> குருத்து: நடத்துநர் கொலை : டாஸ்மாக் கணக்கில் தான் சேரும்!

May 19, 2022

நடத்துநர் கொலை : டாஸ்மாக் கணக்கில் தான் சேரும்!


சென்னையிலிருந்து அதிகாலையில் விழுப்புரம் நோக்கி பேருந்து கிளம்பியது. மதுராந்தகம் புறவழிச்சாலையில் ஒரு பயணி ஏறுகிறார். பீணாம்மேட்டுக்கு டிக்கெட் கேட்கிறார். பேருந்து அந்த ரூட்டில் போகாது. மேல்மருவத்தூர் இறங்கி மாறிக்கொள்ளுங்கள் என நடத்துநர் சொன்னதை பயணி ஏற்கவில்லை. குடிபோதையில் இருந்த அவர் பீணாம்மேட்டில் தான் இறக்கிவிடவேண்டும் என அடம்பிடிக்கிறார்.


வாய்த்தகராறு அடிதடிக்கு போக, பயணி தாக்கியதில் தலையில் அடிப்பட்டு மயக்கமாகிறார். மருத்துவமனைக்கு போகும் வழியில் நடத்துநர் இறந்துவிடுகிறார். அரசு இப்பொழுது பத்து லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் பத்தாயிரம் வழித்தடங்களில், இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் குறுக்கும் நெடுக்குமாய் பயணிக்கின்றன. ஒரு கோடிக்கு மேற்பட்ட பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் சில்லறை பிரச்சனை போலவே, குடிகாரர்களையும் எதிர்கொள்கிறார்கள். மன உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். இப்படி எதிர்கொள்ளும் பொழுது, சில நேரங்களில் கைமீறிப் போகும் பொழுது கொலையாகிவிடுகிறது.

காலை பணிரெண்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் டாஸ்மாக் கடைகள் குடிகாரர்களுக்கு சேவை செய்கின்றன. அதற்கு பிறகு குடிகாரர்கள் தட்டுத் தடுமாறி வீட்டுக்கு போய்விடக்கூடாது என்றெண்ணி, டாஸ்மாக் அருகே உள்ள பாரில் கூடுதல் விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள். பாருக்கென்று நேரம் தீர்மானிக்கவில்லையா என்று அப்பாவியாய் கேட்காதீர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இதில் அரசு
அனுமதியுடன் 36 பார்கள் இயங்குகின்றன. மீதி 104 கடைகள் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன என பத்திரிக்கைகள் வெளிப்படையாக எழுதுகின்றன. ஆக, பாரிலிருந்து கணிசமான பணம் போலீசுக்கு போவதால், கண்டுகொள்வதேயில்லை. அதுவும் பார் வைத்திருப்பவர் அரசியல் செல்வாக்கோடு இருந்தால், சொல்லவே தேவையில்லை. ஆக 24 மணி நேரமும் குடிகாரர்கள் மனம் கோணாமல் இந்த அரசு ஊத்திக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

”குடி” நேரடியாக குடிப்பவர்களின் உடலை, சிந்தனையை, செயல்பாட்டை பாதிக்கிறது என்றால், பக்க விளைவாக போக்குவரத்து தொழிலாளர்களை போலவே, மொத்த சமூகமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசுக்கு மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பதற்கெல்லாம் நேரமேயில்லை. கல்லா கட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். மக்கள் தான் போராடி பிரச்சனையை தீர்க்கவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: