> குருத்து

December 3, 2021

வங்கி ஊழியர்கள் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் இயக்கமாக மாற்றுவோம்!


பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.
வங்கி ஊழியர் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க அனுமதிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி பாசிச கும்பல் பி.எஸ்.என்.எல், சிபிஐ, ரயில்வே, இந்திய ரிசர்வ் வங்கி என ஒவ்வொரு பர்னிச்சராக உடைத்து மதிப்பிழக்க செய்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகளை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள். அவ்வப்பொழுது ஒன்றிய அமைச்சர்கள் வங்கிகளை தனியார்மயமாக்குவது உறுதி என அறிவித்து வருகிறார்கள்.

இதனால் பொதுவங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துவருகிறார்கள். தங்களுடைய வைப்புத்தொகையை வேகவேகமாக எடுப்பதும் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் 30 லட்சத்திற்கு புதியதாக வீடு வாங்கினார். எந்த வங்கி? எவ்வளவு கடன்? என விசாரிக்கும் பொழுது, உறவினர்களாக இருக்கும் சிலர் வங்கி எப்பொழுது வேண்டுமென்றாலும் திவாலாகும் என்ற எண்ணத்தில் வீடு வாங்குவதற்கு கொடுத்துள்ளார்கள். அப்படி கொடுத்த சில உறவினர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களாக, வங்கியில் பணிபுரிபவர்களாக இருப்பது தான் முக்கிய விசயம்.

கடந்த மே 13 லிருந்து 17 வரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். ”கேந்திரமில்லாத அனைத்து துறைகளிலிருந்தும் அரசு வெளியேறும் என்றும், கேந்திரமுள்ள துறைகளில் குறைந்தபட்சம் ஒன்று, அதிகப்பட்சம் நான்கு வைத்துக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார். அப்படிப் பார்த்தால், கேந்திரமுள்ள துறையில் வங்கித்துறையும் உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால், அதிகப்பட்சம் நான்கு வங்கிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மற்றவற்றை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்பது தான் அவர்களின் திட்டம்.

1947க்கு பிறகான காலங்களில் வங்கிகள் தனியார்மயமாக தான் இருந்தன. 1947 – 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 559 வங்கிகள் திவாலாகின. 1969க்கு பிறகு 23 வங்கிகள் திவாலாகின. பிறகு தான் அரசு மக்களின் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்கும், இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டுமென்றால், அரசு வங்கிகளின் அவசியத் தேவையை உணர்ந்து வங்கிகள் தேசியமயமாக்கபட்டன. இது தான் கடந்த கால வரலாறாக இருக்கிறது. சமீபத்தில் கூட யெஸ் வங்கி திவாலாகும் நிலையில் அரசு வங்கியான SBIயும், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சிதான் காப்பாற்றின.

இந்தியாவில் உள்ள வங்கிகளின் கணக்கு

அரசு வசம் உள்ள வங்கிகள் 4
வைப்பு நிதி நிறுவனம் 8
மொத்தம் 12

தனியார் வசம் உள்ளவை

பேமண்ட் வங்கி 7
வங்கிகள் 22
பிரதேச வங்கி 3
வெளிநாட்டு வங்கி 46
வங்கியில்லாத வைப்பு நிதி நிதி நிறுவனங்கள் 80
மொத்தம் 168

அரசு வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்கு 51% என்பதால், அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் இயங்குவதால் திவாலாக வாய்ப்பில்லை. அப்படியே திவாலானால் கூட மக்கள் போட்ட பணம் அப்படியே கிடைத்துவிடும். இல்லையெனில் முறையாக வழக்கு தொடுத்து மீட்டுவிட முடியும்.

ஆனால், தனியார் வங்கிகளில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் எத்தனை லட்சம் வைப்புத்தொகையாக வைத்திருந்தால் கூட, அதிகப்பட்சம் ஐந்து லட்சம் மட்டுமே கிடைக்கும். (இந்த தொகை சமீப காலம் வரை ஒரு லட்சம் தான் இருந்தது.) சமீபத்தில் ஒரு தனியார் வங்கி, வாடிக்கையாளரின் வங்கி கணக்குப் புத்தகத்தில் ”ஐந்து லட்சம் மட்டுமே” என சீல் வைத்து கொடுத்ததினால், பரவலாக பேசுபொருளானது.

நாட்டின் வளர்ச்சியில், மக்களின் நலனில் அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

அரசு வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 35%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குகின்றன
குறுந்தொழில்களுக்கு எந்த பிணையும் இல்லாமல் 2லட்சம் வரை வழங்குகின்றன
விவசாய கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 3 லட்சம் வரை தருகின்றன.
கல்விக்கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 4 லட்சம் வரை வழங்குகின்றன.
ஏழை மக்களுக்கு மொத்த கடன் தொகையில் 40% முன்னுரிமை வழங்குகின்றன. அதில் விவசாய கடன்களில் 18% முன்னுரிமையும் வழங்குகின்றன.

தனியார் வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 15%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குவதில்லை
குறுந்தொழில்களுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
விவசாய கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கல்விக்கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கடன் வழங்குவதிலும் ஏழை மக்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லை.

அரசு வங்கிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்றன. யார்வேண்டுமென்றாலும், ஆர்.டி.ஐ மூலம் விவரங்கள் கேட்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். தனியார் வங்கிகளில் இம்மூன்றும் கிடையாது.

அரசு வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபாரதக் கட்டணமும் குறைவு. வங்கி கடன்களை வசூலிப்பதில் சட்ட ரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்கின்றன. தனியார் வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபராதமும் அதிகம். கடன்களை வசூலிப்பதில் மிக மோசமான அணுகுமுறையை கையாள்கிறார்கள். இதனால், தற்கொலைகள் நிகழ்வதை செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம்.

வேலை வாய்ப்புகளை பொறுத்த வரையில், அரசு வங்கிகளில் நிரந்தர வேலை வாய்ப்புகளை தருகின்றன. தலித், ஆதிவாசி, முன்னாள் இராணுவத்தினருக்கென இட ஒதுக்கீடு உண்டு. இதில் எதுவும் தனியார் வங்கிகளில் கிடையாது.

அரசு வங்கிகளை கண்காணிப்பதற்கென்று நிறுவன அமைப்புகள் உண்டு. கடன்களை வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் உண்டு. நிர்வாக இயக்குநருக்கென பதவிக்காலம் 3 வருடங்கள் மட்டுமே. தனியார் வங்கிகளில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை. ஐசிஐசிஐயின் முன்னாள் இயக்குநர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அறிவோம்.

இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறித்தான், கார்ப்பரேட் முதலாளிகளும் தரகு முதலாளிகளும், அதிகாரத்தில் உள்ள காவி பாசிஸ்டுகளின் மூலம் ஏற்கனவே வங்கிகளிடம் ஏராளமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாமல், செலுத்தாத முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் வங்கிகளை திவாலாக்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள். மொத்தமாய் தனியார்மயமாக்கிவிட்டால், கொள்ளையை தாராளமாய் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

2008ல் உலகம் முழுவதிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பல நாடுகள் கலங்கிபோயின. அதிலிருந்து மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆயின. இன்னும் மீளாத நாடுகளும் உண்டு. வங்கிகளின் செயல்பாட்டில் அரசு தலையிடகூடாது என அடம்பிடித்து வால் ஸ்டீரிட்டில் இயங்கிகொண்டிருந்த பெரும் வங்கிகள் எல்லாம் அவர்கள் செய்த கோளாறுகளால் திவாலாகின. அரசிடம் கையேந்தி நின்றன. அமெரிக்க அரசு வேறுவழியில்லாமல் மக்கள் பணத்தை அள்ளித்தந்து காப்பாற்றியது. இந்த காலத்தில் இந்தியாவில் வங்கிகள் எல்லாம் அரசு வசம் இருந்ததால், அந்த பொருளாதார வீழ்ச்சி பெரிதாக பாதிக்கவில்லை.

ஆக இந்திய பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவது அவசர, அவசிய கடமையாகிறது. பொதுத்துறை வங்கிகள் எல்லாம் இருப்பதால் தான், பிணை இல்லாமல் கடன் பெற்று தொழில்கள் செய்துவருகிறோம். இல்லையெனில் ஐந்து வட்டிக்கும், பத்து வட்டிக்கும் வெளியில் கடன் வாங்கி கடனை கட்டுவதிலேயே நமது மொத்த உழைப்பும் தொலைந்துவிடும். ஆகையால், பொதுத்துறைவங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.

தரவுகளுக்கு நன்றி : தீக்கதிர்

இப்படிக்கு வயிறு - டாக்டர் செல்வராஜன்


பொதுவாக மருத்துவ ரீதியான கட்டுரைகள் படிப்பதில் எனக்கு கொஞ்சம் அலர்ஜி. கொஞ்சம் பயமுறுத்திவிடுவார்கள். உடலில் ஏதாவது பிரச்சனை என்றால், அதுவாக இருக்குமோ! இதுவாக இருக்குமோ என நமக்கே தோன்றும். அதனாலேயே படிக்காமலே தவிர்த்து வந்தேன். தனிப்பட்ட முறையிலேயே வயிறு தொந்தரவு கொஞ்சம் இருந்ததால், படிக்கவேண்டிய நெருக்கடிக்கு வந்துவிட்டேன். நான் பயந்த அளவிற்கு புத்தகம் இல்லாதது பெரிய ஆறுதல்.


மருத்துவரின் வெர்சனாக இல்லாமல், வயிறு ”தன் வரலாறு சொல்வது” போல எழுதியிருந்தார்கள். அதே போல மருத்துவரே எழுதாமல், விகடன் ஆசிரியர் இரா. சரவணன் எழுதியிருக்கிறார். ஓரிடத்தில் ”பெண்கள் சேலை கட்டும் பொழுது வைத்துக்கொள்ளும் கொசுவம் போல. மடிப்பு மடிப்பாக சிறுகுடலின் உட்புறமாய் இது பரந்து இருக்கும் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். ஆகையால், எளிமையாகவும் இருந்தது. நிறைய படங்களுடன் இருந்ததும் புரிந்துகொள்ள வசதியாக இருந்தது.

நம்ம அறிவுக்கு அறிவியல் விசயங்களை தவிர்த்துவிட்டு, சில விசயங்களை மட்டும் பேசலாம்.

நன்றாக மெல்லுவதற்கு தான் நமக்கெல்லாம் பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் பற்களுக்கு நன்றாக வேலை கொடுக்காமல், நேரே வயிற்றுக்கு அனுப்பிவிடுகிறோம், வயிறு நம்மை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டி, செரிக்கும் வேலையை இன்னும் மல்லுக்கட்டி செய்யவேண்டியிருக்கிறதாம். நமக்கு நன்றாக மென்று திங்கவேண்டும் என்று கூட சொல்லிக்கொடுக்கவில்லையே! சோகம்.

சாப்பிடும் பேசும் பொழுது பேசக்கூடாது. பேசினால், சாப்பாட்டுடன் காத்தும் உள்ளே போனால், தொந்தரவு என்கிறது வயிறு. சாப்பிடும் பொழுது தான் எல்லா ஊர்க்கதையும் வாய் ஓயாமல் பேசுகிறார்கள். உடன் சாப்பிடுவர்களை பேசாமல் சாப்பிடுங்கள்! என சொன்னால் யார் கேட்கிறார்கள்? அவர்களை நிறுத்தமுடியாது. சும்மா கேட்டுக்கொள்ளலாம் என்றால், நம்மிடம் கேள்வி வேறு கேட்டு பேச வற்புறுத்துகிறார்கள். சோகம்.

வயிறுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், நாமே குத்துமதிப்பாய் புரிந்துகொண்டு மருந்து எடுப்பது தவறு என்கிறது. ஒரு நோய் அறிகுறி பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், துவக்கத்திலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் இன்னும் சிக்கலாகி அறுவை சிகிச்சைக்கு கொண்டு போய்விட்டுவிடும் என வயிறு எச்சரிக்கிறது.

நாம் சாப்பிடுகிற எல்லாவற்றையும் செரித்து, கூழாக்கி, சத்துக்களை உறிஞ்சி, மீதமுள்ளதை, தேவையில்லாததை வயிறு வெளியே தள்ளுகிறது. எலும்பை கூட கரைத்துவிடுகிற அமிலங்களால், ஆல்கலாலை மட்டும் வயிறால் ஒன்றுமே செய்யமுடியாமல் போகிறதாம். நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறாம்.

நம்ம ஊரில் அரசு விற்கும் சாராயம் தான் பிரச்சனை. உடலில் எல்லா கோளாறுகளையும் கொண்டுவந்துவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் குடிக்கிற சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்தேன். அப்படி எல்லாம் இல்லை. எல்லா ஆல்கஹாலுமே பிரச்சனை என்கிறது வயிறு.

ஆக திருமூலர் சொன்னது போல “உடல் வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே” என்பதை கொஞ்சம் மாற்றி, ”வயிறை நன்றாக பார்த்துக்கொண்டேன். உயிர் வளர்த்தேனே” என்பதாக மாற்றிச்சொல்லலாம்.

பக்கங்கள் : 136
வெளியீடு : விகடன்

December 1, 2021

வனம் (2021)



ஓவியம், சிற்பம் என பல கலைகளையும் கற்றுத்தருகிற ஒரு கல்லூரி ஒரு வனத்திற்கு நடுவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அறையில் தங்குகிற மாணவர்கள் எல்லாம் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த அறையில் தங்கியுள்ள மாணவர்களில் நாயகனும் ஒருவன். நாயகியுடன் இணைந்து இதற்கான காரணத்தை தேடிச்செல்கிறான்.


ஐம்பந்து ஆண்டுகளுக்கு முன்பு கதை பின்னோக்கி செல்கிறது. ஒரு பொம்பளை பொறுக்கி ஜமீந்தாருக்கு வாரிசு இல்லை. செத்ததுக்கு பிறகு தன் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என வனத்திற்கு நடுவே ஒரு கல்லூரி கட்ட திட்டமிடுகிறான். அங்கு இருக்கும் பழங்குடி மக்கள் அதை எதிர்த்து நிற்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை கொஞ்சம் சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள்.

****

வாழுகிற பொழுது நல்ல பெயரை எடுக்காதவன் செத்ததுக்கு பிறகு தன் பெயர் ”நிலைத்து நிற்கவேண்டும்” என நினைப்பதே ஒரு பெரிய முரணாக இருக்கிறது. தன்னை கொன்றவர்களே சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது, அப்பாவி மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது ஏற்றும்கொள்ளும்படி இல்லை.

தமிழ் படங்களில் புள்ளைத்தாச்சிகளை டார்ச்சர் பண்றதை கொஞ்சம் நிறுத்தக்கூடாதா? பழங்குடி பெண்ணாக அனுசித்தாரா. நகரத்தில் வாழும் பெண்மணி போல அத்தனை பளபளவென வருகிறார். ஆவி, மறுஜென்மம், மாயக்கண்ணாடி என ஒரு பேண்டசி கதையை எடுத்திருக்கிறார்கள். அதனால், லாஜிக்கே பார்க்க கூடாதா என்ன?

ஆங்காங்கே சில சுவாரசியங்கள் இருந்தாலும், மொத்தத்தில் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. கதையும் திரைகதையும் தான் பலவீனம். மற்றபடி நடிகர்கள் வெற்றி, அனுசித்தாரா, ஸ்மிருதி, அழகம்பெருமாள், பிரதீப் என எல்லோரும் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.