> குருத்து: கதை
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

June 19, 2025

எழுதத் துவங்கு!

 சிறந்த எழுத்தாளனின் நல்ல பழக்கங்கள்!

எர்னெஸ்ட் ஹெமிங்வே

https://thaaii.com/2025/06/16/ernest-hemingway-thoughts-of-writers/


படித்ததில் ரசித்தது:



1 எழுதத் தொடங்கு, அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.


2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில் ஒரு மணி நேரமாவது எழுது.


3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.


4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.


5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.


6 பென்சிலைப் பயன்படுத்து.


7 சுருக்கமாக எழுது. நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை.


நன்றி: இந்திரன் முகநூல் பதிவு


#Ernest_Hemingway #Author #writing #reading #story #எர்னெஸ்ட்_ஹெமிங்வே  #எழுத்தாளர் #எழுத்து #வாசிப்பு #கதை #நாவல்

April 14, 2022

கன்னித்தீவு



 ”நீங்க என் கடனை எப்பொழுது திரும்ப தருவீங்க?”

“தினத்தந்தியில் கன்னித்தீவு கதை முடிஞ்சதும் தந்துவிடுகிறேன்”
****

நாலாம் வகுப்பு படிக்கும் பொழுது, கடைக்கு காபி வாங்க வருவேன். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரக் கதை படங்களில் இருக்கும். அதைப் படித்துவிட்டு, தினத்தந்தியில் செய்திகளை விட நிறைய இருக்கும் சினிமா போஸ்டர்களை பார்த்துவிட்டு, வீடு போய் சேரும் பொழுது அம்மா திட்டுவார். “ஒரு தலைவலி சொல்லி, காபி வாங்க சொன்னா… எப்ப போயிட்டு எப்படா வர்றே?”

இப்படிதான் கன்னித்தீவு வாசகனானேன். அதற்கு பிறகு வயது ஏற ஏற காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலி மாமா, பாலமித்ரா, பிறகு இராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என மேலே போய்க்கொண்டே இருந்தேன்.

கன்னித்தீவு கதை இது தான். அழகான இளவரசிகளை எல்லாம் கடத்தி வந்து, தீவில் வைத்துவிடுவான். அப்படி ஒரு அழகான இளவரசி லைலா. அவளை மீட்பதற்காக சிந்துபாத் கிளம்புவான். மந்திரவாதி மூசா நிறைய சக்தி வாய்ந்தவன். மந்திரம் தந்திரம் தெரிந்தவன். அவனிடம் ஒரு மாயக்கண்ணாடி இருக்கும். அவன் நினைத்த ஆளை, இடத்தை அந்த மாயக்கண்ணாடி காட்டும். அப்படி தனக்கு எதிராக திரும்பும் எதிரிகளுக்கு தீய சக்திகளை ஏவிக்கொண்டு இருப்பான். நாயகன் சிந்துபாத் மூசா தரும் அத்தனை தொல்லைகளையும், ஆபத்துகளையும் தன் திறமையால் முறியடிப்பான். சில வருடங்களுக்கு நானே சோர்ந்து போய்விட்டுவிட்டேன். ஆனால் சிந்துபாத் முயற்சியில் தளரா விக்ரமாதித்தன் போல தன் காதலியான லைலாவை மீட்க முயன்றுகொண்டே இருப்பான்.

இப்பொழுதும் எப்போதாவது கனவில் லைலா வருவார். சிந்துபாத் ஒரு பெரிய சிங்கத்துடன் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார். இது வரை என் கதை.

கன்னித்தீவின் கதை என்னவென்று பார்த்தால். எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் இடைவேளைக்கு பிறகு கன்னித்தீவு என அறிமுகப்படுத்தியிருப்பார். அந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே தினத்தந்தி ஆசிரியர் அதையே சூட்டிவிட்டார்.

ஆகஸ்ட் 4, 1960ல் துவங்கியுள்ளது. ஓவியர் கணேசன் என்பவர் கதைக்கு உயிர்கொடுத்துள்ளார். கதையை அவரே எழுதுவாரா? அதற்கென ஆசிரியர் குழு இருக்கிறதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 61 வருடங்களுக்கு மேலாக வந்துகொண்டிருக்கிறது. 15 செப்டம்பர் 2013லிருந்து கன்னித்தீவு வண்ணத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இடையில் ஓவியர் கணேசனுக்கு உடல்நல குறைவு ஏற்பட, ஓவியர் தங்கம் என்பவர் நான்கு மாதங்கள் வரைந்து இருக்கிறார்.

இப்பொழுதுள்ள தலைமுறை காணொளிகள் வழியாக வளர்கிற தலைமுறை என்பதால், கன்னித்தீவை எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தினந்தந்தியின் ஒரு அடையாளமாக கன்னித்தீவு மாறிப்போனது.

உங்களில் எத்தனைப் பேர் கன்னித்தீவு படித்திருக்கிறீர்கள்? தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

July 26, 2014

மாறும் மனிதர்கள்!

பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!
பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

May 7, 2014

சாவுச் சோறு – இமையம்



இந்த மாத உயிர்மையில் எழுத்தாளர் இமையத்தின் ‘சாவுச் சோறுசிறுகதை படித்தேன். சாதியத்தின் கொடூரத்தை விளக்கும் அருமையான சிறுகதை!

நாலுநாட்களாக மொட்டையடித்த 50 வயது உள்ள அம்மா, பள்ளி, பள்ளியாக ஏறி இறங்குகிறார்.  தாழ்த்தப்பட்ட பையனுடன் போன தன் பெண்ணைத் தேடுகிறார்.  எம்.எஸ்.சி, எம்.எட் படித்த தன் பெண்ணின் சான்றிதழ்களையும், அவளுக்காக சேர்த்து வைத்த 8 பவுன் நகைகளையும், கொஞ்சம் பணத்தையும் அவளிடம் எப்படியாவது ஒப்படைத்துவிடவேண்டும் என்று நிம்மதியின்றி அலைகிறார்!

பெண் போன பிறகு, அந்த பையன் வேலை செய்த கடையை அடித்து நொறுக்கிவிட்டார்கள். கும்பலாக போய்,  பையனுடைய அம்மாவின் ஒருபக்க முலையை அறுத்தெறிந்துவிட்டார்கள்.  அந்த அம்மா, அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிவிட்டார்.  ‘ஓடிப்போன’ பெண் செத்துப்போனதாய், வீட்டில் எல்லா ஈமச்சடங்குகளையும் செய்துமுடித்துவிட்டார்கள்.  இரண்டு அண்ணன்களும், தந்தையும், அம்மாவையும் சேர்த்து நால்வரும் மொட்டை போட்டுவிட்டார்கள்.  அவள் கிடைத்தால், அவளின் முலைகளையும் அறுப்பார்கள். 

அவளைப் பார்த்தால், கையில் உள்ளவைகளை தந்து, எங்காவது போய் பிழைத்துகொள்! ஊர்ப்பக்கம் தப்பித்தவறி வந்துவிடாதே  என சொல்வதற்காக தான் நாலு நாட்களாக அந்த தாய் அலைந்துகொண்டிருக்கிறாள்.
***

November 8, 2013

முதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை!

"ஷீ" கடை நடத்தி, லாபம் சம்பாதித்த ஒரு சிறுமுதலாளி, தோல் ஷீக்களை நாமே தயாரித்தால் என்ன என யோசித்து ஒரு தொழிற்சாலையை லீசுக்கு எடுத்து ஒரு சுயபோக சுபதினத்தில் துவங்கினார். 100 தொழிலாளிகள் வரை வேலைக்கு அமர்த்தினார்.

கணக்கு () வேலைகள் பார்க்க எங்கள் நிறுவனத்தை அமர்த்தினார். மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை அந்த நிறுவனத்திற்கு போய்வந்தேன். அப்பொழுது அந்த‌ சிறு முதலாளி அதுவும் புது முதலாளி காட்டிய பந்தா இருக்கிறதே! தாங்கமுடியவில்லை! பொதுவாக நான் பார்த்த வரையில் தொழில் துவங்குகிற‌ பொழுது, சிறுமுதலாளிகள் கொஞ்சம் சிநேகமாய் பழகுவார்கள்.  தொழில் வளர வளர நெருக்கத்தை குறைந்து கொண்டே வருவார்கள். ஆனால், இவரோ துவக்கத்திலேயே செய்த பந்தா கொஞ்சம் ஓவராய் இருந்தது.

துவக்கத்தில் சில மாதிரிகள் தயாரித்து ஐரோப்பாவில் இரண்டு நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும், இன்னும் சில மாதிரிகள் அனுப்ப சொன்னார்கள். அனுப்பினார்.  பொருளாதார மந்தத்தினால், பல நாடுகள் தள்ளாட, அவர் எதிர்ப்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. 

கையில் உள்ள முதலீடு குறைய, குறைய முகம் வாட ஆரம்பித்தது. தொழிலாளர்களை குறைத்துப் பார்த்தார். உள்ளூரில் ஏதேனும் 'லேபர் வேலை' எடுத்து செய்ய ஆரம்பித்தார். கட்டுபடியாகவில்லை.

வங்கி கடன் அவரை நெருக்கியது.  குடியிருந்த சொந்த வீட்டை அடைமானம் வைத்தார். பந்தா கொஞ்சம் கொஞ்சமாய் ஆவியாக ஆரம்பித்தது.

நானும் எங்கள் எம்.டியும் போகிற பொழுதெல்லாம், தன் துயரங்களை கொட்ட ஆரம்பித்தார். இன்னும் இரண்டு மாதங்களில் இரு ஆர்டர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக சொல்லி, அந்த நிறுவனத்தில் பங்கு தாரராக இணைய சொல்லி கேட்டார். இல்லையில்லை. கெஞ்சினார். அடுத்த மாதத்திலிருந்து எங்கள் எம்.டி. வருவதை நிறுத்தினார்.

அடுத்த இரண்டு மாதத்தில் கவலை, துக்கம், சோகம் எல்லாம் சேர்ந்து, தாடி கூட வளர்க்க ஆரம்பித்தார்.  வீட்டை விற்றார்.  தங்கள் பிள்ளைகள் கூட தன்னை மதிப்பதில்லை என யாரிடமோ போனில் புலம்பிக்கொண்டிருந்தார்.

சரியாக ஒரு வருடம். எப்பொழுதும் போல், அங்கு போனால், நிறுவனம் மூடியிருந்தது. விசாரித்த பொழுது கடன்காரர்களின் நெருக்கடியால், முதலாளி தலைமறைவாகிவிட்டார் என்றார்கள்.

January 23, 2013

ஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு!

ஒன்றாவது படிக்கும் எனது பெண்ணுக்கு நேற்றிரவு விடுகதை போட்டேன்.  (எங்க அப்பா எனக்கு சொன்ன கதை இது :) 

ஒரு ஆள் ஆற்றின் க‌ரையில் ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்க‌ட்டு வைத்து காத்திருக்கிறார். சிறிய ப‌ரிசல் கிடைக்கிற‌து.  அதில் ஒவ்வொன்றாக‌ தான் க‌ட‌த்த முடியும். வெற்றிக‌ர‌மாக‌ ஒவ்வொன்றாக‌ க‌ட‌த்திவிட்டார். எப்ப‌டி க‌ட‌த்தினார்?

"முத‌ல்ல ஆட்டை கொண்டு போனாரு‌!" 

"இங்க‌ புலி புல்லை தின்னாது. ச‌ரி!"

"அடுத்து ஆட்டை கொண்டு போனாரு!" 

"சரி.அங்க‌ ஆட்டை விட்டுவிட்டு திரும்பினால், ஆடு புல்லை தின்னுடுமே!" என்றால்,

"அட‌ ஆமால்ல‌!" என‌ சிரிக்கிறாள்.

திரும்ப‌வும் முதலிலிருந்து...

"முத‌ல்ல‌ புலியை கொண்டு போனாரு!"

"அப்ப‌ ஒரு பிர‌ச்ச‌னை வ‌ருதே! ஆடு புல்லை தின்னுடுமே!"

"அட‌ ஆமால்ல‌!" என மீண்டும் சிரிக்கிறாள்.

இப்ப‌டியே உரையாட‌ல் தொட‌ர்ந்த‌ 15 நிமிட‌த்தில்,  "இது க‌ஷ்ட‌மா இருக்குப்பா! ஈஸியா ஏதாவ‌து சொல்லுங்க!" என‌ சொல்லிவிட்டாள். 

எங்க‌ அப்பா என‌க்கு இர‌ண்டு நாள் த‌வ‌ணை கொடுத்தார். உன‌க்கு ஒரு நாள் த‌ர்றேன். நாளை இர‌வு என‌க்கு ப‌தில் சொல்.  பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இந்த‌ க‌தையை கேட்டுக்க‌லாம்!

எத்த‌னை பேரிட‌ம் எப்ப‌டி க‌தை சொல்ல‌ப்போகிறாளோ?!