> குருத்து

February 13, 2011

குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது! - தோழர் மருதையன்


முன்குறிப்பு : சமீபத்தில் தோழர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நடைபெற்றது. தோழர் மருதையன் வாழ்த்துரை வழங்கினார்.

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

அதன் தொடர்ச்சி :

இப்படி கெளரவிக்க மரபை பின்பற்றுகிற(!) இவர்கள் சொல்கிறார்கள். அங்கு போய் அமெரிக்காவிலே குடியேறிய ஐ.டி. தம்பதியரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று? ஆனால் இங்கே நம்முடைய பத்திரிக்கைகளிலே, நம்முடைய தொலைக்காட்சிகளிலே என்ன பேசுகிறார்கள் என்றால், "அமெரிக்காவிலே குடும்பம் சீர் குலைந்துவிட்டது. நம் நாட்டிலே குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது". இது நம்முடைய மேன்மையான நாகரிகம். அங்கே நினைத்தால், விவாகரத்து செய்துவிடுகிறார்கள். இங்கே அப்படியெல்லாம் கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்றால்... இந்த நாட்டின் 5000 ஆண்டு தொன்மைமிக்க கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் நாகரிகமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். பிடிக்காத ஒரு ஆணும், பெண்ணும் அங்கு சேர்ந்து வாழ்வதில்லை. காரணம் என்ன என்பது வேறு விஷயம். கணவன் ஆணாதிக்கவாதியாக இருக்கிறான்.அல்லது பொறுக்கியாக இருக்கிறான் அல்லது பேராசைக்காரனாக இருக்கிறான் என்பதினால் மனைவி அவனை வெறுக்கலாம். சில வேலைகளில் புருஷன் குறட்டைவிடுகிறான் என்பதற்காகவும் விவாகரத்து செய்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். ஆனால், மனம் இணங்காத ஒரு தம்பதி அங்கே சேர்ந்து வாழ்வதில்லை. நம்முடைய நாட்டில் இணக்கம் இல்லாத தம்பதிகள் சேர்ந்து வாழ நிர்ப்பதிக்கப்பட்டிருக்கிறோம்.

அநேகமாக பெண்கள் கட்டாயமாக இங்கு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு வாய்ப்பில்லை என்பதினால், சேர்ந்து வாழும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர்கள் பலர் வந்திருக்ககூடும். ஒரு ஆங்கில சொற்பிரயோகத்தில், ஒரு வேறுபாடு இருக்கிறது. மேலைநாடுகளில் "Saving the marriage" என்று சொல்வார்கள். திருமணத்தை காப்பாற்றிக் கொள்வது . இங்கு, "Saving the family" குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது. அங்கு திருமணம் வேறு. குடும்பம் வேறு. இங்கே குடும்பத்துக்கு உட்பட்டது மண உறவு. ஒரு பிள்ளை என வந்துவிட்டபிறகு, அதைக் காப்பாற்றுவதற்காக மனைவி விட்டுக்கொடுக்கவேண்டும். மனைவி அடிமையாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இங்கே இருக்கிறது. ஆக, அந்த நாகரிகத்தை விட மேம்பட்ட நாகரிகத்தில் வாழவில்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக சேர்ந்துவாழ்கிறோம்.

*****

விட்டுக்கொடுப்பது பெருமை என மேடையெல்லாம் பேசுவார்கள். நான் விட்டுக்கொடுக்க கூடாது என்று சொல்வேன். எதிலே விட்டுக்கொடுக்கனும்? எதிலே விட்டுக்கொடுக்க கூடாது ? ஒரு மனிதன் எதை விட்டுக்கொடுக்கிறான் என்பதில் தான் அவனுடைய தரம் இருக்கிறது.

தொடரும்.

February 10, 2011

எது நம்முடைய மரபு? - தோழர் மருதையன்


சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).

முதல் பதிவை படிக்க : முதல் பகுதி

டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!
***

எது நம்முடைய மரபு?

இன்று நடக்கும் திருமணம் போல பல திருமணங்களுக்கு போயிருக்கிறேன். பலரும் பாராட்டுவார்கள். தாலி இல்லை; வரதட்சணை இல்லை; சீர்வரிசை இல்லை; அன்பளிப்புகள் இல்லை. இதெல்லாம் பாராட்டத்தக்கது தான் என்பார்கள். ஆணால், அதை பின்பற்றுவதற்கு எவ்வளவு பேர் தயார் என்றால், இல்லை. ஏனென்றால், நம்முடைய மரபு. "எல்லாம் வேண்டாம். இந்த தாலியை மட்டுமாவது கட்டுங்கள்" என கோருபவர்கல் பலர் இருக்கிறார்கள். நம்முடைய மரபு அவ்வளவு பெருமைபடக் கூடிய மரபு அல்ல! இந்து மரபு என்பது ஒரு இழிவான மரபு.

இராமன், இராமன் என கடவுளை தூக்கி ஆடுகிறார்கள். அந்த இராமனின் பெருமை என்ன? ஏகபத்தினி பரதன். ஒரு மனைவியைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தான் என்பதற்காக ஒரு மதம் அதையே ஒரு சாதனையாக கருதி, அவனைக் கடவுளாக வைத்திருக்கிறது என்றால், அந்த மதத்தின் யோக்கியதை எப்படி இருக்கும்?

கிருஷ்ணனும் கடவுள்; அவர் என்ன கடவுள்? அவர் ஏகப்பட்ட பத்தினி விரதர். அவரும் கடவுள். நானா சொல்கிறேன் இதை! கிருஷ்ண புராணம் சொல்கிறது. என்ன பெருமை இருக்கிறது இந்த மரபிலே?

தாலியை பெண்கள் அதை புனிதமாக கருதுகிறார்கள். பெண்களுக்கு நான் சொல்கிறேன். தாலி ஆணுக்கு இல்லை; பெண்களுக்கு தாலி இருக்கிறது. 1950ம் ஆண்டு அம்பேத்கர் அரசியல் சட்டத்தை இயற்றும் வரையில்..அதாவது 51 லே இந்து சட்டம் இயற்றப்படும் வரையிலே, இந்துக்களிடையே நிலவிய மரபு எது? ஒரு இந்து 25 கல்யாணம் வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள்ளலாம். சட்டப்படி செல்லும். 25 தாலி கட்டலாம் ஒரு ஆண். அம்பேத்கார் இந்த சட்டத்தை முன்மொழிந்த பொழுது, இந்து மரபினுடைய தலைவர்களாக இருந்தவர்களெல்லாம், அரசியல் நிர்ணய சபையிலே எதிர்த்தார்கள்.

"இதை வேறு என்ன சட்டம் என வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்; இந்துச் சட்டம் என்று சொல்லாதீர்கள்" என்றார்கள். காரணம் என்ன ஒரு தார மணம்.

ஒருதார மணத்தை எதிர்த்தது இந்து மரபு!
சதியை, உடன்கட்டை ஏறுதலை ஆதரித்தது இந்து மரபு!
பால்ய விவாகதத்தை ஆதரித்தது இந்து மரபு!
விதவை மறுமணத்தை எதிர்த்தது இந்து மரபு!
விவாகரத்தை எதிர்த்தது இந்து மரபு!

விவாகரத்து என்ற ஒரு உரிமை இருந்திருக்குமென்றால், சீதை தீக்குளிக்க நேர்ந்திருக்குமா? போடான்னு இராமனை டைவேர்ஸ் பண்ணிட்டு சீதை போயிருப்பாள். அப்படி ஒரு உரிமை கிடையாது. விவாகரத்து என்ற உரிமையை வழங்கியது எது? இந்து மரபுக்கு எதிரான இந்த சட்டம். ஆகவே, நம் மரபு என்று பேசும் பொழுது நம்முடைய மத மரபிலே இருப்பதெல்லாம் குப்பைகள். நான் இந்து மதத்தில் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாம், கிறித்துவம் பற்றி பேச இங்கு வாய்ப்பில்லை. அதனால் இங்கு வேண்டியதில்லை.

....

அமெரிக்காவிலே, ஐரோப்பாவிலே குடும்பம் சீரழிந்து விட்டது என்கிறார்கள். நம்முடைய நாட்டில் குடும்ப அமைப்பு வலிமையாக இருக்கிறது. இது இந்த நாட்டின் தொன்மையான கெளரவமான நாகரிகத்தை காட்டுகிறது என பேசுகிறார்கள். இது பொய்.

தொடரும்...

தொடர்புடைய பதிவுகள் :

உலகின் அழகிய மணமக்கள் - பதிவர் சந்தனமுல்லை - வினவு

இயல்பாய் நடந்த திருமணம்

தேவையில்லாத தாலியும் சில உருப்படியான தகவல்களும் - நந்தவனம்

February 5, 2011

தோழர் மருதையன் அவர்கள் நிகழ்த்திய திருமண வாழ்த்துரை!


சமீபத்தில், ம.க.இ.க தோழர் ஒருவரின் மகனின் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடந்தது. அதில், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். செல்பேசியில் பதிவு செய்ததை, நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தேன். பகிர்வதற்கான அருமையான உரை. 20 நிமிட உரை என்பதால், மூன்று தொடர் பதிவுகளாக இடுகிறேன். (தட்டச்சு செய்ய நேரம் கொடுங்க!).

டிஸ்கி : அவருடைய உரையை, உரைநடைக்கு தகுந்தவாறு சில இடங்களில் முன்பின் மாற்றியிருக்கிறேன். ஏதேனும் பிழை இருந்தால், நானே முழு பொறுப்பு!

****

.....

(மாப்பிள்ளை) பார்த்திபனை புதிய கலாச்சாரம் தொடங்கிய காலத்திலிருந்தே தெரியும். புதிய கலாச்சாரத்தின் வயதும், பார்த்திபன் வயதும் ஏறத்தாழ சமம். சிறு பையனாக இருந்த பொழுதே தெரியும். ரெம்ப அமைதியான பையன். ஆனால், காதலிக்கும் அளவுக்கு தைரியமுள்ள பையனாக இருந்திருக்கிறார்.

இதிலே ஒரு வேடிக்கை இருக்கிறது. இந்த காதலில் மட்டும் மாவீரர்கள், அடி, உதைக்கு அஞ்சாதவர்கள் எல்லாம் பயப்படுவார்கள். பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவர்கள் எல்லாம் இந்த விசயத்தில் நிறைய தைரியமாக இருப்பார்கள். இது ஒரு விசித்திரம். வேடிக்கையல்ல!

இதை வைத்து தான் தமிழ் சினிமா இன்றைக்கு வரைக்கும் உயிர்வாழ்கிறது. சொன்ன காதல், சொல்லாத காதல், மிரட்டி காதலிக்க வைப்பது, காதலிக்கிற பையனை கடத்துவது, பெண்ணை கடத்துவது என ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும், அதிக லட்சங்கள் கோடிகள் நம்மை கொள்ளையடித்திருக்கிற ஊழல் காதல் சினிமாக்கள் பற்றிய ஊழல்கள் தான்.

இதை வைத்து, இவ்வளவு பிஸினஸ் நடந்திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை இருக்கிறது. அது என்ன? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இயல்பாக நண்பர்களாக பழக கூடிய வாய்ப்பு இந்த சமூகத்திலே இல்லை. அந்த சமூகத்தில் அப்படி இல்லாத காரணத்தினால் தான், இது நாள் வரையிலே, காதல் திருமணங்களை அதிகமாக நாம் காணமுடிவதில்லை.

படிப்பது, வேலைக்கு செல்வது, ஆணும், பெண்ணும் பழகுவது என்று தொடங்கிய பிறகு, பெற்றோர்கள் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்ற நிலைமாறி, ஒருவரையொருவர் தெரிவு செய்கின்ற வாய்ப்பு வழங்கியிருக்கிறது. தெரிவு செய்கிறார்கள். அவ்வாறு தெரிவு செய்யும் பொழுது, உடனே அதற்கு தடை வருகிறது. முக்கியமாக, சாதி, மதம் போன்ற தடைகள் இயல்பாக வருகின்றன. ஏற்கனவே, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களில், தேவாலாயங்களிலே நீங்கள் பார்த்திருக்கலாம். பாதிரியார் மணவிழாவை நடத்தி வைக்கும் பொழுது, "இறைவன் சேர்த்து வைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைப்பார்.

நடக்கும் காதல் திருமணங்கள் எப்படி இருக்கிறது என்றால், "இறைவன் பிரித்து வைத்ததை, மனிதன் சேர்க்காதிருக்கட்டும்". மதம் வாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார். சாதிவாரியாக இறைவன் பிரித்து வைத்திருக்கிறார்.

மனிதன் தன் முயற்சியனாலே சேர்த்துவிடக்கூடாது என்பது தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களுக்காக, சாதி அடிப்படையிலான திருமணங்களுக்காக, மதத்தின் அடிப்படையிலான திருமணங்களுக்காக, வாதாடுபவர்கள் சொல்வது. அப்படியானால், பிரிவினையின் சின்னமாக இறைவன் இருக்கிறார்.

மனிதன், மனித நாகரிகம் ஒற்றுமையின் சின்னமாக முன்னே செல்கிறது. இதிலே இப்படி காதலெல்லாம் வரும் பொழுது, ஒரு பழைய சுமை போல, சாதி, மதம் என்பது, காதலில் ஈடுபடுகின்ற இளைஞர்களாகட்டும், அல்லது, குடும்பத்தினரே ஆகட்டும் அது அழுத்துகிறது.

பள்ளிப்பாட புத்தகங்களிலே படித்திருக்கலாம். "சிந்துபாத்தும் கடற்கரை கிழவனும்" ஒரு கதை. கொஞ்சம் தூக்கிக் கொண்டு போய்விடு என கடற்கரை கிழவன் கேட்க, சிந்துபாத் அந்த கிழவனை தோளில் தூக்கி கொண்டு போவான். தூக்கி, தூக்கி பிறகு இவனால் முடியாது. "இறங்குப்பா" என்றால், இறங்க மாட்டேன் என்பான் கிழவன். கிழவனை கீழே தள்ளுவதற்கும் சிந்துபாத்திற்கு மனதில்லை. தள்ளிக் கொன்றுவிடலாம் என்றால், "அய்யோ பாவம் கிழவன்" இப்படித்தான் இருக்கிறது சாதி. சாதியை முன்நிறுத்துகின்ற பெற்றோரும்.

சாதி அநீதியானது என்று தெரிந்தாலும், அந்த சாதியை நியாயப்படுத்தி பெற்றவர்களும், உற்றார்களும் பேசுகிறார்கள். சொந்தமாக இருப்பதினால் அவர்களின் கண்ணீரை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. மதத்தை பேசுபவர்கள் பெற்றோராக இருப்பதினால், அவர்களுடைய கண்ணீரைப் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனாலே சமரசம் செய்து கொள்கிறார்கள். அல்லது நியாயப்படுத்துகிறார்கள்.

யாரையும் உயர்வு, தாழ்வு என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் பழகிவிட்டோம் இப்படி! இது எங்களுடைய அடையாளம். இது எங்களுடைய பழக்கம்.

ஒரு சாதி குடுமி வைத்துக் கொள்கிறது. ஒருசாதி மீசையை பெருமை என்கிறது. இராஜஸ்தானை சேர்ந்தவர்களைப் பார்த்தால், ஒரு முண்டாசு கட்டியிருக்கிறார்கள். அந்த துணியின் நீளம் மவுண்ட் ரோடு அளவுக்கு இருக்கும். அவ்வளவு பெரிசை தலையில் வைத்திருக்கிறார்கள். இது எங்களுடைய மரபு, பழக்கம் என அதை நியாயப்படுத்தி கொள்கிறார்கள். இதை என்ன வார்த்தைகளால் சொன்னாலும், இது ஒரு அநாகரீகம். மற்ற எல்லா செளகரியங்களுக்கும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்கள் இப்ப (உதாரணமாக) "கடல் கடந்து செல்வது குற்றம் என ஒரு சாதியினருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது" ஆனால் அவர்கள் தான் கடல் கடந்து போவதிலே முன்னிலையில் இருக்கிறார்கள். கடல் கடந்து சென்றால், சாதியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று இருந்தது.

ஊரைவிட்டு வெளி மாநிலம் போகக்கூடாது. அங்கே சென்றால் என்ன சாப்பாடு கிடைக்கும்? இங்கே போனால் என்ன கிடைக்கும் என்ற தயக்கம் இருந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கே அமர்ந்திருக்க கூடிய மதுரை மாவட்ட விவசாயிகள் ஆந்திராவிற்கும், டெல்லிக்கும், திருப்பூருக்கும் ஓடுகிறார்கள். புது ஊர் தெரியாது என்பதற்காக போகாமல் இருப்பது இல்லை. படித்தவர்கள் அமெரிக்காவிற்கு ஓடுகிறார்கள். அது பழக்கமில்லாத ஊர். சாப்பாடு கிடைக்குமா? நாகரிகம் என்ன? என்றெல்லாம் யோசிப்பதில்லை. வேண்டியது பணம். அதற்காகவெல்லாம் மாறிக்கொள்ள தயாராக இருப்பவர்கள், சாதி என்ற ஒரு விசயத்தை பழக்கம் என்ற பெயரிலே நியாயப்படுத்துவது; அதை நியாயப்படுத்த முடியாத பொழுது இது ஒரு மரபு என்று சொல்லி, நாசூக்காக அதற்கு ஒரு விளக்கம் சொல்வது. அது என்ன மரபு?

தொடரும்...