> குருத்து

August 9, 2024

Incendies (2010) பிரெஞ்சு


அம்மா நினைவுகள் தப்பி, இறந்துவிடுகிறாள். தனது இரட்டைப் பிள்ளைகளான மகன், மகளுக்கு ஒரு பொறுப்பை தருகிறாள். பிள்ளைகள் அறியாத (முன்னாள்) கணவனுக்கு ஒரு கடிதம். அவருக்கு பிறந்த ஒரு பையனுக்கு ஒரு கடிதம். அந்த கடிதங்களை சேர்த்தப் பிறகு தான், தன் கல்லறையில் பெயரை எழுதவேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார்.


மகன் கடுப்பாகிறான். மகள் தன் அம்மா கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற முடிவெடுத்து, கிளம்புகிறாள்.

அரபு நாடுகளில் ஒன்று அம்மாவின் தாயகம். தாய் வீடு அவளை இனிதே வரவேற்கவில்லை.

அம்மா கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து...ஒரு முசுலீம் அகதியை காதலித்து... இது தெரிந்ததும் சகோதரர்கள் அவரை சுட்டு கொன்றுவிடுகிறார்கள்.

தன் பாட்டியின் ஆதரவில்.. குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தைக்கு காலில் ஒரு அடையாளமிட்டு அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள்.

அங்கு அரசியல் சூழலால் நிலைமை மோசமடைகிறது. அவளின் வாழ்க்கையும் அதில் சிக்கிக்கொள்கிறது.

அவள் தன் மகனைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். பின்னாட்களில் தான் தன் இரு குழந்தைகளுடன் கனடா வந்து சேர்கிறாள்.

தன் அம்மாவைப் பற்றிய தேடலில்.. தன் தந்தை யார்? தனது மூத்த சகோதரன் யார்? என்பது மட்டுமில்லாமல், அதன் வழியே தங்களுடைய வரலாறையும் அறிந்து... அதிர்ச்சி அடைகிறார்கள்.
****

புகழ்பெற்ற "இடிபஸ்" நாடகத்தின் அடிப்படையாக கொண்டு, ஒரு நவீன நாடகமாக எழுதப்பட்டு, அதை படமாக்கியிருக்கிறார்கள்.

இயல்பு வாழ்வில் நடக்க சாத்தியமில்லாத ஒரு கதை. ஆனால் மத ரீதியான மோதல் சூழலில்... இந்தக் கதை சாத்தியமாவது தான் வாழ்வின் பெருந்துயரம்.

கடவுள் மீதான நம்பிக்கை தனிநபர் நம்பிக்கையாக இருக்கும்வரை, ஏதும் பிரச்சனையில்லை. மதம் ஒரு அமைப்பாய், அதிகாரத்தில் அமரும் பொழுது, மதம் பிடித்துவிடுகிறது. மனிதர்களை ஈவிரக்கமின்றி கா வு வாங்க துவங்கிவிடுகிறது.

கதையைப் புரிந்து அனைவரும் நடித்திருக்கிறார்கள். படம் பல விருதுகளை வென்றிருக்கிறது.

அவசியம் பார்க்கவேண்டிய படம்.

ரயில் பயணம் : லேப்டாப்பும் ரயில்வே போலீசும்!


பக்கத்து படுக்கை இளைஞர் தன்னுடைய லேப் டாப்பில் சிரித்துக்கொண்டே படம் பார்த்துக்கொண்டிருந்தார்.


தமிழ் பேசும் ரயில்வே போலீசு.. "இரண்டு திருடங்க ஏறிட்டாங்க! அவங்களைத் தான் தேடிட்டு இருக்கோம். பார்த்து பக்குவா வைச்சுங்குங்க!" என போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட்டார்.

சிரிப்பையும், படத்தையும் உடனே நிறுத்தினார். பக்குவமா தன் பையில் பத்திரப்படுத்தி மேல் படுக்கையில், தன் அருகேயே வைத்துக்கொண்டு தூங்கப்போய்விட்டார்.

இந்த லேப்டாப்பைப் பார்த்த அந்த திருடன் என் பையை மாத்தி தூக்கிட்டு போயிட்டான்னா என்ன செய்வது என யோசிக்கிறேன். என் பையிலும் ஒரு லேப்டாப் இருக்கிறது. :)



சீமானும், அண்ணனும்!


சொந்த அன்ணன் மதுரையில் சொந்த தொழில் செய்கிறார். தொழில்நுட்பம் பெரிதாக தெரியாததால், கடந்த ஆண்டு வரை பட்டன் போன் தான் பயன்படுத்தி வந்தார்.


திடீரென என்ன நினைத்தாரோ, ஆண்ட்ராய்ட் போனுக்கு மாறினார்.
நாம் தமிழர் தம்பிகள் தான் இணையத்தில் ரெம்ப ஆக்டிவா இருக்கிறார்களே!
மெல்ல மெல்ல யூடியூப்பில் சீமானின் உரைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

முன்பு பொது விசயமாக, அரசியல் ரீதீயாக ஏதாவது ஒரு விசயத்தை புரிந்துகொள்ள சிரமம் இருந்தால் எனக்கு போன் அடித்து விளக்கம் கேட்பார். விளக்குவேன்.

இப்பொழுது சீமான் தான் "சர்வரோக நிவாரணியாக" இருக்கிறார்.

சீமான் சொல்வதைக் கேட்டு, என்னிடம் அவ்வப்பொழுது பேசுகிறார். துவக்கத்தில் அது உரையாடலுக்கு உகந்ததாக இருந்தது. நாட்கள் ஆக ஆக விவாதம் என்பது இல்லாமல், "ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும்" பேசுகிறார்.

மாணவர்களுக்கு காலை உணவு தேவையா?
இட ஒதுக்கீடு தப்பு.
திமுக மீது கடும் வெறுப்பு.

எது சீமான் கருத்து? எது அண்ணனின் சொந்த கருத்து என பிரிப்பதில் சிக்கலாக இருக்கிறது.

எல்லாவற்றிக்கும் விளக்கம் கொடுக்கிறேன். வேறு வழியில்லாமல், இப்பொழுது சீமானின் ஆக்ரோச உரைகளை கேட்டு காதில் ரத்தம் பார்த்தே ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறேன்.

நாளாக நாளாக அண்ணனிடம் கேட்பதற்கான பொறுமை குறைந்து கொண்டே வருகிறது.

முழுக்க சந்திரமுகியாக மாறி... எப்பொழுது என்னை திட்டப் போகிறாரோ! என திகிலோடு காத்திருக்கிறேன். 🙂