> குருத்து: கன்னித்தீவு

April 14, 2022

கன்னித்தீவு



 ”நீங்க என் கடனை எப்பொழுது திரும்ப தருவீங்க?”

“தினத்தந்தியில் கன்னித்தீவு கதை முடிஞ்சதும் தந்துவிடுகிறேன்”
****

நாலாம் வகுப்பு படிக்கும் பொழுது, கடைக்கு காபி வாங்க வருவேன். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரக் கதை படங்களில் இருக்கும். அதைப் படித்துவிட்டு, தினத்தந்தியில் செய்திகளை விட நிறைய இருக்கும் சினிமா போஸ்டர்களை பார்த்துவிட்டு, வீடு போய் சேரும் பொழுது அம்மா திட்டுவார். “ஒரு தலைவலி சொல்லி, காபி வாங்க சொன்னா… எப்ப போயிட்டு எப்படா வர்றே?”

இப்படிதான் கன்னித்தீவு வாசகனானேன். அதற்கு பிறகு வயது ஏற ஏற காமிக்ஸ் புத்தகங்கள், அம்புலி மாமா, பாலமித்ரா, பிறகு இராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என மேலே போய்க்கொண்டே இருந்தேன்.

கன்னித்தீவு கதை இது தான். அழகான இளவரசிகளை எல்லாம் கடத்தி வந்து, தீவில் வைத்துவிடுவான். அப்படி ஒரு அழகான இளவரசி லைலா. அவளை மீட்பதற்காக சிந்துபாத் கிளம்புவான். மந்திரவாதி மூசா நிறைய சக்தி வாய்ந்தவன். மந்திரம் தந்திரம் தெரிந்தவன். அவனிடம் ஒரு மாயக்கண்ணாடி இருக்கும். அவன் நினைத்த ஆளை, இடத்தை அந்த மாயக்கண்ணாடி காட்டும். அப்படி தனக்கு எதிராக திரும்பும் எதிரிகளுக்கு தீய சக்திகளை ஏவிக்கொண்டு இருப்பான். நாயகன் சிந்துபாத் மூசா தரும் அத்தனை தொல்லைகளையும், ஆபத்துகளையும் தன் திறமையால் முறியடிப்பான். சில வருடங்களுக்கு நானே சோர்ந்து போய்விட்டுவிட்டேன். ஆனால் சிந்துபாத் முயற்சியில் தளரா விக்ரமாதித்தன் போல தன் காதலியான லைலாவை மீட்க முயன்றுகொண்டே இருப்பான்.

இப்பொழுதும் எப்போதாவது கனவில் லைலா வருவார். சிந்துபாத் ஒரு பெரிய சிங்கத்துடன் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார். இது வரை என் கதை.

கன்னித்தீவின் கதை என்னவென்று பார்த்தால். எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் இடைவேளைக்கு பிறகு கன்னித்தீவு என அறிமுகப்படுத்தியிருப்பார். அந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே தினத்தந்தி ஆசிரியர் அதையே சூட்டிவிட்டார்.

ஆகஸ்ட் 4, 1960ல் துவங்கியுள்ளது. ஓவியர் கணேசன் என்பவர் கதைக்கு உயிர்கொடுத்துள்ளார். கதையை அவரே எழுதுவாரா? அதற்கென ஆசிரியர் குழு இருக்கிறதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 61 வருடங்களுக்கு மேலாக வந்துகொண்டிருக்கிறது. 15 செப்டம்பர் 2013லிருந்து கன்னித்தீவு வண்ணத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இடையில் ஓவியர் கணேசனுக்கு உடல்நல குறைவு ஏற்பட, ஓவியர் தங்கம் என்பவர் நான்கு மாதங்கள் வரைந்து இருக்கிறார்.

இப்பொழுதுள்ள தலைமுறை காணொளிகள் வழியாக வளர்கிற தலைமுறை என்பதால், கன்னித்தீவை எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தினந்தந்தியின் ஒரு அடையாளமாக கன்னித்தீவு மாறிப்போனது.

உங்களில் எத்தனைப் பேர் கன்னித்தீவு படித்திருக்கிறீர்கள்? தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

0 பின்னூட்டங்கள்: