> குருத்து: சினிம
Showing posts with label சினிம. Show all posts
Showing posts with label சினிம. Show all posts

October 28, 2024

I see you (2019) English


Crime Thriller film

ஊரில் அடுத்தடுத்து இரண்டு சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். அந்த போலீசு அதிகாரி விசாரணையை துவக்குகிறார். மக்களும் போலீசோடு அருகில் உள்ள காடுகளில் தேடத்துவங்குகிறார்கள். (இப்படி அமெரிக்க படங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். நல்ல அம்சம்)

அந்த போலீசு அதிகாரியின் மனைவி தன்னோடு படித்தவருடன் காதலில் விழுந்ததால், போலீஸ் செம கடுப்பாக இருக்கிறார். இந்த விசயத்தில் மகனுக்கும் அம்மா மீது கோபம். இவர்களுக்குள்ள கசப்பில் வீட்டில் சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. அதை கவனிக்க தவறுகிறார்கள். ஒரு கொலையும் நடக்கிறது.

முதல் பாதியில் நடந்த மர்மங்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாதியில் சொல்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***
Spoiler Alert

படம் பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த இடத்தோடு விலகிவிடுங்கள்.


வீடு இல்லாத மக்களில் சிலர் அடுத்தவர் வீட்டுக்குள் அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் ஊருக்கு செல்லும் நாட்களில் உள்ளே நுழைந்து சில நாட்கள் வாழ்வது என்பது ஒரு வகையாக அதற்கு ஒரு பெயரிட்டு சொல்கிறார்கள்.

தெலுங்கில் ஷர்மி நடித்த ஒரு படம் ஒன்று இதே வகை மாதிரி படம் தான். அதில் எழும் சிக்கல்களை தான் படம் பேசும். இந்தப் படமும் அந்த வகையில் ஒரு படம் தான்.

சமீபத்தில் ஒரு துணுக்கு ஒன்றைப் படித்தேன். ஒரு குரங்கு தன் அப்போதைய தேவைக்கு மட்டும் பழங்களை பயன்படுத்தாமல், அடுத்த வேளைக்கு என எடுத்து வைத்தால், அதற்கு ஏதோ பிரச்சனை என ஆய்வு செய்வார்களாம். ஆனால் மனிதர்களில் சிலர் கணக்கிடலங்கா சொத்து சேர்த்தால், போர்ப்ஸ் பத்திரிக்கை தன்னுடைய இதழில் பெருமையாக வெளியிடும் என நகைச்சுவையாக கிண்டல் செய்திருந்தார்கள்.

ஒரு பக்கம் சிலருக்கு கணக்கில் அடங்கா பல தலைமுறைக்கு சொத்து. மனிதர்களில் சிலருக்கு இன்னும் வீடில்லாமல் இருப்பது என்பது மனித குல நாகரிகத்திற்கு கேடு தான். பணம் இருப்பவன் தரமாட்டான். பசித்தவன் விடமாட்டான் என்பது தான் நினைவுக்கு வருகிறது.

மற்றபடி படத்தை இரண்டாக பிரித்துக்கொண்டது நன்றாக வேலை செய்தது. அநியாயமாக அந்த பெண்ணை கொன்றது தான் வருத்தம்.

திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். பிரைமில் தமிழிலேயே கிடைக்கிறது.

May 27, 2021

Along with Gods – Two Worlds (2017) தென்கொரியா


கதை. நாயகன் ஒரு தீயணைப்புவீரன். தீப்பற்றி எரியும் ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தையை காப்பாற்ற மாடியில் இருந்து குதிக்கிறான். கயிற்றில் தீப்பற்றியதால் கயிறு அறுந்து அடிபட்டு இறந்துவிடுகிறான்.


இறந்த பிறகான இன்னொரு உலகத்திற்கு அவன் உயிரை எடுத்துச் செல்ல இரண்டு ஆண் தேவதைகளும், ஒரு சிறுமி தேவதையும் அவனை அழைத்து செல்கிறார்கள். தான் செத்துவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. செய்யவேண்டிய கடமைகள் அவனை அழுத்துகின்றன. அம்மாவை கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என கதறி அழுகிறான்.

கொலை, வன்முறை, பக்தி, கொலை, சகிப்புத்தன்மை, வஞ்சகம், அநீதி என ஏழு நீதிமன்றங்களில் அந்தந்த கடவுளின் முன்பு அவன் வாழ்வில் நடந்துகொண்ட விதம் குறித்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்த மூன்று தேவதைகளும் அவனை காப்பாற்ற அவனுக்காக வாதாடுகிறார்கள்.

இதில் எந்த நீதிமன்றத்திலாவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் வதைக்கப்படுவான். கொல்லப்படுவான். ஏழு நிலைகளில் தேறிவிட்டால் அவனுக்கு மறுபிறவி உண்டு என்கிறார்கள்.

தேறினானா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

தெலுங்கில் இப்படி சொர்க்கம், நரகம் என அவ்வப்பொழுது நகைச்சுவையாகவும், பேண்டசியாகவும் படம் எடுப்பார்கள். அது போல புத்த மதம் சொல்லக்கூடிய கருத்துகளை கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வாத பிரதிவாதம் சுருக்கமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும் படத்தை கொண்டு செல்கிறது.

நமக்கு என்ன கேள்வி என்றால்?

மதம் வாழும் வரை ஒரு உலகம். வாழ்ந்த பிறகு ஒரு உலகம் என இரண்டாக பிரிக்கிறது. இயல்பில் வாழும் பொழுதே இங்கு உலகம் இரண்டாக தான் இயங்குகிறது. ஒரு குறிப்பிட்ட சொற்ப பிரிவினர்களுக்கு முன்னூறு நானூறு தலைமுறைக்கு முரட்டு சொத்து இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு உழைத்தால் தான் அடுத்த வேளை உணவு என்ற நிலை இருக்கிறது.

இதற்கு காரணம். இங்கு எல்லா மக்களும் சேர்ந்து உழைக்கிறோம். அதன் லாப பங்கீடு மட்டும் அராஜகமாக இருக்கிறது. இதன் விளைவு தானே உலகம் இங்கு இரண்டாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஐம்பது பெரும் பணக்காரர்களின் சொத்தை பகிர்ந்தளித்தாலே, கல்வி, மருத்துவம், இருக்க இடம் என அடிப்படை தேவைகள் அத்தனையையும் செய்துவிடலாம் என அடித்து சொல்கிறார்கள்.

மதங்கள் முதல் உலகத்தின் பஞ்சாயத்துகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், இரண்டாம் உலகத்தை காட்டியே பெரும்பாலான மக்களை மயக்கத்தில் வைத்திருக்கிறது. மதம் உடைமை வைத்திருக்கும் சொற்ப பிரிவினர்களுக்கு சேவையும், பெரும்பாலான மக்களுக்கு அநீதியும் இழைக்கிறது.

ஆக, வாழும் வரை நரகம். செத்தப் பிறகு சொர்க்கம் கிடைப்பதில் என்ன பிரயோஜனம்? வாழும் உலகத்திலேயே சொர்க்கத்தை படைப்போம் என்பது தான் சரியானது. அதற்காக சிந்திப்போம். செயல்படுவோம் என்பது தான் சரியானது.

மற்றபடி நல்ல படம். பாருங்கள். நெட் பிளிக்சில் கிடைக்கிறது. இந்த படத்தின் வெற்றியில் இரண்டாவது பாகமும் எடுத்திருக்கிறார்கள். பார்த்த ஒருவர் அதை சுமார் என்கிறார்.

May 25, 2021

டெடி (2021)


கதை. நாயகன் நல்ல நினைவாற்றல், எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் என உடையவர். தன்னுடைய நினைவாற்றலால் பங்குச்சந்தையில் நிறைய சம்பாதிக்கமுடியும் என்றாலும், அளவாக சம்பாதித்து வாழும் நல்ல மனிதர். தன்னுடைய இளம்வயதில் அப்பாவை இழந்த பாதிப்பால், உறவு என்றாலே கசப்பு என வாழ்பவர்.


நாயகி படம் துவங்கியதும் ஒரு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் இருந்து, உறுப்பு திருட்டுக்காக நாடு கடத்தப்படுகிறார். மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் பொழுது, உயிர் ஒரு கரடி (Teddy) பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. கரடி பொம்மை நாயகனை அடைந்து உதவி கேட்கிறது.

தனது சகல திறமைகளையும் பயன்படுத்தி நாயகியின் உடலோடு, உயிரையும் இணைத்தாரா என்பது மீதி முக்கால் வாசி படம்.

*****

இப்படி ஒரு பேண்டசி படத்திற்கு முக்கியமான தேவை. ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையும், வலுவான திரைக்கதையும். இரண்டிலும் கவனம் செலுத்தவில்லை. காட்சிகளில் மட்டும் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆகையால் அத்தனை உழைப்பும் வீணாகியிருக்கிறது.

முன்பெல்லாம் வெளிநாடு சார்ந்த படம் என்றால், கதை கொஞ்சூண்டும், மிச்சத்தை சில பாடல்களை வைத்து ஊர் சுற்றிக்காட்டுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இந்தப்படத்திற்கு வெளிநாடு போகவேண்டிய தேவையேயில்லை. இங்கிருக்கிற மும்பைக்கு போயிருந்தாலே போதுமானது. வெளிநாடுகளில் எங்கெங்கோ போய் அலைகழிக்கிறது.

மூன்றாவது பிரச்சனை. ஆர்யா. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு படம் முழுவதும் அவர் மட்டுமே வருகிறார். செம கடுப்பாய் இருக்கிறது. நாயகி கோமா என்பதால், பாவம் காட்சிகளே இல்லை. படத்தை கொஞ்சூண்டாவது பார்க்க வைப்பது அந்த கரடி பொம்மை செய்கிற செயல்கள் மட்டுமே!

என் பொண்ணுக்காகவும், மிருதன், டிக் டிக் டிக் படங்களின் இயக்குநர் என்பதால், கொஞ்சம் நம்பி பார்க்கலாம் என பார்த்தால் ஏமாற்றம் தான். ‘என் இனிய தனிமையே’ பாடல் மட்டும் உதடுகளில் தொற்றிக்கொண்டது.

The Haunting of Bly Manor (2020) ஆங்கிலம் Horror - சீசன் 1 அத்தியாயங்கள் 9



கதை. பள்ளி செல்லும் வயதில் உள்ள அண்ணன், தங்கை இருவரையும் பார்த்துக்கொள்கிற வேலைக்கு நாயகி செல்கிறாள். ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள அந்த பங்களாவில் அந்த இரண்டு குழந்தைகள், அந்த மாளிகையை பார்த்துக்கொள்கிற ஒரு நடுத்தர வயது பெண்மணி. சமையலுக்கு ஒரு ஆண். தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிற ஒரு இளம் பெண்மணியுடன் இவளும் அங்கு போய் இணைந்துகொள்கிறாள்.


அங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்கதை இருக்கிறது. மெல்ல மெல்ல சொல்கிறார்கள். அந்த பங்களாவிற்கும் ஒரு பேய் கதை இருக்கிறது. அது பல கொலைகளையும் செய்திருக்கிறது. இவர்கள் அந்த பேயிடமிருந்து தப்பித்தார்களா என்பதை அமானுஷ்யம் கலந்து சொல்லி முடிக்கிறார்கள்.

******

இது கான்ஜூரிங் வகை பேய் கதை இல்லை என்பதாலேயே வித்தியாசமானது என்கிறார்கள். அங்கு வாழ்கிற மனிதர்களுக்கு பின்னுள்ள கதையை காதல், அன்பு என உணர்வுபூர்வமாக எந்த அவசரமும் காட்டாமல் மெல்ல சொல்லி சொல்கிறார்கள். இறுதி இரண்டு அத்தியாயங்களில் கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்லிமுடிக்கிறார்கள்.

நாயகி அந்த இரண்டு பிள்ளைகளோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவாள். பேய் எதுவும் குறுக்கும் நெடுக்கும் வராது. அந்த சூழலே அல்லுவிடும். சீரிஸை இயக்கியது வேறு வேறு இயக்குநர்கள் என எழுத்து போடுகிறார்கள். ஆனால், அதன் தரம் ஒரே இயக்குநர் இயக்கியது போலவே இருக்கிறது. ஆச்சரியம். படத்தில் நடித்த அத்தனைப் பேருமே நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். நாயகி, அந்த சிறுமி இருவரும் நடிப்பில் இன்னும் ஈர்க்கிறார்கள்.

1898ல் எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாக வைத்து, இன்னும் கொஞ்சம் சுவையூட்டிகள் தூவி, எடுத்து இருக்கிறார்கள். இந்த சீரிஸ்க்கு முன்பு “The Haunting of Hill House” எடுத்திருக்கிறார்கள். அந்த சீரிஸை நான் பார்த்தது இல்லை. அதைப் பார்த்த பின்பு தான் இதை பார்க்கவேண்டும் என்றில்லை. புரியும். ஆனால் முதல் சீரிஸைப் போல இந்த இரண்டாவது சீரிஸ் இல்லை என சிலர் அலுத்துக்கொள்கிறார்கள்.

பார்த்தே ஆக வேண்டியது இல்லை. நிறைய நேரம் இருந்தால் பாருங்கள்.