> குருத்து

May 19, 2022

Love (2020) மலையாளம்


Black Comedy Psychological thriller Film

நாயகி மருத்துவமனையில் இருக்கிறாள். அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என செய்தி சொல்கிறார்கள். ஆனால் அவளிடம் மகிழ்ச்சி இல்லை. அவள் நாயகனுக்கு போன் செய்துகொண்டே இருக்கிறாள். அவன் எடுக்காமல் இருக்கிறான்.

நாயகி வீட்டிற்கு வருகிறாள். நாயகியின் கணவன் பகலிலியே வீட்டில் தண்ணியடித்துக்கொண்டு இருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.கைகலப்பு ஆகிறது. அவன் அவளை கோபத்தில் அடிக்கிறான். அப்படியே மடங்கி விழுகிறாள். அவளிடம் எந்த அசைவுமில்லை. காலிங்பெல் அழைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. பாத்ரூமில் அவளை நகர்த்திக்கொண்டு தற்போதைக்கு மறைத்து வைக்கிறான்.

ஒரு நண்பன் வருகிறான். தன் வீட்டு நிலைமை, தொழில் நிலைமை, பொண்டாட்டியைப் பற்றி புலம்புகிறான். அங்கிருக்கும் சரக்கை அடித்துக்கொண்டே இருக்கிறான். இன்னொரு நண்பன் தன் காதலியோடு வருகிறான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்புகிறோம் என்கிறான். எப்ப கிளம்புங்கடா! என சொன்னால் கூட நகர மறுக்கிறார்கள்.

இப்பொழுது மீண்டும் காலிங்பெல் அழைக்கிறது. திறக்கிறான். அங்கு நாயகி நிற்கிறாள். பிறகு என்ன நடந்தது என்பதை சொல்கிறார்கள்.

****

நம்மூரில் செல்லம் கொஞ்சினாலும், கணவன் மனைவி அதிகமாய் கொஞ்சுவார்கள். அடித்துக்கொண்டாலும் கடுமையாக அடித்துக்கொள்வார்கள். அப்படி ஒரு தம்பதியைப் பற்றிய கதை. படத்தின் பெயர் Love. American Beauty என ஒரு படம். இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொண்டு, அமெரிக்க குடும்பங்கள் எவ்வளவு சிதையுண்டு போயிருக்கின்றன என்பதை
அருமையாக
சொல்லியிருப்பார்கள்.

கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று போல! பெரும்பாலான காட்சிகள் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டிற்குள்ளேயே முடித்துவிட்டார்கள். மொத்தப் படமும் 1.30 மணி நேரம் தான் இது! அடுத்தடுத்து என்ன? என்று போனாலும், போதவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

Shine tom Chacko, கர்ணன் படத்தில் வரும் நாயகி ரஜிஷா நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள்.

நடத்துநர் கொலை : டாஸ்மாக் கணக்கில் தான் சேரும்!


சென்னையிலிருந்து அதிகாலையில் விழுப்புரம் நோக்கி பேருந்து கிளம்பியது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் ஒரு பயணி ஏறுகிறார். பீணாம்மேட்டுக்கு டிக்கெட் கேட்கிறார். பேருந்து அந்த ரூட்டில் போகாது. மேல்மருவத்தூர் இறங்கி மாறிக்கொள்ளுங்கள் என நடத்துநர் சொன்னதை பயணி ஏற்கவில்லை. குடிபோதையில் இருந்த அவர் பீணாம்மேட்டில் தான் இறக்கிவிடவேண்டும் என அடம்பிடிக்கிறார்.


வாய்த்தகராறு அடிதடிக்கு போக, பயணி தாக்கியதில் தலையில் அடிப்பட்டு மயக்கமாகிறார். மருத்துவமனைக்கு போகும் வழியில் நடத்துநர் இறந்துவிடுகிறார். அரசு இப்பொழுது பத்து லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் பத்தாயிரம் வழித்தடங்களில், இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் குறுக்கும் நெடுக்குமாய் பயணிக்கின்றன. ஒரு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் சில்லறை பிரச்சனை போலவே, குடிகாரர்களையும் எதிர்கொள்கிறார்கள். மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். இப்படி எதிர்கொள்ளும் பொழுது, சில நேரங்களில் கைமீறிப் போகும் பொழுது கொலையாகிவிடுகிறது.

காலை பணிரெண்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் டாஸ்மாக் கடைகள் குடிகாரர்களுக்கு சேவை செய்கின்றன. அதற்கு பிறகு குடிகாரர்கள் தட்டுத் தடுமாறி வீட்டுக்கு போய்விடக்கூடாது என்றெண்ணி, டாஸ்மாக் அருகே உள்ள பாரில் கூடுதல் விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள். பாருக்கென்று நேரம் தீர்மானிக்கவில்லையா என்று அப்பாவியாய் கேட்காதீர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இதில் அரசு
அனுமதியுடன் 36 பார்கள் இயங்குகின்றன. மீதி 104 கடைகள் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன என பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதுகின்றன. ஆக, பாரிலிருந்து கணிசமான பணம் போலீசுக்கு போவதால், கண்டுகொள்வதேயில்லை. அதுவும் பார் வைத்திருப்பவர் அரசியல் செல்வாக்கோடு இருந்தால், சொல்லவே தேவையில்லை. ஆக 24 மணி நேரமும் குடிகாரர்கள் மனம் கோணாமல் இந்த அரசு ஊத்திக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

”குடி” நேரடியாக குடிப்பவர்களின் உடலை, சிந்தனையை, செயல்பாட்டை பாதிக்கிறது என்றால், பக்க விளைவாக போக்குவரத்து தொழிலாளர்களை போலவே, மொத்த சமூகமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசுக்கு மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பதற்கெல்லாம் நேரமேயில்லை. கல்லா கட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். மக்கள் தான் போராடி பிரச்சனையை தீர்க்கவேண்டும்.

May 18, 2022

தடை செய்யப்பட்ட லாட்டரியும் தாராளமாய் கிடைக்கும் லாட்டரியும்!




"கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது."

***

ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நூல்வியாபாரி 13/05/22 அன்று தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு காணொளியை பதிவு செய்து அனுப்பிவிட்டு தன் உயிரை மாய்த்துள்ளார்.

”இதுவரை லாட்டரியில் 62 லட்சம் தொலைத்துவிட்டேன், ஆகையால் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொண்டேன். இனிமேலும் உயிரோடு இருந்தால், மீண்டும் லாட்டரி வாங்குவேன், ஆகையால் தற்கொலை செய்துகொள்கிறேன். தான் வசிக்கும் பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் லாட்டரி ஏஜென்சி நடத்திவருகிறார். அவரிடம் 30 லட்சத்தை வாங்கி என் குடும்பத்திற்கு தாருங்கள். எப்படியாவது லாட்டரியை ஒழித்துக்கட்டுங்கள்” என அழுதுகொண்டே பேசியுள்ளார்.

”விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என பஞ்ச் வசனம் பேசி துவக்கி வைக்கப்பட்ட லாட்டரி பல உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சியது. கடன் வலையில் விழவைத்தது. தற்கொலைகளுக்கு தள்ளியது. 90களில் தற்கொலைகள் உச்சத்துக்கு சென்ற பொழுது, மக்களும் போராடினார்கள். 2003ல் ஆட்சியில் இருந்த ஜெ. தடை செய்தார்.

தடை செய்த பிறகும், தமிழகத்தின் பல பகுதிகளில் லாட்டரி தாராளமாக கிடைக்கின்றன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் இன்றைக்கு வரை 147 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். 215பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடனே அறிக்கை விடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி மாவட்ட வாரியாக பெயரளவில் போடப்படும் வழக்குகளும், கைதுகளுமே லாட்டரி தாராளமாய் விற்பதற்கான வாழும் சாட்சிகளாக இருக்கின்றன.

கவுன்சிலரின் கணவரே லாட்டரி ஏஜென்சி நடத்தினார் என்றால் போலீசாரின் ஆசியும் தாராளமாக கிடைத்துவிடுகிறது. பிறகென்ன, லாட்டரி ”சட்டபூர்வமாகி”விடுகிறது.

இதற்காக பொங்கியுள்ள எடப்பாடி தாங்கள் ஆட்சியில் லாட்டரியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதாக புளுகுகிறார். 2011, 2016 இரண்டு தேர்தலிலும் விழுப்புரம் நகர்ப்புற தொகுதியில் அதிமுகவைச் சார்ந்த சி.வி. சண்முகம் தான் எம்.எல்.ஏயாக ஜெயித்தார். அந்த தொகுதியில் 2019ல் லாட்டரியால் கடன்பட்ட நகை தொழிலாளி அருண் என்பவர் தன் துணைவியார், மூன்று பெண் குழந்தைகளோடு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். சாகும் பொழுது அவரும் காணொளி ஒன்றை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பினார். அப்பொழுதும் போடப்பட்ட வழக்குகள் இத்தனை, கைது செய்யப்பட்டவர்கள் இத்தனை பேர் என வழக்கம் போல ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

ஏற்கனவே தொழில் நசிவால், வேலை இல்லாமல் வாடி வரும் உழைக்கும் மக்கள் ஏதாவது லாட்டரி அடித்தால் தங்கள் துன்ப, துயரங்களில் இருந்து தங்களை விட்டு மீண்டுவிடமாட்டோமா என்ற நப்பாசையில் தான் லாட்டரிகளை வாங்குகிறார்கள். கடன்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் விச சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் இப்படி அறிக்கைப்போர் நடத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களை நம்பி பலனில்லை.

டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்கியது போல, புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மக்களை திரட்டி களத்தில் இறங்கி சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் கடைகளை அடித்து நொறுக்கினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.