> குருத்து

March 23, 2023

கண்ணை நம்பாதே (2023)


 நாயகன் குடியிருந்த வீட்டு ஓனரின் பெண்ணை காதலித்தது தெரிய வந்ததால், ”உடனே காலி செய்! இல்லையென்றால் எல்லாவற்றையும் தெருவில் எறிந்துவிடுவேன்” என அடம்பிடிக்கிறார்.

அவசர கதியில் ஒரு வீட்டில் குடியிருக்கும் இளைஞருடன் போய் செட்டிலாகிறார். அன்று இரவு உடல்நலம் சரியில்லாத ஒரு மத்திய வயது பெண்ணுக்கு நாயகன் காரோட்டி உதவுகிறார். உடன் இருக்கும் இளைஞர் நாயகனுக்கு தெரியாமல் அதில் ஒரு பெரிய சிக்கலை உண்டாக்குகிறார்.


ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு. அதை மறைக்க இன்னொரு தப்பு என போகிறது. பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாயகன் பூங்காவில் உட்கார்ந்து யாரும் பார்க்கிறார்களா இல்லையா என்பதை கூட கவனிக்காமல் வடிவேல் நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரிக்கிற லேசான ஆள். அதனால் முன்பின் தெரியாத ஆள் மீது சந்தேகமே அவரால் படமுடியவில்லை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகிறார். ஆங்காங்கே கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும் நடந்துகொள்கிறார்.

இப்படி சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கடைசி வரை பார்வையாளர்களை போராடிக்காமல் கொண்டு போயிருக்கிறார்கள்.என்பேன்.

நாயகனாக உதயநிதி, பிரசன்னா, புதுமுக நாயகி ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பூமிகா, மாரிமுத்து என பலரும் படத்தை காப்பாற்றியிருக்கிறார்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மாறன் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்பொழுது திரையரங்குகளில் ஓடுகிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.

March 20, 2023

Trial by fire (2018) உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம்.


1991. காலை 9 மணி. வீடு மள மளெவென தீப்பிடித்து எரிகிறது. உள்ளே இருக்கும் தனது மூன்று பெண் பிள்ளைகளை காப்பாற்ற போராடி, முடியாமல் புகைமூட்டம் தாளாமல் தள்ளாடி வெளியே வருகிறார் நாயகன். ”அப்பா, அப்பா” என பிள்ளைகளின் கூக்குரல் கேட்கிறது. சிலிண்டர், பிரிட்ஜ் என சில பொருட்களும் வெடிக்கின்றன. காப்பாற்ற முடியாமல், செய்வதறியாது அழுதுக்கொண்டே திகைத்து நிற்கிறான். தீயை அணைப்பதற்காக வண்டிகள் வருகின்றன. விபத்து நடந்த பொழுது நாயகனின் துணைவியார் இரவு வேலைக்கு போயிருக்கிறார்.


விசாரணை துவங்குகிறது. அடுத்து வந்த நாட்களில் திடீரென ஒருநாள் நாயகனை கைது செய்கிறார்கள். நடந்தது தீ விபத்து இல்லை. நாயகனே கொளுத்தியிருக்கிறான் என போலீசு குற்றம் சாட்டுகிறார்கள். ”ஆமாமாம். நாயகன் கூட என்கிட்ட கொளுத்தியதை சொல்லி அழுதான்” என ஒருவன் சாட்சி சொல்கிறான். அவன் மனப்பிசகு உள்ளவன் என (sociopath) என மருத்துவர் சான்றளிக்கிறார். அவன் ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. கடந்த காலங்களில் அவன் மனைவியோடு தொடர்ந்து சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறான். இப்படி அவனின் தனிப்பட்ட பண்புகளும் சிக்கலாக இருக்க… வழக்கில் அவனுக்கு மரணதண்டனை தரப்படுகிறது.

ஊரே குழந்தைகளை கொன்றவன் (Baby Killer) என தூத்துகிறது. சிறைக்கு வந்தாலும் திட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். நொந்துப்போய் தன்னைத்தானே வதைத்துகொள்கிறான். அதனால் தனிமை சிறையில் போடுகிறார்கள். தனது துணைவியாரே வந்து பார்க்காமல் இருக்கிறாள். எல்லாம் வெறுத்துப் போகிறான்.

வேறு ஒருவரின் உதவியால் படிக்க துவங்குகிறான். அவனுடைய தொடர்ந்து மேல் முறையீடுகளால், வருடங்கள் உருண்டோடுகின்றன. ஒரு பெண் நாடக ஆசிரியரின் (Playwright) முகவரியைப் பிடித்து அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். நாடக ஆசிரியர் அவனை சிறைக்குப் போய் பார்க்கிறார். அவன் பேச்சில் இருந்த நம்பிக்கையில்… அந்த வழக்கை விசாரிக்க துவங்க… திட்டமிட்டு அவனை குற்றவாளியாக்கியிருக்கிறார்கள் என கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

இறுதியில் அவன் மரண தண்டனையில் இருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

பிள்ளைகளின் மீது அத்தனை அன்புடன் இருந்தவன், தன் சொந்தப் பிள்ளைகளையே கொன்றவன் என ஊரே திட்டித் தீர்க்கும் பொழுது நொறுங்கிப்போகிறான். அதற்காகவாவது தான் நிரபராதி என நிரூபிக்கப்படவேண்டும் என விரும்புகிறான். ஆனால் அதற்கான சட்டப்பூர்வமான எல்லா வழிகளையும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பெண் நாடக ஆசிரியர் இந்த வழக்கை சாத்தியமான வழிகளில் விசாரிக்க துவங்க… அதில் வெளிப்படும் உண்மைகள் அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்கின்றன. அவன் குற்றமற்றவன் என சட்ட ரீதியாக நிரூபிக்க அவள் நகர்த்தும் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து கொண்டே வருகின்றன. நாட்கள் நெருங்க நெருங்க அவள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள்.

1980களிலிருந்து 158 பேர் குற்றவாளிகள் என மரண தண்டனை என கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என புதிய தடயங்களால் (Evidences) தெரிய வந்திருக்கின்றன என படம் முடியும் பொழுது தெரிவிக்கிறார்கள். படத்தில் ஒரு காட்சியில் ஒருவர் சொல்வார். “நீதி வழங்கும் முறை உடைந்துவிட்டது” (System is broken).

ஆயுத பலத்தாலும், அரசியல் பலத்தாலும் உலகையே உருட்டி மிரட்டி பல படுகொலைகளையும் போரையும் தூண்டி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் நீதியை சரியாக வழங்கிவிடுமா என்ன? அமெரிக்க மக்கள் அநீதிக்கு எதிராக போராடவேண்டும்.

சமூக ஏற்றத் தாழ்வு கொண்ட நம் சமூகத்திலும் சட்டங்களை அதிகார, பணபலம் கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வளைப்பதும், எளியவர்கள் மாட்டிக்கொண்டு, தண்டனைகளில் சிக்கிக்கொள்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறன. அமெரிக்காவில் நடந்தது போலவே இங்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பல வழக்குகளை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், பல அதிர்ச்சியான உண்மைகள் நமக்கும் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

2009ல் அமெரிக்க பத்திரிக்கையான நியூ யார்க்கரில் (New Yorker) டேவிட் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நாயகனாக ஜாக் ஓ கானல், நாடக ஆசிரியராக லாரா என இருவரும் முக்கிய பாத்திரங்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள். எட்வர்ட் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

The man who called OTTO (2022)



”எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.”

****

நாயகன் பணி ஓய்வு பெறும் வயதில் இருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய துணைவியார் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் புற்றுநோயால் இறந்து போயிருக்கிறார். அவருடைய இழப்பு அவருக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. விரைவில் தன் துணைவியாருடன் சென்று சேர்ந்துவிடவேண்டும் என நினைக்கிறார். மீதி நாட்களை அவளின் நினைவுகளில் வாழ்கிறார்.

பிரியத்துக்குரியவரை இழந்ததில் மனிதர் சிடுசிடுவென மாறிவிடுகிறார். தன் குடியிருப்பில் வாழும் அத்தனைப் பேரிடமும் அப்படித்தான் அணுகுகிறார். தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்குப் போனால், நிர்வாக மாற்றத்தினால், சிலருக்கு நல்ல செட்டில்மெண்டில் விருப்ப ஓய்வு கொடுக்கிறோம். அதில் நாயகனும் பட்டியலில் இருக்கிறார் என சொல்கிறார்கள். ”போங்கடா!” என திட்டிவிட்டு வந்துவிடுகிறார்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரம் தன் துணைவியாரின் கல்லறைக்கு போய், இன்று நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமால் பகிர்கிறார். ”விரைவில் உன்னுடன் வந்துவிடுகிறேன்” எனவும் சொல்கிறார்.

இந்த சமயத்தில் அருகே மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அங்கு வந்து சேர்கிறது. நிறைமாத கர்ப்பிணியான ஒரு அம்மா, அவரின் கணவன், அவர்களின் இரண்டு சின்ன பிள்ளைகள் என அவர் வீட்டுக்கு எதிரே குடிவருகிறார்கள். நாயகன் சிடு சிடுவென அவர்களிடமும் நடந்துகொண்டாலும், அவர்கள் குறிப்பாக அந்த அம்மா உரிமையோடு உதவியும் வாங்கிகொள்கிறார். உணவு, குக்கீஸ் என செய்து கொடுக்கவும் செய்கிறார்.

தன் துணைவியோரோடு போய்ச்சேர ஒவ்வொரு முறை தற்கொலை செய்துகொள்ள முயலும் பொழுதும், கர்ப்பிணி அம்மாவும், சுற்றி உள்ளவர்களும் ஏதோ விதத்தில் இடையூறு செய்து தடுத்துவிடுகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை முழு நீளப்படத்திலும் சொல்லி முடிக்கிறார்கள்.
****

பொதுவாக குடும்பம், குழந்தைகள் இல்லாத ஒரு மனிதர் தான் இப்படிப்பட்ட சிடு சிடு மனிதராக இருப்பார்கள். நம் தமிழ் படங்களில் கூட அப்படி பார்த்திருக்கிறோம்,. இவர் குண அளவில் (introvert) மற்றவர்களோடு சகஜமாக பழகாத மனிதராக இருக்கிறார். தன் பிரியத்துக்குரிய துணைவியார் இறந்ததும் எல்லாமும் சூன்யமாகிவிடுகிறது.

முதலாளித்துவ சமூகமாக இருக்கும் அமெரிக்காவில், மக்கள் தொகை 33 கோடியாக இருந்தாலும், தனிநபர் சுதந்திரம் என்பது அதிகமாகி, யாரையும் எதையும் சொல்ல முடியாத இடத்திற்கு போய்விட்டார்கள் எனலாம். அதனால் தான் அங்கு குடும்பங்கள் சிதறி சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால் அங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும், தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பேன்.

அதனால் தான் தன் பிரியத்துக்குரிய துணைவியார் இறந்து போனதும், சமூகத்தோடு வாழ பிடிக்காமல், தன் வாழ்வை முடித்துக்கொள்ள பார்க்கிறார். ஆனால், வாழ்க்கை அப்படியில்லையே! எல்லோருடைய கூட்டு உழைப்பில் தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கின்றன. இங்கும் சுற்றி உள்ள மனிதர்கள் அவருடைய ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை வாழப்படவேண்டும். அதுவும் அர்த்தப்பூர்வமான வழியில்! என்கிறது.

2012ல் நாவலாக எழுதப்பட்டு, ஸ்வீடிஸ் மொழியில் முதலில் (2015) எடுக்கப்பட்டு, 2022ல் இங்கிலீஷில் வெளியாகியிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் Tom Hanks சிறப்பாக நடித்திருக்கிறார். பிறகு அந்த மெக்சிகன் பெண்ணாக வரும் Mariana Treviñoவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

அருமையான படம். பாருங்கள்.