> குருத்து

February 11, 2014

பெப்சி குடித்து சிறுமி துடிதுடித்து மரணம்!

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிறு இரவு ஒரு தொழிலாளி தன் குடும்பத்தினருக்காக ஒரு அரை லிட்டர் பெப்சி பாட்டிலை வாங்கி கொண்டு போய், தன் நான்கு பிள்ளைகளுக்கு தருகிறார்.  குடித்த சில நிமிடங்களில் கடுமையாக வயிறு வலித்தும், வாந்தி எடுத்தும் பெற்றோர்களின் கண்ணெதிரே சுரண்டு விழுகிறார்கள்.

மருத்துவமனையில் சேர்த்தும் 8 வயதான அபிராமி இறந்துபோகிறாள்.  10 வயது லலிதா உயிருக்கு போராடுகிறார்.  மற்ற இரண்டு குழந்தைகளும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள்.

உடனடியாக, அரசு நிர்வாகம் ‘சுறுசுறுப்பாகி’ பெப்சி விற்ற கடைக்காரரை சிறைக்குள் தள்ளிவிட்டது.  உணவு கட்டுப்பாட்டு அதிகாரி சுத்துப்பட்டு கடையில் உள்ள குளிர்பானங்களை கைப்பற்றிவிட்டார்.  வீட்டில் குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த பெப்சி பாட்டிலை சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். சோதனையின் முடிவு வந்த பிறகு, நடவடிக்கை எடுப்பார்களாம்.  இப்பொழுது தமிழகம் தழுவிய அளவில் காலாவதியாகி போன பொருட்களை, கலப்பட பொருட்களை கைப்பற்ற சுறுசுறுப்பாக இயங்கி, கல்லா கட்ட தயாராகிவிட்டார்கள்.

பெப்சி, கோக் வகைகள் குறித்து பல சமயங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  இருப்பினும் தங்களது பணபலத்தாலும், அரசியல் பலத்தாலும் எல்லாவற்றையும் சரிகட்டுகிறார்கள். இந்த சாவு பெப்சியினாலேயே இருந்தாலும் கூட அதிகார வர்க்கத்தினரை கைக்குள் போட்டுக்கொண்டு, லஞ்சத்தால் அடித்து, தங்களை காப்பாற்றிக்கொள்வார்கள். நாம் ஒன்றிணைந்து இவர்களை இந்த மண்ணிலிருந்து விரட்டும் வரை, அரசும், அதிகார வர்க்கமும், இவர்களை காப்பாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இதே போல, 2004ஆம் ஆண்டு, ஒரு தனியார் பள்ளியில் தீப்பற்றி காற்றோட்டம் இல்லாமலும், தகுந்த தப்பிக்கும் வழிகள் இல்லாமலும் 94 குழந்தைகள் கும்பகோணத்தில் கொல்லப்பட்டார்கள். அதற்கு பிறகு, அரசு சுறுசுறுப்பாகி, பள்ளியென்றால், இவ்வளவு இடம் வேண்டும். இன்னின்ன வசதிகள் வேண்டும் என விதிமுறைகளை உருவாக்கியது.  கடந்த வாரம் வந்த செய்தி, அதிர்ச்சியாக இருந்தது.  தனியார் பள்ளிகள், இப்பொழுது நிலத்தின் விலை எல்லாம் எகிறிவிட்டது. அதனால், அரசு விதிமுறைகள்ப்படி பள்ளிகள் கட்டுவது இயலாத காரியம். அதனால், விதிகளை தளர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு போனார்கள். இப்பொழுது அரசும் இந்த ‘நியாய கோரிக்கையை’ ஏற்று, விதிகளை தளர்த்த தயாராகிவிட்டது.  அப்பொழுது, குழந்தைகளின் கதி என்னவாகும்? நாம் கும்பகோணத்தை மறந்துவிட்டோம்! அவர்கள் நமது மறதியில் வாழ்கிறார்கள்.

February 3, 2014

காலத்தை வென்ற கையூர்த் தோழர்கள்! - நினைவுகள் அழிவதில்லை!

காதலுக்காகத் தியாகம் செய்த காவிய நாயகர்களுண்டு. போரில் எதிரிகளைத் கொன்றொழித்து மாண்ட வீரர்களுண்டு. மதத்தைக் காப்பதற்குத் தீப்புகுந்து மாண்ட துறவியர்கள் உண்டு. தாய்நாட்டை,தாய்மொழியைக் காக்கும் விடுதலைப் போரில் ஈடுபட்டு, சிறைசென்று தூக்குமேடை ஏறிய வீரத்தியாகிகளுண்டு. ஆனால் 'அடிமைப்பட்ட பாரதத்தின் இருளடைந்த கேரளத்தில்' உழவர்களின் உரிமைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடிப் பச்சிளம் வயதிலேயே தூக்குமேடை ஏறிய மடத்தில் அப்பு, அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரின் தியாகம் முற்றிலும் வேறுபட்டது.அவர்களின் தியாகத்தின் பின்னே ஏழை எளிய மக்களின் ஏக்கங்கள் நிரம்பியிருந்தன. அபிலாசைகள் நிறைந்திருந்தன, உரிமை முழக்கங்கள் அடங்கியிருந்தன. உழைப்பாளிகளின் ஜனநாயக வேட்கைகள் ததும்பி வழிந்தன.

பசிப்பிணியும், வறுமைத்துயரமும் மொழி கடந்து , நாடுகள் கடந்து அது உலகமெங்கும் நிறைந்திருக்கின்ற இருளாகும். அந்த இருளை விரட்ட இந்நால்வரும் தங்கள் தலைகளை விலைகளாகத் தந்தனர். தூக்குமேடையேறிய இவர்களின் தியாகம் இலக்கியமாகி, மொழி கடந்த பயணத்தை மேற்கொண்டு காலத்தையும் வென்று நிற்கிறது.

இன்றைய கேரள மாநிலம் (அன்றைய 'சென்னை ராஜதானி') காசர்கோடு வட்டத்தில் 1938-1944 ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துக் செழித்தவர்கள்தான் மடத்தில் அப்பு. அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிகள் , 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகள் ஊர்வலத்தை இவர்கள் வழிநடத்திச் சென்றபோது 'ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபிளோடு அந்த ஊர்வலம் கைகலந்தது. அதன் விளைவாக அந்தப் போலீச்காரன் உயிர் துறந்தான்.

அந்தப் போலீஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள் இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும்தான் பொறுப்பாளிகள் என்று கூறி செஷன்ஸ் ஜட்ஜ்,அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்தார். சென்னை உயர்நீதிமன்றமும் அந்த்த் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது.

இந்நால்வர் தூக்குமேடை ஏறக் காரணமாக இருந்த விவசாய இயக்கத் கதையைக் கன்னடத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் நிரஞ்சனா கன்னட மொழியில் 1955 இல் 'சிரஸ்மரணா' எனும் பெயரில் புதின இலக்கியத்தில் பதியம் செய்தார். மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த கதை முதன் முதலாக மொழி கடந்து கன்னடத்தைக் பற்றி உலுக்கியது. கதைக்களமான கையூர் கேரளத்தின் வடமேற்குக் கடைகோடியில், கர்நாடாகத்தின் தெற்கு எல்லையிலும் அமைந்த ஊர்.

கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் இந்திராவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது தலைமறைவு நாட்களில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார்.

நினைவுகள் அழிவதில்லை எனும் பெயரில் 1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக தமிழில் வெளிவந்தது.

- நிரஞ்சனா
தமிழில்  : பி.ஆர்.பரமேஸ்வரன்
 

சவுத் விஷன் வெளியீடு    
விலை ரூ 40   

கிடைக்குமிடம் : 
கீழைக்காற்று
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.


நன்றி : புத்தகப்பிரியன்

January 10, 2014

பணக்காரர்களுக்கு மட்டுமே உடல்தான உறுப்புகள்!

மூளைச் சாவால் இறந்தவர்களின் உடலை தானம் செய்யும்போது, அதில் இருந்து பெறப்படும் உறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிற அவல நிலை தமிழகத்தில் தொடர்கிறது. கிட்னி போன்ற உடல் உறுப்புகளின் தேவையுள்ள ஏழை நோயாளிகளின் பட்டியலை அரசு மருத்துவமனைகள் பராமரிக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மூளைச்சாவும் உடல் தானமும்

மூளைச்சாவால் இறப்பவர்களின் உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகளைக் கொண்டு, பல பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என்பதால், கடந்த 2008-ம் ஆண்டு மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இதற்கென உடல்உறுப்பு தான மத்திய பதிவுத்துறை (Central Registry For Organ Donation) என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியது. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக இந்த அமைப்பில் மருத்துவமனைகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மொத்தம் 58 மருத்துவமனைகள் பதிவு செய்து, அனுமதி பெற்றுள்ளன. அதில் 6 மருத்துவமனைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகள் என்பது வருத்தமான தகவல். இதேபோல இதயம், கல்லீரல், கணையம் என்று எல்லா உறுப்புகளுக்கும் தனியார் மருத்துவமனைகளே அதிகளவில் அனுமதி பெற்றுள்ளன.

கெட்டிக்கார” தனியார் மருத்துவமனைகள்

அதுமட்டுமின்றி, தானம் பெற வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் பற்றிய விவரத்தையும் மத்திய பதிவுத்துறையில் பதிவு செய்யும் பணியிலும், அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுகின்றன. இதனால், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழைக்குக் கிடைக்காமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பணக்கார நோயாளிக்குக் கிடைக்கும் சூழல் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு வரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டும் உடல் உறுப்பு தானம் மூலம் 75 சிறுநீரகங்கள் கிடைத்தன. அதில் 13 சிறுநீரகங்களை மட்டும் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பயன்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், மீதியுள்ள 62 சிறுநீரகங்களை தனியார் மருத்துவமனைக்கு பகிர்ந்தளித்துள்ளது. அதேநேரத்தில், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோ கடந்தாண்டு வரை தானமாக பெற்ற சிறுநீரகங்களில் 120ஐ தங்கள் நோயாளிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, 55ஐ மட்டும் மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது. அந்த சிறுநீரகங்களும் கூட மற்ற தனியார் மருத்துவமனை நோயாளிகளைத் தான் சென்றடைந்துள்ளதாகத் தெரிகிறது.

வீணடிக்கப்படும் உடல் உறுப்புகள்

இதுபற்றிய தகவல்களை ஆதாரப்பூர்வமாக திரட்டியுள்ள சமநீதி (ஈக்வல் ரைட்) அமைப்பின் செயல் இயக்குநர் சி.ஆனந்தராஜ் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறார். “ஏழைகளின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், உடல்தானம் விஷயத்திலும் மோசமாகவே உள்ளது. உதாரணமாக கடந்த 7.11.13 அன்று நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஆழ்வார்(39), 8.12.13 அன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜான்(38), 1.1.14 அன்று சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த வைத்தியநாதன் ஆகியோரது உடல்கள் தானமாக பெறாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

தமிழகத்தில் கடந்தாண்டு மட்டும் 16,175 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதில் மூளைச்சாவால் இறந்தவர்களின் உடல்களும் இவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில், ஏழைகள் பலர் உறுப்புகள் கிடைக்காமல் உயிர் இழக்கும் சூழல் தொடர்கிறது. இவர்களின் தேவை குறித்து, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் சென்னையில் உள்ள உடல் உறுப்பு தானம் மத்திய பதிவுத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்துவதில்லை.

ரூ.100 கோடிக்கு வர்த்தகம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வந்த கிட்னிகள், தனியார் மருத்துவமனைக்குச் சென்றதற்கு இதுதான் காரணம். தனியார் மருத்துவமனைகள், தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை வைத்து லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 750 சிறுநீரகங்கள் தானமாக கிடைத்துள்ளன. அதில் 600-க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளன.

இதில் மட்டும் தனியார் மருத்துவமனைகள் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.

அரசு என்ன சொல்கிறது?

இந்தப் பிரச்னை பற்றி உடல்உறுப்பு தான மத்திய பதிவுத்துறை ஒருங்கிணைப்பாளரும், சென்னை அரசு மருத்துவமனை மருத்துவருமான டாக்டர் அமலோற்பவநாதனிடம் கேட்டபோது, “இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இரண்டு அரசு மருத்துவமனைகள் மட்டுமே செய்கின்றன. அதனால், தான் தனியார் அதிகம் பயன்பெற்றது போன்ற சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் கிடைக்கிறபோது, உறுப்புகளை வழங்க அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தான் முன்னுரிமை தரப்படும். பின்னர் தான் பதிவு செய்துள்ள பயனாளிகள் பட்டியலுக்கு தரப்படும். இதில் சுழற்சி முறை கடைபிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் உடல் தானம் பெற முடியாத சூழல் இருப்பது உண்மை தான். அதற்குரிய வசதிகள், கூடுதல் மருத்துவர்கள் இல்லாதது தான் காரணம். மேலும் கேள்விகள் இருந்தால், மெயில் அனுப்புங்கள். போனில் பதில் சொல்ல முடியாது” என்றார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு!

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று சி.ஆனந்தராஜிடம் கேட்டபோது, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் - 1994 பிரிவு 3(6)ன் படி, இறந்தவர் மூளைச்சாவால் தான் இறந்துள்ளார் என்பதை நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு உறுதி செய்து சான்றிதழ் அளித்த பின்னரே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இதற்கான குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல, தானமாக கிடைக்கும் உறுப்புகள் ஏழைகளுக்கு அதிகளவில் கிடைக்கும் வகையில், உறுப்பு தேவையுள்ள நோயாளிகள் பட்டியலை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உறுப்பு தேவைக்காக பதிவு செய்துள்ள நோயாளிகளின் விவரம், மருத்துவமனை பெயர், சீனியாரிட்டி உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். இந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும். இதுவரையில் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லக் காரணமாக இருந்த அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். இனிமேலாவது எல்லாம் சரியாக நடைபெறுவதற்குத் தேவையான புதிய விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்” என்றார்.

2500 கி.மீ. பறந்த கிட்னி!

மதுரை தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று, 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கொல்கத்தா தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயல் இழந்ததால் உயிருக்குப் போராடிய நோயாளிகள் பலர் இருந்தும் அது அவர்களைச் சென்றடையவில்லை. தமிழக மருத்துவ வரலாற்றில் மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் ஒன்று கூட, அதே நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஏழை நோயாளிகளுக்குக் கிடைக்கவில்லை என்பது மிக வேதனையான விஷயம்!

- தி இந்து