> குருத்து

May 15, 2022

ஜன கண மன (2022) மலையாளம் – திரைப்பார்வை


ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் தற்”கொலை”களுக்கு நீதி கேட்கிறது!

கர்நாடகா மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஒரு கல்லூரி. அந்த கல்லூரியில் பெண் பேராசிரியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். இந்த செய்தி ஊடகங்களுக்கு பரவுகிறது. அடுத்த நாள் தலைப்பு செய்திகளில் வெளிவருகிறது. நாடெங்கும் போராட்டங்கள் வெடிக்கிறது. போலீசு அடக்குமுறை தொடங்குகிறது.


இந்த வழக்கை விசாரிக்க ஒரு போலீஸ் உயரதிகாரி நியமிக்கப்படுகிறார். தன் விசாரணையில் உள்ளூரில் கஞ்சா மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிற நால்வர் இதில் ஈடுபட்டுள்ளதாக கண்டறிகிறார். மேலும் விசாரணையை துரிதப்படுத்துவதற்குள் அந்த வழக்கு வேறு ஒருவருக்கு கைமாற்றிவிடுவதாக தகவல் வருகிறது.

நால்வரையும் ஒப்படைக்க செல்லும் பொழுது, நால்வரையும் சுட்டுக்கொல்கிறார். அடுத்தநாள் அந்த உயரதிகாரியின் செயலைப் பாராட்டி மக்களும், ஊடகங்களும் கொண்டாடுகிறார்கள். இந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை கமிஷன் கேள்வி எழுப்புகிறது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விசாரணையின் பொழுது அந்த பேராசிரியர் கொலை, மோதல் கொலையின் (Encounter) பின்னணியில் அடுத்தடுத்து நிறைய விசயங்கள் வெளிவந்து அதிர்ச்சிக்குள்ளாக வைக்கிறது.

படம் நிறைய விசயங்களை பேசுகிறது. மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் பல உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆதிக்கசாதி வெறி, அதை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள். ஆதிக்கசாதி வெறியுடன் நடந்துகொள்ளும் பேராசிரியர்களை காப்பாற்றும் நிர்வாகம். இது யதார்த்ததில் நடப்பது தான்.

ஐஐடி, ஐஐஎம், இந்திய அறிவியல் கழகம் போன்ற இந்திய உயர் கல்வி நிறுவனங்களில். கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கல்லூரியிலும், விடுதியிலும் தற்கொலை செய்துகொண்டவர்களைத் தான் கணக்கில் எடுத்துள்ளார்கள். வீடுகளில், வெளியிடங்களில் தற்கொலை செய்துகொண்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்கிறார் திராவிட பகுஜன வேதிகாவின் நிறுவனரும் தலைவரும் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி அறிஞருமான முனைவர் ஜிலுகர ஸ்ரீனிவாஸ்.

மாணவர்களின் பெரும்பாலான தற்கொலைகளுக்கு சாதியப் பாகுபாடு தான் காரணம். மாணவர்களிடையே, ஆசிரியர்களிடம் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை இழிவுப்படுத்துகிறார்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் மூத்த மாணவரும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவருமான முன்னா கூறுகிறார்.

தற்கொலை செய்த மாணவர்களை வகைப்பிரித்து பார்த்தால், 24 மாணவர்கள் பட்டியல் சாதியினர் (SC), 41 மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC), பட்டியல் பழங்குடி பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் மூவர், சிறுபான்மையினர் பின்னணி சார்ந்தவர்கள் 3 மாணவர்கள் ஆக 58% மேலே முன்னா சொன்னது உண்மை என விளங்கும்.

தற்கொலைகளுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ளும் அரசு, தகுந்த நடவடிக்கை எடுக்காமல், எப்பொழுதும் போல ”மகிழ்ச்சி, உடற்பயிற்சி, யோகா” என மேலோட்டமாகவும், அலட்சியமாகவும் பேசுகிறது. எப்படி தடுப்பது? என ஆய்வு செய்த குழு, ”விடுதிகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளை கழட்டிவிடுங்கள்” என்று சொன்ன ஆலோசனைகளில் ஒன்றை மட்டும் நாட்டின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விடுதி அறைகளில் உடனடியாக அமுல்படுத்தியிருக்கிறது.

இது தான் எதார்த்த நிலைமை. இப்படித்தான் ஒன்றிய அரசு மாணவர்களின் தற்கொலைகளுக்காக தீர்வையும் முன்வைக்கிறது. சென்னை ஐஐடியில் சமீபத்தில் ஒரு முசுலீம் மாணவி தற்கொலை செய்துகொண்ட பொழுது, அந்த பெண்ணின் பெற்றோர், “உங்களை நம்பித்தானே தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்தோம். இப்பொழுது அந்த மகள் உயிரோடு இல்லை” என ஊடகத்தின் முன்பாக கேள்வி கேட்ட பொழுது, தமிழ்நாடு தலை குனியத்தான் வேண்டியிருந்தது. அந்த ”கொலை”க்கு நீதிக்கேட்டு மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடினார்கள். தொடர் போராட்டங்களின் வழியாக தான் ஆதிக்கச்சாதி திமிரை மிதிக்க முடியும்.

அதே போல மோடி ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் படத்தில் ”பேராசிரியர் கொலை” போல,”மாட்டுக்கறி வைத்திருந்தார் என சந்தேகத்தில் அடித்து கொலை” ”தலித்கள் அடித்தே கொலை” என்று வெளிவருகிற ஒவ்வொரு பரபரப்பான செய்திக்கு பின்னாலும் ஆளும் வர்க்கங்கள், ஆளும் அரசியல்வாதிகளின் நலன் இருக்கிறது. திசைதிருப்புதல் இருக்கிறது. மக்களாகிய நாமும் அவர்களின் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறோம். அப்படித்தான் போலி என்கவுண்டர்களை கூட வெளிப்படையாக ஆதரிக்கிறோம் என சாடுகிறது.

உண்மை தான். நாட்டில் நிறைய வதந்திகளை பரப்புவதில் முதலிடத்தில் சங்கிகள் தான் இருக்கிறார்கள். பா.ஜனதா அதற்காக ஒரு பெரும்படையை வைத்திருக்கிறது. அந்த படைக்கு தொடர்ந்து பெரும் கூலி கொடுத்து கொழுக்க வைத்திருக்கிறது. கட்சியில் பதவி கொடுக்கிறது. அந்த காவிப்படை தான் பா.ஜனதாவை விமர்சனம் செய்பவர்களை, பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பவர்களை, போராடுபவர்களை எல்லாம் அவதூறு செய்கிறது. இப்படித்தான் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்றது. வதந்திகளைப் பரப்பி, கலவரங்களையும் அதுவே தூண்டிவிடுகிறது. இந்த வானரப்படைகளை தடை செய்தாலே போதும் நாடு நிம்மதியாய் இருக்கும்.

படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு அநீதியை எதிர்த்து போராடும் பேராசிரியருக்கு ஆதரவாக உடன் வேலை செய்யும் சக பேராசிரியர்கள் ஆதரவு தெரிவிக்கவிட்டார்கள். உண்மை அறிந்தும் மெளனம் காப்பார்கள். அதனாலேயே தனிமைப்படுவார். அநீதி இழைப்பவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். அடுத்த அநீதியை உற்சாகத்தோடு செய்வார்கள். அநீதி செய்பவர்களை விட, எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவர்கள் அந்த அநீதியில் பங்குகொள்கிறவர்கள் தான்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக பொய்யையும், புளுகுகளையும் வைத்து, உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளாக்கி படம் எடுத்து வரும் ஒன்றிரண்டு இயக்குநர்களுக்கு மத்தியில், சமூக பிரச்சனைகளை தைரியமாக சொல்லி, அதற்கு பின்னணியில் இருப்பவர்களையும் அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கு
வாழ்த்துக்கள்
. படத்தை தயாரித்து முக்கியப் பாத்திரத்திலும் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளிவர இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

மலையாளப்படம். தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். சென்னையில் சில திரையரங்குகளில் கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

May 14, 2022

Doctor Strange in the Multiverse of Madness (2022)


ஒரு இளம்பெண்ணை ஆக்டபஸ் போல ஒரு கொடிய மிருகம் பிடிக்க துரத்துகிறது. அவளை டாக்டர் ஸ்ட்ரேஞ் தனது கூட்டாளியுடன் காப்பாற்றுகிறார். என்ன ஏது என விசாரித்தால், தன்னால் பல்வேறு யூனிவர்ஸ்க்கு பயணிக்க முடியும். எப்படி என்றால் எனக்கு சொல்ல தெரியாது. என்னை கொன்று அந்த சக்தியை அடைய பலரும் முயல்கிறார்கள். வேறு ஒரு யூனிவர்சில் அங்கு வாழும் டாக்டர் ஸ்ட்ரேஞ் ஒரு நெருக்கடி கட்டத்தில் எதிரியிடம் சேரக்கூடாது என அந்த பெண்ணின் சக்தியை எடுத்துக்கொள்ள முயன்றார் என்கிறாள்.


வாண்டாவிடம் (Wanda) போய் ஸ்ட்ரேஞ் உதவி கோருகிறார். அப்பொழுது தான் தெரிகிறது. அந்த சக்தியை எடுக்க முயற்சி செய்வதே வாண்டா தான் என! இதைப் புரிந்துகொள்ள வேறு ஒன்றை சொல்லவேண்டும்.

தானோஸிடம் அவெஞ்சர்ஸ் மல்லுக்கட்டியதில் கொல்லப்பட்டவர்களில் வாண்டாவின் கணவர் விஷனும் ஒரு ஆள். அதற்கு பிறகு யூனிவர்சில் பாதிபேர் காணாமல் போனதும் தனிக்கதை. ஆகையால், தனிமையில் வாடிய வாண்டா, தன் ஆற்றலால் தன் கணவன் உட்பட ஊரையே உருவாக்குகிறாள். அங்கு வாழும் மனிதர்களின் சிந்தனையை அவள் திறனால் கட்டுப்படுத்துகிறாள். அதில் இரண்டு பையன்கள் கூட பிறக்கிறார்கள். வேகமாக வளர்கிறார்கள். ”இது செயற்கை உலகம். நீ கற்பனையில் வாழ்கிறாய். மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறாய்” என யாராவது அந்த ”உலகத்தை” கலைக்க முயன்றால், அவர்களை கடுமையாக தாக்குகிறாள். ஒரு வழியாக அதை கலைத்து, மக்களை மீட்டார்கள் (பார்க்க : Wanda and Vision Series).

இந்த படத்தில் தன்னைப் போலவே மல்டி யூனிவர்சில் வாண்டா பிள்ளைகளோடு வாழ்வாள் அல்லவா! அங்கு போவதற்கு அந்த இளம்பெண்ணின் சக்தி அவளுக்கு தேவைப்படுகிறது. அதை அடைவதற்கு தான் இத்தனையும் செய்கிறாள். ஸ்ட்ரேஞ் இது தவறு என வாதாடுகிறார். அவள் அதை ஏற்க மறுக்கிறாள். இருவருக்கும் நடக்கும் சண்டை தான் மொத்தப் படமும்! அதை சாசகங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

எப்பொழுதும் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவர்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அந்த நெறி தவறினால் என்ன நடக்கும் என்பதைத் தான் படம் நீதியாக சொல்கிறது. கூடுதலாக, வாண்டா விரும்புவது ஒரு நிம்மதியான குடும்பம். ஏம்மா வாண்டா, இன்னொரு கல்யாணம் முடிச்சுக்க வேண்டியது தானே! உங்க ஊர்ல அது இயல்பு தானே! என்றெல்லாம் கேட்க முடியாது. எரித்து கொன்றேவிடுவாள்.

அமெரிக்காவில் முதலாளித்துவ சமூகத்தில் குடும்பங்கள் பல ஆண்டுகளாக சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கின்றன. அதை மீட்டெடுப்பதற்காக தான் சமீபத்திய படங்கள் போதிக்கின்றன. தன் குடும்பத்தின் நலனுக்காக கடைசியாக வந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் தன் உயிரை விட்டார் கவனித்தீர்களா!

குடும்பம் சிதைவுறுவது என்பது அந்த சமூக அமைப்பில் உள்ள கோளாறு தான். அந்த அமைப்பை மாற்றாமல் அதை சரி செய்யமுடியாது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல! பிள்ளைகள் அமெரிக்காவில்! ஐரோப்பாவில்! வயதான தாய், தந்தைகள் இந்தியாவில் வாழ்கிறார்கள். 25 வயதில் துபாய் போன அப்பா, 54 வயதாகியும் துபாயில் தான் இருக்கிறார். அப்பாவின் அருகாமைக்காக பல நாட்கள் ஏங்கியிருக்கிறேன் என ஒரு மகன் நேற்று முகநூலில் உருக்கமாக எழுதியிருந்தார்.

இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. ஏனென்றால் உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தில் முதலாளித்துவம் தானே ஆள்கிறது. ஆகையால் இது தவிர்க்கமுடியாதது. மாற்று சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பது தான் பளிச்சென தெரிகிறது.

மற்ற படி, தொழில்நுட்ப ரீதியாக, ஸ்ட்ரேஞ் VS வாண்டா இருவரின் சாசகங்கள் நிறைந்த படம் தான். பாருங்கள். கோடை கால விடுமுறையில் பள்ளி குழந்தைகளுக்காக திரையரங்குகளில் 3Dயில் வெளியிட்டிருக்கிறார்கள். பாருங்கள்.

May 5, 2022

தோழர் மார்க்ஸ்


18 வயதில் வறுமை ஏன்? ஏற்றத்தாழ்வு ஏன்? என்ற மண்டையை குடையும் கேள்விகளோடு பதில் தேடி அலைந்த நாட்கள் நினைவில் மேலெழும்புகின்றன.


தேடித் தேடி படித்திருக்கிறேன். தேடித்தேடி பார்த்திருக்கிறேன். தேடித்தேடி விவாதித்திருக்கிறேன். கிடைத்த பதில்களும் முரண்பட்டவைகளாக இருந்தன. உலகை வியாக்கியானம் செய்வதல்ல! மாற்றுவது தான் தேவை! என அழுத்தமாய் சொன்ன தோழர் மார்க்சை கண்டடைந்தேன். எல்லாவற்றிற்கும் முரணற்ற முறையில் எனக்கு பதில் வைத்திருந்தார்.

20களில் இளமை வேகத்தில் மார்க்சை, லெனினை நேசிப்பீர்கள். 30களில் சராசரியாகிவிடுவீர்கள் என்றார்கள் சில மூத்தவர்கள். இதோ 40+களிலும் மார்க்சை பின்பற்றிவருகிறேன். சொன்னவர்கள் குழம்பிபோய்விட்டார்கள்.

சமூகத்தின் மீதான நேசம் குறையாதவரை எப்பொழுதும் மார்க்சின் மாணவன் தான். மனித குலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்சியம் என்னும் தீச்சுடரை நமக்கு தந்துள்ளார். அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.

மார்க்ஸ்க்கும் எனக்கும் பிறந்தநாள் தொடர்பு இருக்கிறது. பள்ளியில் சேர்க்கும் பொழுது எனக்கும் அவரின் பிறந்த நாளை தான் கொடுத்துள்ளார்கள்.

உலக மக்களின் மீது மாறாத அன்புகொண்டு தன் இறுதிநாள் வரை உழைத்த தோழர் மார்க்சுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
நம் கனவு தான் அவரின் கனவும்! அதை உறுதியுடன் முன்னெடுத்து செல்வோம்!!