ஒரு இளம்பெண்ணை ஆக்டபஸ் போல ஒரு கொடிய மிருகம் பிடிக்க துரத்துகிறது. அவளை டாக்டர் ஸ்ட்ரேஞ் தனது கூட்டாளியுடன் காப்பாற்றுகிறார். என்ன ஏது என விசாரித்தால், தன்னால் பல்வேறு யூனிவர்ஸ்க்கு பயணிக்க முடியும். எப்படி என்றால் எனக்கு சொல்ல தெரியாது. என்னை கொன்று அந்த சக்தியை அடைய பலரும் முயல்கிறார்கள். வேறு ஒரு யூனிவர்சில் அங்கு வாழும் டாக்டர் ஸ்ட்ரேஞ் ஒரு நெருக்கடி கட்டத்தில் எதிரியிடம் சேரக்கூடாது என அந்த பெண்ணின் சக்தியை எடுத்துக்கொள்ள முயன்றார் என்கிறாள்.
வாண்டாவிடம் (Wanda) போய் ஸ்ட்ரேஞ் உதவி கோருகிறார். அப்பொழுது தான் தெரிகிறது. அந்த சக்தியை எடுக்க முயற்சி செய்வதே வாண்டா தான் என! இதைப் புரிந்துகொள்ள வேறு ஒன்றை சொல்லவேண்டும்.
தானோஸிடம் அவெஞ்சர்ஸ் மல்லுக்கட்டியதில் கொல்லப்பட்டவர்களில் வாண்டாவின் கணவர் விஷனும் ஒரு ஆள். அதற்கு பிறகு யூனிவர்சில் பாதிபேர் காணாமல் போனதும் தனிக்கதை. ஆகையால், தனிமையில் வாடிய வாண்டா, தன் ஆற்றலால் தன் கணவன் உட்பட ஊரையே உருவாக்குகிறாள். அங்கு வாழும் மனிதர்களின் சிந்தனையை அவள் திறனால் கட்டுப்படுத்துகிறாள். அதில் இரண்டு பையன்கள் கூட பிறக்கிறார்கள். வேகமாக வளர்கிறார்கள். ”இது செயற்கை உலகம். நீ கற்பனையில் வாழ்கிறாய். மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறாய்” என யாராவது அந்த ”உலகத்தை” கலைக்க முயன்றால், அவர்களை கடுமையாக தாக்குகிறாள். ஒரு வழியாக அதை கலைத்து, மக்களை மீட்டார்கள் (பார்க்க : Wanda and Vision Series).
இந்த படத்தில் தன்னைப் போலவே மல்டி யூனிவர்சில் வாண்டா பிள்ளைகளோடு வாழ்வாள் அல்லவா! அங்கு போவதற்கு அந்த இளம்பெண்ணின் சக்தி அவளுக்கு தேவைப்படுகிறது. அதை அடைவதற்கு தான் இத்தனையும் செய்கிறாள். ஸ்ட்ரேஞ் இது தவறு என வாதாடுகிறார். அவள் அதை ஏற்க மறுக்கிறாள். இருவருக்கும் நடக்கும் சண்டை தான் மொத்தப் படமும்! அதை சாசகங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***
எப்பொழுதும் மிகப்பெரிய ஆற்றல் உள்ளவர்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும். அந்த நெறி தவறினால் என்ன நடக்கும் என்பதைத் தான் படம் நீதியாக சொல்கிறது. கூடுதலாக, வாண்டா விரும்புவது ஒரு நிம்மதியான குடும்பம். ஏம்மா வாண்டா, இன்னொரு கல்யாணம் முடிச்சுக்க வேண்டியது தானே! உங்க ஊர்ல அது இயல்பு தானே! என்றெல்லாம் கேட்க முடியாது. எரித்து கொன்றேவிடுவாள்.
அமெரிக்காவில் முதலாளித்துவ சமூகத்தில் குடும்பங்கள் பல ஆண்டுகளாக சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கின்றன. அதை மீட்டெடுப்பதற்காக தான் சமீபத்திய படங்கள் போதிக்கின்றன. தன் குடும்பத்தின் நலனுக்காக கடைசியாக வந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் தன் உயிரை விட்டார் கவனித்தீர்களா!
குடும்பம் சிதைவுறுவது என்பது அந்த சமூக அமைப்பில் உள்ள கோளாறு தான். அந்த அமைப்பை மாற்றாமல் அதை சரி செய்யமுடியாது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல! பிள்ளைகள் அமெரிக்காவில்! ஐரோப்பாவில்! வயதான தாய், தந்தைகள் இந்தியாவில் வாழ்கிறார்கள். 25 வயதில் துபாய் போன அப்பா, 54 வயதாகியும் துபாயில் தான் இருக்கிறார். அப்பாவின் அருகாமைக்காக பல நாட்கள் ஏங்கியிருக்கிறேன் என ஒரு மகன் நேற்று முகநூலில் உருக்கமாக எழுதியிருந்தார்.
இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. ஏனென்றால் உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தில் முதலாளித்துவம் தானே ஆள்கிறது. ஆகையால் இது தவிர்க்கமுடியாதது. மாற்று சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பது தான் பளிச்சென தெரிகிறது.
மற்ற படி, தொழில்நுட்ப ரீதியாக, ஸ்ட்ரேஞ் VS வாண்டா இருவரின் சாசகங்கள் நிறைந்த படம் தான். பாருங்கள். கோடை கால விடுமுறையில் பள்ளி குழந்தைகளுக்காக திரையரங்குகளில் 3Dயில் வெளியிட்டிருக்கிறார்கள். பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment