> குருத்து

February 4, 2025

I want to talk (2024) இந்தி

 


நாயகன் அமெரிக்கவாழ் இந்தியர். பொருட்களை சந்தைப்படுத்தும் தொழிலில் பிசியான ஆளாக இருக்கிறார்.  துணைவியாருடன்  முரண் என்பதால், விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.   அவர்களுடைய குட்டிப்பெண் இருவரிடமும் மாறி மாறி இருந்துகொண்டு வளர்ந்து வருகிறாள்.

 

திடீரென குரல் வளையில் நாயகனுக்கு புற்று நோய் தாக்குகிறது.   அதைச் சோதித்தால், அது வளர்ந்து உடலின் பல பாகங்களை ஆக்கிரமித்திருக்கிறது.  மருத்துவர்கள் இன்னும் 90 நாட்கள் இருந்தால் அதிசயம் என்கிறார்கள்.  முதலில் அதிர்ந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராகிறான்.

 

ஒன்றல்ல, இரண்டல்ல அடுத்தடுத்து 20 அறுவை சிகிச்சைகள்.  குட்டிப்பெண் என்பதால், மகளிடம் மறைக்கிறான்.  பிழைத்தானா, மாண்டானா என்பதை முழு நீள படமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

உண்மைக் கதை என்பதால், ராவாக எடுத்திருக்கிறார்கள்.  ஆவணப்படம் போல இருக்கிறது. எடுத்தவர் அமெரிக்க வாழ் இந்தியரோ என நினைத்தால், சுஜித் சர்கார்.  ஏற்கனவே விக்கி டோனர், பிங் என சில படங்கள் இயக்கியவர், தயாரித்தவரும் கூட.

 

வாழ்வில் ஒரு அறுவை சிகிச்சை என்றாலே கலகலத்துப் போகிறோம்.  உடலின் சில பாகங்கள் புற்று அரித்து தின்ன பிறகும், ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால், அதுவும் நிஜ கதை என்றால், ஆச்சர்யத்துக்கு ஆச்சர்யமாயிருக்கிறது.

 

எனக்கு அபிஷேக் பச்சன் நடிப்பு ஏனோ ஒட்டுவதில்லை. இந்தப் படத்தில் ஏனோ கொஞ்சம் ஒட்டினார்.  அத்தனை அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அதே உடல், அதே தெம்புடன் என காட்டுகிற பொழுது கொஞ்சம் பிசிறு அடிக்கிறது.  (அதற்காக நிஜமாகவே உடல் இளைக்க முடியுமா என்ன!)  

நாயகனைப் பார்த்துக்கொள்ளும் அந்த பெண் நர்ஸ் அவன் உயிரை மாய்த்துக்கொள்ள போகும் பொழுது, தன் பேச்சால் காப்பாற்றுகிறாள். பின்னாளில் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொழுது, மனிதர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது.

 

நாயகனின் மகள் நல்ல தேர்வு.  சிறு வயது பெண் தனது அப்பாவிற்கு புரிய வைப்பதற்காக, வட்டம் வட்டமாக வரைந்து, அம்மா முதல் வட்டம், நண்பர்கள், ஆசிரியர்கள் என சுட்டி, எட்டாவது வட்டத்தில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என சொல்லும் பொழுது… எனது மகளிடம் நான் எத்தனையாவது  வட்டத்தில் என கேட்க தோன்றுகிறது.   பிறகு இன்னும் கொஞ்சம் சரி நெருங்கிக்கொள்ளலாம். பிறகு கேட்கலாம் என தோன்றுகிறது.

 

நாயகனுக்கும், அவனுடைய துணைவியாருக்கும் என்ன பிரச்சனை என்பதை எங்குமே காட்டவில்லை.   இவனின் கதை என கறாராக முடிவு செய்துவிட்டார்கள்.  

February 2, 2025

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?


ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 

வணக்கம். விமர்சன உரை அல்ல! உறுப்பினர்கள் சார்பாக என் உரை.

 

தேவையில் இருந்து தான் ஒன்று உருவாகிறது.  இந்த புத்தகத்தின் தேவை?

 

நஜ்முதீன் அய்யா – ஜி.எஸ்.டி  எளிமைப்படுத்துவதற்காக வந்தது என சொல்லிக்கொண்டாலும், இடியாப்பத்தை போல சிக்கலானது.  இந்த சூழ்நிலையில் தான் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.

 

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 


ஹாரி பார்ட்டர் எட்டு பாகங்கள். அதை படமாகவும் எடுத்தார்கள். அதில் வரும் பிரதான பாத்திரம் வோல்ட் மார்ட்.  தன் உயிரை பாதுகாக்கும் விதமாக ஆறு இடங்களில் ஒளித்து வைத்திருப்பார்.

 

ஒரு புத்தகம் என சாதாரண நிலையில் பார்க்கிறோம்.  புத்தக உருவாக்கமும் பல படிநிலைகள் கொண்டது. அது உருவாகும் பாதை கடினமானது.

 

சட்ட அறிவு அவசியம்.  அதை புரிந்துகொள்வது மிக அவசியம். ஒன்றை காட்டும் பொழுது மூன்று பேர் மூன்று விதமான கருத்துகளை மெல்லிய மாற்றத்துடன் சொல்வார்கள்.  அதனால் தான் தனது உரையில் இது என்னுடைய புரிதல் என்பதை வலியுறுத்துவார்கள்.

 

ஆங்கில அறிவு அவசியம்.   அதுவும் சட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வது இன்னும் சிக்கலானது.  புரிவது போல இருக்கும். குழப்பும். தெளிவுபெற கற்றல் அவசியம்.

 

தமிழ் தெரிந்திருக்கவேண்டும்.  அதுவும் எழுதுவதற்கென ஒரு தொடர் வாசிப்பு இருக்கவேண்டும்.  அது போல தமிழ் தெரிந்த எல்லோராலும் எழுதிவிடமுடியாது.   தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பயிற்சி வேண்டும்.  

 

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதும் எளிதல்ல.  அதன் சாரம் குறையாமல், செய்வது அத்தனை எளிதல்ல.  பல பிரபலமான புத்தகங்களை தமிழில் மோசமாக மொழிபெயர்த்து அதன் சாரத்தை இழக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஒரு விசயம் நடைமுறையில் தான் உரசிப் பார்க்கப்படும்.  சாருக்கு பல ஆண்டுகள் ஒரு வரி ஆலோசகராய் வேலை செய்த அனுபவமும்,  பல கூட்டங்களில் ஆசிரியராய் வகுப்பு எடுத்த அனுபவமும், பலர் எழுப்புகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிய அனுபவம் உண்டு.

 

மாதம் மாதம் என்ன வேலை இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு கட்டுரை தருவதற்கு தன்னளவில் இராணுவ ஒழுங்கு இருக்கவேண்டும். பத்திரிக்கையாளர் சமஸ் சொல்லிய அனுபவம்.


 

ஏன் எழுதவேண்டும்? என்பதற்கு ஒரு உந்துதல் அவசியம்.   முதல் பட்டதாரியாக எழுந்து நிற்கும், மொத்த குடும்பத்தையும் தாங்க தன் தொழிலை நம்பும், ஆங்கில பரிச்சயம் நிறைய இல்லாத  ஒரு தலைமுறைக்கு தமிழில் தந்து உதவவேண்டும் என்ற மன உந்துதல் வேண்டும்.

 

ஒரு புத்தக உருவாக்கத்தில் நம்முடைய பொது புரிதல் என்பது நாம் எழுதியதை கொடுத்துவிடுவோம். பதிப்பகம் அச்சிடும். விற்கும். எழுதியவருக்கு ராயல்டி  தரும்.  இந்தப் புத்தகம் அப்படியில்லை.   சார் தான் பணம் கொடுத்திருக்கிறார். அதை அச்சிட்டு, அதை மக்களிடம் புத்தக சந்தை மூலம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

 

மாறிவரும் சமூக சூழ்நிலையால், வாசிப்பது குறைந்துவிட்டது. புத்தகம் விற்பது குறைந்துவிட்டது என்ற சமூக நடைமுறை தெரிந்தாலும், கைக்காசை போட்டு புத்தகம் அடித்து தருவோம் என்ற  பெருந்தன்மை வேண்டும். 

 

ஐம்பது பக்கங்கள் கூட புதிதாய் எழுதிவிடலாம். தப்பில்லாமல் தரவேண்டும் என தப்பும், தவறுமாய் (First Copy) தட்டச்சு செய்து  தருவதை… நாட்கள் குறைவாக இருந்ததால், பல நாட்கள் இரவும், பகலும் சரிப்பார்க்கும் பொறுமையும், அதை பிழையில்லாமல்… நேர்த்தியாய் தரவேண்டும் என்ற அடம் வேண்டும்.

 


வெளியிடும் நாள் குறித்த பிறகு , புத்தகத்தை வரிக்கு வரி பொறுமையாக படித்து சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கி தருவதற்கு கோவை பெருமாள் அவர்களைப் போல ஒருவருடைய அருமையான நட்பு வேண்டும்.

 

அதே போல தமிழ் சூழலில் எழுதியவருக்கு பணம் எல்லாம் வராது.  அந்தப் புத்தகத்தின் அச்சுக் கூலியை தான் பணம் தருகிறோம் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆக இப்படி  பல அம்சங்களை கடந்து தான் நம் கைக்கு ஒரு புத்தகம் வருகிறது.

 


ஆகையால், நமக்காக எழுதியவருக்கு, நமக்கு வழிகாட்டுபவருக்கு; நாளைய விழாவில் நன்றி தெரிவிப்போம். அவருக்கு நம்முடைய அன்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்போம். அவர் தொடர்ந்து நமக்காக எழுதவேண்டும்.  அதையும் புத்தகங்களாக நமக்கு தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.


புத்தகங்கள்


சென்னையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு இரண்டு முறை சென்றேன்.  ஒருமுறை சென்னையில் இயங்கும் GST Professionals societyயின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ”ஜி.எஸ்.டி குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” என்ற புத்தகத்தை எளிய கேள்வி பதில் வடிவத்தில் 567 பக்கங்களுக்கு எழுதி தொகுத்திருந்தார்.  மணிமேகலை பிரசுரம் அச்சிட்டு வெளியீட்டு விழாவும் வைத்திருந்தது.  கடந்த 05/01/2025 அன்று நிகழ்வில் கலந்துகொண்டு,   சில புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.

 

புத்தக திருவிழாவின் கடைசி நாளன்று இலக்கியாவையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  சில புத்தகங்களை வாங்கினேன்.   இலக்கியாவும் ஆர்வமாய்  இரண்டு நாவல்களை வாங்கினார்.  எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமென்றாலும் படி! நான் வாங்கித்தருகிறேன் என எப்பொழுதும் சொல்லிவருகிறேன்.

 

ஒரு இரும்பு பீரோ நிறைய புத்தகங்கள் நிறைந்து இருந்தாலும், (புத்தகங்களின் கணம் தாங்காமல் பீரோவின் கால் ஒருபக்கம் ஒடிந்துவிட்டது) படிக்க வேண்டிய புத்தகங்கள் என ஒரு பெரிய பட்டியலே வைத்திருந்தாலும், அந்தந்த காலக்கட்டத்தில் என்ன மனநிலையோ அது தான் புத்தகத்தை தேர்வு செய்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொண்டுள்ளேன்.

 

இருப்பினும் இது காணொளிகளின் காலம் என்பதால், படிப்பதும் குறைந்துகொண்டே வருகிறது என்பதை என் வாசிப்பை வைத்தே உணரமுடிகிறது.  இருப்பினும் தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன்.

 

புத்தகங்களினால் பெற்றதை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.  தினம் இரவு கொஞ்சம் படிப்பதோ, இலக்கிய கூட்டங்களின் உரைகளை கேட்டோ தான் உறங்குகிறேன்.

 

நேற்று ஒருவர் புத்தக திருவிழாவிற்கு வந்து சென்றவர்களை கூர்ந்து கவனித்தேன். 500 நபர்களில் பத்து பேர்களிடம் மட்டும் தான் புத்தக பைகளைப் பார்த்தேன் என வருத்தப்பட்டிருந்தார்.  அதற்காகவே வாங்கிய புத்தகங்களின்  புகைப்படத்தை  இங்கு பகிர்ந்துள்ளேன்.

 

கொஞ்சம் படத்தை உற்றுப்பார்த்தால், ஒரே புத்தகத்தையே சிலவற்றை வாங்கியிருக்கிறேன்.   இத்தனை வருடங்களில் திருமணங்களில் மணமக்களுக்கு பரிசாக புத்தகங்களைத் தான் தருகிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு பரிசாக கொடுக்கும் பொழுது,  அந்த மணமகன் என் திருமண பரிசுகளில் புத்தகங்களாக தருவது நீங்கள் மட்டும் தான்! என்றார்.

 

படித்தவற்றில் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாசிப்பதற்கு வசதியாக சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்து, வாங்கித் தருகிறோம்.

 

- பேஸ்புக்கில், 14/01/2025