானா தொற்றை முன்வைத்து, அரசு அறிவித்த ஊரடங்கு முடிந்து ஒரு வருடத்தை கடந்துவிட்டோம். கொரானாவின் இரண்டாவது அலை இன்னும் புதிய வீரியத்துடன் பரவி வருகிறது என கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் சொல்லிவருகிறார்கள். இன்று தில்லி, சண்டிகார், சட்டிஸ்கரில் இரவில் நடமாட்டம் இருக்க கூடாது என சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே மகாராஷ்டிரம் பல அறிவிப்புகளை கொடுத்தப்படி தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த கையோடு, ”முழித்துக்கொண்டு” தமிழக அரசும் பல அறிவிப்புகளை இன்று அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றமும், தேர்தல் வரை அமைதியாய் இருந்துவிட்டு, கவனமாகவே இல்லையே? என கண்டித்திருக்கிறது.


இந்த அறிவிப்புகளுடன் இன்று திருப்பதி தேவஸ்தானம் தனது பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கிறது. வருகிற 11ந் தேதியிலிருந்து இலவச தரிசனம் ரத்து. ஏற்கனவே இணையம் வழியாக ரூ. 300 மதிப்பு கொண்ட டிக்கெட்டுகள் தினமும் 30,000 விநியோகிக்கப்படுவது மட்டும் தொடரும் என அறிவித்திருக்கிறது.

கடந்த 50 நாட்களுக்கு முன்பாக, அண்ணன், அக்கா குடும்பம் திருப்பதியை பார்க்க டிக்கெட் புக் பண்ணி தரச் சொல்லி, கேட்டிருந்தார்கள். மாத இறுதியில் இணையத்தில் திறக்கும் பொழுதே டிக்கெட்கள் ரயில் டிக்கெட்டை விட பரபரவென விற்றுத்தீர்ந்துவிட்டன. யாரோ ஒரு உறவினர் இலவச தரிசனத்திற்கு இப்பொழுது அனுமதிக்கிறார்கள் என்று சொன்னவுடன், உடனே ஒரு வேனைப் பிடித்து திருப்பதி கிளம்பிவிட்டார்கள். நானும் திருப்பதியை பார்த்திராததால், பார்க்கலாம் என சென்னையில் இருந்து கிளம்பி அவர்களுடன் இணைந்துகொண்டேன்.

2021 பிப்ரவரி இரண்டாவது சனிக்கிழமை. கீழ்த்திருப்பதியை அடைந்து, இலவச தரிசனத்திற்கான டோக்கன் தருகிற இடத்தை அடையும் பொழுது. காலை 11 மணி. மிக நீண்ட வரிசை. மாஸ்க் இல்லை. தனிநபர் இடைவெளி இல்லை. ஒரு மணி நேரம் நின்று எல்லோருக்கும் தனித்தனியாக டோக்கன் வாங்கினோம். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். ஒரு நாளைக்கு 25000 பேர் அனுமதி.

இலவச தரிசனத்திற்கு அனுமதி 25000. இணையத்தின் வழியே 25000. இது தவிர கீழ்த்திருப்பதியிலிருந்து நடந்து செல்லும் இரண்டு வழிப்பாதைகள் வழியாக செல்லும் பக்த கோடிகளின் எண்ணிக்கை தனி. அந்த தரிசனத்துக்கு இலவச தரிசனம் என்ற பெயர் இல்லை. 3800 படிகள் வழியாக நடந்து செல்வதால் திவ்ய தரிசனம். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சற்று ஏறக்குறைய 60000 பக்த கோடிகள்.

எண்ணிக்கை எல்லாம் தெரிந்து தானே விடுகிறார்கள். மேலே போய் அறை எடுத்துக்கொள்ளலாம் என சொந்த வேனில் ஞாயிறு மாலை மலையேறினோம். அங்கே போனால், அறைக்காக பெருங்கூட்டம் புதுப்படத்திற்கு திரையரங்கில் நெருக்கியடித்து வரிசையில் நிற்கிறார்கள். அங்கும் பெரும்பாலோர் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. சானிடைசரும் எங்கும் வழங்கப்படவில்லை. நிறைய கூட்டம் கூடியதும், ஒரு போலீஸ் மரியாதையே இல்லாமல் ”இங்கு வரிசையில் நிற்பவர்களுக்கே அறை கிடைப்பது சாத்தியமில்லை. ஆகையில் மற்றவர்கள் உடனே கலைந்து செல்லுங்கள்” என போலீஸ் பக்த கோடிகள் மீது மரியாதையே இல்லாத தொனியில் அறிவித்தார். பிறகு முனகிகொண்டே கலைந்து சென்றார்கள்.

கட்டணம் இல்லாமல் தங்கும் மிகப்பெரிய தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருக்கிற ஹால்கள் பற்றி விசாரித்து, அன்றிரவு தங்கினோம். இரவு 10 மணிக்கு இடப்பிரச்சனையில் இரண்டு மொழிக்காரர்கள் கடுமையாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள். பிறகு சுற்றியிருப்பவர்கள் சமாதானம் செய்துவைத்தோம்.

காலையில் மாசி முதல் வாரம் என்பதால் நன்றாக பனி இருந்ததால், நன்றாக குளிர் இருந்தது. அதிகாலையில் 5 மணிக்கு போய் இலவச தரிசன வரிசையில் போய் நின்றோம். எங்களுக்கு முன்பும், பின்பும் பல நூறு கணக்கில் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். திரையரங்கு கவுண்டர் போல கொஞ்சம் அகலமாய் கவுண்டர்கள் வழியாக செல்ல ஆரம்பித்தோம். 20 அடிக்கு ஒருமுறை மாஸ்க் அணியுங்கள். தனிநபர் இடைவெளியை கடைப்பிடியுங்கள் என அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தார்கள். ஆனால், ஓட்டமும் நடையுமாய் போய் மக்கள் நெருக்கமாய் போய்க்கொண்டே இருந்தார்கள். பிறகு 8 மணி வாக்கில் 300 பேர் வரை உட்கார்ந்து ஓய்வெடுக்கும் அளவிற்கு அறையில் அடைத்து வைத்தார்கள். இப்படி இலவச தரிசன பக்தர்கள் போய்க்கொண்டிருக்கும் பொழுதே, வேறு ஒரு வரிசையில் இருந்து ரூ. 300 கட்டணம் பெற்றவர்களும் இணைந்துகொண்டார்கள். ஜே ஜே ஒரே திருவிழா கூட்டம்.

பாலாஜியை பார்க்கவேண்டும் என்ற பக்தி பரவசத்தில் ஒரு நான்கு வயது பையனை விட்டுவிட்டு பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துவிட்டார்கள். அவன் பரிதாபமாய் அழுதுகொண்டு நின்றுக்கொண்டிருந்தான். தேவஸ்தான ஊழியர்கள் அவனை பாதுகாத்தார்கள். கால்மணி நேரம் கழித்து எதிர் திசையில் அந்த பையனை தேடி பெற்றோர்கள் பதட்டமாய் வந்துகொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக திருப்பதி பாலாஜியை நெருக்கத்தில் பார்த்த பொழுது, காலை 9.30 மணியாகிவிட்டது. என்னருகே வந்த பக்தர் ஐந்து செகண்ட்டுக்கு மேல் நின்று பார்த்துவிட்டார் என்பதற்காக, ஒரு ஊழியர் கடுமையாக அவர் கையை பிடித்து இழுத்து, போகிற வழிப்பக்கம் தள்ளிவிட்டார். காலை 5 மணியிலிருந்து 9.30 மணி வரை கிட்டத்தட்ட 7 கிமீக்கு மேலேயே நடந்திருப்போம். இந்த நான்கு மணி நேரத்தில் ஒரே இடத்தில் மட்டும் ஒரு 20 வயது பெண் ஊழியர் கிருமிநாசினியை கையில் அடித்தார். பிறகு வேறு எங்குமே கிருமிநாசினி தரவேயில்லை.

அன்னதானம் போடுமிடத்திற்கு வரும் பொழுது காலை 10 மணியை தாண்டிவிட்டது. டிபன் நேரம் முடிந்ததால், சோறு போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே நேரத்தில் அந்த ஹாலில் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கமாய் அமர்ந்து தான் சாப்பிட்டார்கள்.

நிற்க. இதை ஏன் விரிவாக சொல்கிறேன் என்றால், மாஸ்டர் படம் வந்த பொழுது, பிரபல நடிகருக்கு ரசிகர்கள் மேல் கொஞ்சமும் அக்கறையின்றி திரையரங்கில் 100% இருக்கைகளுக்கு அரசிடம் அனுமதி கோரினார். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ உடனே அரசு மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி, 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி என்பதை 100%யாக உத்தரவை அளித்தது. அரசை ஊரே காறித்துப்பிய பிறகு, ஒரு மருத்துவர் ”முன்களப்பணியாளர்கள் கொரானா பெருந்தொற்றை எதிர்த்து சண்டையிட்டு, சோர்ந்து போயிருக்கிறோம். அனுமதியை திரும்ப பெறுங்கள்” என உருக்கமாய் ஒரு கடிதம் எழுதி வைரல் ஆனது. பிறகு தான் 100% என்ற உத்தரவை திரும்ப பெற்றது.

இதெல்லாம் திரையரங்கிற்கு தானா? கோயில்கள் என்றால், கொரானா பரவாதா? கொரானாவிற்கு கடவுளை அண்டாதா? அப்படியும் இல்லையே! கொரானா காலத்தில் எல்லா கோயில்களையும் ‘பாதுகாப்பாய்” மூடித்தானே வைத்திருந்தோம். இப்பொழுது இரண்டாவது அலை பெரிதாய் வரும் பொழுது யாரும் ஏன் கேள்வி எழுப்புவதில்லை. இப்படி தினமும் 60000த்துக்கு மேல் மக்களை கூட்டம் கூட்டமாக அனுமதிக்கிறோமே? கொத்து கொத்தாக மக்கள் நோய்வாய் படமாட்டார்களா? அதில் பல பக்தர்கள் செத்துப் போய்விட மாட்டார்களா? எவன் எக்கேடு கெட்டா என்ன? எனக்கு கல்லா நிறையனும் என்று நினைக்கிற ஒரு கேடு கெட்ட முதலாளியை போல திருப்பதி தேவஸ்தானம் சிந்திக்கிறதா? அல்லது மக்கள் நலன் மீது ஆந்திர அரசுக்கு அக்கறை இல்லையா?

திருப்பதிக்கு ஆந்திர மக்கள் மட்டுமில்லை. எல்லா மாநிலத்திலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாய் போய்வருகிறார்கள். அங்கு வந்துவிட்டு போனால், பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா பரவதா? மற்ற மாநில அரசுகளும் ஏன் இதை கண்டுகொள்ள மறுக்கின்றன?

தெலுங்கு சண்டைப் படம் என்றால், மூளையை கழட்டிவைத்துவிட்டு தான் படம் பார்க்கவேண்டும் என்பார்கள். கோயில்கள் என்றாலும் அப்படித்தானா? மூளையை கழட்டிவைத்துவிட வேண்டுமா? அறிவுபூர்வமாக சிந்திப்பது நின்றுவிடுமா?

ஊருக்கு போய் வந்த பிறகு, தொழில்முறை நண்பர் ஒரு செய்தியை அனுப்பினார். ஐஆர்சிடிசி நிறுவனம் இணையத்தில் பதிவு செய்து, திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துப் போய், பாலாஜியை பார்ப்பதற்கு, லட்டு வாங்குவதற்கு, ஊரில் வந்து பாதுகாப்பாய் இறக்கிவிடுவது வரை ஒரு கவர்ச்சிகரமான பேக்கேஜை அறிவித்திருந்தது. ”கொரானா காலத்தில் ரிஸ்க் வேண்டாம் சார். உயிர் முக்கியம் என்றதும் “ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான்” என்றார்.

திருப்பதி கோயிலில் ஊரடங்கு காலத்தில் ஊழியர்கள் மத்தியில் கொரானா பரவியும் இருந்தது நாம் செய்திகளில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எல்லாம் தெரிந்தும், இப்படி தினமும் 60000த்துக்கும் மேற்பட்டவர்கள் போய் வருவதை எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

இந்த சமயத்தில், தவிர்க்கமுடியாமல், ஊரடங்கு அறிவித்த பொழுது முசுலீம்கள் மீது காட்டிய காழ்ப்பு நினைவுக்கு வருகிறது. ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்ட சமயத்தில், போக்குவரத்து பிரச்சனையால் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்களை கொரானாவை திட்டமிட்டே பரப்பினார்கள் என இந்துத்துவ வெறியர்கள் விசம பிரச்சாரம் செய்தார்கள். உலகம் கொரானாவை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த பொழுது, இவர்கள் அப்பொழுதும் சிறுபான்மையினர் மீது தங்கள் வெறுப்பரசியல் செய்துகொண்டிருந்தார்கள். கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள்.

தப்லீக் ஜமாத் வழக்கு குறித்த தீர்ப்பில் மும்பை நீதிமன்றம் "நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" கூறியது.

பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டியவர்கள் எல்லாம், பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள். விளைவு கொரானா நம்மை சுற்றி வளைக்கிறது. கொல்கிறது. இதையே காரணம் காட்டி, ஊரடங்கை அமுல்படுத்துவார்கள். உடைமை உள்ளவர்களுக்கு கவலையில்லை. புதுசு புதுசா சமைத்து, யூடியூப்பில் அப்லோட் செய்வார்கள். இல்லாத பெரும்பான்மை மக்கள் என்ன செய்வார்கள்? இதோ இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் கொளுத்தும் வெயிலில் குடும்பம் குடும்பமாய் நடந்து சென்றவர்களில் எத்தனை பேர் செத்தார்கள் என்ற கணக்கே இல்லை என இந்திய அரசு வெட்கமில்லாமல் உச்சநீதி மன்றத்தில் சொல்லியது!

’பேரரசர்’ நம்மை எல்லாம் தட்டில் சத்தம் எழுப்பி, கொரானவை விரட்ட சொன்னார். நமக்கு வாய்த்த பேரரசரும், மந்திரிகளும் ”மகா புத்திசாலிகள்”.

சிவில் சமூகம் தான் விழிப்போடு இருக்கவேண்டும்.

March 29, 2020

ஹெல்மெட்

நேற்று மாலையில்
வீடு போகும் பாதையில்
ஒரு பெரியவர் லிப்ட் கேட்டார்.
ஏற்றிக்கொண்டேன்.

"நீங்க ஹெல்மெட் போடல!
போகிற வழியில் போலீசு பிடிச்சா
அபராதம் நீங்க கட்டனுமா?
நான் கட்டனுமா?" என்றேன் சிரித்துக்கொண்டே!

"மனிதாபிமானத்தில லிப்ட் கூட
யாரும் கொடுக்க முடியமா 
பண்ணிட்டாங்க சார்!" என்றார் கோபமாய்!

March 17, 2020

ஆதார் மேனியா


ஒரு தொழிலாளி. வாய் பேசமுடியாதவர். ஒரு நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்தார். 2016ல் சொந்த பிரச்சனையில் வேலையில் இருந்து தானாகவே நின்றுவிட்டார்.

உடல்நிலை குறைவால் 2017ல் இறந்துவிட்டார். அவருக்கு திருமணமாகவில்லை. அப்பா இல்லை. வயதான தாயார் மட்டுமே. இறந்தவருடைய பி.எப். தொகையை வாங்கிக் கொடுத்தால் அந்த அம்மா கொஞ்ச காலத்திற்கு நிம்மதியாக இருப்பார்.

அவருடைய பி.எப் தொகையை அந்த அம்மா பெற, உரிய விண்ணப்பம், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு, இறந்தவருடைய பள்ளி சான்றிதழ், வாக்காளர் அட்டை என எல்லாவற்றையும் வைத்து விண்ணப்பித்தோம்.

அந்த பி.எப் அதிகாரி "இறந்தவருக்கு ஆதார் இல்லையா? பான் இல்லையா" என்றார்.

"வேலை பார்த்தது ஆபிஸ் பாய். அவருக்கு பான் கார்டு எல்லாம் எப்படி மேடம்?" என்றேன்.

"இப்ப எல்லாம் எல்லோரும் பான்கார்டு வைத்திருக்கிறார்கள்" என்றார் அபத்தமாய்!

"ஆதார் நீங்கள் இணைக்கவில்லை. அதைக் கொண்டு வாருங்கள்" என சொன்னார்.

"இறந்தவருடைய குடும்பத்தாரிடம் முதலில் ஆதார் தான் கேட்டோம். அவர் எடுக்கவில்லை என்றார். பிறகு தான் அவர் பெயரில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதை எடுத்து வாருங்கள் என்றோம். அப்படி சொன்னதால் தான், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அட்டை எடுத்து வந்தார்கள்" என்றேன்.

"ஆதார் இல்லாமல் இருக்காது. அதை கொண்டு வரச் சொல்லுங்கள்" என தொடர்ந்து அடம்பிடித்தார்.

எரிச்சலாகி "மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார்க்கிறேன்" என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

அந்த வயதான தாயாரை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அலையவிடப் போகிறார்களோ என கவலை வந்தது.

***
1/7/2017 லிருந்து ஆதார் இருந்தால் தான், பி.எப் இருக்கும் நிறுவனத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்ய முடியும். இல்லையென்றால், வேலை செய்ய முடியாது. பி.எப். இல்லாத நிறுவனமாக பார்த்து வேலை செய்து பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

ஆதாரில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும், பி.எப் தளம் அனுமதிப்பதில்லை. நம் நாட்டில் கூப்பிடுவதற்கு ஒரு பெயர். சான்றிதழில் ஒரு பெயர் இருக்கும். மேலே இறந்தவருடைய பெயர் நிறுவனத்தில் "பாபு" என அழைப்பார்கள். அப்படித்தான் அலுவலக பதிவேட்டிலும் இருக்கிறது. செத்துப்போன பிறகு "சிட்டிபாபு" என சான்றிதழ் தருகிறார்கள். சான்றிதழில் ஒரு பிறந்த தேதி. ஆதாரில் ஒரு பிறந்த தேதி இருக்கும். ஆதாரில் வருடம் மட்டும் இருக்கும். பிறந்த தேதி, மாதம் இருக்காது. இதையும் பி.எப்.தளம் அனுமதிக்காது.

கடந்த ஒரு வருடமாக, பி.எப் பணத்தை திரும்ப பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என சொல்லிவிட்டார்கள். அதிலும் பல குழப்பங்கள். அவருடைய தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பி.எப் தளத்திலும், அவர் வைத்திருக்கிற ஆதார், பான், வங்கி கணக்கு என சரியாக இருக்கவேண்டும். அதன்பிறகு, ஆதாரில் நம்முடைய செல்பேசி இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் அந்த எண் இப்பொழுது நம் கையில் வைத்திருக்கவேண்டும். மேலே சொன்ன குழப்பங்கள் இருக்கும் பொழுது, தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்?

பி.எப். அலுவலகம் எப்பொழுது சென்றாலும், 300, 400 பேர் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒரு விண்ணப்பத்தை வாங்கி பொறுமையாக பார்த்து, எதுவெல்லாம் இல்லை? என பார்த்து சொல்வதில்லை. இரண்டு குறைகள் சொல்வார்கள். பர்மிசன், விடுமுறை எடுத்து அந்த தொழிலாளி அலைந்து திரிந்து அதையெல்லாம் சரி செய்து கொண்டு வருவார். அடுத்து இரண்டு விசயங்கள் இல்லை என்பார்கள். இப்படி தொழிலாளர்கள் தங்களுடைய பி.எப் பணத்தை வாங்குவதற்கே தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டிலும் ஆதார் மேனியா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இனி பான் கார்டு இல்லாமலே, ஆதாரை கொண்டே தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். அப்படி தாக்கல் செய்த பிறகு, வீட்டிற்கே பான் கார்டு அனுப்பி வைப்போம் என பான் கார்டு அலுவலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

மோடி அவர்கள் விழுந்து கும்பிட்ட மக்களவையில் ஆக்கப்பூர்வமாக விவாதித்து ஆதார் எண்ணை அறிமுகப்படுத்தவில்லை. கொல்லைப்புறமாகத்தான் கொண்டு வந்தார்கள். மாநிலங்களவையில் செல்வாக்கு இல்லாததால், பண மசோதாவாக (Money Bill) அறிமுகப்படுத்தினார்கள்.

உச்சநீதி மன்றத்திலும் பல கோடி பேர் எடுத்துவிட்டார்கள் என நைச்சியமாய் விவாதித்தார்கள். இதோ அத்திவரதரை பார்க்கவேண்டும் என்றால் ஆதார் வேண்டும் என சொல்லிவிட்டார்கள்.

அரசாங்கத்தின் மானிய நலத்திட்டங்களுக்கு மட்டும் ஆதார் கேட்கவேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனிநபர் ஒருவர் சேம நல நிதிக்கு (PF), பென்சன் திட்டத்திற்கு ஆதாரை கேட்பது முரணானது என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். பி.எப் நிறுவனம் என்ன சொல்லி மழுப்ப போகிறதோ தெரியவில்லை.

ஆதார் மேனியா அதிகரித்துக்கொண்டே போகிறது. இது அதிகபட்சமாக எங்கே போய் முடியும் என தெரியவில்லை!

-08/07/2019 - முகநூலில்