> குருத்து

May 28, 2025

தோழர் ஜவஹர்


கடந்த ஒரு வார காலமாக அவரது நினைவு மலரில் பல ஆளுமைகள், மனிதர்கள் எழுதியதை மீண்டும் வாசித்ததன் மூலம் அவரது நினைவலைகள் மனதில் ஓயாது அடித்துக்கொண்டே இருக்கின்றன.

 

இனியனுக்கு புருஸ்லீயை அறிமுகப்படுத்தி… மறவாமல் சிடிக்களையும் வாங்கி மகிழ்வித்திருக்கிறார். இனியன் ஓரிடத்தில் “சிறுவர்களை கூட தனக்கு சமமாக நடத்துவார்” என குறிப்பிடுகிறான்.

 

”ஜவஹர் தாத்தாவின் முத்தம் – தாத்தாவின் முத்தம் அலாதியானது. அவ்வளவு அன்பு மிகுந்தது. அவ்வளவு வாஞ்சையானது. நரைத்த மீசை குத்தும். ஆனாலும் இன்னொரு முத்தத்திற்காக ஏங்கும்” என்கிறார் பேத்தி வானவில்.

 

ஒருமுறை இராஜீவ்காந்தி போகும் பாதையில் கையசைப்பதற்காக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை நிற்க வைத்திருக்கிறார்கள். அவர் வர தாமதமாகிறது.  ஆனால் உட்கார வைக்கவில்லை. ஏன் என கேட்டால், வரும் பொழுது அவசரமாக எழ சொல்லமுடியாது என மடத்தனமாய் பதில் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர் சுப்பு சண்டையிட கிளம்புவதைப் பார்த்து… உடன் இருந்த ஜவஹர் தோழர் அவர்களிடம் போய் ஒன்றை சொல்ல… குழந்தைகளை அமர வைத்திருக்கிறார்கள்.   ”என்ன சொன்னீங்க?” என கேட்டதற்கு “நாங்க காங்கிரஸ் தான். தலைவர் வருவதற்கு தாமதமாகும்.” என சமயோசிதமாக சொன்னாராம். ஜவஹர் பொய் சொல்லமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியையும் பதிவு செய்கிறார்.

 

ஒரு விசயம் குறித்து கேட்கும் பொழுது… குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை போல உண்மையைத் தான் தோழர் பகிர்ந்துகொள்வார்.    அதை பலமுறை நானே உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே சில விசயங்களை அவரிடம் கேட்காமல் தவிர்த்திருக்கிறேன்.

 

தொழிலாளர் தோழர்கள் மீது எப்பொழுதும் அவருக்கு பிரியமும் தோழமையும் உண்டு.  “பொதுவாக தோழர் தன்னுடைய வேலைகளை ஒழுங்குபடுத்தும் எண்ணத்தில், வாருங்கள் என சொல்வார்.  ஆனால், எங்கள் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு.  இருவரும் இருபத்து நான்கு மணி நேரமும் தன் வீட்டுக் கதவைத் தட்டலாம், வந்து பேசலாம் என்பார்.  அதே போல வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தோழரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவோம்” என்கிறார் தோழர் வெள்ளமுத்து.

-  

ஜவஹர் தோழர் மீதான அன்பும், தோழமையும் எனக்கு அதிகம் தான்.  ஆனால் அதை வெளிப்படையாக செயலிலோ, வார்த்தைகளிலோ காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடம் இருந்து கற்றதும், பெற்றதும் அதிகம்.  அந்த அன்பில் ஏதும் சின்ன முரண் கூட வந்துவிடக்கூடாதே என்பதற்காகவே மிகுந்த நெருக்கம் கொள்ளாமல், தள்ளியே இருந்து… நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவரை சந்தித்து பேசிவருவதுண்டு.   அப்படி செய்திருக்க வேண்டியதில்லை என இப்பொழுது தோன்றுகிறது. 

 

பொதுவுடைமை தோழர்கள், திராவிட இயக்க தோழர்கள்,   தொழிலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தோழமை குடும்பத் தோழர்கள் என எல்லோரிடத்திலும் அன்பும், தோழமையும் பாராட்டி வந்திருக்கிறார்.   அதற்கு அத்தனை மனிதர்களுடைய பல்வேறு அனுபவங்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த நினைவு மலரை இப்பொழுது கையில் எடுத்தாலும், மணம் வீசுகிறது.

 

கொரானா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்தது.  மரணம் எங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த காலமிது. தோழர் மரணித்த நாளில், இடுகாட்டுக்கு போயிருந்தோம்.   எப்பொழுதும் புன்னகையுடன் “என்னப்பு!” என பிரியத்துடன் அழைக்கிற தோழர், அன்று ஒரு ஸ்டிரச்சரில் வெளியே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரை எரியூட்டுகிற காட்சியை பார்க்கிற தெம்பு மனதில் இல்லை. கிளம்பி வந்துவிட்டோம். 

- 

- 28/05/2021 - இன்று அவரது நான்காம் நினைவு நாள்

May 25, 2025

Mission Impossible – The final Reckoning


ஒரு சிக்கலில் மாட்டி… கடுமையான தண்டனைகுள்ளானவர்களை பெருந்தன்மையுடன் காப்பாற்றி… அவர்களை அடையாளம் இல்லாதவர்களாக  (Ghost) மாற்றி… அவர்களுக்கு  உளவு வேலைகளை கொடுக்கிறது அமெரிக்க உளவு பிரிவு.

 

அந்த பிரிவுக்கு பெயர் IMF (Impossible Missions force). அதாவது மிக ஆபத்துள்ள, மிக முக்கிய வேலைகளை இரகசியமாக செய்யும் குழுவிற்கு பெயர்.  அந்த குழுவின் தலைவன் தான் நாயகன்.

 

இந்தமுறை நவீன உலகுக்கு தகுந்தமாதிரி, ஒரு வேலைக்காக உருவாக்கிய AI தனித்து சிந்தித்து, உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது.  அந்த AI யை சில நாடுகளும், சில கும்பல்களும் தங்கள் கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டால், உலகை ஆளலாம் என நினைக்கிறார்கள்

 

ஆனால், இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒன்று யார் கையிலும் கிடைத்துவிடக்கூடாது அதை அழித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள் நாயகன் குழு.  ஆக, ஆள், அம்பு, படை என எல்லாமும் வைத்திருக்கும் வில்லன்களும், நாடுகளும் நாயகன் குழுவை துரத்த ஆரம்பிக்கிறார்கள்.

 

இவர்களைத் தாண்டி நாயகன் குழு  அந்த AIயை அழித்தார்களா என்பது முழு நீளக்கதை.

 


கன்னித்தீவில் வரும் மந்திரவாதி மூசாவின் உயிர் ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி ஒரு கிளியின் உடலுக்குள் இருக்கும்.  அவனை கொல்லவேண்டுமென்றால், பெரும்போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை.

 

அது போல AI இருக்கும் இடமும் மிக சிக்கலான இடம். அங்கு போவது அத்தனை சாத்தியமில்லாத இடமும் கூட.  ஆகையால், அதை பேசி, பேசி விளக்கி, அதற்கான உதவிகள் பெற்று, தயாராகி அங்கு போவதற்குள் நாயகனை விட நாமே களைத்துப் போய்விடுகிறோம்.

 

முதல் பாகத்தைப் போல விறுவிறு என்றெல்லாம் இருக்காது. இந்தப் பாகத்தின் டிரைலர் பெரிய விறுவிறுப்போடு வெளியிட்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்போடு போனால் ஏமாந்து தான் போவோம்.

 

நாயகன் டாமுக்கு நிறைய வயதாகிவிட்டது.  ஓடிக்கொண்டே இருந்தால் கூட தெரியாது.  படம் நிதானமாக நகர்வதால், நன்றாகவே வயது முதிர்வை உணரமுடிகிறது.  மற்ற நடிகர்களும் கொடுத்த பாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

 

இருந்தாலும் எனக்கு படம் பிடித்தது.  திரையரங்குகளில் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள். நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

May 24, 2025

லெவன் தமிழ் (2025) ஒரு நல்ல கிரைம் திரில்லர்


30 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் சென்னைக்கு வெளியே தலையில் சுடப்பட்டு, பெட்ரோல் ஊத்தி கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.  யாரும் காணாமல் போனதாய் புகார் கொடுக்கவில்லை. எரித்து கொல்லப்பட்டதால் அடையாளம் தெரியவில்லை. ஏன் கொலை செய்யப்படுகிறார்கள் என எந்தவித தடயமும் கிடைக்காததால், வழக்கு முன்னேறாமல் தேங்கி நிற்கிறது.


நாயகன் அசிஸ்டெண்ட் கமிசனராக இருக்கிறார். திறம்பட செயல்படுவதால், இந்த வழக்கு இவரிடம் வந்து சேர்கிறது.

துவக்கத்தில் தடுமாறினாலும், கிடைத்த ஒரு தடயத்தை வைத்துக்கொண்டு ஏன் இந்த கொலைகள் நடக்கின்றன என்பதை கண்டுப்பிடிக்கிறார். தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைப் பிடித்தார்களா? ஏன் இந்த கொலைகள் என்பதை உணர்வுபூர்வமாக ஒரு பிளாஷ்பேக் மூலம் சொல்லிமுடிக்கிறார்கள்.

****


துவக்க காட்சிகள் எல்லாம் ராட்சசனை நினைவுப்படுத்தினாலும், பின்னாடி சொல்லப்படும் பிளாஷ் பேக் காட்சிகளால் அதை சரி செய்திருக்கிறார்கள்.

பொதுவாக நல்ல விசயங்கள் வாழ்வில் நிறைய நடைபெற்றாலும், அவற்றை கவனம் கொடுத்து நினைவு வைத்துக்கொள்வதிற்கு நம்மில் பலருக்கு மனத்தடை இருக்கிறது. ஆனால் சோகமான, பாதிக்கப்பட்ட சம்பவங்கள் என்றென்றைக்கும் மரத்தில் ஆணி அடித்தாற் போல தங்கிவிடுகிறது. எப்பொழுது நினைவுப்படுத்தினாலும், ஒரு பழைய படத்தைப் போல மனம் மனதில் ஓட்டிப்பார்க்க துவங்கிவிடுகிறது.


தவறுகள், தப்புகள் நடக்கும் பொழுது, அதற்கான நீதி தாமதமாக (!) கிடைத்துவிட்டால் கூட மனம் சமாதானமடைந்துவிடும். நீதி கிடைக்காத பொழுது, மனதில் ஒரு பெரிய வடுவாகிவிடுகிறது.

படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஆந்திர நெடி குறைவு என்பதால், நிதானமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நகர்கிறது. நாயகனான நவீன் சந்திரா  மொத்தப்படத்தையும் இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு தாங்குகிறார். கதாநாயகிக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. இடையே வந்து போகிறார். இமான் இசைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் ஒரு பாடல் கூட வருகிறது.  லோகேஷ் அஜிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். முதல்படம் என நினைக்கிறேன். எடுத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.  இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயராக வைத்திருக்கலாம்.

திரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.