> குருத்து: வயதான பெற்றோர்களை யார் பார்த்துக்கொள்வது?

August 26, 2026

வயதான பெற்றோர்களை யார் பார்த்துக்கொள்வது?

 


நாம் குழந்தைகளை வளர்க்கும்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கிறோம். நன்றாகப் படிநல்ல வேலைக்குப் போநல்லா சம்பாதிஉன் வாழ்க்கையை நீ பார்த்துக்கொள்.”

 

ஆனால்,  இந்தச் சமூகத்தையும் பார்த்துக்கொள். உன்னை வளர்த்தவர்களையும் பார்த்துக்கொள். உன்னால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கும் உதவி செய்.” என்று எத்தனை பெற்றோர்கள் சொல்லி வளர்க்கிறார்கள்?

 

தனியுடைமை சமூகத்தில், குழந்தை பிறந்தவுடனேயே அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம். அவனுக்காகச் சேமிக்கிறோம். நல்ல பள்ளியில் சேர்க்கிறோம். கல்லூரிக்கு அனுப்புகிறோம். வேலை கிடைக்க வேண்டும் என்று ஓடுகிறோம். திருமணம் செய்து வைக்கிறோம்.

 

எல்லாமே சரி. ஆனால் அந்தப் பயணத்தில் ஒரு கேள்வியை மட்டும் மறந்துவிடுகிறோம். நாம் வயதாகும்போது நம்மை யார் பார்த்துக்கொள்வார்கள்?”

****

 

இது அன்பு இல்லாத பிள்ளைகளின் பிரச்சினை மட்டும் அல்ல. அன்பான பிள்ளைகளுக்கும் இது பெரிய சவால்தான். இன்றைய குடும்பத்தைப் பாருங்கள்.

 

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவே நேரம் போதவில்லை. குழந்தைகளின் படிப்பு, வேலை, திருமணம், வீட்டு கடன், வாடகை, மருத்துவச் செலவு என்று அவர்களுடைய வாழ்க்கையே ஒரு பற்றாக்குறை வரவுசெலவு கணக்காக ஓடுகிறது.

 

அந்த நிலையில் வயதான பெற்றோர்களின் செலவும் சேர்ந்துவிட்டால்? அன்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. ஆனால் பணம் போதவில்லை. இதுதான் உண்மையான பிரச்சினை.

 

பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமைஎன்று சொல்லிவிடுவது மிகவும் எளிது.

ஆனால், அந்தக் கடமையைச் செய்யத் தேவையான பொருளாதார அமைப்பை இந்தச் சமூகம் உருவாக்கியிருக்கிறதா? என்பதுதான் கேள்வி.

****

 

நாம் பொதுவாக 58 வயது வரை வேலை செய்கிறோம்.  அதுவரை என்ன செய்கிறோம்? சம்பளம் வருகிறது. அதிலிருந்து வீட்டு வாடகை, உணவு, குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவம், கடன், காப்பீடு, விழாக்கள் என்று செலவு போகிறது.

 

மாதக் கடைசியில் கணக்கைப் பார்த்தால், இந்த மாதமும் somehow ஓடிவிட்டது!” என்றுதான் பல குடும்பங்கள் பெருமூச்சு விடுகின்றன. குழந்தைகளுக்காகப் பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம். அவர்களுடைய எதிர்காலத்திற்காகச் சேமிக்கிறோம்.

அவர்களுக்கு வீடு கட்டுகிறோம்.  திருமணம் செய்து வைக்கிறோம். தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கூட உதவுகிறோம். ஆனால் அந்தச் செலவுகளுக்குப் பிறகு, நம்முடைய முதுமைக்காக என்ன மிச்சம்? என்று கேட்கும்போது, பலரிடம் பதில் இல்லை.

***

 

 

அதுதான் முதுமையின் கொடுமை. வேலை இருந்தபோது உடல்நலக்குறைவு வந்தால் மருத்துவமனைக்குச் செல்லலாம். ஓய்வு பெற்ற பிறகு? வருமானம் குறைகிறது. ஆனால் மருத்துவச் செலவு குறைவதில்லை. மாறாக அதிகரிக்கிறது. உடல் பழைய இயந்திரம் போல ஆகிவிடுகிறது. ஒரு மாதம் மருத்துவர். அடுத்த மாதம் பரிசோதனை.

 

அதற்குப் பிறகு மருந்து. சிலருக்கு தொடர்ந்து மருத்துவச் செலவு. அதோடு, வயதானவர்களுக்கு உணவும் சாதாரணமாகக் கொடுத்துவிட்டுப் போக முடியாது. உடல்நிலைக்கு ஏற்ற உணவு. நேரத்திற்கு உணவு. சிலருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டிய நிலை. வருமானம் குறையும் காலத்தில்தான் செலவு அதிகமாகிறது.

 

இதுதான் முதுமையின் மிகப்பெரிய பொருளாதார முரண்பாடு.

****

 

அரசு வயதானவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் மாதம் ₹1,000 போன்ற உதவித் தொகையை வழங்குகிறது. அது உதவி இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் இன்றைய விலைவாசியில் ₹1,000 வைத்து ஒரு மாதம் ஆரோக்கியமாக வாழ முடியுமா?

 

ஒரு நல்ல மருத்துவப் பரிசோதனைக்கே சில நேரங்களில் அந்தத் தொகை போய்விடுகிறது. அப்படியிருக்க, அரசு பார்த்துக்கொள்கிறதுஎன்று சொல்லிவிட முடியுமா?

***

 

 

அதனால்தான் முதுமையைப் பற்றிய சிந்தனை ஓய்வு பெற்ற பிறகு தொடங்கக்கூடாது. வேலைக்குச் செல்லும் காலத்திலேயே தொடங்க வேண்டும். குழந்தைகளுக்குச் சேமிப்பது போல, நம்முடைய முதுமைக்காகவும் சேமிக்க வேண்டும். குழந்தைகளின் கல்விக்காக ஒரு நிதி. திருமணத்திற்காக ஒரு நிதி. வீட்டிற்காக ஒரு நிதி. அப்படியே, நம்முடைய முதுமைக்காக ஒரு நிதிஎன்றும் இருக்க வேண்டும். 

 

இது சுயநலம் அல்ல.  மாறாக, நம்முடைய பிள்ளைகளின் மீது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கான பொறுப்பு.

****

 

ஒரு பெற்றோர் தன்னுடைய முதுமைக்காக போதுமான அளவு சேமித்து வைத்திருந்தால், அவர் பிள்ளைகளிடம் அன்பைக் கேட்கலாம்; ஆனால் பணத்தைக் கேட்டு நிற்க வேண்டிய அவசியம் குறையும்.

 

பிள்ளைகளும், பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்என்ற அன்பையும் பொறுப்பையும் வைத்துக்கொண்டு, அவர்களுடைய முழு வாழ்க்கைச் செலவையும் நாங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற பொருளாதார அழுத்தத்தில் சிக்காமல் இருக்க முடியும். அதனால் முதுமைக்கான சேமிப்பு என்பது தனிப்பட்ட பாதுகாப்பு மட்டுமல்ல.

அது குடும்ப உறவுகளைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பாதுகாப்பும் கூட.

****

நாம் குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது,

நான் வயதாகும்போது நீ என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும்என்று ஒப்பந்தம் போட்டு குழந்தையைப் பெறுவதில்லை. அதேபோல் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து பெற்றோர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

அன்பு இருக்க வேண்டும். பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு பொருளாதாரத் திட்டமும் இருக்க வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்களின் முதுமை பிள்ளைகளுக்குச் சுமையாகவும், பிள்ளைகளின் வாழ்க்கை பெற்றோர்களுக்குக் குற்ற உணர்வாகவும் மாறிவிடும்.

****

 

இன்று குழந்தைகளை தனியாக வளர்ப்பது சவால். நாளை பெற்றோர்களைத் தனியாகப் பார்த்துக்கொள்வதும் சவால். இரண்டுக்கும் ஒரே தீர்வு இருக்கிறது. வாழும் காலத்திலேயே எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது. குழந்தைகளுக்காகச் சேமியுங்கள்.

 

ஆனால் அதற்காக உங்கள் முதுமையை அடமானம் வைக்காதீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொடுங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளுக்கும் கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வையுங்கள்.

 

ஏனென்றால், பிள்ளைகள் நம்முடைய சொத்து அல்ல. நாமும் பிள்ளைகளின் பொறுப்பு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதோடு, ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது.

 

இறுதியாக...

 

முதுமையில் பிள்ளைகளின் அன்பு கிடைப்பது அதிர்ஷ்டம். ஆனால் முதுமையில் பிள்ளைகளின் பணத்தைத் தேவைப்படாத அளவுக்கு சேமித்து வைத்திருப்பது நம்முடைய பொறுப்பு.

 

-     - இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

0 பின்னூட்டங்கள்: