> குருத்து: இயல்பாய் நடந்த திருமணம்!

July 18, 2010

இயல்பாய் நடந்த திருமணம்!

முன்குறிப்பு : சமீபத்தில் நடந்த ஒரு தோழரின் எளிமையான "வாழ்க்கைத்துணை ஏற்பு விழா"வில் கலந்து கொண்டேன். அந்த திருமணத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குள் தோழரின் அலுவலக நண்பரே அதைப் பற்றி எழுதிவிட்டார். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். அவருக்கு நமது நன்றிகள்.

****

கடந்த வாரம், எனது அலுவலகத் தோழனின் திருமணத்தில் கலந்துகொண்டது முதலே அதுகுறித்து ஒரு பதிவு போட வேண்டுமென மனது தூண்டிக்கொண்டே இருந்தது! (அதுக்கு வேற வேலை என்ன!). இன்றுதான் அதற்கான நேரம் வாய்த்தது.

அப்படியென்ன விஷேசம் அந்தத் திருமணத்தில் எனக் கேட்கத் தோன்றும். ஒரு விஷேசமும் இல்லையென்பதே அதில் விஷேசம்! ஆம். வாசலில் மணமக்களின் பெயர் இருந்தது, ஆனால், அதில் மணமகனின் பெயர் முதலாவதாக இல்லை! வரவேற்க வரவேற்பாளர்கள் இருந்தார்கள், ஆனால், மேளதாளங்கள் இல்லை! அருந்த குளிர்பானங்கள் கொடுத்தார்கள், ஆனால், அதில் கோக், பெப்சி இல்லை! மேடையில் புகைப்படக்காரர்கள் இருந்தார்கள், ஆனால், புரோகிதரோ, ஓமகுண்டப் புகையோ இல்லை! மணமக்கள் புத்தாடையில் வீற்றிருந்தார்கள், ஆனால், அதில் பகட்டோ, மினுமினுப்போ துளியும் இல்லை! மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள், ஆனால், தாலி கட்டவில்லை! அன்பளிப்பு வாங்கினார்கள், ஆனால், அதில் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் இல்லை!

அப்புறம், சொல்லிக்கிறமாதிரி அதில் என்னதான் இருந்தது? காதல் இருந்தது, பெற்றோரின் சம்மதமும் கலந்திருந்தது. அதற்குச் சாட்சியாக மணமக்களைப் பெற்றவர்களும் மணமக்களோடு மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஜாதி கடந்து, மதம் கடந்து, பெரியாரின் சுயமரியாதைப் பாதையிலே அத்திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப்பேசிய மணமகனின் தாத்தா வாரியாரை நினைவுபடுத்தும் விதமாக நெற்றி நிறைந்த திருநீற்றுடன் இருந்தார். தனது பேரனின் திருமணத்தைப் பார்த்து, பரவசத்துடன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேரனுக்கு அளித்த அன்பளிப்பு, காந்தியின் சுயசரிதைப் புத்தகம்!

பெரியவர்கள் வாழ்த்துரையுடன், மணமக்களின் உறுதிமொழியுடன், சமுதாயப் பெரியவர் தாலி எடுத்துக் கொடுத்து நிறைவுபெறும் தற்கால அரைகுறைச் சீர்திருத்தத் திருமணங்களைப் போலல்லாமல் முழுமையான சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. ஆம், இத்திருமண விழாவில் மணமக்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நிகழ்விலும், மணமகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

அரைகுறை சீர்திருத்தத் திருமணங்களில் புரோகிதர், ஓமகுண்டச் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இத்திருமணத்தில் வரதட்சணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேளதாளங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தாலி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர்போல மணமக்களுக்கு வழங்கப்படும் படாடோபங்கள், வெட்டிச் செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. வந்திருந்த அனைவருக்கும் மணமக்கள் வீட்டாரால் வழங்கப்பட்ட அறுசுவை விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தாம்பூலப் பைக்குப் பதிலாக சுயமரியாதைத் திருமணங்கள் ஏன் வேண்டுமென்ற, தந்தை பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய சிறு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருமணத்தில் கலந்துகொண்ட பலரும், இத்திருமண விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருவதாக தவறாமல் குறிப்பிட்டார்கள். பின்பு ஏற்புரை நிகழ்த்திய மணமகன், இவ்விழா இயல்பாக நிகழும் திருமண விழா தான் என்றும், இது வித்தியாசமாகப்படுவது நம் சமூகத்தின் அவல நிலை என்றும் சுட்டிக்காட்டியது சிந்திக்கத்தக்கதாக இருந்தது. ஜாதி, மதங்களும், அவற்றின் சடங்கு சம்பிரதாயங்களும் பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பதையும் குறிப்பிட்டார். ஆண், பெண் வாழ்க்கைத்துணையாக இணையும் இயல்பான நிகழ்விற்கு, நாம் பண்ணுகின்ற பகட்டு, பந்தா, சடங்கு சம்பிரதாயமென்ற அழிச்சாட்டியங்களை உணர வைத்தது அவரது பேச்சின் சாரம். உண்மைதானே?

5 பின்னூட்டங்கள்:

Deepa said...

படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Anonymous said...

"இவ்விழா இயல்பாக நிகழும் திருமண விழா தான் என்றும், இது வித்தியாசமாகப்படுவது நம் சமூகத்தின் அவல நிலை என்றும் சுட்டிக்காட்டியது சிந்திக்கத்தக்கதாக இருந்தது"
இது போன்ற திருமணங்கள் ந்டைபெறும் பொழுது தெரியப்படுத்துங்கள் தோழர்.
நன்றி.

அன்புடன் நான் said...

எளிமையை வளிமையாக்கிய....
மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இவ்வாறான சாதி மறுப்பு, சடங்கு மறுப்பு திருமணங்கள் மூலம் தான்,
சமூக நீதியான தீண்டாமை ஒழிப்பு, சாதி, மத ஒழிப்பு போன்றவை சாத்தியப்படும்.

எனவே இவ்வாறான திருமண நிகழ்வுகளை ஆதரிப்பதும், துணை நிற்பதும் நம் அனைவரின் சமூகக் கடமை ஆகும்.

என்னுடைய திருமணமும் மேற்சொன்ன வகையிலேயே நடந்தது.

அன்புடன்,
பாலமுருகன்

அ.முத்து பிரகாஷ் said...

மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அன்பும் ...